– தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்’ நாவல்தான் ‘தாயகம்’ பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே ‘கணங்களும், குணங்களும்’ நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல் வெளியாகின்றது. –
பகுதி ஒன்று: கருணாகரன் கதை
அத்தியாயம் ஒன்று: ஒரு பயணத்தின் தொடக்கம்
ஏழு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை அவ்வளவு விரைவாகக் காலம் ஒடிக்கொண்டிருக்கிறது. இரவும் பகலும் மழையும் வெயிலும்.பருவங்கள் மாறியபடி கூடவே காலமும் விரைந்தபடி…முடிவற்ற வாழ்வின் பயணங்களிற்கு முடிவு தானேது. விடிவும், முடிவும், முடிவும். விடிவும்.தொடக்கமே முடிவாகவும் முடிவே தொடக்கமாகவும்.தொடரும் பயணங்கள். தொடர்ந்தபடி.தொடர்ந்தபடி. என் வாழ்க்கையில் எதிர்பாராமல் எதிர்ப்பட்டுவிட்ட.கடந்த ஏழு வருடங்கள் வாழ்வில் மறக்கமுடியாதபடி..ஒரு விதத்தில் களங்கமாகப் படிந்துவிட்ட காலத்தின் சுழற்சிகள்.எதற்காக? ஏன்? இவ்விதம் ஏற்பட்டது. சிந்தித்துப் பார்க்கிறேன். சில சந்தர்ப்பங்களில் சில தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. உள் மனத் தூண்டுதல்களின் ஆவேசத் தூண்டுதலின் முன்னால் அறிவு அடிபணிந்து விடுகிறபோதுகளில் தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. செய்துவிட்ட தவறுகளிற்காகப் பின்னால் மனது கிடந்து அடித்துக் கொண்டுவிட்டபோதும். நடந்த தவறு என்னவோ நடந்ததுதானே. அதன் பாதிப்பும் விளைவுகளும் ஏற்படுத்திவிடும் ஆழமிக்க காயங்களிற்கு மருந்து.
பஸ் விரைந்து கொண்டிருக்கின்றது. வவுனியாவை நோக்கி.பின்புறத்தில்.மூலைசீட்டில் அமர்ந்தபடி யன்னலினூடு விரையும் காட்சிகளைப் பார்த்தபடி, சிந்தனையில் மூழ்கியவனாக சிலையாக உறைந்து போய்க்கிடக்கின்றேன். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான சிந்தனைகள். உரையாடல்கள். அத்தனை பேரையும் தாங்கிக் கொண்டு அடிக்கொரு தரம் தரிப்பிடங்களில் இறங்க வேண்டியவர்களை இறக்கி, ஏற வேண்டியவர்களை ஏற்றி.வெற்றிலையைக் குதப்பித் துப்பியவாறே “அண்ணே ரைட்” என்ற கண்டக்டரின் குரலுடன்.குலுக்கலுடன் பஸ் விரைந்து கொண்டிருந்தது. பழைய நினைவுகளில் மனது மூழ்கிப் போய்விடுகின்றது. கடந்த ஏழு வருடங்களாக நேற்றுவரை நானொரு சிறைப்பறவை. நான் செய்து விட்ட அந்தக் குற்றத்திற்கு இந்த எழு வருடங்கள் போதவே போதாது. ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் தீரக்கூடிய பாவத்தையா நான் செய்திருக்கின்றேன். எந்த ஒரு நாகரீக மனிதனுமே செய்யக்கூசுகின்ற அஞ்சுகின்ற அந்தக் காரியத்தைச் செய்ய என்னால், மக்களிற்காக வாழ்ந்து மடிந்த தியாகி ராஜரத்தினத்தின் மகனால் எப்படி முடிந்தது? எப்படி முடிந்தது?