துறவியைப் பற்றிய சினிமாவைப் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமையும் ஆவலும் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் வெறும் துறவி மட்டுமல்ல. ஒரு அரசின் தலைவரும் கூட. ஆனால் நாட்டை விட்டுப் பிரிந்து பிறதேசத்தில் புகலிடம் பெற்று வாழ்பவர். தனது சொந்த நாட்டிற்றுப் போவதற்காக நாலு தசாப்தங்களாக ஏக்கத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர். ‘மதம் ஒரு நஞ்சு’ ஒரு துறவியான அவரது முகத்திற்கு நேரே நிர்த்தாட்சண்யமாகச் சொல்லப்படுகிறது. ‘மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்.’ அதிகாரத் திமிரின் எள்ளல் வார்த்தைகள். முகத்திற்கு நேர் அவமதிக்கும் இந்தக் கடுமையான வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டார். தனக்காக அல்ல, தனது மக்களுக்காக. போர் வேண்டாம். தனது மக்கள் போரினால் துன்பப்படாமல் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதற்காக தனது சுயமரியாதையையும் பொருட்படுத்தவில்லை. சமாதானமாகப் போக முயன்றார். போரைத் தவிர்க்கவும் செய்தார். போரைத் தவிர்த்து சாத்வீகமாக இயங்கியும் அந்த மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவரது சொல்லைக் கேட்காது கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர்களாலும் சுதந்திரத்தையும் தன்மானத்தைக் காப்பாற்ற முடியாது போயிற்று.
ஐ நாவும் உலக நாடுகளும் கண்களை மறு பக்கம் திருப்பிக் கொண்டு ஏதும் அறியாத அப்பாவிகளாக பாவனை பண்ணினார்கள். நேச அணிகள் என நம்பியவையும் சுயலாபத்திற்காக வாய் மூடி மௌனித்தன. ஆயுத பலமும், இனத் திமிரும் ஆக்கிரமிப்பு எண்ணமும் கொண்டவர்கள் முன் நல்லெண்ணத்தால் மாத்திரம் சுதந்திரத்தைக் காப்பாற்ற முடியாது என்ற கசப்பான பாடங்கள் அவர்களுக்காயிற்று.
மதம் ஒரு நஞ்சு என்று சொன்ன தலைவர் சீனாவின் பெரும் தலைவர் மாஸேதுங் அவர்கள். அவமானப்பட்டு நாடு துறந்தவர் திபேத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா.
மலையும் பனி மூட்டமும் குளிரும் நிறைந்த வளமான பிரதேசம். தீபெத்தின் வடக்குப் பகுதியில் சீனாவிற்கு அண்மையான ஒரு சிறு கிராமத்தில் படம் சுவார்ஸமாக ஆரம்பமாகிறது. எளிமையான குடும்பம். விவசாயம் செய்யும் தந்தை. தாய். 3 அல்லது 4 குழந்தைகள் சரியாக ஞாபகம் இல்லை. சூட்டிகையான கடைக்குட்டி. சாப்பாட்டு மேசையில் தந்தைக்குப் பதில் தனக்கு அந்த இடம் வேண்டும் என அடம் பிடிக்கிறது. தான்தான் குடும்பத்தின் முதல்வன் என்கிறது. எல்லாக் கடைக்குட்டிகளும் போலவே இதுவும் செல்லம் மிக்கது என எண்ணுகிறோம்.
இரவில் ஒரு துறவி கதவைத் தட்டுகிறார். அவர் லாமா என அழைக்கப்படும் பௌத்த துறவிகளில் ஒருவர். தொலைப் பிரயாணம் செய்பவர். களைப்பில் உதவி கேட்கிறார். விருந்தோம்பும் பண்புள்ள குடும்பத்தாய் அவரை வரவேற்று அவருக்கு உணவும் அளிக்கிறாள்.
அவரது கழுத்தில் இருந்த ஊருத்திராட்ச மாலையைத் அது தனது எனக் குழந்தை உரிமை கொண்டுகிறது. துறவி ஆச்சரியப்படவில்லை. தனது தேடலுக்கு முடிவு வந்துவிட்டது என மகிழ்ச்சிப்படுகிறார். ஆம் அவர் திபேத்திய மடாலயத்தைச் சேர்ந்தவர். தமது ஆன்மீகத் தலைவர் மறுபிறப்பு எடுத்துவிட்டார் என்பதை உணர்ந்து 14வது தலாய்லாமாவைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மாறுவேடத்தில் இருந்தவர். குழந்தையின் செயலைக் கண்டு அதுதான் அடுத்த தலாய்லாமா என உணர்கிறார்.
ஆனால் அதை உறுதிப்படுத்த குழந்தைக்குப் பரீட்சை வைக்கிறார்கள். முன்னைய தலாய்லாமா உபயோகித்த கைத்தடி, கைமணி, மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை அதேபோன்ற வேறு பொருட்களுடன் கலந்து வைத்தபோது குழந்தை இவை என்னுடையவை எனச் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உரிமை பாராட்டுகிறது. அவை சரியாக இருந்ததால் இதுதான் மறுபிறப்பு என்பது உறுதியாகிறது.
இது எதிர்பாராத சம்பவங்களும், கிளர்ச்சியூட்டும் காட்சிகளும் கொண்ட சினிமா அல்ல. வரலாற்றுச் சித்திரமாகும். 1937 முதல் 1959 ஆண்டுவரையான காலப்பகுதியின் பதிவாகும். ஆனால் வரட்சியான ஆவணப்படமல்ல. சீனா, இந்தியா ஆகிய களங்கள் ஆங்காங்கே வந்தபோதும் திபெத்தை மையமாகக் கொண்டது.
திபெத்தின் அமடா (Amada) மாகாணத்தில் இருந்த குழந்தையும் பெற்றோர்களும் லகசாவில் Lhasa உள்ள பொட்டாலா Potala மாளிகைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கு எதிர்காலத்தில் ஆன்மீகத் தலைமையையும், நாட்டின் தலமையையும் பொறுப்பேற்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தலாய்லாமாக்களின் வரலாறும், அவர்களது படங்கள் சிலைகள் போன்றவை காட்டப்படுகிறன.
திரைக் கதையை எழுதியவர் மெலிசா மத்தீசன் தலாய்லாமை அவரது ஆசீர்வதத்துடன் சந்தித்து, பல முறை நடாத்திய நேர்காணல்கள் ஊடாக திரைக்கதை எழுதப்பட்டது. எனவே அதன் உண்மைத்தன்மை நிச்சயம் தலாய்லாமாவின் பக்கம் சார்ந்ததாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. சம்பவங்கள் திபேத்திலும், சீனாவிலும், இந்தியாவிலும் நடந்திருந்த போதும் படப்பிடிப்பு முற்று முழுதாக அமெரிக்காவிலேயே செய்யப்பட்டது. பௌத்த ஆச்சிரமக் காட்சிகள் சில நியூயோர்க்கில் உள்ள கர்மா த்ரியன தர்மசக்கர ஆச்சிரமத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கலையும் கமராவும் அற்புதமாகக் கைகொடுத்ததால் களத்திலேயே எடுக்கப்பட்டது போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. கமரா Roger Deakins. திபெத்திய கலாசார வீடுகள், அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள், ஆடை அலங்காரம் யாவும் அந்தச் சூழலைக் கொண்டு வருகின்றன. இசை Phlip Glass. உள்ளத்தை ஈரலிக்கும் இசையும், காட்சியமைப்புகளும் அற்புதமானவை.
படத்தின் நெறியாள்கை Martin Scorsese. The Last temptation of Christ என்பது இவரது மற்றொரு நல்ல படமாகும்.
5000 வீர்ர்களை மட்டுமே கொண்ட திபெத்திய இராணுவத்தால் உலகின் அதிகளவு சனத்தொகை கொண்ட மிகப் பெரிய நாடான சீனாவை என்ன செய்ய முடியும். சுலபமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் நன்மை செய்வதாகக் காட்டிக் கொண்டாலும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் சுயரூபம் படிப்படியாக திபேத்தியர்களைச் சுரண்டவும், அவமானப்படுத்தவும் செய்கிறது. பொறுக்க முடியாத தலாய்லாமா சீனா சென்று சீனத் தலைவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பின்போது தான் ஆரம்பத்தில் குறிப்பிட ‘….மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள் ..’ என்ற நீதி வசனத்தைச் சொல்லியருளினார்.
நாடு திரும்பிய தலாய்லாமா நாட்டு நிலமை இன்னமும் மோசமாகி இருப்பதை உணர்கிறார். அவரது நெருங்கிய சகாக்களே சீன ஆட்சியின் கீழ் இருக்க முடியாது வெளியேறுகின்றனர். சீன இராணுவம் தனது பிடியை இறுக்குகிறது. விளைச்சல்களை அள்ளிச் சென்று மக்களைப் பட்டினி போட முயல்கிறது. தலாய்லாமா சீன அதிகாரிகளின் அதிகாரப் போக்கினால் கோபமுறுகிறார். கோபமுற்ற சீன அரசு தலாய்லாமாவைக் கொல்லவும் முயற்சி எடுக்கின்றது. அவரது சொந்தச் சகோதரரைனையே அந்தப் பாதகச் செயலைச் செய்யுமாறு தூண்டுகின்றனர். ஆனால் அவர் உண்மையை தலாய்லாமாவிடம் சொல்லிவிடுகிறார்.
அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தருணம் வந்து விட்டதை எல்லோரும் வலியுறுத்தவே, குறி சொல்பவரின் கருத்தையும் அறிய விளைகிறார் தலாய்லாமா. குறியாட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அலங்கார ஆடையணிகலங்களுடன் மலையாள நடனத்தை நினைவுபடுத்தும் குறியாட்டம். உருவேறிய மனிதர் குறி சொல்கிறார். பாதுகாப்பான பயணம் குறியால் உறுதியாகிறது.
சீன ராணுவம் சுற்றி நிற்கிறது. தப்பிச் செல்ல வழியில்லை. தனது வழமையான ஆடம்பர உடைகளைக் கைவிட்டு குடியானவனாக உருமாறுகிறார். அவரை இனம் காட்டும் மூக்குக் கண்ணாடியையும் களைந்து வீதியில் ஆர்ப்பரித்து நிற்கும் சனங்களிடையே கலந்து வெளியேறுகிறார்.
கடுமையான பயணம். இருளின் துணையில் சுதந்திர ஒளிக்கான ஏக்கத்துடனான பயணம். சலசலத்தோடு நீரோடை, சறுக்கும் பாறை, கவியும் இருள், ஆனால் உறுதியான மனம் திடமாகக் கால் வைக்கிறார். நடந்து, குதிரையேறி, மயங்கி விழுந்தும் விழாமலும் நீண்ட ஆயாசப்பட வைக்கும் பயணம் தொடர்கிறது.
மலைச் சாரல், சாரலாக மழைத் தூறல், அமைதியின் ஆட்சி. சிறு மூங்கிலிலான வளைவு. எட்டாத் தூரத்தில் உள்ள சிறு இராணுவச் சாவடி. தொப்பிகளும் சம்பாத்துகளும் அணிந்த கூர்கா சிப்பாய்கள். காயப்பட்டு இரத்தம் வடிந்த குதிரை. அதில் நோயுற்று சோர்ந்து குதிரையின் கழுத்தில் தன் உடல் போர்த்தி சோர்ந்து கிடக்கும் மனிதன். அடக்கு குறை இராணுவம் போலல்லாது கையால் அணைத்து அவன் இறங்க உதவும் இராணுவ வீரன்.
‘நீங்கள் யார்’ மிகுந்த மரியாதையுடன் கேட்கிறான்.
‘நீ காண்பது ஒரு மனிதன். சாதாரண துறவி’ என்கிறார், இயலாமையையும் மீறும் சிறு முறுவலுடன்.
‘நீங்கள் கௌதம புத்தரா’
சிறு மௌனத்தின் பின் சலனமற்ற மென் குரலில் ‘நான் பிரதிபலிப்பு என எண்ணுகிறேன். நிலவு நீரில் தெரிவதுபோல…’
ஆம் அது ஒரு புண்ணிய ஆத்மா. நன்மையே நாடும் ஆத்மா. தனக்கு மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தனது எதிராளிக்கும் கூட.
இறுதிக் காட்சி. இந்திய மண்ணில் ஒரு எளிமையான அறை. தலாய்லாமா தனது டெலஸ்கோப்பை எடுக்கிறார். சரியாகப் பாகங்களைப் பொருத்துகிறார். தன் கண்ணை வைத்து தொலை தூரம் பார்க்கிறார். தனது தேசத்தை, அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் முழு உலகமும் அவரின் தரிசனத்தில் நனைகிறது.
கறுத்த திரை சோகமாக விரிகிறது. அதில் வாசகங்கள்.
‘தலாய்லாமா இன்னும் திபெத்திற்குத் திரும்பவில்லை.’
‘ஒரு நாள் அதற்கான பிரயாணம் கை கூடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.’
அவரது ஏக்கம் எம்மையும் பற்றிக் கொள்ள கனவுகளில் பயணிக்கிறது எம் மனம்.
Muruganandan Muttiah Kathiravetpillai <kathirmuruga@hotmail.com>
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot .com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com /pathivukal/health.html