33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!
[லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்த கவிதைகள். இவற்றில் சில ‘FLEETING INFINITY [கணநேர எல்லையின்மை] ; A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY ; Vol – I’ தொகுப்பில் இடம் பெற்றிருப்பவை. இங்கே லதா ரமாகிருஷ்ணனின் தெரிவிலான 33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இங்குள்ள 33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் தேர்வின் சிறப்பு தெரிகின்றது. இவற்றையெல்லாம் அவர் முகநூலிலிருந்து பெற்றார் என்பது முகநூலின் ஆக்கபூர்வமான பங்களிப்பை வெளிப்படுத்துவதுடன், முகநூலில் வெளியாகும் படைப்புகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது. – பதிவுகள்.காம் ]
இத்தொகுப்பில் சமகாலத்தில் ஆர்வமாகக் கவிதை எழுதிவரும் 139 கவிஞர்களின் படைப்புகள் ஆளுக்கொரு கவிதை என்ற அளவில், மூலக்கவிதையும் அதன் மொழிபெயர்ப்புமாக இடம்பெறுகிறது. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு உலகத்தரமான படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழின் தரமான படைப்புகள் ஆங்கிலத்திலும் ஆங்கிலம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் படுதலும் என்பதை கவனப்படுத்தவும் இந்த முயற்சி உதவினால் மகிழ்வேன்.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நிறைய வருடங்களாக எழுதிவருபவர்கள், தொகுப்புகள் வெளியிட்டிருப்பவர்கள், கவிதை தவிர இலக்கியத்தின் பிற பிரிவுகளிலும் முனைப்பாக இயங்கி வருபவர்கள், சிறுபத்திரிகைகள் நடத்தி வருபவர்கள், இலக்கியப் பங்களிப்புக்காக விருதுகள் பெற்றிருப்பவர்கள். எத்தனையோ நெருக்கடிகளுக்கிடையில், எதிர்மறையான சூழல்களில் இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிவந்தவர்கள்; வருபவர்கள். அவர்களுடைய கவிதைகளை இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை மொழிபெயர்க்கவென நான் தேர்ந்தெடுத்து வைத்திருப்பவை. இவற்றில்இந்தத் தொகுப்பில் இடம்பெற்றவை மூன்று நான்கு மட்டுமே.
இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!
1. அப்துல் ஜமீல்: சடலமாக கிடந்த இரவு
மின்கம்பியில் சிக்கி அடிபட்டுப்போன
இராட்சதவெளவால்போன்று
சடலமாகக் கிடந்தது
தனக்குள்அனேகரகசியங்களை
பதுக்கிவைத்திருந்தஇரவு
விண்மீன்கள் பூக்க மறந்து
நிலா கருமுகிலினுள் செமித்த கணத்தினிடை
கோடையில் அலைந்தது வானம்
இரவினை வாசிக்க
மின்மினிப்பூச்சிகள் சிலவற்றை
பறக்கவிட்டேன்
செத்துப்போன இரவினுள்
தொலைந்துபோன தங்களது கனவுகளை
சிலர் தேடிக்கொண்டிருந்தார்கள்
இரவினையார் கொலை செய்திருப்பார்களென்று
துப்புத்துலக்க அவகாசமில்லை
கவனிப்பாரற்றுக்கிடந்த
இரவின் வெற்றுடலை
பகலினுள் அடக்கம் செய்கிறேன்
உடன் விடிந்து விடுகிறது
2. ஆதி பார்த்திபன்: காளி
நெடுங்குருதி வானம் அஸ்தமன சூரியன் பிடரியை நெரிக்கும் கடல் காற்று
உப்புக்கரிக்கும் ஞாபகம்
கறுத்த பெருவானக் கூடையில் விழுகின்றதா தெகிட்டச் சுவைக்கும் கனி இவ்வளவையும் தருகிறாயா
ஒரே பார்வை
அந்தகாரப் பெருவெளி நானோ வாழ்விற்கும் ஒரு சுடர்
நீலம் சிவந்த தனிமை, புகை மணக்கும் தீ நாக்கு
நீ கையில் உடையதோ எது திரிசூலம்
தீ ஜுவாலை
கொன்று எழுப்பும் பிறவி
காளி
இம்மைக்கும் அறியாத சொல் வாழ்வு
உப்பென எரியும் மனம்
யாரிடம் விரியும் இச்சிறகு படபடக்க
விழுகிறேன்
இக்கணமே
வாழ்வும் தீ
3. அட்டாளை நிஸ்ரி:
எங்கிருந்து தொடங்குவதென்றா கேட்கிறாய் மர்யம்??
பாதி நனைந்த தண்டவாளத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
புழுதி அடங்காத பாதை
கூடு தேடும் காகம்
நகரத்தின் தேநீர் வாசம்
மேனி உரசி உஷ்னமாக்கும் கதை அறிவாயா மர்யம்?
கோடை தாண்டி நீளும் தடிமன்
சிவந்தொழுகும் காய்ச்சல் வதை
மிகைத்துப் பறக்கும் ஏகாந்தத்தில்
கடுகதி சாலையையும் வெறுத்துக் கொண்டிருக்கிறேன் மர்யம்.
மூழ்க நினைத்து முடியாமல் போன மூன்று புத்தகங்கள்
பாதியில் நிறுத்திய பாடல்
கன்னம் கிள்ள மறந்த குழந்தை
அரைகுறை அழுத்திய ஆடை இன்னும் எழுநூறு கோபங்களோடு ஒவ்வொரு அந்தியாக கணக்கிடுகிறேன்.
பனிக்காற்று மிகைத்த அதிகாலைகளை தனித்துக் கடத்தல் எத்தனை வேதனை பார்த்தாயா?
கடல் தரிசணம் கிடைக்காத விடுமுறைகளை சாபங்களாக நகர்த்திக் கொண்டிருந்தேன் மர்யம்.
கோப்பை நிறைய சேமித்த கவிதைகளை
மிடரளவு மௌனத்திடம் பறிகொடுக்கும்
கனவொன்று வந்தது
சிறகின் நுனியில் அசைகிற சுதந்தி்த்தை கவ்விப் பறக்கும் பறவையொன்றும்
சாம்பல் முந்தாணையும் தோன்றி மறைந்த கனவொன்று தோன்றியதா மர்யம்?
வெரித்துப் பார்க்கும் ஜன்னலை ஊடறுத்துக் கேட்கிறாள் சிறுமி
மூன்றும் நான்கும் எத்தனை என்று..
4. அனார்: நிசப்தத்தில் குளிரும் வார்த்தை
நமக்கிடையே மழைக்காடுகளென
நிசப்தம் வளர்கிறது
ஆற்றுக்கரையில் மெல்லிய குளிர்மையுடன்
நிசப்தம் என்னில் தொற்றுகின்றது
நட்சத்திரங்கள் கக்கும் நிசப்தத்தை
உன்னுடைய பதில்களாக கருதுகிறேன்
ஆற்றுப்படுக்கையில் திட்டுத் திட்டாக தெரிகின்ற
எனது நிசப்தங்கள் மீது
கோடையென தீய்கிறாய்
உனதான பள்ளத்தாக்குகளில்
ஊமை முயல்கள் வளர்கின்றன
எனது நிசப்தங்களின் புல்வெளியை
அவை பசியாறுகின்றன
நீயும் நானும் மறைக்க விரும்புவதும்
கூற நினைப்பதும்
ஒரே வார்த்தை
எப்போதுமிருந்தது அந்த வார்த்தையில் குளிர்
கடலின் ருசி
மழையின் குரலென
நிசப்தமான குளிர் பேசப்படாத வார்த்தையாய்
அலைகின்றது நமது அறைகளில்
சிறுத்தையின் புள்ளிகள்
என்னுடைய நிசப்தம்
உன்னுடையதோ
முட்டைகளைப் பெருக்கிக்கொண்டிருக்கும் ஆமை
முகமில்லாத வார்த்தைகளை
உரையாடுகின்றோம்
இசை பாறையாகிவிட்டது
வார்த்தை பாறையாகிவிட்டது
காலம் நிசப்தமாகிவிட்டது
அன்பின் உணர்வுகளில்
தூறல் சொட்டும் குரலில்
மறைந்திருக்கிறது கொலைவாள்
நமக்கிடையே
தூக்குமேடைக்குமேல் தொங்கும் கயிறு
அல்லது
ஆலகால விசம்
5. அனாதியன்: தூசுபடிந்த மட்சாலைப் பூ
அவள் அங்கு நின்றுகொண்டிருந்தாள்
பெரும் பாறைக்குழம்பில்
உயிர்த்திருக்கிற பனித்துளிமாதிரி
நாகங்களின் நடுவில் திரண்டிருக்கும்
அமுதத்துளிமாதிரி
அவள் அங்கு நின்றுகொண்டிருந்தாள்
ஆசாரமான ஒற்றைக்கயிற்றை
பற்றிக்கொள்ள பழக்கமில்லாத ஒரு
பருவத்தில் அவள் சுருள் முடிகளுக்குள்
அடர்தீயின் காற்றொன்று
உள்நுளைந்ததன் கோரம்
அவளை அங்கு நிறுத்தியிருக்கும்
அவள் கரங்களை
பற்றிப்பிடித்து நடக்க ஒரு
துணையில்லாத காலத்தில்
அவள் வேடமிட்ட ஒரு வக்கிரத்தை
புனிதமென நினைத்து பற்றியதால்
அவள் அங்கு நின்றுகொண்டிருக்கிறாள்
நத்தைக்கூட்டின் உள்ளிருக்கும்
மெல்லிய தசையினைப்போல்
ஆக்கப்பட்டிருக்கிற அவள் மேனி
ஆக்கிரமிப்புகளை எதிர்க்கிற
கவசமெதனையும் அணியாததுதான்
திருத்தங்களற்ற துன்பம்
அடர் பனியின் நெருடலிலும்
ஆதாரமற்ற நிகழ்காலத்தின்
பெருவெளிகளிலும்
அவள் அங்குதான் நிற்கிறாள்
மீழ்தலுக்கான எந்த ஆயத்தமுமின்றி
குளிர்கால மரங்கள் போல்
வீழ்வதும் எழுவதுமாக தொடரும்
அவள் வாழ்க்கையில்
வலியற்ற நாட்கள் இருந்திருந்தால்
அவள் எப்படியிருந்திருப்பாள் என
கற்பனைசெய்துகொண்டிருக்கிறேன்
அவள் என்னை நோக்கி வீசிய
புன்னகையில் நான் ஒரு குழந்தையை
கண்டேன்
நான் அவளை இந்திரலோகம் செல்ல
மறந்த அப்சரஸ் என எண்ணிக்கொண்டேன்
அவள் அணையும் விளக்குகளின்
பின் அரங்கேறும் நாடகத்தின்
பெறுமதியான விலைப்பொருள்
அவள் அங்குதான்
நின்றுகொண்டிருப்பாள் – ஒரு
நிரந்தர நேசம் கரம்பிடிக்கும்வரை
அல்லது
நீச்ச நோயொன்று பாய்விரிக்கும்வரை..
6. அன்வர் புஹாரி:
1.
ஒலியை கண்களாலும்
ஒளியை காதுகளாலும்
ரசித்து மகிழ முயன்றதில் தோற்றுப்போனவர்கள்
மலையடிவாரத்தில் தஞ்சமடைந்தபோது
அங்கே மலையை முதுகில் சுமந்த
எறும்புகள் ஆற்றை கடந்துகொண்டிருந்தன
2.
கால் முளைத்த நிழல்களை துளிர்க்க வைப்பதும்
உதிர வைப்பதும் வெய்யிலின் குணம்
தீப்பிடிக்கும் எண்ணங்களை தேய வைப்பதற்கும்
மாய வைப்பதற்கும் தேவை இறை பயம்
நானொரு வெய்யில் பறவையை நேசிக்கின்றேன்
நன்மைகும் தீமைக்குமான எனதுறவின் இடைவெளிக்குள்
இப்பேது ஒரு யானை உட்புகுந்தால் கூட
அது ஆற அமர வெளியே சென்று விடும்
3.
அரசாங்கம் புனைந்த புனைவிற்குள்
நிகழ்ந்த கொலை ஒன்றின்
புலன் விசாரனைக்காக
மோப்ப நாய்கள் சகிதம்
உள் நுழைந்தேன் நான்
அங்கே கண்டதுண்டமாய் வெட்டுண்டு
இரத்த ஆற்றில் மூழ்கிக் கிடக்கும்
நள்ளிரவின் தலைமாட்டில் அமர்ந்து
ஒப்பாரி வைத்தழுகின்றது விலைவாசி
7. S.P. பாலமுருகன்: கதவுகள் பூட்டப்பட்ட போராட்டம்
கதவுகள் மிக மிக இறுக்கமாக பூட்டப்பட்டுள்ளது
திறப்பதற்கான போராட்டத்தில் ஒரு எறும்பு தன்னை வருத்திக்கொள்கிறது
எறும்புகள் நினைத்தால் கதவின் துவாரத்துள் கதவின் சாவி துளைகளினுள் பயணித்திருக்கலாம்
ஆனால் கரப்பான் , வண்டுகளுக்காக எறும்பு போராடுகிறது
மிக மிக மெல்லிய அசைவு ஆனாலும் வண்டுகளையும் பயணிக்க
எறும்புகள் துடிக்கின்றது போராடுகின்றது
கதவுகளின் இடுக்குகளை தேடுகின்றது
கதவை திறப்பதற்கான முயற்சியில் தினமும்
எறும்புகள் உழைக்கின்றது
கதவுகளின் சாவிகள் யாரிடம்?
என்ற கேள்வி எழுகின்றது
எறும்பு தொடர்ந்தும் போராடுகின்றது…
8. டணிஸ்கரன் கந்தசாமி: தனித்திருத்தலை தவிர்த்தல்.
தனித்தலுடன் ஒரு தும்பி
வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
தும்பியை மட்டும் வட்டமிட்டிக்கொண்டது
எனது மாலைநேரப்பொழுது.
பூ ஒன்றைத் தேடுவதாய் உணர்ந்தேன்
கூட்டமாய்ப் பிறந்த பூக்கள்
காற்றில் ஆடின அனாதைகளாக.
தனித்திருத்தலைத் துரத்தும் தும்பியோ
என் ஜன்னல் கண்ணாடியை
முத்தம் இட்டு முத்தமிட்டுத் திரும்பியது.
யாரும்இல்லாத பொழுதொன்றில்
என் தனிமையைத் துரத்தும்
தும்பியைத் தேடுகின்றேன்..
இன்னுமே காணவில்லை.
ஜோடி கிடைத்திருக்கக்கூடும்,
இல்லையெனில்,
புணைதலில் தன்னை அழித்திருக்கவேண்டும்
எதுவுமே புரியாமல்
குழப்பங்களுள் சூழுந்து
தனிமையைத் துரத்தும்
தும்பியைத் தேடுகின்றேன்..
இன்னுமே காணவில்லை.
என்நினைவுகளில்எல்லாமாக
நிறைந்திருக்கும்தும்பியை
ஜன்னல்முன்னும் தேடுகின்றேன்.
தும்பியைக்காணவில்லை;
என்னைக் காண்கிறேன்.
தனிமையைத் துரத்தும் வித்தையை
கண்ணாடிஜன்னலில்எழுதியே
பறந்திருந்தது தும்பி.
(* FLEETING INFINITY இருமொழித் தொகுப்பில் இடம்பெறும் கவிதை)
9. ஃபஹீமா ஜஹான்: விடைபெறல்
மழை கசிந்து கொண்டிருக்கும்
இருள் தேங்கிய அதிகாலையில்
உங்கள் நினைவுக் குறிப்புகளைப்
புரட்டிக் கொண்டிருக்கிறேன்
பிசு பிசுக்கும் புல் வெளியின்
வேர்களிடையே தேங்கிக் கிடக்கிறது
நேற்றைய பெரு மழை
நதிகள் பெருக்கெடுத்தோடும்
நிர்க்கதி மிகுந்த தீவில்
இந்த மழையை
யாருமே வரவேற்றதில்லை
உங்களிடமிருந்து
பிரிவின் போர்வை எடுத்து
எனை மூடுகிறேன்
என் நதி சுமந்து வந்த
திரவியங்களனைத்தையும்
உங்களிடமே கொடுத்தேன்
திடுமென வருமோர்
காட்டாற்று வெள்ளத்தில்
என் கரை வளர்த்த மரங்கள்
இழுபட்டுச் செல்லாதிருக்கப்
பின்னிப் பின்னிப் பிணைந்திருக்கும்
பெயர் தெரியாப் பெருங்கொடிகள்
நனைந்த பூமி உலர்ந்திட
நாளை வரும் கோடையில்
உங்கள் நதித் தீரங்கள் ஊடாக
ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருக்கும்
என்றென்றைக்குமான
என் குரலோசை.
[‘விடைபெறல்’ கவிதை பற்றிய குறிப்பு : நீண்ட காலமாக ஒரு பாடசாலையில் பல மாணவர்களுக்கும் கற்பித்து, அம் மாணவர்களது வாழ்வில் ஒளியூட்டிய ஆசிரியை வேறு கல்லூரிக்கு பதவி உயர்வு பெற்று இடம் மாறிச் செல்கிறார். தான் கற்பித்த மாணவர்களுக்கான ஆசிரியையின் மன ஓட்டத்துடனான கவிதை இது.]
(* FLEETING INFINITY இருமொழித் தொகுப்பில் இடம்பெறும் கவிதை)
10. ஜே.பிரோஸ்கான்: நீரின்றி அமையாது உலகு
நீரில்லா உலகு எப்படியிருக்கும் வாப்பாயென
மகள் அஃத்ரா கேட்டாள்.
இப்போது நான்
நீரில்லா உலகை வரைய முனைகிறேன்
முதலில் நிலத்தை வரைகிறேன்
பின்னர் மனிதனையும் அவனுக்கென
மிருகத்தையும் பறவைகளையும்
வரைந்து முடிக்கிறேன்.
இப்போது உலகம்
திறந்த வெளியாய் நீண்டு கிடக்கிறது
நிறங்களற்று.
நான் மனிதனுக்கான நிறத்திலிருந்தும்
பறவை மிருகங்களின் நிறந்திலிருந்தும்
வர்ணங்களை பறித்து
பூமிக்கு நிறமிடுகிறேன்.
இப்போது தாகிக்கிறது எனக்கு.
நீர் பற்றி யோசிக்கிறேன்
தாகத்தோடு நில்லாது மரங்களை
வரைந்து விடுகிறேன்.
மீண்டும் எனக்கு அசூர தாகமெடுக்கிறது
மிருகங்களுக்கும் பறவைகளுக்குமென
வரைந்த உணவை சாப்பிட்டுத் திரும்புகிறேன்
வரைந்த மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக
கருகிக் கொண்டிருந்தது.
என்னால் வெயிலை குடிக்க முடியாது
தாகத்தை அடக்கவும் தெரியவில்லை
மரங்களுக்கென வரைந்த கடலை
அருந்துகிறேன்.
உயிர் பறிபோவதிலிருந்து நான் மீளும் போது
உயிரினங்களுக்கென நதியை வரைய
வேண்டியதாய் இருந்தது.
இப்போது வரைந்த மரங்கள் வனமாய்
வளர்ந்து நிற்கிறது.
வானத்தை மழைக்கென வரைகிறேன்.
மனசு இப்போது விடுபடுகிறது.
நான்
நீரின்றி அமையாது உலகு என்பதை
கருவாய்க் கொண்டு என் ஓவியத்தை
நிறைவு செய்கிறேன்.
11. வ.ந.கிரிதரன்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.
(* FLEETING INFINITY இருமொழித் தொகுப்பில் இடம்பெறும் கவிதை)
12. ஜிஃப்ரி ஹாஸன்: மகளின்சித்திரங்கள்
சித்திரம்போல் எதையோ
வரைந்து கொண்டிருக்கிறாய்
எவரும் கண்டுகொள்ளாத
உன் ஓவியத்தில் உயிரோட்டத்தையும்
அன்பையும் காண்கிறேன்
ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா வரையறைகளையும்
உன்கோடுகள்மீறியுள்ளன
இதயங்களைச் சுண்டிஇழுக்கும்
நிறப்பூச்சுக்கள் அதில் இல்லை
எனினும் அதில் உன் துடிப்பான கனவுகளும்
வேட்கையுமுள்ளன
காகிதங்களில் பட்டாம்பூச்சிகளைப்போல்
நீ எதையோ கிறுக்குகிறாய்
நான் இப்போதெல்லாம்
நிஜப்பட்டாம் பூச்சிகளை இரசிப்பதே இல்லை
பூக்களை நீ வரைகிறாய்
காகிதங்களில் ஒரு நந்தவனத்தின்
வாசனை ஒட்டிக்கொள்கிறது
ஏதோ ஒரு மனித உருவைக்கிறுக்கிவிட்டு
“தந்தையே, நான் உங்களை வரைந்துள்ளேன்“
என்கிறாய்
எனது புகைப்படத்தைக்காட்டிலும்
என்னை அது துல்லியமாய் காட்டுவதாக
உணர்கிறேன்
நம் வீட்டின் சுவர்களை
உன் கிறுக்கல்கள் அசிங்கப்படுத்தியிருப்பதாய்
என சொல்லப்படும்போது
அவை அலங்காரங்கள் என
தயக்கமின்றிச் சொல்கிறேன்
நீ நினைக்கிறாயா?
உனது கிறுக்கல்களுக்கு
என்னைப்போல் ஒரு இரசிகன் கிடைப்பானென்று
13 .லரீனா அப்துல் ஹக்: முகமிலியின் வன்மம்
இல்லாத வாழ்வின் எந்த அந்தத்தை பற்றிக்கொண்டு
அந்த நூலேணியில் அவள் நடப்பாள் என்பதை
ஒரு வன்மப் புன்னகையோடு நீ பார்த்திருந்தாய்
இருப்புக்கும் இறப்புக்கும் இடையிலான குறிலின் நீளம்
பக்கவாட்டில் ஒரு நதியாகப் பெருக்கெடுத்திருந்தது
அவள் அதைக் கடக்கமுனையும் போதெல்லாம்
இரவின் கனவு தீர்ந்துபோய் விடுகிறது.
வாழ்தலின் தாகம் மரணத்தை அருந்தப் போதுமானதாயில்லை
அவள் கனவுகளின் சிறகு நீளத்தை நீ அளப்பதற்குமில்லை
கற்பனைக்கெட்டாத யட்சியின் காடு
மெல்லக் கனன்று திகுதிகுத்து எரிகையில்
சாம்பலின் சுடரிடை மெல்லெனத் துளிர்க்கிறாள்.
14. மிஸ்பாவுல் ஹக்
நட்சத்திரங்கள் சிதறிய
நேற்றைய இரவில்
நீண்டுக் கிடந்த பாதையின் வழியே
இறுகப்பற்றி நடந்தன நம் ஆன்மாக்கள்.
உன் கண்ணீரில் வழிந்துக் கொண்டிருந்த வலியை
என் வார்த்தைகள் சுமந்துக் கொண்டிருந்தன.
என் வார்த்தைகளில் எஞ்சிக்கிடந்த தனிமைகளை
உன் புன்னகை நிரப்பிக்கொண்டிருந்தது…
‘‘பரவசம் தருகிற ஸ்பரிசங்கள்’’
நம் வானங்களில் மிதந்த இறகுகள் அவை…
மௌனங்களுக்குள் மறைந்துக் கிடந்த
நேசத்தின் வருடல் அவை…
‘’நாம் மிக தொலைவில் இருக்கிறோம்’
நம் வாசனைகள் மிக அருகில் இருக்கின்றன…
இது அவர்கள் இல்லாத ஒரு உலகம்.
விம்பங்களால் செதுக்கிய ஆன்மாக்கள்
சந்திக்கும் ஒரு கனவு வெளி,
கவலைகள் இல்லாத ஏகாந்தம்.
‘’நான் எனும் காட்டை மெல்ல திறக்கும் தாழ் நீ’’
15. A.K. முஜாரத்
நீங்கள் வாசிக்கும் போதெல்லாம் இக்கவிதைக்குள் சிறுவனாக இருப்பேன்
தடுத்து நிறுத்த முடியாத காலத்தை
எப்படியேனும நிறுத்தி
எனது இளமையை பாதுகாக்க வேண்டுமென
யோசித்துக் கொண்டிருந்தேன்
அதனால் எனது இளமை பருவத்தை விட்டும் விலகி
நேற்றுப் பிறந்த ஒரு பறவையாகிறேன்
நேற்றைய எனது காலம்
மறந்துவிட்டது
நீங்களும் மறந்து விடுங்கள்
இப்போது நான்
எந்த கவலையுமற்ற ஒரு குஞ்சுப் பறவை
எனக்கு ரெக்கைகள் இருக்கிறது
அசைத்து அசைத்து மகிழ்கிறேன்
கடந்த காலத்தில்
தொழில் குடும்பம் பிள்ளைகளென
இன்னும் பல பொறுப்புகள்
இருந்திருக்கக் கூடும்
இப்போதைக்கு எதுவும் ஞாபகத்திற்கில்லை
பறக்கும் காலம் வந்திருக்கிறது
என்னால் ஆகாயத்திற்கு செல்ல முடியும்
நினைத்த மரங்களில் கனிகளை
உண்ண முடியும்
இப்படியாக எனது நிமிடங்கள்
அசத்தலாகும் போது
ஒரு இரவுப் பொழுது சந்திக்க நேர்ந்து விட்டது
அதனால்
கனவுக்குள் நுழையாமல் திரும்ப முடியாது
நுழைந்து பார்க்கிறேன்
காலம் மீண்டும் என்னை
முதுமைக்கு அழைத்துச் செல்ல
இடையில் நான் குதித்து விட்டேன்
காலம் என்னை மீள பிடிப்பதற்கு முன்
சிறுவனாக மாறி
கவிதையை முடித்துவிடுகிறேன்
நீங்கள் வாசிக்கும் போதெல்லாம்
நான் சிறுவனாகவே இருப்பேன்.
16. முல்லை அமுதன்: அகதி
வெளிச்சம் செத்து
இருள் உயிர்த்த பொழுதில்,
வெள்ளைக்காகத்துடன்
உரசிப் பார்த்தது கறுப்புக்குயில்….
பூங்கா நாட்காலியில்-
ஆயாசமாய் உட்கார்ந்திருந்த
என்
பிடரியிலும் வலித்து.
‘எனக்கான நிலம் இதுவல்ல.’
என் பொழுதுகள் விடியமுன்
இயந்திரப் பேய்களால்
துரத்தப்பட்டேன்.
இந்த பொழுது
எனக்கானதுமில்லை.
குளிர் நெருப்பு சுடும்
உஷ்ணக்குளிர் விறைக்கும்.
நீ எனக்க சொந்தமாயில்லை.
என் முன்னால் நின்று
நீ அன்னியன்
என அறைந்து சென்றது வெள்ளைக்காற்று.
வேருடன் பிடுங்கி எறியப் பட்ட
தேசத்தில்
குரங்குகள் ஆக்கிரமித்த படி….
யாரிடம் கேட்பது?
என் தேசத்தை கண்டீரா என
தூரத்தே
நாய்களின் ஊளையிடலில்
என் எதிர்காலம் அகதியாய் கழிகிறது!
17. முர்ஷித் முகம்மது
ஒரு
பறவையை
எனக்குள்
அடைத்து வைத்திருக்கிறேன்..
அது
என்னை
கொத்திக் கொத்தி
தின்று கொண்டிருக்கிறது
அதன் சுதந்திரமே
எனது சுதந்திரம் என்று
அறியும் போதுதான்
என்னை நான்
அறிகிறேன்..
18 . A. நஸ்புல்லாஹ்: ஆதாமின் குழந்தைகள்.
சொற்கள் சிலவற்றை
அடுக்கி
ஆணி அடிக்கிறேன்
அது ஏணியாக உருவாகிறது.
ஏணியில் கால் வைத்து
சன்னல் திறந்து
வானத்தை எட்டிப் பார்க்கிறேன்.
எம்மவர் சிலர்
அரசியல்
பிரதியை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள,
இன்னும் சிலர்
தேநீர் என நினைத்து
வெற்றுக் குவளையை அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரெயொருவன்
கணினியை இயக்கியபடி
கைபேசியில்
யாரோ ஒருவனிடம்
தனக்கு கிடைத்துள்ள
ஏழாம் அறிவு பற்றி பரிமாறிக் கொள்கிறான்.
கொஞ்ச நேரம்
ஊஞ்சல் கட்டி ஆடிவிட்டு
ஆதம் ஹவ்வாவின்
குழந்தைகள் நாமல்லவா
என நினைத்தவனாய்
ஏணியிலிருந்து இறங்குகிறேன்
சில மழைத்துளிகள்
என்னை நனைக்கின்றன.
சொல்லொன்றை அழைத்து
குடையாக உருவாகுமாறு
கட்டளையிட்டேன்
அது குடையானது.
மழைத் துளிகளும் நானும்
இப்போது
சூடாக தேநீர் அருந்திக் கொண்டிருக்கின்றோம்.
மழைத் துளிகள் சன்னலுக்கு வெளியே
நான் வீட்டு இருக்கையில் அமர்ந்தபடி.
19 . நெடுந்தீவு முகிலன்
எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.
பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா…
என்னோடு நான் அழுகின்றேனா…
இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது.
சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும்
உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம்
கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன்.
என் அழுகைக்கான காரணத்தை
அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை…
இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ…நான்
எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ
எனக்கே தெரியாது.
அழுகையின் தொடக்கமும் முடிவும்
அழுகையாகவே மட்டும் இருக்கிறது.
கிடைக்கும் தனிமைகளை எல்லாம்
அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன்.
அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின்
மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன்.
அழாத நாட்கள் என்று ஒன்றமே
என்னை கடந்ததாக இல்லை…
அழுகையை விட ஒரு நண்பன்
இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை…
அழுவதற்கென்று குளியல் அறையினையே
நான் அதிகம் பயன்படுத்துகின்றேன்.
யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும்
எனக்கு பயமில்லை…
எனது அழுகையினை எனது குளியல்
ஒருபோதும் காட்டியே கொடுத்ததில்லை.
துரோகிகளைப் போல…
(* FLEETING INFINITY இருமொழித் தொகுப்பில் இடம்பெறும் கவிதை)
20. ரஹமத்துல்லாஹ்: கனவும் சில நனவுகளும்
பலவந்தமாக நுழைந்த என்னைக்
கட்டாயத்தின் பேரில் கடத்திச் செல்கிறாய்
“கொஞ்சம் நில்
தாகம் எடுக்கிறது
கால் வலிக்கிறது” என்றேன்- வேண்டாம் தாமதமானால் என்னில் நீ குறைந்து விடுவாய்…
முற்றிலும் உன்னில் மூழ்கவே
நீ –
நான் உன்னில் மூழ்கவல்ல….
கைகளைப் புறத்தே விட்டு
கால்களை வேகமாக எட்டி வை..
விடிவதற்குள் சென்றாக வேண்டும்
நேற்று நானும் நீயும் கேட்ட அந்த மெல்லிய இசையைப்போல
வேகமாக ஓரிரவில் மனத்தின் முடிவை அடைய வேண்டும்…
மீண்டும் அங்கிருந்து திரும்பி பேரீச்சம்பழத் தோட்டத்தின் வழியாக பழைய கனவிடத்தில் இழைப்பாறுவோம்…
இப்போது என் கனவுக்குள் நுழைந்த மற்றவர் குறிப்புகள் போல
மேலெழுகிறது எண்ணங்கள்…
யார் இவர்கள்
என்றேன் அவர்கள் நமக்கான சாட்சிகள்
நமது கனவுகளை ஒழுங்கமைத்தவர்கள்…
“ஓஹ் நமக்கான கனவையும் இன்னொருவர் தானா திட்டமிடுகின்றனர்?”
“கனவுகள் மட்டுமே எனக்கானது என்றல்லவா நினைத்திருந்தேன் அதுவும் பொய் தானா?”….
தொடர்கிறது பயணம்….
சில பேரீச்சம் பழங்களும் சில விதைகளும் கைகளுக்குள் இருக்கிறது…
மறுகையை அவள் அழுத்திப்பிடித்திருக்கிறாள்….
21. ராஜாஜி ராஜகோபாலன்
வானம் கடலைத் தொடுகிறதாவென்று
பறவைகளிடம் கேட்டேன்
அவை பறந்து செல்வதில் கவனமாயிருந்தன,
அதே கேள்வியை அலைகளிடம் கேட்டேன்
அவைக்குப் பதில் சொல்ல நேரம் இருக்கவில்லை,
அதையே மீனவனிடமும் கேட்டேன்
உனக்கு என்ன தொழில் என்று கேட்டான்
கடற்கரையில் கடலை விற்கிறேன் என்றேன்.
விற்று முடிந்ததும் வா சொல்கிறேன் என்றான்.
விற்று முடிந்தபோது
கடலையும் காணவில்லை வானத்தையும் காணவில்லை.
வீட்டுக்குப் போகும் தெருதான்
விளக்கொளியில் தெரிந்தது.
22 . ரியாஸ் குரானா
தாளின் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு நகர்கிறது
ஒரு நீண்ட ரயில்
அதிலிருந்து ஒரு பயணி
கையசைப்பது தெரிகிறது
பதிலுக்கு நானும் அசைத்தேன்
யாரும் அதைப் பார்க்கிறார்களா
என திரும்பிக் கவனித்தேன்
ம்ஹூம்…யாருமில்லை
வானமொன்றும் தாளில் உண்டு
அதில் சிறுவர்கள் நிரம்பியிருந்தனர்
கடிகாரம் நின்றுவிட்டிருந்தது
ஆனால், தாளில் கிறுக்கப்பட்டிருந்த
கண்ணாடியில் என் முகம் தெரிந்தது
அடுத்த பக்கம் தாளைப் புரட்டினேன்
வெறிச்சோடிக்கிடந்தது
வெள்ளை நிலப்பரப்பு.
23. எம். ஏ. ஷகி
கடக்கமுடியாத இந்த அரிதான பெருநீர்ப்பரப்பை ஒரு போதுமே நினைவுகளாலும் கடந்து அப்பாலுற முடிவதில்லை என்னால்
அதன் ஆழம் , விரிந்த பரப்பு ,
நீரோட்டம் ,கொந்தளிப்பு ,
எழும் அலை , உவர் நீர் மழை தரும்
விந்தைகள்
மேற்பரப்பில் நீலம் பச்சை என நிறங்கள் அப்பிக்கிடக்கும் அழகு
பற்றிய சிந்தனைகள்
என்னை சூழ்ந்து விடும்போது
மழலையின் இனிமைக்குள்
லயித்து வெளியேறமறுக்கும் ஒரு பிள்ளைப்பேறற்றவளின் மனதின் ஏக்கத்தையே
பெருங்கடலின் சிறு நீர்ப்பரப்பும் தந்து அணிமைப்படுகிறது என்னுள்
ஆகாயத்தை அண்ணார்ந்து பார்க்கும்போது உண்டாகும் ஏகாந்த மன நிலையை ஒத்ததல்ல இது
முற்றிலும் மாறுபட்டடது .
சுண்ணாம்பு பூச்சால் மெழுகியது போல் எதுவுமே அறியாத அப்பிராணியின் உறக்க சாயலுடன் அலைகளடங்க சலனங்களற்று அமைதியாக கிடத்தப்பட்டிருக்கும்
நீர்வெளியைக் காணும்போதோ ,
அதனருகில் பயணிக்கும் போதோ ,
கால் நனைத்து நிற்கும் போதோ,
கடல் காற்று தீண்டும் போதோ…
மனித காலடி பதிக்க முடியாத ,
சூரிய ஔியாலும் ஊடுருவ முடியாத , அதிக அமுக்கம் அடர்ந்த
குளிர் நிறைந்த ஒன்றன் மேலொன்றாக அலைகளால் மூடப்பட்டிருக்கும் கடலின் அடித்தளத்தில் சூழ்ந்திருக்கும் கருமையை நோக்கியே
என் எண்ணங்கள் பயணித்திருக்கும்
கரையின் சுறறு்ச்சூழலை மறந்து சென்று விட்ட மனதை இலகுவில் மீட்க முடியாமல் ஒன்றித்து நின்ற பொழுதுகள்தான் அதிகம்
தனித்து விடப்பட்டு தவித்த குழந்தை தாயைக்கண்டதும் ஓடிவந்து அணைத்து ஆறுதலடைவது போலவே இந்தக்கடலடித்தளத்துக்குள் விரைந்து விடக்கூடாதா
நானும் ? இது தீராத ஏக்கமாகவே வளர்ந்து வருவதை ஏனென்று சொல்லத்தெரியவில்லை
கடலுக்கப்பாலிருந்து சொல்லப்பட்டு கடல் பயணங்களில் வளர்ந்து
கடல் ஊடறுத்ததாலேயே முடிந்து போன காதலும்
கடலலையோடே உறவாடி
கடலிலேயே உயிர் துறந்த உடன்பிறப்பும்… நெஞ்சுக்குள்
கடலை நிறுத்தி அலை முழுக வைத்த சம்பவங்கள்தான் ..
எனினும்
கடலை அன்னையாகவே நினைக்கிறது உள்ளம்
அன்னையின் மடிச்சேலையில்
தலை சாய்ந்து உலகை மறக்கும்
தனித்த மனதில் மேவிக்கொள்ளும் அமைதியை இதே கடலை பார்த்திருக்கும் பொழுதுகளில் அடைந்து கொள்கிறது அலைக்கழியும் மனதும் .
புவியின் பெரும்பகுதியை உவர்நீரால் ஆட்கொண்ட இப்புவித்தளத்தை பூமி என்பதை விட கடல் என்றே பெயர் சூட்டியிருக்கலாம் என்று ஆதங்கம்
எனக்குள் எழும்
நான் கடலின் காதலி
கடலலையில் மிதப்பதற்கல்ல
என்னுடல் …
படைப்பின்
பெரும் பகுதியை தன்னுள் அடக்கி
மலைகள்
கனவாய்கள்
குகைகள்
பள்ளத்தாக்குகள்
சுரங்கங்கள்
என பல மர்மப்பிரதேசங்களைக் கொண்ட அதிபயங்கரப்பெரும் இருள் சூழ்ந்த கடலினடித்தளத்தில் சமாதியாகிடத்துடிக்கும்
கடல்காதல் , காதல் கடல் என்னுடையது.
24. சண்முகம் சிவகுமார்
ஒரு கதவடைப்பில்
உலகம்
உள்ளே வெளியே என
இரண்டாகிறது
உள்ளே இருப்போரின்
உலகம்
வெளியே அடைப்பட்டிருக்கிறது
வெளியே இருப்போரின்
உலகம்
உள்ளே அடைப்பட்டிருக்கிறது
உள்ளிருந்து
திறக்கப்படும் உலகின்
கால்கள்
சுதந்திரமாகிறது
வெளியிருந்து
திறக்கப்படும் உலகின்
கால்கள்
ஓய்வு பெறுகிறது
திறக்கப்படுதலின்
சூட்சுமத்தில்
அடங்குகிறது
வாழ்தலின் அர்த்தம்
25. .சுபாகர் ரத்னம்
இறுதி ஊர்வலத்தின் பின் வெற்றிடமாகும்
உன் அடையாள இருக்கையில்
நிரம்பப்போகும்
நீவிரல்பதித்து
பேனைகிறுக்கிய
கவிதைகளை
நாளைபிறக்கும்
பறவைகளின்
அலகுகள்வாசித்துபழகட்டும்,
கொத்திதின்னட்டும்
சிறகுதாழ்த்தி
பயணிக்கும்
இடமெல்லாம்
இறகுலர்த்தும்
விருட்சத்தின்
நிழலிலெல்லாம்
எச்சமாக்கிஉமிழட்டும்
திசைபரப்பி
இசைசுரக்கஆயிரம்
உணர்வுகளோடு
முளைக்கட்டும்்
கவிதைகள் .
இதழ்கள்விரிந்து
பிறக்கட்டும்புதுபுது
அடையாளங்கள்
உன்விரல்பற்றிய
பேனையில்படிந்து
கிடக்கும்எழுதப்படாத
எழுத்துக்களை
எம்மொழியிலேனும்
பிரசவிக்கட்டும்
எவரேனும்தாங்க
முயலட்டும்உன்சுமைகளை
பாரமற்றதாள்களின்
மேல்விழுவதெல்லாம்
ஒவ்வொருசரித்திரம்
ஆகட்டும்
இன்னுமொருபிறப்பாககூடஅமையட்டும்….
26. சுந்தர் நிதர்சன்: குட்டுடன் கலங்கும் ஓவியங்கள்
வகுப்பறை மேசை மீது
தாளில்
நகரும் பென்சிலில்
பூவை தாங்க முடியாத
செடி
வானத்தை எட்டிய
வெள்ளை மலை
வழிந்தோடும்
பச்சை நதி
வாசலில் விளையாடும்
ஐந்து போட்டு வரைந்த
நாய்
இன்னும்
அதிசயங்களின் காடாய் விரிந்த
ஓவியத்தில்
கற்பனையின் கைவீசி
நடந்து கொண்டிருக்கும்
பிள்ளை
” என்னடா வரைஞ்சிருக்க மக்கு”
என்ற ஆசிரியரின்
குட்டலில்
ஓவியம்
கலங்கிப் போனது
27. தமிழ்நதி: விஜயலஷ்மியின் குரல்
உனது குரல்
என்னை எடையற்ற முகிலாக்கி
மலைமுகட்டில் கொண்டு சேர்க்கிறது
துயரத்தின் பள்ளத்தாக்கில் நீரோடையாக்குகிறது
பனித்துளியாக்கி
ஊசியிலை நுனிகளிலெல்லாம் மலர்த்துகிறது
தோள்களில் சிறகாகி
வானத்துள் கரைக்கிறது
மடியில் கிடத்தி
கண்ணீரில்லாமல் அழ வைக்கிறது
இறுதியில் நானுமோர் சாகரப் பறவையாகினேன்
வலிந்த கரகரப்பில்
நேர்த்தியான பிசிறலில்
நீ எனக்கே பாடினாய் என்கிறேன்
நானாய் பாடினாள் என்கிறாள் அவள்
வழியெல்லாம் ஒளியேற்றிப்போகும்
உன் குரலைப் பற்றிக்கொண்டு
”புதிய உலகை…. புதிய உலகை“
எத்தனை தடவைதான் தேடிப்போய்க்கொண்டிருப்பேன் விஜயலஷ்மி?
28. தமிழ் உதயா
கோட்டோவியம் வரைகிறேன்
கண்ணைப் பாதுகாக்க
இமைகளைத்தானே பொருத்திக் கொள்ள வேண்டும்
வர்ணங்களற்ற கீற்றின் நிழல் நித்தியமானது
மாடப்புறாக்களின்
சாம்பல் சிறகுகளைச்
கேகரிக்கிறேன்
ஆகாயம் கொத்த
வேறேதும் தேவையில்லை
நீ என் சிறை
நீ என் சிறகு
நீ என் ஆகாயம்
நீ என் ஆதித் தீ
திரும்பத் திரும்ப சொல்லிப்பார்
மனக்குழிக்குள்
அன்பின் கொந்தளிப்பு
29. .தர்மினி
வானம் நெருப்பைப் பொழிந்தததைப் போலவே
நீரையும் பொழிகிறது.
நோவாவின் படகில் தப்பித்த ஜீவராசிகள்
உலகைப் புதிதாக்கினர் என்றான்
இனி நீரால் உலகை அழிக்கமாட்டேன் என்றவன்.
நோவா விட்ட காகம் திரும்புமா? திரும்பாதா?
வீடுகள் அழிவு
உணவு,மின்சாரமில்லை
வீதிகள் மூடி
அயலவருக்கு அயலாரே உதவி
கொள்ளக் காசிருந்தும் விற்க யாருமில்லை
உடுத்த உடையன்றி மற்றது அற்றவர்
தப்பும் போது தவறிப்போனவர்கள்
பசித்த பிள்ளைக்கு தீர்க்க வழியில்லாத் துன்பம்
இறந்தவர்களோடு வாழுதல்
இரக்கப்பட்ட மனிதர்கள்
மருத்துவக்குழுவோடும் படகுகளோடும்
கடலில் கப்பல் நிற்கிறது
வானம் நெருப்பைப் பொழிந்தததைப் போலவே
நீரையும் பொழிகிறது !
30. தீபச்செல்வன்: கள்ளத்தோணி
இம்முறையும் குழந்தையை நாங்கள்தான் கொன்றோம்
ஏனெனில் அவனுக்கென்று எம்மிடம் எதுவுமில்லை
மூன்றுவயதுச் சிறுவனொருவனுக்கு
ஆழ்கடலில் என்னவேலையென நீங்கள் கேட்கக்கூடும்?
அவன் தன் தந்தையைச் தேடிச்சென்றான்
தந்தை எதற்காகச் சென்றார்?
யாருக்கும் இங்கு ஒன்றுமில்லையே
அதனால் அக்குழந்தையை நாம்தான்
பேர்த் நகருக்குச் செல்லுமாறு துரத்தினோம்
தந்தைக்கு கொடுப்பற்காக
நெடுநாளாக வைத்திருந்த முத்தங்களைத் தவிர
அவன் எதையும் எடுத்துச்செல்வில்லை
கடலில் இறங்கியபொழுது
முன்னால் எதிர்கரையும் மரணமும் மிதந்தது
எனினும் அவன் சென்றான்
ஏனெனில் அவனுக்கென்று நிலம்தான் இல்லையே
நேற்று ஒரு தோணி மூழ்கியபொழுதும்
இன்றைய தோணியும் புறப்பட்டுவிட்டது
ஒரு குழந்தைக்காக நான் இரங்கிக்கொண்டிருக்கையில்
கும்மிருட்டில் இன்றொரு குழந்தை
முதுகிலொரு கனத்த பையுடன்
கள்ளத்தோணியில் ஏறிக்கொண்டிருக்கிறது
ஆழ்கடலிருட்டில் அலைந்துகொண்டிருப்பது
நிலமற்ற தோணிகளெனினும்
எங்கோ ஒரு கரையில் ஒதுங்கும் சடலங்களாக
கடல்மடியில் குப்புறக் கிடக்கும் இக்குழந்தை
ஆப்கானியக் கள்ளத்தோணியா?
ஈரானியக் கள்ளத்தோணியா?
மியன்மார்க் கள்ளத்தோணியா?
பெருங்கடலைக் குடித்தும் தாகம்அடங்காமல்
கள்ளத்தோணியென கிடக்கிறது ஒரு ஈழக்குழந்தை
நாம்தான் அவனைக் கொன்றுவிட்டோம்
ஏனெனில் எம்மிடம்தான் எதுவுமில்லை
எம் நிலத்தில் நாளை ஒரு குழந்தையுமில்லை!
31. .திருஞானசம்பந்தன் லலிதகோபன்
நேசப்பழுப்பு உள்ளங்கையில்
மினுங்கி கிடக்கிறது
ஒற்றை நாணயத்தழும்பொன்றாய்…
அந்தியின் பொன்னிறமும்
குருதியின் செங்கட்டியும்
சாரையும் நாகமுமாய் பிணைந்து கிடக்கும் பொன்னிற கனியது…
கடுகளவு நாழியொன்றிலும்
நரைத்து விடலாம் அது…
அசூசையின் உச்சியில்
உடைத்தெறிய போகும்
ஊசிக்கு புரியுமா …..
கனத்த தோலுக்குள் சிதைந்து பாயமாய் கிடப்பது
அர்த்த நாரிஸ்வர கனவுகளென…
32. .யாழ் அகத்தியன்
என்னிடமிருந்து எதையெடுத்துக் கொண்டீர்களோ
அது உங்களுடையதாகிறது.
அன்பின் ஊற்றையெடுத்துக் கொண்டால் குளம் பெருகும்
இடைவெளியை எடுத்துக் கொண்டால் சுற்றிச் சுவரெழும்பும்
மீண்டும் மீண்டும் கூர்வாளினை எடுத்துக் கொள்வீரேயாயின்
உடலெங்கும் அறுத்துக் கொண்டு சாவீர்கள்
வதந்தியை எடுத்தாட் கொண்டால்
உடல் பிசித்து
மனம் கிலேசம்
ஒரு ஐஸ் பெட்டியை ,களிமண் பொம்மையை
ஒரு குட்டிச் சாத்தானை ,குழந்தையை,பறவையை என்ன
ஒரு பெருச்சாளியைக்கூட எடுக்க முடியும்
எது உங்களுக்குத் தேவைப்படுகிறதோ
அதற்கேற்றார் போலே
உங்களிடமிருந்து எடுத்துக் கொண்ட பெருச்சாளி
உங்களை போலேயிருக்குதென்று
எங்களிடம் ஏனப்பா கோபம் ?
தவற விட்ட தேவதையின் கெக்கலிச் சிரிப்புதான் இது
பராதியொன்றுமில்லை.
போய்வாருங்கள் தேவதையைத்
தவற விட்டோரே !
33. ஜம்ஷித் ஜமான்
எனது மேசை
ஒரு நாளை விட நீளமானதும்
மூன்று செக்கன்களில் கடந்துவிடக் கூடியதுமாகும்
ஒரு சிறிய நிபந்தனை
அதன் வழியே
மனிதர்கள் மட்டும் பயணிக்க முடியாது
இன்று அவளுக்கு பிறந்த நாள்
இருவரும் பிரிந்து பல மாதங்கள் கடந்துவிட்டது
என்னுடைய மனதில்
இவ்வாறு நினைக்கிறேன்
மறு நாளின் மாலைப் பொழுதிலிருந்து
வரிசை வரிசையாக
இன்றைய நாளின் மாலைப் பொழுதிற்கு
பறந்து வருகின்ற பறவைகளை
பார்க்க ஆசைப்படுகிறாள்
என்ன செய்வது
நான் பயணிக்க முடியாத மேசையில்
‘நான்’ என்ற சொல்லை எழுதி
அந்த சொல்லின் கரங்களில்
நன்கு பழகிய சில பறவைகளை
வரைந்து அனுப்புகிறேன்
கண்களை மூடித் திறந்தால்
மாலைப் பொழுது பறவைகளோடு வந்துவிடும்
பார்க்க அவள் வருவாளா?
– லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) –
ramakrishnan latha <ramakrishnanlatha@yahoo.com>