வீட்டுக்கு வந்து பயணக்களைப்பு ஆற அமர முதலே இந்தச் செய்தியை மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும் ‘அட! அப்படியா..” என்றொரு சந்தோஷம் மனதிற்குள் தோன்றினாலும் நிதானமாக நின்று உடைகளை மாற்றினான்.
‘கேட்டுதே? ஆனைவாழையெல்லே குலை போட்டிருக்கு எண்டு சொல்லுறன்!”
‘ஓம்! ஓம்! பாப்பம்..” என அவன் மனைவியைப் பார்த்துச் சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
‘ஓமடா தம்பி!… நல்ல பெரிய குலை..!” என அம்மா சொன்னாள்.
‘ஆனைவாழை பெரிசாத்தான் குலைபோடும்..” என முற்றும் தெரிந்தவன்போல அவன் கூறினான். ஆனால் ஆனைவாழை பெரிசாகவா சிறிசாகவா குலை போடும் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனை வாழைப்பழம் பெரிசாக இருப்பதால் ஆனைவாழைக்குலையும் பெரிசாக இருக்குமென ஊகித்திருந்தான். அல்லது ஏன்தான் அந்த வாழைக்கு ஆனைவாழை எனப் பெயர் வந்தது என்பதும் புரியவில்லை.
சிறு பிராயத்தில் பாடசாலையின் ஒரு விடுமுறைக் காலத்தில் அப்பாவோடு கொழும்பு கண்டி போன்ற வெளியூர்களுக்குச் சுற்றுலா போயிருந்தபோதுதான் முதலில் ஆனை வாழையைப்பற்றி அறிந்துகொண்டான். அப்போது சாப்பாட்டுக் கடையொன்றில் சாப்பிடப் போயிருந்தபொழுது வாழைப்பழம் கொண்டு வரும்படி அப்பா ஓடர் கொடுத்தார். வெயிட்டர் ஒரு தட்டில் வாழைப்பழச் சீப்பைக் கொண்டுவந்து வைத்தான். அவன் அதைப் பார்த்துவிட்டு “பழுக்கயில்ல.. காய்..!” என்றான்.
‘இல்லை… அது நல்ல பழம்!” என்றார் அப்பார்.