சென்னை: ஆகஸ்ட்15 நூல் அறிமுக நிகழ்வு
தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம்.
*நிலாந்தன் *சோலைக்கிளி *யோ. கர்ணன் *அ.முத்துலிங்கம் *தமிழ்க்கவி *மு. நித்தியானந்தன் *சண்முகம் சிவலிங்கம் *ந.இரவீந்திரன் *ஸர்மிளா ஸெய்யித் *தேவகாந்தன் *பொ.கருணாகரமூர்த்தி *ஏ.பி.எம். இத்ரீஸ் *இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் *கற்சுறா *செல்வம் அருளானந்தம் *லெனின் மதிவானம் *லிவிங் ஸ்மைல் வித்யா *றியாஸ் குரானா *எம் .ரிஷான் ஷெரீப் *ம.நவீன் *ஓட்டமாவடி அறபாத் *ஹரி ராஜலட்சுமி *கருணாகரன் *மா. சண்முகசிவா *கறுப்பி *மோனிகா *தமயந்தி *பூங்குழலி வீரன் *எம்.ஆர்.ஸ்ராலின் * திருக்கோவில் கவியுவன் *இராகவன் *லீனா மணிமேகலை *ராகவன் *தேவ அபிரா *கே.பாலமுருகன் *குமரன்தாஸ் *விஜி *யாழன் ஆதி *லெ. முருகபூபதி *தர்மினி *ஆதவன் தீட்சண்யா *அகமது ஃபைசல் *கலையரசன் *அ. பாண்டியன் *அஜித் சி. ஹேரத் *ச.தில்லை நடேசன் *எஸ்.எம்.எம்.பஷீர் *மகேந்திரன் திருவரங்கன் *மஹாத்மன் *லதா *ஷாஜஹான் *பானுபாரதி *யாழினி *விமல் குழந்தைவேல் *மேகவண்ணன் *அஷ்ரஃப் சிஹாப்தீன் *மெலிஞ்சிமுத்தன் *யோகி *அஸ்வகோஷ் *ந.பெரியசாமி *தேவதாசன் *ராஜன் குறை *ஷோபாசக்தி… மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடு.
பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால், பாரதியார் கவிஞன் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர். பாரதியார் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ போன்ற புலவர்களைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று முரசு கொட்டியவர். அவர் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பின்வருமாறு எழுதினார்: “தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்? எதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும் வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும்.”
வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் எதிர்வரும் 2013 ஜூலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு முஸ்லிம் நூலகமும், இளம் மாதர் முஸ்லிம் பேரவை (வை. டப்ளியு.எம்.ஏ) ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, வைத்திய கலாநிதி தாஸிம் அகமது அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.
தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ என்னும் அறக்கட்டளையினால் $8,500 உதவித் தொகையாக இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது. 100 சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ‘நிலவற்ற இரவு’ (“Moonless Night”) என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. அதற்காகவே, மேற்படி தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்காகவும், வெளியிடுவதற்காகவும் தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்படும் 100 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். வெளிவரும் நூலானது பொதுசன நூலகங்கள், சமுக அமைப்புகளில் மட்டுமல்லாது இணையத்திலும் விற்பனைக்கு விடப்படும். இவ்வாறு ஒண்டாரியோ டிரில்லியம் ஃபவுண்டேசன்’ தனது இணையத்தளத்தில் அறிவித்திருக்கிறது. 1999 இலிருந்து இதுவரையில் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு $500,000ற்கும் அதிகமான உதவித் தொகையினை மேற்படி ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ என்னும் அமைப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உதவித் தொகை பெற்ற அமைப்புகளின் விபரங்களை ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. யாரும் சென்று பார்க்கலாம். அதன் இணையத்தள முகவரி: http://www.otf.ca/en/index.asp
இலங்கையின் தமிழ் இலக்கியத் துறை இன்று வரை சமூக நலன் சார்ந்ததாக, மக்கள் வாழ்வோடு இணைந்ததாக இருப்பதற்குக் அடிப்படைக் காரணம் முற்போக்குக் கருத்துகள் பூவோடு மணம் போல, எமது வாழ்வின் அங்கம் ஆகிவிட்டதே காரணம் எனலாம். கே.கணேஸ் முதற்கொண்டு இன்றைய எழுத்தாளர்கள் வரையான பெருந்தொகையான முற்போக்குக் கருத்துக் கொண்ட எழுத்தாளர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை மறந்துவிட முடியாது. இன்று காலம் அவர்களில் பலரை எம் மத்தியில் இல்லாது மறைந்துவிடச் செய்துவிட்டது. இருந்தபோதும் அந்த மூத்த எழுத்தாளர்களில் ஒரு சிலர் எம்மிடையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதுமையின் தாக்கம் அவர்களின் உடலை வலுக்குன்றச் செய்துவிட்டபோதும் அவர்களில் சிலர் இன்றும் தங்கள் பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வாழும் காலத்திலேயே அவர்களைக் கெளரவிக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் ‘இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்’ விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு 30.06.2013 மாலை 5 மணிக்கு “மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்பு” விழா கொழும்பு தமிழ் சங்க சஙகரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்ற குறிப்புடன் அழைப்பிதழ் கிட்டியுள்ளது. கூட்டத்திற்கு செல்வி திருச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
‘பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் இலக்கியத்துறையில் முழுநேரமாக ஈடுபட்டு அதிக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார். அவரது சகோதரர்கள் யாவரும் கலை இலக்கியம், மருத்துவம், அரசியல் துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்கள் தான். இளங்கோவன் சிறுகதைத் தொகுதி ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்” என்ற பெயரில் இந்தி மொழியில், அண்மையில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு இளங்கோவன் கௌரவிக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். அவரது புதிய நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு பாரிஸ் நகரில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், அபிமானிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பது ஆரோக்கியமானதாகவுள்ளது.”