அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழக எழுத்தாளரும் இலக்கிய ஆய்வாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொள்ளும் இலக்கியச்சந்திப்பு மெல்பனில், வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி ( 25-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.
‘காயம் பட்ட நிலம்’ இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமில்லை, பூப்பரப்பின் பல்வேறு மக்களும் இயற்கையும் பட்ட காயத்தினது அடையாளமாகும். (இதழின் ஆசிரிய தலையத்திலிருந்து) கூர் 2018 ‘காயம்…
Rajalingam Velauthar <vela.rajalingam@gmail.com>
சென்ற ஞாயிற்றுக் கிழமை (4-11-2018) திரு.அகணி சுரேஸ் அவர்களின் மணிமேகலைப் பிரசுரத்தால் பதிக்கப்பட்டுள்ள, இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு என்ற நாவல் நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கல் நிகழ்வு ஈஸ்ட்ரவுன் ஒன்றுகூடல் மண்டபத்தில் மாலை மூன்று மணியளவில் அமரர் அலெக்ஸ்சாந்தர் நினைவு அரங்கில் ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரை இடம் பெற்றது. சிற்றுண்டி உபசாரத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வு வழமையான நூல் வெளியீடு போன்று இருக்காது சற்று வித்தியாசமானதாக இருந்தது.
இந்நிகழ்வில் நூல் பற்றிய விமர்சன உரைகளோ அல்லது வாழ்த்துரை, அறிமுகவுரை போன்ற நூலாசிரியர் பற்றிய உரைகளோ இருக்கமாட்டாது என்று நூல் ஆசிரியர் விரும்பம் தெரிவித்தாலும் மாறாகச் சிலரின் உரை வாழ்த்துரையாக மாறியிருந்தது. ‘எதிர்காலச்சந்தியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றுவதற்கு ஊக்கப்படுத்தலாம்’ என்ற தலைப்பில் அறிஞர்களின் உரைகள் இடம்பெறவேண்டும் என்று ஆசிரியர் விரும்பி இருந்ததால் உரையாற்றியவர்கள் அதுபற்றித் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அவையோர் மிகவும் ஆர்வத்துடன் உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளின் சிறப்பான திறமைகளும் இந்த நிகழ்வில் வெளிக்காட்டப் பெற்றன. நிகழ்வுகளை தந்த சிறுவர், சிறுமிகளுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனர். அறிஞர்களின் உரைகளுக்கு இடையில் அரைமணித்தியாலங்களுக்கு ஒரு தடவை சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. நூல் வெளியீட்டின் போது, அகணி சுரேஸ் அவர்கள் இயற்றிய பாடல் ஒன்றும் அவரது மகனால் இசை அமைக்கப் பெற்று ஒலி வடிவில் இடம் பெற்றது.
நிகழ்வின்போது இடம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் உரையில் இருந்து ஒரு பகுதியயைத் தருகின்றேன்:
எதிர்காலச்சந்ததியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றலாம் என்ற தலைப்பில் உரையாற்றும்படி நூலாசிரியர் கேட்டிருந்தார். பொதுவாக எடுத்துக் கொண்டால் படைப்பாளிகள் என்று குறிப்பிடும் போது படைப்பாளிகள் பல விதப்பட்டாலும் இங்கே ஆக்க இலக்கியத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதைப்பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். எதிர்கால சந்ததியினரைப் படைப்பாளிகளாக மாற்றுவதற்கு முதலில் இலக்கியத்தில் ஈடுபாடு கொள்வதற்கு ஏற்ற சூழலை அவர்களுக்காக உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதற்கு முதற் கட்டமாக வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். தாயகத்தில் படித்தவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் படைப்பாளிகளாக மாறவில்லை. பள்ளிப்படிப்பைத்தவிர வேறு எந்தப் பொழுது போக்குப்படிப்புகளுக்கும் அனேகமான பெற்றோர் பிள்ளைகளை அனுமதிக்கவில்லை. குறிப்பாக கதைப்புத்தகங்கள், வார, மாத இதழ்களைகூட வாசிக்க விடவில்லை. அதனாலே உயர்கல்வி கற்ற பலர் குறிப்பிட்ட துறையில் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், இலக்கியத்திலோ அல்லது பொது அறிவிலோ சிறந்து விளங்கவில்லை. எங்கள் சமூகத்தில் இன்றும் அங்கும்சரி, இங்கும்சரி அது ஒரு குறைபாடாகவே இருக்கின்றது. ஆனாலும் இதை எல்லாம் கடந்து ஆங்காங்கே பல படைப்பாளிகள் உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதே உண்மை.
இதுவரை நான்கு முழுநாள் நாவல் கருத்தரங்கினை நடாத்தி முடித்த விம்பம் கலை இலக்கிய திரைப்பட கலாச்சார அமைப்பானது கடந்த சனிக்கிழைமை (03.11.2018) அன்று முழுநாள் சமகால கவிதை அரங்கொன்றினை ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. இலங்கை,இந்தியா, புகலிட நாடுகள் என்று உலகெங்கும் பரந்து கிடக்கும் சுமார் 20 கவிஞர்களின் படைப்புக்களை ஒரே அரங்கில் அறிமுகப்படுத்தவும், விமர்சனம் செய்யும் முகமாகவும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் அருந்ததி ரட்ணராஜ், T.சௌந்தர் ஆகியோரது ஓவியக்கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.
மேற்குறித்த இரு ஓவியர்களினதும் ஓவியங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு அற்புதமான அரங்க சூழலில் இந்நிகழ்வானது காலை 11 மணியளவில் ஆரம்பமாகியது. மூன்று அமர்வுகளாக நடந்தேறிய இந்நிகழ்வில் இங்கு உரையாற்றுபவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 நிமிடங்கள் மட்டுமே பேசக் கொடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதலாவது அமர்வினை மீனாள் நித்தியானந்தன் வழிநடத்தினார். முதலாவது உரையினை கவிஞர் சுகிர்தராணியின் ‘இப்படிக்கு ஏவாள்’ கவிதைத்தொகுதி குறித்து தோழர் வேலு அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் உடல் தொடர்பான வலிகளை வதைகளை ஆனந்தத்தை விபரிக்கும் சுகிர்தராணி சமூகப்பிரச்சினைகள் தொடர்பாக எப்போதும் தனது ஆழ்ந்த கருத்துக்களை வைப்பதாக கூறி அவரது கவிதைகள் மட்டுமல்லாமல் அது வெளிப்படுத்துகின்ற மொத்த சாராம்சத்தினை அவரது கருத்தியல் குறித்தும் பேசினார்.
நெற்கொழுதசனின் ‘வெளிச்சம் என் மரணகாலம்’ தொகுதி குறித்து குல சபாநாதனும் கலா ஸ்ரீரஞ்சனும் உரையாற்றினார்கள். குலசபாநாதன் இவரது கவிதைகள் தவறவிட்ட தருணங்களின் தவிப்புக்கள் என்றும் கலா ஸ்ரீரஞ்சன் துவாரங்கள் வழியாக சீறிப்பாயும் ஒளிக்கீற்றுக்கள் போல இக்கவிதைகள் ஒவ்வொருவர் எண்ணங்களிலும் வெவ்வேறு பரிமாணங்களாக பரிணமிக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்
முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000 (அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.)
இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000 (அமரர். திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (எழுத்தாளர் குறமகள்) ஞாபகார்த்தமாக)
மூன்றாவது பரிசு (இரண்டு எழுத்தாளர்களுக்கு) தலா இலங்கை ரூபாய்கள் – 20,000 (ஒன்று அமரர்களான திரு, திருமதி. தம்பியப்பா ஞாபகார்த்தமாகவும் மற்றையது அமரர். அதிபர் பொ. கனகசபாபதி (மகாஜனா) ஞாபகார்த்தமாகவும்)
ஏழு பாராட்டுப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 5000 (அமரர் அதிபர் அ. குருநாதபிள்ளை (நடேஸ்வரா) ஞாபகார்த்தமாக.)
ஐந்து ஊக்கப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 3000 ( அமரர் தாவளை இயற்றாலை கணபதிப்பிள்ளை கந்தசாமி ஆசாரியார் ஞாபகார்த்தமாக. )
போட்டிக்கான விதி முறைகள்:
போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அச்சுப் பதிவில் 1200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளர், ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப முடியும். போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையத்தளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தரவேண்டும். விதிமுறைகளுக்கு மீறிய கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
போட்டியில் பங்குபற்றும் எழுத்தாளர்கள் அனுப்பிவைக்கும் சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக அவர்களால் எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப் படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாத கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. போட்டிக்கான சிறுகதைகள் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக அவர்களது அரசியல் பொருளாதார சமூகம் சார்ந்த விடயங்களுக்குள் அமைவது வரவேற்கத்தக்கது.
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் நாளை 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெறுகிறது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இம்முறை மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடைபெறும் இவ்விழா குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் கலை இலக்கிய மாத இதழின் பிரதம ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் அனுப்பியிருக்கும் தனது வாழ்த்துச்செய்தியில், ” 2001ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர்விழா இவ்வருடம் மெல்பன் நகரில் இடம்பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. ” என குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலை-இலக்கிய ஆர்வலர்கள் வருடந்தோறும் ஒன்றுகூடும் விழாவாக இது நடைபெற்றுவருகிறது. அத்தோடு இலங்கையிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வது வழக்கமாகும்.2001ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது எழுத்தாளர் விழாவிலே நானும் எனது துணைவியாரும் பங்குபற்றினோம். அவ்விழாவில் மல்லிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழை அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சார்பில் வெளியிட்டுவைத்து உரையாற்றியமை மறக்கமுடியாத அனுபவமாகும். அத்தோடு அவ்விழாவில் இடம்பெற்ற கருத்தரங்குகளில் பங்குகொண்டதும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்ததும் இனிமையான நிகழ்வுகள். அதன்பின் 2004ஆம், 2006ஆம், 2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற விழாக்களிலும் நாம் இருவரும் பங்குபற்றினோம். 2004ஆம் ஆண்டு கன்பரா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் “ஞானம்” இதழின் அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழை வெளியிட்டது எமக்குப் பெருமைதரும் நிகழ்வாக அமைந்தது.
வருடம்தோறும் நடக்கும் இவ்விழாக்கள் மெல்பன், சிட்னி, கன்பரா, குவின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் இடம்பெற்று, இப்பிரதேசங்களில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குகொள்ள வகைசெய்வதும் சிறப்பான செயற்பாடாகும். இவ்வருட விழாவில் ஓவியக்கண்காட்சி, மறைந்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் ஒளிப்படக்காட்சி, நூல்கள், இதழ்கள்,பத்திரிகைகள் கண்காட்சி, நாவல் இலக்கியக் கருத்தரங்கு, கவிஞர்கள்அரங்கு, மெல்லிசை அரங்கு என்பன இடம்பெறவுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம். தமிழ்மொழியை தமிழர்பண்பாட்டை தமிழர் தம் கலை இலக்கிய முயற்சிகளை புகலிட நாட்டில் போற்றிப் பேணும் பெரும்பணியாக இவ்விழாக்கள் அமைகின்றன. ஒவ்வொரு வருடமும் இவ்விழாவைச் சிறப்பாக ஒழுங்குசெய்து சிறந்த முறையில் நடத்திவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்க நிர்வாகிகள் யாபேரது பணிகளையும் பாராட்டுகிறேன். விழா சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.