வாசிப்பும், யோசிப்பும் 68: One flew over the cuckoo’s nest. குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்றா? அல்லது குயிற் கூட்டின் மேலால் ஒரு பறப்பா?

வாசிப்பும், யோசிப்பும் 66:  கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க  முடியாததோர் ஆவணப்பதிவு!னடாவிலிருந்து வெளியாகும் ‘உரையாடல்’ சஞ்சிகையில் கையெழுத்து என்றொரு கட்டுரையினை அ.இரவி எழுதியிருக்கின்றார். அதிலவர் குறிப்பிட்டிருந்த விடயமொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. ஜாக் நிக்கல்சனின் நடிப்பில் வெளிவந்து மிகுந்த பாராட்டினையும், ஐந்து ஆஸ்கார் விருதுகளையும் வென்ற ஆங்கிலத்திரைப்படமான One flew over the cuckoo’s nest திரைப்படம் பற்றிய , மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்த தனது விமரிசனத்தில் திறனாய்வாளர் ஏ.ஜே. கனகரத்தினா One flew over the cuckoo’s nest என்பதை குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்று மொழிபெயர்ப்பு செய்திருந்ததாகவும், ஆனால் ‘சரிநிகர்’ பத்திரிகையில் தான் எழுதிய கட்டுரையில் குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பதைக் குயிற் கூட்டின் மேலால் ஒரு பறப்பு என்று திருத்தி வெளியிட்டிருந்ததாகவும், இதில் எது சரி என்பதை நீங்கள் விவாதித்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

என்னைப்பொறுத்தவரையில் குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பதே சரியென்று கருதுகின்றேன். குயிற் கூட்டின் மேலால் ஒரு பறப்பு என்பது பறப்பு பற்றியதொரு பொதுவான கருத்தாகக் கருதப்படும். ஆனால் குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பது குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பது பற்றியது என்னும் கருத்தினைத்தருவதால் அதுவே பொருத்தமாக எனக்குத் தென்படுகிறது. இதுவே திரைக்கதைக்கும் பொருந்துகிறது. திரைப்படத்தில் அவ்விதம் குயிற்கூட்டின் மேலாகப் பறந்த ஒருவராக ஜாக் நிக்கல்சன் வருகின்றார்.

உண்மையில் குயிற் கூடு என்ற பதம் கூட ஆங்கிலத்தில் அத்தலைப்பு தரும் அர்த்தத்தைப்போலான அர்த்தத்தைத் தருவதில்லை. ஆங்கிலத்தில் cuckoo என்ற சொல்லினை உளவளர்ச்சி குன்றியவர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் இத்திரைப்படத்தின் மூலக்கதைக்கும் அக்கதை அவ்விதமான உள  வளர்ச்சி குன்றியவர்களைப் பராமரிக்கும் இல்லமொன்றில் நடப்பதால் One flew over the cuckoo’s nest என்ற பெயரினை இட்டிருக்கின்றார் அதனைப் படைத்த கதாசிரியர்.

தமிழில் குயில் குரலினிமைக்காகத்தான் குறிப்பிடப்படுவது வழக்கம். எனவே One flew over the cuckoo’s nest  என்பதன் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பு கூட ஆங்கிலத்தில் அப்பெயர் தரும் அர்த்தத்தைத் தமிழில் தருவதில்லை. இவ்விதமான சந்தர்ப்பங்களில் தமிழில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் தலைப்பு தரும் அர்த்தத்தை முன்னிலைப்படுத்தி, நேரடியான மொழிபெயர்ப்பைத்தவிர்த்து, நூலின் தலைப்பினைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கலாமென்றும் நினைக்கின்றேன்.