1. 1 நீங்கள் ஒரு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் உங்களைப் பற்றியும் உங்கள் எழுத்துக்கள் பற்றியும் கூறமுடியுமா? உங்களுக்கு எழுதும் உத்வேகத்தை எது தருகிறது?
வணிகரான என் தந்தைக்கு ஒன்பது பிள்ளைகள் அவர்களில் கடைசியாகப் பிறந்த ஒரே பெண் நான். தொடக்கக் கல்வியை உள்ளுர்ப் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் (அக்கடமி) பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றேன். (பத்தாண்டுகளுக்குப் பின்னர்) புத்தளம் மாவட்டத்திலும் பின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் ஆசிரியையாகப் பணியாற்றி 1990 ஆம் ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்ட விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றேன். முதலில் சில கதைகள் எழுதினாலும் என் புனைபெயரை பரவலாக அறியச் செய்தது 1963இல் ஆனந்தவிகடனில் அந்தக்கிழமையின் சிறந்த கதையாக வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற கதையே. (அந்தக்காலத்தில் இப்பொழுது உள்ளதுபோல் விகடனும் குமுதமும் தரம்கீழ் இறங்கியவையாக இல்லை) நீண்ட இடைவெளிக்குப் பின் கணையாழியில் வெளிவந்த ‘யோகம் இருக்கிறது’ இதுவும் பலராலும் வாசிக்கப்பட்டது. கதை எழுதவேண்டும் என்ற உந்துதலை புறச்சூழலும் நாட்டின் நடப்பு நிகழ்வுகளுமே ஏற்படுத்துகின்றன. பேரினவாதம் தலைதூக்கியாடும் எம் நாட்டில் மனத்தை சலனப்படுத்தி சஞ்சலப்படுத்தும் நிகழ்வுகள் பல. நான் அநேகமாக அவற்றை வைத்தே கதைகள் எழுத விரும்புகிறேன்.