பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் (Integrating) அவசியம்

‘ஊடறு’ தளத்திலிருந்து மீள்பிரசுரம்!
  சாந்தி சச்சிதானந்தம் அறிமுகம் இன்று பல நாடுகளில் முறைசார்ந்த கல்வியில் பால்நிலை பற்றிய பாடத்திட்டத்தினைப் புகுத்த வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு உண்டாகியிருக்கின்றது. சிலவற்றில் வெவ்வேறு  உருவங்களில் கல்வியில் பால்நிலை பற்றிய விளக்கம் புகுத்தப்பட்டும் வந்திருக்கின்றது. இலங்கையிலும் இந்த எண்ணக்கரு இப்பொழுது தேசியக் கல்வி நிறுவகத்தில் உருக்கொண்டு வருகின்றது. எந்தக் கல்விக் கொள்கை செயற்படுத்தப்பட்டாலும், எப்படியான சிறந்த புதிய பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், கடைசியில் பாடசாலை வகுப்புக்களில் இவற்றையெல்லாம் செயலில் வடிவமைப்பவர்கள் ஆசிரியர்களேயாகும். ஆசிரியர்களுக்குப் பூரண விளக்கம் இல்லாது எந்தக் கல்விக்கொள்கையையும் நாம் நடைமுறைப்படுத்த இயலாது. இதற்காகத்தான், பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் தேவையையும், அதன் தாற்பரியங்களையும் எடுத்துக்கூற இந்தக் கட்டுரை விளைகிறது. பால்நிலை என்றால் என்ன என்பதிலிருந்து, அது எவ்வாறுஉருவாக்கப்பட்டது, அதன் விளைவுகள் என்ன, அதனை எவ்வாறு பாடசாலைக் கல்வியில் நாம் புகுத்தலாம் என்னும் பல விடயங்களை இது  கையாளுகின்றது. 

 பால்நிலை என்றால் என்ன?

மனிதர்கள் தங்கள் இனப்பெருக்கத் தேவைகளின் காரணமாக ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் உயிரியல் ரீதியான வேறுபாடுகளுடன் படைக்கப்பட்டிருப்பதை நாம் பால் என்னும் பதத்தினால் குறிப்பிடுவோம். பால் என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் பொருந்துவதாகும். அனேக உயிரினங்களுக்கு மத்தியிலும் ஆண் உயிரினம்; பெண் உயிரினம் எனப் பால் வேறுபாடுகளுள்ள இனங்கள் உண்டு. ஆயின்,  பால்நிலை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தினால் விதிக்கப்படும் குண இயல்புகளும் அவை தொடர்பான பாத்திரங்களுமாகும். “பால் சமூகத்தில் வகிக்கின்ற நிலை” பால்நிலை என்று பொருள் கொள்ளலாம். சமூகமயமாக்கலினால் உருவாதலினால் பால்நிலை என்பது மனிதர்கள் மத்தியிலே மட்டும்தான் காணப்படுகின்றது. ஆண்கள் வீரமுள்ளவர்கள், தைரியசாலிகள், அறிவு பூர்வமானவர்கள் என்பதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் அவர்கள் தலைவர்களாக வருவது பொருத்தமாகும் என்று தற்சமயம் நிலவும் பால்நிலைக் கோட்பாடு; கருதுகின்றது. அதே போன்று பெண்கள் மென்மையான சுபாவம் உடையவர்கள், அழகானவர்கள், நாணம் கொண்டவர்கள், இலகுவாக அச்சமடைவார்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், கற்பு உடையவர்களாக இருக்க வேண்டியவர்கள், சிந்திக்கும் ஆற்றல் குறைந்தவர்கள் என்று இக்கோட்பாடு எடுத்தியம்புகின்றது. ஆறுதலாக இருந்து பால்நிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிக்கும் குணாதிசயங்களை ஆராய்ந்து பார்த்தோமானால், அவையெல்லாமே ஆண்களுக்குக் கீழே அடங்கி வாழ்ந்து அவர்களின் வெவ்வேறு உடல் தேவைகளைத் தீர்த்து வைக்கவும் அவர்களுக்கேயுரிய வாரிசுகளைப் பெற்றுக் கொடுக்கவும் உகந்தவர்களாகப் பெண்களைஉருவாக்குவதே அதன் நோக்கம் என்பதை உணரலாம். அழகு, அடக்கம், கற்பு, வீட்டுக்குரியவள் போன்ற கருத்துக்களெல்லாம் இதனை விளக்குகின்றது.

பால் என்கின்ற உயிரியல் வேறுபாட்டிற்கும் பால்நிலைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றனவாயினும் உயிரியல் இயல்புகளுக்கு சற்றும் பொருந்தாத வகையிலும் பால்நிலை உருவாக்கப்படலாம். இதற்கு உதாரணமாக, தாய்மை என்பது ஒரு பெண் தனது வாழ்க்கையில் வகிக்க வேண்டிய முக்கிய பாத்திரம் என்று பொதுவாகவே சமூகம் வலியுறுத்துவதை நாம் எடுத்துக் கொள்ளலாம். இது உயிரியல் ரீதியாகவும் பெண்களுக்குப் பொருந்துவதாகும். இயற்கையும் இனப்பெருக்கத்தின் முக்கிய பங்குதாரராகப் பெண்களைப் படைத்ததனால் பெண்களின் உடல் அங்கங்களையும் வாழ்க்கை வட்டத்தினையும் அதை மையப்படுத்தியே உருவாக்கியிருப்பதை நாம் காணலாம். இங்கு பால்நிலை என்பது பால் என்பதடன் பொருந்துகின்றது.  ஆனால் அதே சமயத்தில், கணவன் ஒருவனால்தான் பெண்ணுக்கு வாழ்வு கிட்டுகின்றது என்று பால்நிலைக் கோட்பாடானது பெண்ணின் பாத்திரத்தினை ஒரு ஆணின் மீது தங்கி நிற்கும் பாத்திரமாகச் சித்தரிக்கின்றது. ஆனால் உயிரியல் ரீதியாக, ஒரு பெண் ஆணின் மீது தங்கி நிற்கவேண்டும் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லையாகும். இனப் பெருக்கத்தில் கருக்கட்டலில் மட்டும்தான் ஒரு ண் பங்கு வகிக்கின்றான். அதன் பின் குழந்தையைப் பெற்று வளர்ப்பதிலெல்லாம் இயற்கை ஒரு மனித ஆணுக்கு எந்தவிதமான பாத்திரத்தினையும் வழங்கவில்லை யென்பதே உண்மையாகும். இதற்கு மாறாக, தூக்கணாங்குருவி போன்ற சில பறவை இனங்களை எடுத்துக் கொண்டால், கூடு கட்டுவதிலிருந்து குஞ்சுகளைப் பராமரிக்கும் வரையில் அந்த ஆண் பறவைகள் இயற்கையாகவே பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே, மனிதர்களைப் பொறுத்தவரையில் இது முற்று முழுதாக சமூகத்தினால் உருவகப்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பால்நிலை உருவாக்கப்பட்டதன் காரணம் என்ன?

மனித சமுதாயத்தை முன்னோக்கித் தள்ளுவதற்கு இரண்டு வகையான நடவடிக்கைகள் வேண்டும். ஒன்று உற்பத்தி, மற்றது இனப்பெருக்கம் (உற்பத்தி, மீளுற்பத்தி என மார்க்சியவாதம் இதனை விளக்குகின்றது). இது இரண்டும் நடந்தால்தான் மனிதர்கள் தங்கள் உடலின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு தமது இனத்தையும் தொடர்ந்து இந்தப் பூமியில் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த இரு அம்சங்களையும் ஒழுங்குபடுத்துவதுதான் சமூகமயமாக்கலின் நோக்கமாகும். அந்த ஒழுங்கின் வழியேதான் ஒவ்வொரு விதமான சமூகங்களும் தோன்றின. தவிரவும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் மனித சமுதாயத்தின் உற்பத்தி ஒழுங்குமுறையும் மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டமுறையும் மாறுபாடடைந்து வந்திருக்கின்றது. பார்க்கப்போனால், உற்பத்தி எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டதோ அதற்கு ஏற்ற முறையில்தான் மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டது. உற்பத்தி ஒழுங்கமைக்கப்படும் முறை பொருளாதாரக் கட்டமைப்பாக இருக்க, மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறை அக்காலத்தின் பால்நிலை உறவுகளாயின. இதை மேலும் விளக்குவதற்கு ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலம் உற்பத்தியை ஒழுங்கமைத்த முறையையும் அதற்கேற்ற மீளுற்பத்தி தன்னைஒழுங்கமைத்த முறையையும்  நாம்உதாரணங்களினூடாகப் பாக்கலாம். ஆதியில் பொதுவுடைமை வழங்கியிருந்த காலம். கூட்டுற்பத்தி முறைகளும் அதைக் கொண்ட நடத்தத் தேவையான கூட்டுக் குடும்ப முறைகளும் பரவியிருந்தன. இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது மட்டுமன்றி ஒரு தார மணம் என்பது தெரியாத காலமாகவும் இருந்தது. எனவே, கற்பு போன்ற நாம் இன்று பெண்களுக்கேயுரியது என்று அறிந்திருக்கின்ற பண்புகளை மனிதகுலம் அன்று அறிந்திருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

இக்காலகட்டத்திற்குப் பின்னர், தனியுடைமை தோன்றியது. ஆண்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில்லாதவர்களாக நடமாடித் திரியும் சுதந்திரம் பெற்றதனாலே தனியுடைமை அமைப்பின் கீழ் அவாகள் சொத்துக்களை உழைக்கும் வசதி பெற்றவர்களாக மாறினார்கள். சமூகத்தில் அவர்கள் ஆதிக்கமும் ஓங்கியது. தாம் சேர்த்த சொத்துக்களுக்கான வாரிசுகளைத் தரும் கருவிகளாக பெண்களை உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.  இதனால், தனியுடைமையுடன் ஒருதார மணமும் தோன்றியது. ஒரு தாரமணத்துடன் பெண்கள் சமூகத்தில் தாம் வகித்த உயரிய அந்தஸ்தினை இழந்தனர். ஆண்டான் – அடிமை உறவு கொண்ட சமூகம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், உலகமயமாக்கம் என உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு மாறி வந்திருக்கின்றது. இந்த ஒவ்வொரு பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் ஏற்றது போல ஆண்களினதும் பெண்களினதும் சமூகப் பாத்திரங்கள் மாற்றமடைந்து வந்திருக்கின்றன. எங்கு பெண்கள் பொருளாதார உற்பத்தியில் பெரும் பங்கு வகித்தார்களோ அங்கெல்லாம் அவர்களின் நிலை சற்று உயர்ந்த அந்தஸ்து உடையதாக இருந்ததைக் காணலாம். 
 
பால்நிலை உறவுகள் எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன?

பால்நிலை என்பது இயற்கையால் அல்ல மனிதர்களால்உருவாக்கப்பட்டது என்பதனால் அதனைக் காலம் காலமாக தக்கவைத்துக் கொள்வதற்கு மனிதர்கள் பெரும் பிரயாசைகளை எடுக்க வேண்டியிருந்தது. ஒரு சந்ததியினருக்கு ஒரு முறை மூளைச்சலவை செய்தால் போதாதே. ஒருவருடைய வாழ்நாளில் அவர் என்றும் மாறாதிருக்க தொடர்ந்து செய்யப்படவேண்டும் என்பதுடன், அவ்வாறே ஒவ்வொரு சந்ததியினருக்கும் செய்து கொண்டு வரப்பட வேண்டும். இதற்காக மதக் கோட்பாடுகளையும் சம்பிரதாயச் சடங்குகளையும் உருவாக்கினார்கள். இவற்றின் மூலம், இந்த உலகத்தில் நிலவும் பால்நிலை உறவுகள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டது என நிலைநாட்டினர். சிறு வயது முதல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வளர்க்கும் முறைகளில் இத்தகைய உறவுகளை வலியுறுத்தினர். பெண்கள் தங்கள் நிலையை மாற்றுவதற்கான ஆற்றல்களை தம்முள் வளர்த்தெடுத்துக் கொள்ளும் சகல வாய்ப்புக்களும் அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டன. உதாரணமாகக் கல்வி அவர்களுக்குப் பல காலமாக நிராகரிக்கப்பட்டு வந்தது. நடமாடும் சுதந்திரம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு வெளியுலகம் தெரியாதவர்களாக வளர்க்கப்பட்டார்கள். அரசியலில் பங்குபற்றும் உரிமை மறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயகம் தோன்றிய நாடுகள் பலவற்றில் அங்கிருந்த அடிமைச் சமூகம் போலவே பெண்களையும்  பிரஜைகள் என்றுகூட அந்த அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்களுக்கு மூளை என்ற அங்கம் இல்லை என்றுகூட சாதித்த விஞ்ஞான ஆய்வுகள் ஆண்களினால் செய்யப்பட்டன. யாரும் ஒரு பெண் ஒரு கொஞ்சம் வேறுபாடான நடத்தையைக் கொண்டாளாயின் ஈவிரக்கமின்றி அவள் கொலை செய்யப்பட்டாள். கல்லெறிந்து கொல்லப்படுகின்றதும்

உயிருடன் கட்டி வைத்து தீ மூட்டப்படுவதும் பெண்களுக்கு இன்றுவரை இழைக்கப்படும் கொடுமைகளில் ஒரு சிலவாகும். இன்றோ, பெண்களுக்கும் ஆண்களுக்கும் மூளைச் சலவை செய்யும் இதே வேலையை வேறு உருவில் எமது ஊடகங்களும், கல்விக் கோட்பாடுகளும் செய்து வருகின்றன.இவ்வாறு, பரம்பரை பரம்பரையாகச் செயற்படுத்திய சமூகமயமாக்கலின் விளைவாகத்தான் பெண்கள் நாம் இன்று பார்க்கும் பெண்களாக உருவாகியிருக்கின்றனர், ஆண்கள் நாம் இன்று பார்க்கும் ஆண்களாக இருக்கின்றனர்.  சமூக வழக்கங்கள் ஆண்களையும் பெண்களையும் உருவாக்க, அந்த ஆண்களும் பெண்களும் திரும்ப சமூக வழக்கங்களை உருவாக்குகின்றனர். இந்த வகையில்தான் பால்நிலை உறவுகள் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.

நாம் இன்று காணும் முறைகளில் பால்நிலை உறவுகள் நிலவுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?பால்நிலை ஒரு சமூகத்தின் ஆண்களினதும் பெண்களினதும் பாத்திரங்களை வரையறுக்கின்றது. அவாகள் ஒரு நிலைக்கு மேலே மாறுபாடான நடத்தை கொண்டவர்களாக இருக்க முடியாதபடி குறுக்குகின்றது. இதனால் குறிப்பாக பெண்கள் தங்களது வாழ்க்கையில் பல வாய்ப்புக்களையும் வளங்களையும் இழக்கின்றனர். அவர்களுக்கு தமது சொந்த அபிலாஷைகளுக்குரியவாறு தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தெரிவு இல்லாமல் போகின்றது. திருமணம், குடும்பம் என்பதுதான் பெண்களின் பிரதான கவனமாக இருக்கவேண்டும் என்று சமூகம் தனியே பெண்களின்மீது அந்தச் சுமையை ஏற்றுவதனால் அனேகம் பெண்கள் தங்கள் வாழ்வின் இலட்சியங்களைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டியதாக இருக்கின்றது. இந்த உலகில் தொழிலதிபர்களாக கோடிக்கணக்கான முதலீடுகளை ஆள்பவர்களும், மதத் தலைவர்களாக ஒரு சமூகத்தின் ஆன்மீக வாழ்வைக் கட்டுப்படுத்துபவர்களும், அரசியல் உயர் தலைவர்களாக வருபவர்களும் ஆண்களாகவே இருக்கின்றனர். பெண்கள் இன்னும் அனேகமாகத் தங்கள் உழைப்பினைக் குடும்பத்திற்கும்சமூகத்திற்கும் ஓயாமல் ஒழியாமல் வழங்கும் தொழிலாளிகளாகத்தான் தொடருகின்றனர். ஆண்களுக்கு பெண்களளவு கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும், அவர்களுக்கும் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஒரு ஆணின் கெட்டித்தனமும் இயல்பும் எப்படியிருந்தாலும் கூட அவன் உழைப்பவனாக, உத்தியோகம் பார்ப்பவனாக, வீரமுள்ளவனாக இருக்க வேண்டுமென சமூகம் எதிர்பார்த்து அழுத்தங்களைக் கொடுக்கின்றது. இது ஒரு அநீதியாகும். அதனை மனித உரிமை மீறலாகக்கூட விவரிக்கலாம். இந்த நிலை மாறி, ஒவ்வொருமனிதரும் தமது ஆற்றல்கள், விருப்பங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளவும், தம்மை வெளிக்காட்டவும், சுதந்திரம் இருக்கும் நாள் வரவேண்டும்.

கல்விக்கும் பால்நிலைக்கும் என்ன தொடர்பு?

கல்வி ஒரு  மனிதனை உருவாக்குகின்றது என்று சொன்னால் மிகையாகாது. இளவயது முதல் செல்வாக்குச் செலுத்தி, ஒருவரின் சிந்தனா முறைகள், ச்கண்ணோட்டங்கள், விழுமியங்கள். ஏன், பழக்க வழக்கங்களும்கூட கல்வியினால் உருவாக்கப்படலாம். பால்நிலை உறவுகளும், ஒருவரின் சிந்தனாமுறையிலும் கண்ணோட்டங்களிலும் விழுமியங்களிலும் பழக்க வழக்கங்களிலும் உணர்வுபூர்வமாக நிலவுகின்றது என்பதை நாம் முன்னர் பார்த்தோம். இதிலிருந்து பால்நிலை உறவுகளை மாற்றுவதில் கல்வித் திட்டம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதைப்  புரிந்து கொள்ளலாம். சமூகமயமாக்கலைக்கூட மேவி, சுற்றுச் சூழலுக்கும் அப்பாற்பட்ட புதிய சிந்தனா முறைகளைத் தூண்டக்கூடிய கருவி கல்வியாகும்.

அது தவிர, நிலவும் பால்நிலை உறவுகளைத் தக்கவைத்து பலப்படுத்தும் கருவியாகவும் கல்வி தொழிற்பட்டு வந்திருக்கின்றது. எமது உலகம் எதை முக்கியமாகக் கருதி அதைப் பற்றிய அறிவுத் தேடலில் ஈடுபட்டிருக்கின்றது, ஆவணப்படுத்தியிருக்கின்றது, கற்றிருக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்த்தாலே அதற்குள் உள்ள பால்நிலை ஏற்றத்தாழ்வுகள் எமக்குப் புலப்படும். வுரலாற்றை எடுத்தாலும் அது ஆண்களின் வரலாறாகத்தான் இருக்கின்றது. மதபோதனைகள் எல்லாம் ஆண்களுக்கு சார்பாகவே இருக்கின்றன. விஞ்ஞானமும் பெண்களுக்கு முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு இன்னமும் பின்னிற்கின்றது. இந்தப் பின்னணியில், கல்வித் திட்டத்தினையே அதற்கேற்ப சீரமைக்கும் பணி நம்முன் உள்ளது.    

கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களைப் புகுத்தும் முறைகள் என்ன?

தம்மைச் சூழவுள்ள, தாம் அன்றாடம் பார்க்கும் சமூக உறவுகளை மாற்றி புதிய உறவுகளை நடைமுறைப்படுத்தக்கூடிய விழுமியங்களை மாணவர்கள் மனதில் தோற்றுவிப்பதே கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் நோக்கமாகும். இந்நோக்கம் இரண்டு வழிகளில் அடையப்படலாம். அவை பின்வருமாறு: 1) சமூகத்தில் தற்போது நிலவும் அசமத்துவமான பால்நிலை உறவுகள் பற்றிய விழுமியங்கள் செல்வாக்குச் செலுத்துவதைத் தடுப்பது அல்லது குறைப்பது உபயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்  பாடவிதானங்களிலும் பாடப் புத்தகங்களிலும் வெளிப்படையாகவோ அல்லது பூடகமாகவோ அசமத்துவமான பால்நிலை உறவுகள் காட்டப்படுமாயின், அவற்றை மாற்றுவது இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது பாடங்களின் உள்ளடக்கத்தை மாற்றுவது தொடங்கி ஆசிரியர்கள் கல்வியை வழங்கும் முறைமைகள் வரை சகல விடயங்களையும் கையாளும். மாற்றவேண்டிய பாட உள்ளடக்கத்திற்கான உதாரணங்களாக, பாடங்களில் வருகின்ற கதைகளில் பெண்களினதும் ஆண்களினதும் பாத்திரங்கள் சமூக மாதிரிகளாக (Stereo Typed Roles) மட்டுமே இருப்பது, உலகப் பெரியார்களின் கதைகள் தனியே ஆண் பெரியார்களின் கதைகளாக இருப்பது, வரலாறுகள் ஆண்கள் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்படுவது,  சமூகவியல் பாடங்களில் வீட்டுவேலை போன்ற பெண்களினது தொழில்கள் பெறுமதி மிக்க தொழில்களாகக் கருதப்படாமல் குறிப்பிடப்படுவது ஆகியவற்றைக் கூறலாம்.

ஆசிரியர்கள் கல்வியை வழங்கும் முறைகளுக்கு உதாரணமாக அவர்கள் சமூக மாதிரிகளாக ஆண்களையும் பெண்களையும் உருவகப்படுத்தும்  கதைகளை ஏற்றுக்கொண்டு எதுவித விமர்சனங்களும் இன்றி மாணவர்களுக்குக் கூறுதல், ‘பொம்பிளைப் பிள்ளை நீர் உமக்கு இந்த வேலை நன்றாக  வரும், ஆம்பிளைப்பிள்ளை நீர் இதை நன்றாகச் செய்வீர்..’ என்ற வண்ணம் மாணவர்களுடன் பேசுவது, சமய நம்பிக்கைகள் போன்றவை அசமத்துவ  பால்நிலை உறவுகளைச் சித்தரிக்கும்பொழுது அதைப் பற்றிய விளக்கங்களைத் தராமல் கற்பித்துக் கொண்டு போவது, ஆண் ஆசிரியர்களும் பெண் ஆசிரியர்களும் தாம் பாரம்பரிய வேலைப் பிரிவினைகளைத் தங்களுக்குள் எற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கான முன்மாதிரிகளாக இருப்பது,  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2) புதிய சமத்துவமான சமூக விழுமியங்களை மாணவர்கள் சிந்தனையில் உருவாக்குவது

இந்த நடவடிக்கையில் இதற்குரிய புதிய பாடவிதானங்கள் எழுதப்படவேண்டும். குறிப்பாக விடலைப் பருவத்தினருக்கு, பால்நிலை உறவுகள் தோன்றிய  காரணங்கள், அவை தம்மை வெளிக்காட்டும் முறைகள், சமத்துவமானதொரு புதிய சமூகத்தின் அம்சங்களைச் சித்தரிக்கும் கதைகள், எமது சமூகத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு உதவும் ஒப்படைகள், ஆகியவற்றைப் போன்ற விடயங்கள் அவர்கடைய பாடாந்தரத்தில் உள்ளடக்கப்படவேண்டும்.

மேற்கூறிய நடவடிக்கைகள் ஒரு பாரிய பணியாகும். இவற்றைச் செவ்வனே செயற்படுத்துவதற்கு முதலில் அதனைச் செயற்படுத்தும்  கல்வியியலாளர்களும் ஆசிரியர்களும் சமூகம் தங்களுக்குள் இதுவரைகாலமும் வளர்த்தெடுத்த தங்கள் கண்ணோட்டங்களிலிருந்தும்  விழுமியங்களிலிருந்தும் தாம் விடுபடவேண்டும். சமூகத்தினின்று வேறுபட்டு தாங்கள் தனித்துவமாக நிற்கும் ஆற்றல் இந்த ஆசிரியச் சமூகத்தினருக்கு உண்டா என்பது ஒரு கேள்வியாகும். அவர்கள் இதற்கு விடை பகர்வார்களா?  

http://udaru.blogdrive.com/archive/415.html