இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்’ வழங்கிய ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற, செந்தமிழ் செழிக்கும் யாழ் மண்ணில் நுணாவிலூர் எனும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘பல்வேறு பயன் தரும் பனைமரம்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில், பல்வேறு பயன் தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும், புகழ் நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்த பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்- அகநானூறு- சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு, உலகரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணம், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனித நேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியம் சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்! நரகம்! மறுபிறப்பு! கற்பனையா? நிசமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகியவை பற்றி அலசப்பட்டுப் பேசப்பட்டுள்ளன. இவை இலக்கியம், இதிகாசம், உலகரங்கு, வாழ்வியல், மனிதநேயம், விலங்கியல், வானியல், பொருளாதாரம், தாவரவியல் ஆகிய பொருட்பிரிவுகளின் அடக்கமாகும்.
மனிதனுக்குமுன் தோன்றிய பனைமரம், அதன் கதை, காணப்படும் நாடுகள், தோற்றுவாய், கிளைப்பனை, பனை பற்றிப் பேசும் இலக்கியங்கள், பனையின் சிறப்பு, பனை தரும் உணவுப்பொருட்கள் – பதநீர், நுங்கு, பனம்பழம், ஒடியல், பனங்கிழங்கு, பூரான், புழுக்கொடியல், பனஞ்சோறு, ஒடியற்பிட்டு, பனை தரும் உணவிலிப் பொருட்கள் – பனைஓலை, காவோலை, மனைமட்டை, பனை ஈர்க்கு, கங்குமட்டை, பன்னாடை, பணிவில், உலகில் சுமார் 14 கோடி பனைமரங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் செய்திகள் போன்ற பல விடயங்கள் கூறப்படுகின்றன.
சங்க நூல்களில் இலக்கியம், அறிவியல், வாழ்வியல், இயற்கை வளம், உயிரியல், அறவியல் போன்றவை நிரம்பி வழிதலைக் காண்கின்றோம். இவையின்றி அவை உயிர் பெறாதெனலாம். மண்ணைப் பார்த்து விலங்குகள் பவனி வருவதையும், விண்ணைப் பார்த்துப் பறவைகள் பறந்து கீதம் பாடுவதையும் கண்ணுற்று அளவிலா ஆனந்தமடைகிறோம். சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் பல்வேறுபட்ட விலங்கினங்களும், பறவையினங்களும் பேசப்பட்டுள்ள பாங்கினையும் காணலாம்.
ஒரு தேன் கூட்டில் ஓர் இராணித் தேனீ, பல ஆயிரம் ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பெண் உழைப்பாளித் தேனீக்கள் ஆகிய மூவகைத் தேனீக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றன. ஒரு சாதாரணத் தேன் கூட்டில் இருபதாயிரம் (20,000) முதல் முப்பதாயிரம்; (30,000) வரையான தேனீக்கள் உள்ளன.
மண், மரங்களுக்கு முன்பும், மரங்கள் மனிதனுக்கு முன்பும் தோன்றியவை. மண்ணின்றி மரங்களில்லை. மரங்களின்றி மனித வாழ்வு நிறைவில்லை. மண், மரங்கள், மனிதன் ஆகிய மூன்றும் ஒன்றுடனொன்று இறுகிய தொடர்பிலுள்ளன. இவையின்றி உலகமுமில்லையெனலாம். நிலம் பற்றியும், மண் பற்றியும், மரங்கள் பற்றியும் சங்க இலக்கியங்களில் நிறையப் பேசப்பட்டுள்ளதையும் காண்கின்றோம். மரங்கள் முப்பத்தெட்டுக்கோடி (38,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றியவை.
கரணவியல் (சடங்கு முறைகள்) பற்றித் தொல்காப்பியம், அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய சங்க நூல்கள் காட்டும் வேறுபட்ட சடங்கு முறைகளையும் காண்கின்றோம். தொல்காப்பியர் காலத்திலும், அகநானூற்றுக் காலத்திலும் பார்ப்பான் மணவிழாவிற் பங்கேற்கவில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில் முதன்முதலாகப் பார்ப்பான் பங்கேற்று, தம்பதியினர் தீவலம் வந்து, மணவிழா நிறைவு பெற்றுள்ளது.
தொல்காப்பியம், குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், திருமந்திரம், மனுநீதி நூல், நீதிநெறி நூல்கள், பழமொழிகள், திருவாசகம், பாரதியார் கவிதைகள், கண்ணதாசன் பாடல்கள் ஆகிய நூல்களில் ஆண், பெண் ஏற்றத் தாழ்வுகள் தரப்பட்டுள்ளன.
திருமணங்களிற் பல நடைமுறைகள் உள்ளன. அவற்றில் கலப்புத் திருமணம் ஒன்றாகும். அது பற்றி இவை ஒரு சிலவாகும்:- (1) இணைப்புறவுக் கலப்பு மணம், (2) ntt;வேறு இனங்களுக்கிடையே நிகழும் திருமணம், (3) நாடுகடந்து சென்று அங்குள்ள ஆண், பெண்ணை மணம் புரிதல், (4) இனக் கலப்புத் திருமணம், (5) கணவன் மனைவி போன்று பிறரோடு இணைந்து வாழ்தல் ஆகியனவாம். கலப்புத் திருமணத்திலும் நன்மைகளும், தீமைகளும் உள. ஆனால் நீண்ட வாழ்நாளில் கலப்புத் திருமணத்தால் தீமைகளை விட அதிக நன்மைகளே கிட்டும் எனலாம்.
‘குடும்பமும் ஒற்றுமையும;’ என்ற ஆக்கத்தில்- குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர் எல்லாரும் ஒன்றுகூடி வாழும் ஒரு சமூக அமைப்பு. இதுவே இல்லற வாழ்க்கையுமாகும். அது அன்று நிலைத்திருந்தது. இன்று அது சிதைந்து, ‘தனிக் குடித்தனம்’ ஆகிவிட்டது. சங்ககால அறிவுரைகள், நம் முன்னோர் வாழ்ந்து விட்டுச் சென்ற வாழ்வியல் முறைகள், எச்சங்கள், பிறர் அனுபவங்கள் யாவும் எம்மை ஆற்றுப்படுத்தி நிற்க, குடும்பமும் ஒற்றுமையும் சீர்பெறும் என்பது திண்ணம்.
டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் அணிந்துரையும், செல்வன். பிரவின் யெயராசா அவர்களின் அட்டைப்பட ஓவியமும் இந்நூலை மேலும் அலங்கரித்து நிற்கின்றன.
இந் நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்:-
K. Wijeyaratnam,
35, Southborough Road,
Bickley, Bromley, Kent.
BR1 2EA
Total pages:- 212
Publishers:- Wijey Publication
Telephone No. 020 3489 6569
E-mail :- wijey@talktalk.net
Price per copy:- £3.99 + postage charges.