நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வழங்குகிறார். லெனின் விருது 10000 ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுப்பத்திரமும் உள்ளடக்கியது. லெனின் விருதின் மிக முக்கிய அங்கம், விருது பெறுபவரின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். இறுதியாக சென்னையில் திரையிடப்பட்டு விருது வழங்கப்படும். படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே லெனின் விருதின் தனித்தன்மை.
பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்: அம்பாசமுத்திரம் பக்கத்திலுள்ள வழுதூரைச் சார்ந்த ஸ்வர்ணவேல் அவர்கள் பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அங்கு பாலு மஹேந்திராவிற்கு பல வருடங்கள் ஜூனியர். ஆவணப் படங்களின்பால் தனது கவனத்தைச் செலுத்திய சொர்ணவேல் தங்கம் (1995), ஐ.என்.ஏ. (1997), வில்லு (1997), போன்ற முக்கிய ஆவணப் படங்களின் இயக்குனர். அவரது சமீபத்திய படங்களில் முக்கியமானது அன்பினிஷ்ட் ஜர்னி: எ சிடி இன் ட்ரான்ஷிஸன் (2012) மற்றும் மைக்ரேஷன்ஸ் ஆப் இஸ்லாம் (2014). அன்பினிஷ்ட ஜர்னி, சொர்ண்வேல் தனது நண்பர் பேராசிரியர் மார்க் ஹூல்ஸ்பெக்குடன் இணையாக தயாரித்து இயக்கிய படம். ப்ளோரிடா மாகாணத்திலுள்ள அமெரிக்காவின் முதல் நகரமென கருதப்படும் செயிண்ட் ஆகஸ்டினில் 1960களில் நடந்த இதுவரை அதிகம் அறியப்படாத இன/நிற வெறுப்புச் சம்பவங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பட்ட கஷ்டங்களை ஆவணப்படுத்தியிருக்கும் இப்படம் பகழ்பெற்ற (AWDFF) ஆப்ரிகன் வொர்ல்ட் பிலிம் பெஸ்டிவலினால் அமெரிக்க சிவில் ரைட்ஸ் மூவ்மெண்டின் 50வது ஆண்டுவிழாவிற்காக தெர்ந்தெடுக்கப்பட்டு பல இடங்களில், குறிப்பாக ஆப்ரிக்காவில் நைஜீரியாவிலும், இப்பொழுதும் ஆப்ரோஅமெரிக்கர்கள் நிறவெறியினால் துயறுரும் பெர்கஸனுக்குப் பக்கதிலுள்ள மிஸ்ஸூரி பல்கலைக் கழகத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரிக்க அமெரிக்க ம்யூஸியத்தில் அரங்கேறியது தமிழர்களுக்கு பெருமை.