விடிந்தால் பயணம். வீடெல்லாம் மாய்ந்து மாய்ந்து தேடியாகி விட்டது. கிடைப்பேனா என்று ஆலவட்டம் போட்டது அந்த புத்தகம். வீட்டிலுள்ள நூல்நிலைய அடுக்குகளின் மூலை முடுக்கெல்லாம் கூட தேடியாயிற்று. காணவே இல்லை. அண்மையில் எக்ஸ்போவில் நூலக வாரியம் நடத்திய புத்தக விற்பனையில் சுமக்க முடியாமல் சுமந்து வாங்கிக்கொண்டு வந்த புத்தகக்குவியலில்,பொன் போல் பார்த்துப்பார்த்து தெரிவுசெய்த புத்தகங்கள் எல்லாமே இருந்தன. ஆனால் இந்த பூம்பட்டு புத்தகம் மட்டும் எங்கே போனது என்று தெரியவில்லை. .சுமிக்கு எரிச்சல், கோபம், எல்லாமே தன் மீதுதான். எதிலுமே பொறுப்பில்லை, எதிலுமே கவனமில்லை, என்ன குணமிது ? கணவர் மாதவனின் திட்டுதல் கூட தப்பில்லையோ ? கவலையும் பரபரப்புமாய் லக்கேஜுடன் சாங்கி விமான நிலையத்தில் நின்ற போதும் சுமிக்கு, தோள் பையில் அந்தர்தியானமாகிப்போன புத்தகம் கொண்டுவரமுடியாமல் போன ஏக்கம் தான். அந்த கவலையோடே கணவரைப் பார்த்தபோது மாதவனுக்கு சிரிப்பு வந்தது. இவளைத் தெரியாதாக்கும்.! என்னமோ சந்திர மண்டலத்துக்குப்போவதுபோல் படபடப்பும் , கண்ணீர் விடுதலும். இந்தா இருக்கும் கேரளா . கண்மூடி கண் திறப்பதற்குள் விமான நிலையத்தில் போய் இறங்குவாள். மாநாட்டாளர்களை வரவேற்பதற்காகவே வந்து நிற்கும் காரில் ஏறிப்போக வேண்டியதுதான். அரங்க வளாகத்துக்குள் போய் விட்டால் பிறகு, இவள்தான் சுமி என்று யாராவது சொல்லமுடியுமா? உலகமே சாஹித்யம், சர்வமும் இலக்கியம் என மெய்ம்மறந்து நிற்பவளாயிற்றே ? அரைக்கண் உறக்கத்தில், ஏதோ ஊர்ந்திடும் தொடுகை உணர்ச்சியில் பதறிக்கொண்டு கண் விழித்தால், இருக்கை வாரை ஞாபகப்படுத்துகிறாள் விமானப் பணிப்பெண் . அப்போதுதான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பதே நினைவில் உறைத்தது. அட, அதற்குள் கேரளா வந்து விட்டதா? தூக்கக் கலக்கத்தினின்று முற்று முழுதாய் விடுபட்டு விட்டாள். குளித்து, ஜெபித்து,நாமம் சொல்லி, வெளியே வந்தால் மழைச்சாரல் இன்னும் விடவில்லை.
– டெஸ்மோண்ட் எல். கார்மான்பலாங் கவிஞர், நாட்டுப்புற கதைகளை எழுதுபவர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் காசி மற்றும் ஆங்கிலத்திலும் இரண்டு மொழியிலும் எழுதுகிறார். ஷில்லாங்கிங்,கின் வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகத்தின் வாழ்வியல் மற்றும் கலாச்சார படிப்பினையின் படிப்பவராக உள்ளார். –
திரு.கே.வின் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன. காரின் ஜன்னலில் தன் பார்வையை பதித்துக் கொண்டு, தெருவில் வரிசையாக இருந்த வீடுகளை பார்த்துக் கொண்டே வந்தார். மக்கள், தனியாக செல்பவர்கள், தோழமை முக பாவத்துடன் இருப்பவர்கள், சிலர் சாலையில் நடந்து கொண்டு, சிலர் கார்களில், தன் கண்களின் முன்னால் நடந்து செல்பவர்களைப் போல் தன் வாழ்க்கையில் நடந்து விஷயங்கள் திரைபோல் ஓடின. நிம்மதியில்லாமல். தன்னுடைய சொகுசான காரில், மெதுமெதுப்பான இருக்கையில் சௌகரியமில்லாமல் முணு முணுத்தபடியே அமர்ந்திருந்தார். வாகன ஓட்டுனர், அவரை நன்கு புரிந்து கொண்டவர் போல் வண்டியின் வேகத்தை குறைத்து, ‘என்ன, சார்?’ எனக் கேட்டார். ‘ஒன்றுமில்லை’ என பதிலளித்த திரு.கே- மநதிரிசபையில் இரண்டரை ஆண்டுகளாக அமைச்சராக உள்ளார். ‘பெண் நாய்’ என திட்டினார். இஸபெல்லால் எப்படி இதை செய்யமுடிந்தது. என்னுடைய நிலைமை அவன் உணரவில்லையா? ஒருவேளை அதனால் நடந்தால் என்ன ஆகும்… கடவுளே நினைத்துக் கூட பார்க்க முடியாது! மணல் வெளியில் மென்மையாக அந்தக் கார் சென்று கொண்டிருக்கையில் திரு.கே பின்னோக்கி கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். மதிக்கப்பட்ட தலைமையாசிரியராக அவர் பணியாற்றிய பள்ளி இருந்த கிராமத்தின் அந்தப் பகுதி எம்.எல்.ஏ 5வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் சமயத்தில் மட்டுமே நினைவு கூர்வார். திரு.கே- பக்கத்து கிராத்தைச் சேர்த்ததுடிப்பான மற்றும் கடின உழைப்பாளி, வலிமையான கைகளையும் எப்போதும் புன்னகையையும், கொண்ட இளைஞன்.
மின்சார விசைப்படகிலிருந்து ஒரு துள்ளு துள்ளிக்குதித்து கீழே இறங்கியபோது பீய்ச்சித்தெறித்த தண்ணீர்த்திவலையில் ,கால்முட்டிவரை நனைந்துவிட்டது. நேரம் இன்னும் புலரவில்லை.என்றாலும் ஈர பேண்டுடன் பிரயாணப்பையைத் துக்கிக்கொண்டு நடப்பது கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. இருள் பிரியாத இந்த நேரத்திலும், சில்வண்டுகளா இல்லை,ட்வீட்டிப் பறவைகளா ,என்று அனுமானிக்க முடியாத அந்த கிறீச்சிடல் ரீங்காரம் சிவநேசனை மிகவும் கவர்ந்தது. சுற்றிலும் கடல்சூழ் இந்த தீவில் தான் ஸ்வாமிஜியும், அவரது தொண்டரடிப் பரிவாரங்களும் வாழ்கிறார்கள் என்பது பற்றிய ஆச்சரியங்களையெல்லாம் கடந்துதான் சிவா இங்கு வந்திருக்கிறான். ஒவ்வொரு முறை ஸ்வாமிஜி மலேசியாவுக்கு வரும்போதும் தனி தரிசனத்துக்கு நிறையவே சிரமப்பட்டிருக்கிறான். பகீரதப்ரயத்னத்துக்குப் பிறகு அவரது பிரத்யேக தொண்டரடியிடம் ,ஸ்பெஷல் பாஸ் எனும் கரிசனத்தில் திருமுகம் காணச்சென்றபோதும் சிவநேசனால் ஒன்றுமே மனம் விட்டுப்பேச முடியவில்லை. அப்பொழுதும் சுற்றி அவரது நிழல்போல் அணுக்கத்தொண்டர்கள் நிரம்பியிருக்க சிவ நேசனுக்கு பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தது. ஸ்வாமிஜி, என்று மட்டுமே நாத்தழுதழுக்க ஆசி பெற்றுக்கொண்டு திரும்பிவிடுவான். ஸ்வாமிஜி ஏழைகளுக்கு நிரம்ப உதவுபவர். பள்ளிக்கூடங்கள் கட்டியிருக்கிறார். மருத்துவமனை கட்டியிருக்கிறார்.இந்த உலகில் பிறந்த யாருமே அனாதையில்லை, என்பதாலேயே அனாதை இல்லம் என்ற பெயரைத்தவிர்த்து,”ஸ்வாமிஜி இல்லம்” என்ற பேரில் நிறைய குழந்தைகள் தங்கிப்படிக்க இலவச விடுதி, கல்விசாலை என, அவர் சேவை செய்யாத துறையே இல்லை. உலகின் பல நாடுகளில் அவரது கீர்த்தி பரவியிருந்தது.இதனாலேயே உலகம் முழுக்க பரிசுத்த தொண்டர்கள் இவருக்கு நிரம்பியிருந்தார்கள். அவர்களில் ஒருவராகத் தன்னை நினைப்பதே சிவநேசனுக்கு பெருமையாக இருந்தது.என்ன பேறு பெற்றிருந்தால் இவர் வாழுங்காலத்தில் தானும் ஜனித்திருக்கிறோம் என்பதே அவ்வப்போதைய அவனது பரவசமாக இருந்தது. ஆனால் அவனுக்கு வாழ்க்கைப்பட்ட மலர்விழியின் கேள்வி வேறாயிருந்தது.
ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள். செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத் தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப் பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது. எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப் படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்கு வந்து தங்கியிருந்தனர்.
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதம். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது…..? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்குக் கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்…. நிம்மதியாய்….. மகிழ்ச்சியாய்…..நான் மட்டும்……?
“வெள்ளம் ஏறிடுச்சாம்…..! வெள்ளம் ஏறிடுச்சாம்……!”
“வெள்ளம்…….எங்க ஏறிடுச்சு? விவரமா……..சொல்லு மணியம்….!”
“வேற எங்க ஜீவா ….! நம்ம…… தமிழ்ப்பள்ளியிலதான்…..வெள்ளம் ஏறிடுச்சாம்….!”
“ நேத்துப் பேஞ்ச செம மழைல…….வெள்ளம் ஏறாம இருக்குமா…..?”
தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது! பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர். இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன்,தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை ‘பிளாஸ்டிக்’ வாளியில் அள்ளி வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர். பள்ளிப் பணியாளர்கள் மற்ற வகுப்புகளில் ஏறிப்போயிருந்த நீரைச் சிரமப்பட்டு இறைத்துக் கொண்டிருந்தனர்! பல மணி நேர போராட்டத்தின் எதிரொலியை களைத்துப்போன அவர்களின் முகங்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருந்தன!
பௌர்ணமி நாளின் முன்னிரவுப் பொழுதொன்றில் காற்று வரத் திறந்திருந்த யன்னல் பிடித்தமான மெல்லிசைப் பாடலொன்றினை ஏந்தி வந்து தனித்திருந்த அறையினை நிறைக்கத் தொடங்கிய இக்கணத்தில் உன்னை நினைத்துக் கொள்வது கூட மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. உன்னைக் காற்று ஏந்தி வருகிறதா? மெல்லிசையின் ராகங்களுக்குள் நீ மறைந்து வந்து குதிக்கிறாயா ? பௌர்ணமியின் ஒளிக் கீற்றுக்கள் உன் உருவம் தாங்கி வருகிறதா போன்ற மாயக் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடைகளில்லை. என்னைப் போல இவையெல்லாவற்றையும் ரசிக்கும் மனம் கொண்ட நீ, என்னுள்ளிருக்கும் நீ, உன்னை நினைக்க வைக்கிறாய். பசுமை மிகுந்த சோலையொன்றின் மத்தியில் நீர் மிதந்து வழியுமொரு கிணற்றினைச் சூழ உள்ள தரையும் கூட ஈரலிப்பைக் காட்டுவதைப் போல உன் அன்பின் ஈரத்தில் கசியுமென் விழிகளை இந்த மாடியின் சாளரத்துக்கப்பாலுள்ள வெளிகளில் அலையவிடுகிறேன். தாயொருத்தி சிறுகுழந்தையை மிகுந்த அன்பைத் தாங்கித் தன் மார்போடு அணைத்தபடி வீதியினோரமாக நடந்து போகிறாள். ஒரு ஆண், தந்தையாக இருக்கக் கூடும், பூலோகம் முழுதையும் சுற்றிப் பார்க்கவைக்கும் பாசத்தை ஏந்தியபடி நடை பயிலக் கற்றுக் கொண்டிருக்குமொரு குழந்தைக்கு, நடக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சூரியனை இரவில் கொண்டு வரும் நகரத்தின் ஒளிவிளக்குகள், புதிதாகப் பிறந்த தன் குட்டியைக் கழுத்தில் கவ்வி வேற்றிடம் மாற்றுமொரு பூனை, இப்பொழுதுதான் மொட்டவிழ்த்து வாசனை அனுப்பும் இரவுராணிப் பூ, நிஷ்டை கலைந்த கலவரத்தில் எங்கோ கீச்சிடுமொரு ஒற்றைப் பட்சி… இன்னுமின்னும்… அனைத்தும் உன் நினைவுகளையே சுமந்துவருகின்றன.
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது.உப்பளத்தில் விளைந்த உப்பைப் போல எங்கும் வெண்பஞ்சுப் பனிப்படுக்கை நிலத்தை மூடியிருந்தது.வீதியில் சளக்குப் புளக்கென ஒரே சகதித் தோற்றம்.”ஒ!, “இந்த பனிப் புயலில் வாகனங்கள் நகர முடியாது.எங்கே உப்பு போட்டிருக்கப் போறார்கள்? பிறகென்ன, …சலிப்படைந்தான், வாகனத்தை சறுக்கிக் கொண்டு தான் ஓட்ட வேண்டும். தன் ஒரு வயசு மகளை தூக்கிய போது மனதில் மாற்றம் நிகழ்ந்தது. ‘ பனியை மனம் அழகாக கூட ரசிக்கிறது .
“பேபி,பார் எவ்வளவு பனி! “என்று காட்டினான்.
பேபி,நீ பார்க்கிற முதல் பனிப் புயல்”என்று காட்ட அது சிரிக்கிறது. என்ர செல்லம்,இத்தாலியில் பிறந்திருந்தாலும் சிரிக்கும் தான்..ஆனால், வேலைத்தளத்தில் வேலை பார்க்கிற அந்த ஈழத் தமிழன்ர பேர்?, அது என்ன?..அவனுக்கு எப்பவுமே ஞாபகம் வருவதில்லை. டிங்கரோ.., கங்கரோ..? என்னவோ, அவன், அளப்பானே ‘அட , சிறிலங்காவில் பாதி நிலமேஅவர்களிட நாடாம்! வடக்கு, கிழக்கு எனக் கிடக்கிற பெரிய மாகாணங்களை தமிழ் மன்னர்கள் ஆண்டவர்களாம்.தமிழ் நாடாகத் தான் இருந்ததாம். பேபி, அங்கே பிறந்திருந்தால்… சிரிக்காது தான். அது வெப்பநாடு, கலாச்சாரம் ஜீன் எல்லாமே வேற, வேற! ஒரினம், இன்னொரு இனத்தை அடிமை கொள்ள முயல்கிற நாடு அது!எப்படி இருந்தாலும் … ஆசியரின் உருவ வளர்ச்சியும் சிறிது குறைவு தான். இங்கே ஒரு வயசிலே செய்யிறதெல்லாம் அங்கே இரண்டு வயசிலே தான் செய்கிறது.
அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை. அவன் வரும்வரைக்கும் கதவைத் திறந்து வைக்க மறந்து போனது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் மனதுக்குள் ஒரு முறை திட்டித் தீர்த்தாள். அவளது அன்றாட வேலைகளுக்கு முடிவேதுமற்றதாயிருந்தது. விறகு சேகரித்து வருவது, தண்ணீர் கொண்டு வருவது, மில்லுக்கு தானியங்களைக் கொண்டு சென்று, அரைத்துக் கொண்டு வந்து சமைப்பது, ஐந்து பிள்ளைகளையும் பராமரிப்பது என அவளது கணவனது வேலைகளுக்கும் மேலதிகமாக அவளால் செய்ய வேண்டியிருந்தது. அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவன் எவ்வாறான மனிதனொருவன்? இல்லாவிட்டால் கணவனொருவன்? அவனுக்கு கடைத்திண்ணை வீட்டைப் போல ஆகிவிட்டிருந்தது. அவன் தனது பகல் முழுவதையும், இரவில் பெரும்பகுதியையும் கடைத் திண்ணையில்தான் கழிக்கிறான். வீட்டுக்கு வருவதென்பது உறங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டும்தான். அவள் அவனை மறந்துவிட முயற்சித்தாள். ஆனாலும் இரவில் கனவுகளுக்கிடையில் அவன் அவளது மனதில் வந்து ஓய்ந்திருந்தான்.
– நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.
ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,
மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.
சரியா பிழையா தெரியவில்லை. –
எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள். பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. பொதுவாக வீதியைக் கடக்கும்போது இப்படியாக நடப்பதுண்டு என்பதால் ஏதோ கற்பனையில் இருந்த நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு சிகப்பு விளக்கில் தெருவைக் கடந்ததற்காகத் தண்டப்பணம் கொடுக்கும்படி தபாலில் அறிவிப்பு வந்தது.