குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில் யாரோ பெண் உட்கார்கிறார் என்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யார் என்று கூர்ந்து பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி வெளிக்காட்சியைப் பார்த்தான், குமரன் நினைவு மண்டபத்தைக் கடந்து பேருந்து அண்ணாவையும் பெரியாரையும் ஒருங்கே காட்டியபடி நகர்ந்தது. அதீத பவுடர் வாசமும் இன்னொரு உடம்பு வெகு அருகிலிருப்பதும் உடம்பைக்கிளர்ச்சி கொள்ளச்செய்தது அவனுக்கு.
பாலம் ஏறும் போது பேருந்துத் திரும்பியதில் அவளின் உடம்பு அவனுடன் நெருங்கி வந்த போது கிளர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தான் . முகச்சவரம் செய்யப்பட்டு பவுடர் இடும்போது தன் முகம் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. இன்னும் கூர்ந்து கவனிப்பதை அவளும் பார்த்தாள்.
அது திருநங்கையாக இருந்தது. அவன் உடம்பின் கிளர்ச்சி சற்றே அடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த உடம்பின் நெருக்கமும் உடம்பு வாசனையும் அவனுக்குப் பிடித்திருந்தது. நெருக்கமாக்கிக் கொண்டான்.
நெருப்பரிச்சல் பகுதியில் திருநங்கைகள் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறான். பிச்சையெடுக்கிற போது அவர்களின் அதட்டல் மிகையாக இருந்திருக்கிறது, பிச்சை கிடைக்காத போது உடம்ப்பின் பாகங்களைக் காட்டியும் உடலை பகிரங்கப்படுத்தியும் செய்யும் சேஷ்டைகளோ பிரதிபலிப்புகளோ அவனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.பிச்சை கேட்டு கொடுக்காத ஒருவனைத் தொடர் வண்டிப்பெட்டியிலிருந்து தள்ளிக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
பெரிய கட்டிடங்கள் மின்விளக்குகளை பொருத்திக்கொண்டு தங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. பேருந்தின் வேக இயக்கத்தில் அவள் வெகு நெருக்கமாக தன் உடம்பைப் பொருத்திக் கொள்வது தெரிந்த்து.. அவனுக்கும் இசைவாக இருப்பது போல் இருந்தான்.பயணம் ரொம்பதூரம் தொடர வேண்டும் என நினைத்தான்.