எழுத்தாளரும் சூழலியலாளருமான ஃபார்லி மோவாட் (Farley Mowat) மறைவு!

Farley Mowatகனடிய இலக்கிய ஆளுமைகளிலொருவரும், தீவிர சூழலியலாளருமான ஃபார்லி மோவாட் தனது 92வது வயதில், போர்ட் ஹோப், ஒண்டாரியோவிலுள்ள தனது இல்லத்தில் மே 7, 2014, செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். இவர் தனது வாழ்நாளில் 45 நூல்களை எழுதியுள்ளார். அவரது நாவல்கள் சூழலியல் போராட்டங்கள், சாகசப் பயணங்கள் மற்றும் யுத்தம் ஆகியவற்றைப் பற்றியதாகவிருக்கும். அவரது நாவல்கள் உலகின் பலபகுதிகளிலும் 17 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. மேலும் 20ற்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Never Cry Wolf, The Snow Walker மற்றும் Lost in the Barrens ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது நூல்கள் பெரும்பாலும் இவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவையே. இவரது புகழ்பெற்ற நூலான Never Cry Wolf ஹாலிவூட்டில் திரைப்படமாகவும் வெளிவந்து புகழ்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது நூல்களை வெளியிட்டு வந்த McClelland & Stewart inc. பதிப்பகத்தினர் ஃபார்லி மோவாட் பற்றி குறிப்பிடும்போது தங்கள் பதிப்பகத்திற்கு நன்கு பயனுள்ளவராகவும், நீண்ட காலத்தொடர்பு மிக்கவராகவும் விளங்கியவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.  இவர் இரண்டாம் உலக யுத்தத்தில் தன் இராணுவ சேவையினை வழங்கியவர். அதன் பின்னரே எழுத்துத் துறைக்கு வந்தவர். பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் ஃபார்லி மோவாட்.

மே 12,1921 ஒண்டாரியோ மாகாணத்தின் பெல்வில் நகரில் பிறந்த ஃபார்லி மோவாட் ரிச்மண்ட் ஹில் நகரில் வளர்ந்தவர். இவரது கொள்ளுத்தாத்தா ஒண்டாரியோ மாகாணத்தின் முதல்வராகவிருந்த சேர் ஒலிவர் மோவாட். இவரது தந்தையான ஆங்கஸ் மோவாட் நூலகராகவிருந்தவர். ஃபார்லி மோவாட் வின்சர் நகரில் வசிக்கும் காலகட்டத்தில் (1930 – 1933) எழுதத் தொடங்கியவர். ஃபார்லி மோவாட்டின் குடும்பம் பின்னர் Saskatchewan மாகாணத்திலுள்ள Saskatoonன் நகருக்கு இடம் பெயர்ந்தது. அப்பொழுது ஃபார்லி மோவாட் தனது பதின்மப் பிராயத்திலிருந்தார். அங்குள்ள பத்திரிகையான Saskatoon Star-Phoenixrற்காகப் பறவைகள் பற்றிய பத்தியொன்றினை எழுதத்தொடங்கினார். அச்சமயம் அவர் சொந்தமாக இயற்கை பற்றிய செய்திக்கடிதத்தினையும் வெளியிட்டதுடன் அதிலும் எழுதினார். இரண்டாம் உலக யுத்தத்தில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய ஃபார்லி மோவாட் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் தன் கல்வியினைத் தொடர்ந்தார்.

2009இல் கேப் பிரெட்டனில் கடற்கரையோரமாக அமைந்திருந்த தனக்குச் சொந்தமான 80 ஏக்கர் காணியினை இயற்கையைப் பேணுதலுக்காக வழங்கியவர் ஃபார்லி மோவாட் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்விதம் தனது காணியினைக் கையளிக்கும் சமயம் அவர் கூறியது: ‘ஒரு காணித்துண்டினைக் கண்டு பிடியுங்கள். அத்துடன் அதனைத் தொந்தரவு படுத்தாமல் அதன் பாட்டில் விட்டுவிடுங்கள்’.

இவரது இலக்கியம் மற்றும் சூழற் பாதுகாப்புக்காக இவர் ஆற்றிய சேவைக்காக 1981இல் கனடிய அரசின் ‘Order of Canada’ விருதினைப் பெற்றவர். 2010இல் ‘Canada’s Walk of Fame” இவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.