– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
–அத்தியாயம் ஏழு
“எழுந்திரு. என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
நான் கண்களை விழித்து சுற்றிலும் பார்த்து எங்கே இருக்கிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சூரியன் மேலே எழும்பிவிட்டது. நான் அயர்ந்து உறங்கி விட்டேன் போலும். கோபமும் சோர்வும் முகத்தில் தெரிய அப்பா என் முன்னே நின்று கொண்டிருந்தார். அவர் கேட்டார். “இந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்?”
கடந்த இரவு அவர் நடந்துகொண்டது அவர் நினைவில் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே நான் சொன்னேன் “யாரோ கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தார்கள். எனவே அவன் வரும்வரை அவனுக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.
“ஏன் என்னை எழுப்பவில்லை?”
“நான் மிகவும் முயற்சித்தேன். நீங்கள் அசையக்கூட இல்லை.”
“நல்லது. சரி. முழுநாளும் அசட்டுத்தனமாக ஏதும் செய்துகொண்டே நிற்காதே. வெளியே சென்று மீன் வலையில் மீன் ஏதேனும் உள்ளதா என்று பார்த்து எடுத்து வா. அப்போதுதான் நாம் காலை உணவு சாப்பிட முடியும். இன்னும் சில நிமிடங்களில் நான் வெளியே சென்று விடுவேன்.”
அவர் கதவைத் திறந்ததும் நான் நதியின் கரை நோக்கிச்சென்றேன். நதியில் மரக்கிளைகள் மற்றும் குப்பைகளுடன் மிதந்த மரப்பட்டைகள் துள்ளிக்கொண்டு செல்வதை கண்ட எனக்கு நதியின் நீரோட்டம் அதிகரிப்பது தெரிந்தது . நான் மட்டும் இப்போது ஊருக்குள் இருந்திருந்தால், அதிகமான சேட்டைகள் செய்து மகிழ்ந்திருப்பேன். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் நீரின் வரத்து அதிகரிப்பது எனக்கு எப்போதுமே நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நேரமாக இருக்கும். ஏனெனில் நதியில் விடப்படும் மரக்கட்டைகள் அப்போதுதான் மிதந்து வரும். சில சமயங்களில் டஜன் மரக்கட்டைகளை ஒன்றிணைத்து செய்யப்பட்டிருக்கும் மரக்கலம் மிதந்து வரும். நான் அதைப் பிடித்துச் சென்று மரஅறுவை மில்களுக்கும், மரக்கட்டைகளை வாங்கும் நிலையத்திற்கும் விற்று விடுவேன்.
கரையின் கூடவே சென்ற நான் ஒரு கண்ணால் அப்பாவைக் கண்காணித்துக் கொண்டும், இன்னொன்றால் ஏதேனும் உபயோகமானது மிதக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டே சென்றேன். அப்போதுதான் ஒரு குறுகிய மரத்தோணி மிதந்து வருவதைக் கண்டேன். பதிமூணு பதினாலு அடி நீளத்தில், குழிந்த உட்புறத்துடன் ஒரு அன்னம் போன்று மிக அழகுடன் இருந்தது. தலை குப்புற தவளை போன்று அணிந்திருந்த உடையுடனே நீரினில் பாய்ந்து அந்த மரத்தோணி நோக்கி நீந்திச் சென்றேன். அதன் உள்ளே யாரேனும் மறைந்து படுத்திருக்கக்கூடும் என்று நான் எதிர்பார்த்தேன். சில சமயங்களில் குறும்பு செய்வதற்காக உள்ளே மறைந்திருந்து, யாரேனும் அவர்கள் அருகில் சென்றால், திடீரென எழுந்து பயப்படுத்திச் சிரிப்பது போன்ற விளையாட்டு இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் நடக்கவில்லை. உண்மையாகவே அது ஒரே நல்ல மரத்தோணி. எனவே நான் அதில் இறங்கி துடுப்பை வலித்து கரையை நோக்கிச் செலுத்தினேன். இதனது மதிப்பு ஒரு பத்து டாலருக்குத் தேறும் என்பதால் எனது கிழவன் இதைப் பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சி கொள்வான்.
Continue Reading →