அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் ‘நடுத்தெரு நாராயணன்’. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.
சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்: