– எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது ‘தங்ஙள் அமீர்’ குறுநாவலை மீள்பிரசுரம் செய்கிறோம் –
– புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் ‘தங்ஙள் அமீர்’ இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. ‘தங்ஙள் அமீர்’ என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக ‘தங்ஙள் அமீரை’ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் ‘தங்ஙள் அமீர்’ வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் ‘மிதவை’ (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ”தங்ஙள் அமீர்’. இக்குறுநாவலினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். -வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்-
குறுநாவல்: தங்ஙள் அமீர் (பதிவுகள் – 23 April 2014)
“நேற்று ‘அல் – முராஃபி’க்கு போனீங்களா?, போக்கரை சந்திச்சீங்களா?” – எங்க மேனேஜர் ‘ஜெம்’, எதிர்பக்கத்து கேபினிலிருந்து எழுப்பிய அந்தக் கேள்வி எனக்கானது. காலையில் அலுவலகம் போனவுடன், மேனேஜர் ரூமுக்கும், அக்கவுண்டண்ட் ரூமுக்கும் எதிரே, பக்கவாட்டுத் தடுப்பினுள் காணும் டீ டேபிளில், காஃபி உண்டாக்கி; நானும், ஸ்டோர்கீப்பர் ஜமாலும் குடிக்கத்தொடங்கிய போதுதான், ஜெம் அலுவலகம் வந்தார். இருக்கையில் அவர் அமர்ந்த நாழிக்கு அப்படி கேட்டதென்பது எனக்கு குழப்பத்தைத் தந்தது.
‘அல் முராஃபி’ ஒரு சூப்பர் மார்க்கெட். ரியாத் புறநகர்ப் பகுதியான ‘அல் நசீம்’-ல் உள்ளது. அதன் பர்ச்சேஸ் மேனேஜர்தான் போக்கர்! அவனைப்பற்றிதான் கேட்கிறார். மலையாளியான அவன் பெயர் பக்கர் குஞ்சு. பக்கர் குஞ்சு, வழக்கில் போக்கராகிப் போனான். எங்க மேனேஜருக்கு அவன் கூட்டுக்காரனும்கூட. வியாபாரரீதியில் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் தரக்கூடியவன். அதற்கு ஈடாக மாதம்தட்டாமல் நாங்கள் தரக்கூடிய அன்பளிப்பு கவர் கனமானது! சிரிப்பற்ற அவனது முகத்தில் சிரிப்பை வரவழைப்பது! அவனது எத்தனையோ சௌதி சம்பாத்திய சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.