அது ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு புரட்டாதி மாதம் முதல் வாரமாயிருந்தது. கிளாலிக் கடல் நீரேரியின் கரையில், அவளைச் சுமந்து வந்த படகு தரை தட்டிய போது பின்னிரவாகியிருந்தது. ‘ஊ…ஊ’ வென்று இரைந்தபடி தேகத்தின் மயிர்க் கால்களையும் கடந்து ஊசியாக உள்ளிறங்கியது கனத்த குளிர் காற்று.
அவள் அணிந்திருந்த மெலிதான நூல் சேலையின் முந்தானையால் தலையையும் உடம்பையும் இழுத்து மூடியிருந்தாள். எலும்புக்கு தோல் போர்த்தியது போன்றிருந்த அந்த உடம்பு ‘கிடு கிடு’ வென நடுங்கிக் கொண்டேயிருந்தது.
குச்சிகளைப் போல நீண்டிருந்த கைகளால் படகின் விளிம்பை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாதவாறு அவளது நெஞ்சுக் கூட்டுக்குள் இன்று ‘படக்.. படக்’ அதிகமாக அடித்துக் கொள்வது போலிருந்தது.
இருள் கலைந்திராத அந்த விடிகாலைப் பொழுதில் தனது சுருங்கிப்போன கண்களை மேலும் இடுக்கிப் பூஞ்சியவாறு கரையிறங்கப் போகும் நிலத்தின் அசுமாத்தங்களை ஆவலோடு நோட்டமிடத் தொடங்கினாள் பாக்கியம்மா.
அது ஒரு ‘புளுஸ்டார்’ வகை மீன்பிடிப்படகாக இருந்தது. அதிலே பொருத்தப்பட்டிருந்த பதினெட்டு குதிரை வலுக்கொண்ட என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய படகோட்டிகள் இருவரும் ‘சளக்’ ‘சளக்’ என சத்தமெழும்படியாக தண்ணீருக்குள் குதித்து இறங்கினார்கள்.