மருத்துவமனை வளாகம் முழுக்க, முடிச்சு முடிச்சாக ,ஜனங்கள் நின்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். துக்கமும் அவமானமும் ஒருபக்கம் என்றால், அதிர்ச்சியின் ஆகாத்தியம் இன்னொரு பக்கம். மூத்த மகன் சரவணனால் பேசவே முடியவில்லை. சரவணனுக்கு இந்த 52 வயசுக்குப் பொருத்தமாக மண்டை முழுக்க சஹாராப்பாலைவனமாக பளபளத்துக்கொண்டிருந்தது. இரண்டாமவர் வீரராகவனுக்கும் வழுக்கை இல்லையென்றாலும் கூட,அவரது தலையும் பொல்லென்று சுத்தமாய் நரை முடிதான்,. இவர்களுக்கே பேரன் பேத்தி பிறந்துவிட்டார்கள். அப்படியிருக்க இந்த கிழவன், கொள்ளுத் தாத்தாவாய் ,லட்சணமாய், வாழவேண்டிய , இல்லை, , ஒரு மூலையிலாவது முடங்க்கிடக்கவேண்டிய வயசில் போய், இப்படி ஒரு காரியத்தை செய்துட்டாரே? கொஞ்சமாவது பெற்ற பிள்ளைகளோட மான அவமானத்தைப்பற்றி யோசிச்சாரா? கோபப்படுவதா? நெஞ்சிலறைந்து கொண்டு அழுவதா? ? “என்று இரண்டும் கெட்டான் நிலையில் நிலைகுலைந்துபோய் நின்றிருந்த மகன்களை, நெருங்கிய உறவினரான ராஜு மாமாதான் தட்டிக்கொடுத்து , ஒவ்வொரு காரியங்களையும் பொறுப்பாக, செய்ய வைத்தார்.இதில் சனிப்பொணம் தனியாகப்போகக்கூடாது என்று, கூடவே அதற்கான பரிகாரத்தையும் செய்யவைத்தே,பெரியசாமித் தாத்தாவை, மண்டாய் சுடுகாட்டில், மின்தகனத்துக்கு கொண்டு போனார்கள். அதுவரை தாங்கிக்கொண்டு நின்ற பெரியவர் சரவணனால் அதற்குமேலும் தாங்கமுடியவில்லை.
[உயிர் நிழல் ஆகஸ்ட் 2000 இதழில் வெளியான சிறுகதை. பதிவுகள், திண்ணை இணைய இதழ்களிலும் பின்னர் மீள்பிரசுரமானது. -பதிவுகள்.] யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் இரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். ‘பேப்’ வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு ‘திரில்’ இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த ‘யமேய்க்க’ மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளையர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். ‘பேப்’ வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். ‘சிறு இந்தியா’ , ‘சிறு இத்தாலி’..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. – பதிவுகள்-]
தொடையில் ஓங்கி ஒரு அடி..!
வலியில் , வஹாப் – என் தம்பி – எழுப்பிய சத்தம் மனதை அறுத்தது. இது வலி என்றோ அது எந்த இடத்திலென்றோ அல்லது அடித்தது தன் லாத்தாதான் என்றோ அவன் உணர்வானா ? பார்வை , எப்போதும் வானத்தை மறைக்கும் முற்றத்துப் பந்தலின் ஏதாவது ஒரு மூங்கிலில் பட்டு நிதானமில்லாமல் அலைய, எச்சில் வடிகிற கோணல் வாயில் மொய்க்கும் ஈக்களை விரட்டத் தெம்பில்லாத தன் திருகிய கைகைளைத் தொட்டியில் அடித்துக் கொண்டு இருப்பவன் அவன். தொட்டியின் கம்பிகளைச் சுற்றிப் பிணைந்துள்ள அவன் சூம்பிப் போன கால்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் அவன் மூளைக்கும் தெரியும். மூளை இருக்கிறதா ? உடலின் எந்த பாகங்களுக்கும் வித்யாஸம் தெரியாத ஒரு பிறவியை குழந்தையென்று சொல்வது பொருந்துமா ? இப்போது அவன் பேண்டிருக்கும் மலத்தின் நாற்றம் கூட அவனுக்குத் தெரியவில்லையே…
[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. – பதிவுகள்-]
வானத்தில் முகில் கூட்டங்கள் நிற்பதும் நடப்பதுமாக எதையோ தேடி ஒடியபடி என் நினைவுகளும் அதுபோல்தான். என் கையைவிட்டு மட்டும் தொலைந்துபோன அற்புதமான அந்த நினைவுகள் என்னுள் எப்போதும் படர்ந்தபடி. அம்மா அடிக்கடி கூறுவா உன்னால ஒருவேலையும் முழுசா செய்ய முடியாது.எந்த வேலையை தொட்டாலும் அரைகுறைதான். அதைபடிக்கவேணும் இதை படிக்கவேணு மென்று எல்லாவற்றையும் தொட்டு பார்த்ததோட சரி. நேற்று இந்த ஒன்று கூடலுக்கு போய்வந்ததிலிருந்து என் எண்ணங்களும் அங்கேயும் இங்கேயும் தொட்டுக்கொண்டே இருக்கின்றது.
[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. – பதிவுகள்-]
நாட்பட்ட உந்துதல் தாளமுடியாமலேதான் வரைபலகையையும் தூரிகையையும் எடுத்தான். உந்துதல் என்றால்,ஒருநாள் இருநாள் உந்துதல் அல்ல. கிட்டத்தட்ட ஏழு வருட உந்துதல். இன்றைக்கு உச்சியிலும் மறுநாள் கிடப்பிலும் என்று காண்புகட்கேற்ப, நினைவில் நுரைத்து வடியும் உந்துதல். வீடுகூட்டும் தும்புக்கட்டைகூட, அந்தச் சீனத்து எழுத்தோவியனின் தூரிகையோட்டத்தை எழுப்புவதுண்டு. சொல்லப்போனால், ஒழுக்கிலே இலயித்து நகரும் நதியும்கூட.
ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. ‘டாக்ஸி’யில் இருக்கிற ஓட்டி ‘ஒவனு’க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் பயணம். ‘டாக்ஸி’ விரைவு வீதியில் விரைந்து கொண்டிருந்தது.’பிளக்பெரி’ வந்த பிறகு பயணியின் தொண தொண அலட்டல்கள் எல்லாம் இல்லை. எங்கட பிரச்சனையே தீறவில்லை. இவர்களூக்கு எங்கட அரசியலும் தெரியாது.அதை அறிவதிலும் அக்கறை காட்டுவதில்லை . இவன் தனக்கென கீறின வட்டத்தை விட்டு வெளிய போவதில்லை. இந்த நிலையில் இவன்ட வியாபாரமும் பிரச்சனையும், எமக்கு மட்டும் எதற்கு? எங்களுடையது போல சமூக வாழ்க்கை இவனுக்கு இல்லை. அக்கறைப் படுவது என்றால் வியாபார வலை தொடர்புகளோடு மட்டும் தான்.
கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன. “தம்பி குகன்… வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்” மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா – திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன். நேரம் : காலை 9.20, திகதி : 25.05.2011 நாங்கள் நாலுபேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தோம். டச்சு றோட்டில் இருந்த உருப்படியான ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் மோட்டார் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு பெரிய தண்ணீர்ப் போத்தல்கள், இரண்டு லீட்டர் கோக் போத்தல்கள் இரண்டு மற்றும் நான்கு பேருக்குமான மதியச்சாப்பாடு, கத்திகள் பொல்லுகள் சகிதம் எங்கள் பிரயாணம் ஆரம்பமானது. ஏதோ அமேசன் நதிக்கரைக் காட்டுக்குள் நுழைகின்ற பிரயாணம் போல, 21 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குப் போகும் பயணம். கிராமம் இத்தனை வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து, தற்போது மீளக்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். “உனக்கம்மா இந்த ஒரு புத்தகத்திற்குப் பதிலாக இரண்டு “துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்” (The unfortunate events) புத்தகங்களை வாங்கித் தருகிறேன்” என்று வாங்கித் தந்து விட்டார். லெமொனி சினிக்கெட்டின் “துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்” தொடரும் எனக்கு மிகவும் விருப்பமான தொடர் தான். இந்ததொடரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ் எலிஸபெத். எனது கிளாஸ் டீச்சர். தாய் தகப்பனில்லாத வயலட், கிளாஸ், குழந்தை சனியை பொல்லாத ஓலாவ் படுத்தும் பாடிருக்கிறதே. பாவம் அவர்கள். அவர்களது அப்பா அம்மாவை இந்தப் பொல்லாத ஓலாவ்தான் கொன்று விட்டான். இப்பொழுது இவர்களின் சொத்தினை அடைவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றான். திரு. போ (Mr.Poe) மட்டுமில்லையென்றால் இவர்களது பாடு இன்னும் அதிகத் துன்பம் நிறைந்ததாகவிருந்திருக்கும்.
ராமக்காவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
“பிரியாணி சோறு இம்புட்டு ருசியாக்கூட இருக்குமா? ஊரிலேன்னா பேருக்கு ஒருகறித்துண்டும், ஒரு துண்டு எலுமிச்சிக்காயும் கடிச்சுக்கிட்டு சாப்புட்ட அனுபவம்தான். ஆனா இங்கேனா எவ்ளோ சோறு,! எம்மாம் பெரிய கோழித்துண்டு, அட, இதுதான் லெக்பீஸா? நிறைய கொழம்பு, இன்னும் வெள்ளிரிக்காயும், அன்னாசியும் போட்ட, இனிப்பும் புளிப்புமான மேங்கறி, அப்புறம் தயிரில ஊறவச்ச என்னமோ ஒரு அயிட்டம், யப்பா, இன்னா ருசி, இன்னா ருசி, நாக்கெல்லாம் தேனா சொக்கிப்போச்சு போ!”
ராமக்காவைப் போலவே தான், ஊரிலிருந்து வந்திருந்த மத்த பொண்ணுங்களுக்கும் கூட, சாப்புட்டு முடிச்ச உடனேயே முகத்தில அப்படியொருபிரகாசம்.
“பேசாம தற்கொல பண்ணிக்லாம்னு தோணுது, மிஸிஸ் வாங்”, என்று முனகினார். சட்டென்று என் மூளை ஸ்தம்பித்தே விட்டது. உடம்பு சரியில்லையோ. எழுபதைக் கடந்த ஒரு மூதாட்டியின் வாயிலிருந்து இப்படியான சொல் வருவதென்றால்? என்ன சொன்னார் என்றே புரியாதபடி முதலில் மிகுந்த மென்குரலில் முனகினார். இரண்டாவது தடவை சற்றே குரலை உயர்த்திச் சொன்ன போது தான் எனக்கு சொற்களே புரிந்தன. கைபேசியில் மின்னிய இலக்கத்திலிருந்து தான் கூப்பிட்டது ஃபாதிமா என்றே தெரிந்தது. நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்த போதிலும் பல்லாண்டுகளாகத் தனியே இருந்தார்கள் அவரும் அலியும். அதை நினைத்து மறுகுவதே அவர்கள் அனுபவிக்கும் ஆகக் கொடிய துயரம். இரண்டு மணிநேரமாகச் சூழலை மறந்து மூழ்கியிருந்த முக்கியக் கோப்பிலிருந்து என் கவனம் முற்றிலும் விலகியிருந்தது.