உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?
எனது பெயர் பாத்திமா முகம்மத். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பில் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். காத்தான்குடி பாத்திமா என்ற பெயரில் இலக்கிய உலகிற்குள் வந்தவள். எனது கணவர் ஏ.எம்.முகம்மத். இவர் ஓய்வு பெற்ற அதிபர். எனக்கு ஒரே மகன். இவர் டாக்டராகப் பணிபுரிகிறார்.
உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். பின் அரச முகாமைத்துவ உதவியாளராக கிட்டத்தட்ட முப்பத்து மூன்று வருடங்கள் கடமை செய்து சென்ற வருடம் ஓய்வு பெற்றேன். சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகம் என்பவை எனது அரச பணிக்கான தளங்களாக அமைந்தன.
நீங்கள் எழுத்துத் துறைக்குள் காலடி வைத்த சந்தர்ப்பம் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக, எப்போது ஆரம்பித்தது?
நான் பாடசாலைக் காலத்திலேயே கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்டேன். எனது தந்தை மர்{ஹம் காசீம் முகம்மத் வாழும் காலத்தில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள். அதேபோல எனது கல்லூரியின் தமிழ் ஆசிரியர்களான திருமதி அகஸ்டீன் ஜோசப், எம்.எஸ்.எஸ்.ஹமீட், மருதமைந்தன் ஆகியோர்கள் எனது திறமை கண்டு என்னை மென்மேலும் ஊக்குவித்தார்கள். கல்லூரியில் எட்டாம் ஆண்டு படிக்கும் போதே அக்கல்லூரியில் பவள மல்லிகை என்றதொரு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து அதன் பிரதான ஆசிரியராக நானே இருந்து திறம்பட நடாத்தி கல்லூரி மட்டத்திலும் கல்வித் திணைக்கள மட்டத்திலும் பாராட்டப்பட்டேன். 1972ம் ஆண்டு மிகச் சிறிய வயதில் தேசிய பத்திரிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மற்றும் உள்ளுர் சஞ்சிகைகள் என்பவற்றில் நிறையவே எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
உங்களது சிறுகதைப் படைப்புக்கள் பற்றிக் கூற விரும்புவது? சிறுகதைகளை எழுதும் போது அவற்றுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்?
நான் அடிக்கடி கூறுவேன் ஒரு எழுத்தாளன் என்பவன் கற்பனையில், ஆழமாய் சிந்திப்பதில், பரந்து சிந்திப்பதில், மற்றவர் துயரங்களில் அல்லது கஷ்டங்களில் தன்னையும் கற்பனை மூலம் ஆற்றுப்படுத்தி அதுபற்றி தனக்குள்ளே வினா எழுப்பி அதற்காக விடை காணத் துடிப்பதில் விளைவதுதான் கவிதை, அல்லது சிறுகதை. அந்தவகையில் நான் சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு காட்டுவதனால் பலரது துயரம், கஷ்ட நிலை என்பவற்றில் எனது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்துவேன். அவர்களது கண்ணீர் களையப்படத்தக்கதாக கருவொன்றை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு சிறுகதைகளை உருவாக்குவேன். முற்போக்கான சீர்திருத்தங்களை இந்தச் சமூகத்தில் கொண்டுவரத் தக்கதாக எனது ஆக்கங்கள் அமைய வேண்டும் என்பதையே எனது எதிர்பார்ப்பாகக் கொள்வேன்.