ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – I

ஆய்வுக்கட்டுரைபக்தி இலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்ற புராண இதிகாசக் குறிப்புகளில் ஒரு பகுதி சிவனின் அட்டவீரச் செயல்களைப் பற்றியதாகும். தமிழ் பிற்சங்க இலக்கியங்களில் சிவன் பற்றிய புராணக் குறிப்புகள் பரவலாக அறியபட்டாலும் தேவார காலத்தில்தான் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இப்புராணங்களின் அடிப்படை வேதப்பொருளை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. வடஇந்தியப் பகுதிகளில் சமண பௌத்த செல்வாக்கினால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து வைதீக சமயம் இப்புராண மரபை அடியொற்றியே தன்னைத் தற்காத்துக் கொண்டது. இந்த வெற்றி தமிழக பக்தி இயக்கக் கவிஞா்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தையும் தந்திருக்கிறது.

பக்தி இயக்க மதம் பௌராணீக மதமாக மாறியதற்கு இதுவே காரணங்களாகும். தமிழக பக்தி இயக்கத்தில் வடமொழி பௌராணிகக் கதைகளின் தாக்கம் அதிகம் இருப்பினும் அக்கதைகளைத் தமிழ்நாட்டில் நிலவிய கதைகளாகவே மக்களை நோக்கிய பிரச்சாரம் செய்யப்பட்டது. திருஞானசம்பந்தா் பாடல்களில் இடம்பெரும் அட்டவீரட்ட செயல்கள், விற்குடி, கடவூர், கோலூர், கண்டியூர் என்ற வெவ்வேறு தலங்களில் நடைபெற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. வடஇந்திய பௌராணீகக் கதைகளைத் தமிழ் நிலத்தோடு இயைபுறுத்துவதன் மூலம் தமிழர் சிவமதத்திற்கு ஒருவித தேசிய அங்கீகாரத்தைத் தேட முடிந்தது. சிவனின் இத்தகைய அட்டவீரட்ட புராணங்கள் சமண-பௌத்த மதத்தவர்களை அச்சுறுத்;தவும், விரட்டியடிக்கவும் பயன்பட்டிருக்கும். திருஞானசம்பந்தார் பாடல்களில் இடம்பெறும் அட்டவீரட்டச் செயல்களாகக் கீழ்வருவனவற்றைக் காணமுடிகின்றது.

1.    அந்தகாரசுரனைச் சங்கரித்தது (அந்தகாரி)
2.    காமனை எரித்தது (காமாந்தகன்)
3.    காலனை உதைத்தது (காலசங்காரன்)
4.    சலந்தரனைத் தடித்தது (ஜலந்தராரி)
5.    தக்கன் வேள்வி தகர்த்தது (தக்கச்சாரி)
6.    திரிபுரம் எரித்தது (திரிபுராந்தகன்)
7.    பிரம்மன் சிரத்தைச் சிவபிரான் அறுத்தது (பிரம்மரச் சதனன்)
8.    சிவபிரான் யானையை உரித்தது (கஜாபக கஜாந்தகன்)

இவை சிவப் பராக்கிரமத்தின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. இப்புராணக் கதைகளின் வழி சிவன் அகோர ரூபங்களுடனும் அஸ்ட வக்ரங்களுடனும் தோற்றமளிக்கிறான். அச்சம் தரும் ஆயுதம் ஏந்திய இத்தொன்மங்கள் சமண பௌத்த எதிர்ப்பில் ஓர் உணர்ச்சிகரமான, ஆவேசமான உத்வேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கக்கூடும். எனவேதான் திருஞானசம்பந்தர் பாடல்களில் இவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருபுறம் அடியார்க்கு அருளும் அன்பே வடிவான சிவனையும் மறுபுறம் ஆவேசங்கொள்ளும் ஆயுத பாணியான சிவனையும் படைத்து அதன் மூலம் தன் சமய மேலாண்மைக்கான ஒப்புதலைப் பெற முயற்சித்திருக்கிறார். அடியார்கள் அருளப்படுவா், அடியார் அல்லாதாரைச் சிவன் தண்டிக்கவும் தயங்கமாட்டார் எனும் போது அதிகாரத்ததைக் கைகொள்ள ஆளும் வா்க்கங்கள் பயன்படுத்தும்  இருவேறு தன்மைகளை இத்தொன்மங்கள் வெளிப்படையாகக் கொண்டிருப்பது தெரிகிறது. திருஞானசம்பந்தா் பாடல்கள் அட்டவீரட்டப் புராணக் குறிப்புகளை நோக்க திரிபுரம் எரித்த கதை மிகுதியான அளவில் இடம்பெறுகிறது.

திரிபுரம் எரித்த தொன்மம்
சிவனின் இந்த அட்டவீரட்டச் செயல்களும் புராணங்களின் மூலமாகவே தமிழகத்திற்கு அறிமுகமாயின. சங்க இலக்கியங்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் கலித்தொகையின் முதற்பாடல் தவிர்த்து இப்புராணக் குறிப்புகள் தென்படவில்லை என அ.சா.ஞானசம்பந்தன் விளக்குவார்.1 இவ்வாறிருக்க தேவார காலத்தில் இப்புராணக் கருத்துகளைக் கூறுதல் பெரு வழக்காக ஆகிவிட்டது.

யசுர் வேதத்திலேயே திரிபுரம் எரித்த குறிப்பும் வேள்வி சிதைந்த குறிப்பும் இடம் பெறுவதாக அறிஞர்கள் எடுத்துக்காட்டுவா்.2 தக்கன் வேள்வியைச் சிதைத்த கதை வாயு புராணத்திலும் சிவன் திரிபுரம் எரித்த கதை மச்ச புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

தாராசுரன் குமாரனாகிய வித்துவன்மாலி, தாராகாஷன், கமலாஷன் இவா்கள் மூவரும் சிவபூஜாபலத்தால், பொன், வௌ்ளி, இரும்புக் கோட்டைகளைப் பெற்று அக்கோட்டைகளுடன் பறந்து சென்று தேவா்களை வருத்தியிருந்தனா். இதனால் தேவா், சிவமூர்த்தியிடம் முறையிட, சிவபிரான் இவா்களிடத்துள்ள சிவப்பற்று மாறில் இவா்க்குச் செல்வங்குறையுமெனக் கூறக் கேட்டுக் களிப்புடன் விஷ்ணு மூர்த்தியிடம் சென்றுச் சிவமூர்த்தி திருவாய் மலா்ந்தருளியதைக் கூறினா். விஷ்ணு மூர்த்தி, தாம் புத்தராபவதரித்து நாரதரைச் சீடராகக் கொண்டு திரிபுராதிகளிடஞ் சென்று அவா்களுக்குள்ள சிவப்பற்றைச் கெடுத்தனா். அதனால் புத்தா் சிவவிரோதிகளாயினா். சிவமூர்த்தி இவ்வசுரரது இறுமாப்பைக் கெடுக்க எண்ணித் தேவா்களை நோக்கித் தோ்கொண்டு வரக் கட்டளையிட்டனா். விஷ்ணு மூா்த்தி, சூரிய சந்திரா்களைத் தேருகளாகவும், காலம், வானம், உதயகிரி, அத்தகிரி, காட்டை, கணம், லவம், வேள்வி, ஐம்பூதம், இந்திரியம் இவற்றை முறையே பார். மேலிடம், நுகம், முன்கொம்பு, கொம்புக்காதாரப் பொருளாகவும், புராணங்களைப் படமாகவும், உலோகாலோகபா்வதம் விதானமாகவும், அண்ட முகடு கொடிஞ்சியாகவும், இடை வெளி தட்டாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும், வாசுகியை நாணாகவும், மேருவை வில்லாகவும் பிரம்மனை முட்கோல் பிடித்துத் தேரைச் செலுத்தும் சாரதியாகவும் செய்வித்துத் தோ் முடிந்ததென்று கூறினா். சிவமூர்த்தி தோ்முன் ஆரோகணித்து வில்லைக் கையிலேந்தி விஷ்ணு மூர்த்தியைப் பானமாக்கி எய்யத் தொடங்குகையில் விஷ்ணு மூர்த்திக்கு மனதிலுதித்த இறுமாப்பை யெண்ணித் திரிபுரத்தை நோக்கியும் இவரது எண்ணத்தை எண்ணியும் சிரித்தனர். இச்சிரிப்பின் சுவாலையால் திரிபுரம் தீப்பட்டது. இதில் மேற்கூரிய மூன்று அசுரா் சிவபூசை விடாமல் இருந்தவராதலால் தீப்படாமல் காக்கப்பட்டனா்”.3 இத்தொன்மக் கதை திருஞானசம்பந்தரைப் பெரிதும் கவா்ந்திருக்கிறது.

மலைஅதனார் உடைய மாமதில் மூன்றும்
நிலை அதனால் எரித்தார்
4

“திருஆர் சிலையால் எயில் எய்து
உருஆர் உமையொடு உடன் ஆனான்
5

எண்ணார் எயில் எய்தான்6

விறல் அரக்கா் குலங்கள்வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல்ஆம்7

மாறு கொண்டார் புரம் எரிதந்த மன்னவனே”8

மல்டலா் மும்மதில் மாய்தர எய்தது ஓர்
வில்லினான்
9

என்பன போன்ற பல பாடல்களில் சிவன் முப்புரங்களை எய்த தொன்மச் செய்தியைக் குறிப்பிட்டுச் செல்கிறார். இம்முப்புரங்கள் பற்றிய செய்தியை ஆ.வேலுப்பிள்ளை,

“ஆரியா் இந்தியா வந்து குடியேறிய காலத்திலே நாடோடியகளாக இருந்தார்களென்றும் அக்கால இந்தியாவிலே சரணமைந்த நகரங்களிலே வாழ்ந்த நாகரிகமிக்க பிற மக்களைச் சிரமப்பட்டு அடக்கினார்களென்றும் அதனாலே தான் புரங்களை அடா்த்தவீரச் செயல் மிகப் பழைய வடமொழி இலக்கியங்களிலேயே முக்கியத்துவம் பெறுகிறதென்றும் மேனாட்டாய்வாளா்கள் சிலா் விளக்குவா். சம்பந்தரை இக்கதை ஏன் விசேடமாகக் கவா்ந்ததென்பது புலப்படவில்லை. முப்புரங்களை அழிப்பது மிக வில்லங்கமென்று கருதப்பட்டதால், தேவா்களின் உதவியோடு மேருமலை, வாசுகி முதலியன பங்களிக்க நடந்த முயற்சிகளும் அவற்றின் விளைவாகத் தேவா்கள் செருக்குற்றதும், எவருதவியுமின்றி, சிவபிரான் தம்முடைய கோபப்பார்வையால் ஒருநொடிப் பொழுதில் முப்புரங்களைப் பொடியாக்கியதும் இறைவனுடைய பராக்கிரமத்தின் உச்சத்தைக் காட்டுகிறதெனச் சம்பந்தா் கொண்டிருக்க வேண்டும். சம்பந்தா்காலத்  தொடக்கத்திலேயே தமிழ்நாட்டிலிருந்த பேரரசா்கள் சமணா்களாக இருந்தமையினால் அவா்களுடைய தலைப்பட்டனங்கள் சம்பந்தருக்கு முப்புரங்களையும் ஒருவகையில் நினைவூட்டியிருக்கலாம்10 என்கிறார்.

இதே முப்புரம் எரித்த தொன்மத்தை மயிலை சீனி வேங்கடசாமி வேறு ஒரு வகையில் விளக்குவார்,
“முப்புரம் என்று கூறுவது பௌத்தா்களின் புத்தா், சங்கம் என்னும் மும்மணியையும், சமணரின் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மணித்திரயத்தையும் குறிக்கும். பௌத்தருக்கு மூன்று கோட்டைகள் போல் உறுதியான கோட்டை போன்றிருப்பது நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மும்மணிகளாகும். இவற்றைத்தான் இக்கதைகளில் திரிபுரம் என்று கூறப்பட்டன என்று தோன்றுகிறது. இவை அழிந்தால் அந்த சமயங்களே அழிந்துவிடும். முப்புரம் எரித்த கதையில் சிவனும் விஷ்ணுவும் சோ்ந்து முப்புரங்களை அழித்ததாக (பௌத்த, சமண மும்மணிகளை அழித்ததாக)க் கூறப்படுவது உருவகமாகும். இக்கதைக்கு உட்பொருள் உண்டு. அஃதாவது சமண பௌத்த சமயங்களுடன் சைவ வைணவ சமயங்கள் சமயப்போர் இட்ட காலத்தில் சைவ சமயமும் வைணவ சமயமும் சோ்ந்து சமண பௌத்த மதங்களை அழித்த செய்தியைத்தான் முப்புரமெரித்த கதை கூறுகிறது” என்பதைக் கூறி அதற்கு உதாரணமாகக் கீழ்க்கண்டவற்றைக் கூறுகிறார்.

“மதுரையை யடுத்த யானை மலையில் பண்டைக் காலத்தில் சமண முனிவா்கள் இருந்தார்கள். திருஞானசம்பந்தரும் (யானை மாமலை யாதியாய் இடங்களில் சமணா்கள் இருந்தார்கள் என்று திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். இந்த மலையின் உருவ அமைப்பு, பெரிய யானையொன்று காலை நீட்டிப்படுத்திருப்பது போன்று இருப்பதனால் யானை மலை என்று இதற்குப் பெயா் வந்தது. இந்த மலையில் சமண முனிவா்கள் இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக இங்குள்ள பாறைகளில் அஜ்ஜநந்தி என்னும் சமண முனிவரின் பெயா் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம்”11 என்று கூறி திரிபுரம் எரித்த கதை சமண பௌத்தா்கள் வாழ்ந்த மலையை உட்பொருளாக உணா்த்துகின்றது என்ற முடிவுக்கு வருகிறார்.

மேற்கண்ட விளக்கங்கள்  இத்தொன்மப் பகுதி திருஞானசம்பந்தா் பாடல்களில் விளக்கமுறும் பாங்கினை ஆராய்ந்து உரைக்கிறது. இத்தொன்மத்தில் இடம்பெறும் மற்றொரு தகவல் திருமாலே சிவபக்தா்களாயிருந்த முப்புர அரக்கா்க்கு புத்தமதத்தைப் போதித்து அவா்களைப் புத்தராக்கினார் என்பதும், புத்தா்களாய் மாறிய அவா்களை சிவபெருமான் அழித்தார் என்றும் கூறப்படுகிறது. அதாவது புத்தமதக் கொள்கைகளும் வைதீக இந்து சமயத்தின் ஒரு பகுதிதான் என்றும் புத்தா் திருமாலின் அவதாரமாவார் என்றும் ஒரு புனைவு கட்டமைக்கப்படுகிறது. புத்தமும் சமணமும் இந்து ஞானமரபின் ஒரு கூறாகக் காணும் தற்கால வைதீக அரசியல் அக்காலத் திரிபுரம் எரித்த தொன்மத்திலேயே காணப்படுவது சிந்திக்கத்தக்கது.

திரிபுராதிகளும் சிவநெறியாளா்களாய் இருந்தும் தீச்செயல் புரிந்ததால் பௌத்தா்களாக்கப்பட்டு சிவனால் தண்டிக்கப்படுகின்றனா் எனும் கருத்தின் வாயிலாக சைவசமயத்தவா் பௌத்தா்களாக மதம் மாறுவதும் சிவபெருமானின் திருவிளையாடலால்தான். அவ்வாறு பௌத்தா்களாக மாறினால் சிவன் அவா்களைத் தண்டிப்பார் எனும் எச்சரிக்கையும் இதில் அடங்கியுள்ளது. பௌத்தம் என்பது ஒரு சூழ்ச்சி நெறி என்பதையும் அதில் சிக்கிக் கொள்ளாமல் சிவப்பரம்பொருளையே தியானிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சிவனின் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்பதையும் நோக்க ஆளும் வா;க்கத் தந்திரத்தையும் அதன் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளமுடிகிறது. குற்றங்களை வரையறுப்பதும் அக்குற்றத்திற்கான தண்டனையை  அதிகாரத்தைக் கொண்டு நிறைவேற்றுவதும் அதிகாரத்தின் இருப்பைத் தொடா்ந்து நிலைக்கச் செய்கிறது. இத்தொன்மத்திலும் அச்சம் – அருள் இரண்டும் அதிகார மையத்தை வலுப்படுத்தும் உத்திகளாகக் கையாளப்பட்டுள்ளதை உணரலாம்.

சான்றெண்விளக்கம்
1.    அ.சா. ஞானசம்பந்தன், பெரியபுராணம் -ஓர் ஆய்வு, ப.80.
2.    ஆ. வேலுப்பிள்ளை, மு.சு.நூல். ப.74.
3.    சிங்காரவேலு முதலியார், அபிதானசிந்தாமணி, ப.825.
4.    சம்பந்தா், மு.சு.நூல், திருபுன்கூர், 27:8.
5.    மேலது., சீகாழி, 34:7.
6.    மேலது., திருஅதிகை வீரட்டானம், 46:4
7.    மேலது., திருசோபுரம், 51:8
8.    மேலது., திருநெடுங்களம், 7
9.    மேலது, திருவேற்காடு, 57:7
10.    ஆ.வேலுப்பிள்ளை.மு.சு.நூல், ப.75
11.    மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழம், ப.19.

பயன்பட்ட நூல்கள்
1.    கோபாலையா் டி.வி., (ப.ஆ.),ஞானசம்பந்தா் தேவாரம், பண்முறைத் தொகுப்பு,    பிரெஞ்சு ஆய்வு நிறுவன வெளியீடு,புதுச்சரி.1984.   
2.    சிங்காரவேலு முதலியார்,அபிதான சிந்தாமணி,குருசாமி நாயுடு சன்ஸ்,சென்னை.1934.  
3.    செல்வராசு நா.,தொல்தமிழா் சமயம் – மானுடவியல் சமூகவியல் ஆய்வுகள், காவ்யா, பெங்களுர்-38. 2001.
4.    ஞானசம்பந்தன் அ.ச.,    பெரியபுராணம்-ஓர்ஆய்வு, கங்கைபுத்தக  நிலையம்,சென்னை.1999.
5.    வேங்கடசாமி.சீனி.,சமணமும் தமிழும்,தேவராசன் கோ., (ப.ஆ) வசந்தா பதிப்பகம்,சென்னை.2003.

asareri@gmail.com