அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு, வணக்கம். இலங்கைத் தமிழர்களின் – குறிப்பாக சைவ மக்களின் ஆன்மீக வாழ்வியல் தொன்மையின் நிலைக்களனாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, கணிசமான இடர்களை பல கோணங்களிலிருந்தும் சந்தித்து அவ்வப்போது நேர்ந்த அழிவுகளிலிருந்து மீண்டும் மீண்டும் நிமிர்ந்தெழுந்து இன்றைக்கும் உயிர்ப்புடன் திகழ்வது திருக்கோணேஸ்வரம். எண்ணிக்கையில் அதிகமான இலக்கியங்களால் புகழ்ந்து பாடப்பட்ட சீரிய திருத்தலம் திருக்கோணேஸ்வரம். திருஞானசம்பந்தர் உள்ளிட்ட தேவார முதலியரால் தேவாரம் பாடப்பெற்ற புண்ணிய சேத்திரம். திருமூலர், பட்டினத்தார், அருணகிரிநாதர், சேக்கிழார் ஆகிய அருளாளர்களினால் ஆக்கப்பட்ட பாடல்களில் வைப்புத்தலமாகப் பாடப்பட்டு ப10சிக்கப்பட்ட திருக்கோயில். இராவணேஸ்வரனால் வழிபடப்பட்டதும், குளக்கோட்டனால் புனரமைக்கப்பட்டதுமான வரலாற்றுத் தொன்மை கொண்ட அருளாலயம். இதுகாலவரை பல பெரியார்கள் திருக்கோணேஸ்வரம் சார்ந்து அவரவர் காலங்களில் உபயோகத்திலிருந்த அச்சு சாதனங்கள் வாயிலாக மிகுந்த பிரயாசைப்பட்டு பதிப்பித்து வெளியிட்ட ஏடுகள், கல்வெட்டுகள், சாசனங்கள், புராணங்கள், பிரபந்தங்கள், செய்யுள் இலக்கியங்கள், வரலாறுகள், ஆய்வுகள், தோத்திரங்கள், கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகள் எண்ணில் அடங்காது. அச்சுக்கலை பெரிதும் வளராதிருந்த காலமது. வசதியீனங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட பல நூல்கள் – எங்கள் பார்வைக்கும் பராமரிப்புக்கும் அகப்படாமல் எங்கெங்கோ தனித்தனியாகத் தேங்கிக் கிடந்து காலஓட்டத்தில் எங்கள் ஒட்டுமொத்த கவனமின்மையினால் எதிர்காலச் சந்ததியினரின் கைகளுக்கு கிடைக்காமல் போகலாம். அத்தகைய துர்ப்பாக்கிய நிலைக்கு இடங்கொடாமல் அவைகளைத் தேடிக் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து ஒரு முழுமையான நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறோம். புராணங்கள் தொடங்கி வரலாற்று ஆய்வுகள் வரை வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்ட இந்நூல் திருக்கோணேஸ்வரம் பற்றி அறிய ஆர்வமுள்ள அடியார்கள், தமது உயர்படிப்பு தேவை நோக்கி உண்மை வரலாற்றினைத் தேடும் மாணவர்கள், ஆலயங்கள், ஆன்மீக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், வாசிகசாலைகள், சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டு அன்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் பயனளிக்கும் பெட்டகமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. திருக்கோணேஸ்வரத்தைப் பற்றி யார் யார் எந்தெந்த அனுபவத்தினைப் பெற விரும்புகிறார்களோ அந்தந்த அனுபவத்தினைப் பெற்றுப் பயனடைய இந்நூல் உதவும்.
Continue Reading →