(அவள் கசக்கப்பட்ட மலராய் அலங்கோலமாய் கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். மார்பகம் நனைந்திருந்தது. ‘அம்மா’ என்று அவள் அப்போது எழுப்பிய அந்த அவலக் குரல் கூட குழந்தையின் அழுகைக்குள் புதைந்து போயிற்று…’)
அதிகாலையின் மங்கிய இருட்டில் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு அருகே உள்ள பௌத்த விஹாரையிலிருந்து ஒலிபெருக்கியில் ‘பிரித்” ஓதும் சத்தம் அந்த இராணுவ மருத்துவமனைக்குள் எதிரொலித்தது.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி..!
அந்த மருத்துவ மனையில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பண்டா ‘நான் ஒரு நல்ல பௌத்தனா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ‘இல்லை’ என்ற அவனது மனச்சாட்சியின் பதில் அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. ‘நான் ஏன் இப்படிச் சாக்கடைப் புழுவாய் மாறினேன்? நாட்டுப்பற்றா? மதவெறியா? இல்லை மொழிவெறியா?’
எதுவுமே இல்லை! குடும்பத்தின் வறுமை தான் அவனை இராணுவத்தில் தொழில் புரிய இழுத்து வந்தது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்குப் பள்ளிப் படிப்பு அதிகம் வரவில்லை. அவனது கட்டுமஸ்தான உடம்பிற்கு இந்தத் தொழில் ஒன்றுதான் அந்த நேரம் ஏற்றதாக இருந்தது. எனவே தான் வேறுவழியில்லாமல் இராணுவத்தில் சேர்ந்தான். அவன் இராணுவத்தில் சேர்ந்த காலத்தில் தினமும் பயிற்சி செய்வதுஇ சாப்பிடுவதுஇ தூங்குவதுஇ போன்றவை தான் இராணுவத்தின் தொழிலாக இருந்தது. எப்போதாவது எங்கேயாவது மழை வெள்ளமென்றால் அங்கே போய் மக்களுக்கு உதவி செய்வார்கள். அவ்வளவுதான். எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இப்படித்தான் அவனது இராணுவ வாழ்க்கை ஆரம்பமானது.