– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –
அத்தியாயம் மூன்று
நல்லது. காலையில் எனது அழுக்கடைந்த உடையைக் கண்ட வயதான மிஸ். வாட்ஸன் எனக்கு அறிவுரை கூறினாள். எனினும் அதிகம் திட்டாமல், அழுக்குப் படிந்திருந்த எனது உடையில் இருந்த மண் மற்றும் திட்டான கறைகளை தேய்த்து விட்டாள். அவளின் சோகமான ஏமாற்றமடைந்த முகத்தைக்கண்டதும், கொஞ்ச நாளைக்காவது என்னால் முடிந்த அளவு இனி நான் ஒழுங்காக நடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். பின்னர் மிஸ். வாட்சன் அறைக்குள் அழைத்துச் சென்று எனக்காகப்பிரார்த்தனை செய்தாள். ஆனால் அதனால் எந்த நற்பலனும் விளைந்ததாகத் தெரியவில்லை. தினந்தோறும் பிரார்த்தனை செய்யும்படி எனக்கு அறிவுறுத்தியதோடு, அப்படி நான் செய்தால் நான் வேண்டுவது எல்லாம் எனக்குக்கிடைக்கும் என்றும் கூறினாள். ஆனால் அது உண்மையல்ல. நான் முயற்சி செய்திருக்கிறேன். ஒருமுறை எனக்கு மீன்பிடிக்கத் தேவையான கம்பியும் அதில் உள்ள நீளக் கயிறும் கிடைத்திருந்தது. ஆனால் மீன்பிடிக்கும் கொக்கி இல்லையெனில் அவற்றால் என்ன பயன்? நானும் மூன்று அல்லது நான்கு முறை எனக்கு மீன்பிடிக்கும் கொக்கி தேவை என பிரார்த்தனை செய்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. ஒரு நாள் நான் மிஸ். வாட்ஸனிடம் எனக்காக மீன் பிடிக்கும் கொக்கி வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யச் சொன்னேன். ஆனால் அவள் என்னை ஒரு முட்டாள் என்று கூறினாள். ஏன் அவ்வாறு கூறினாள் என்ற காரணமும் அவள் கூறவில்லை. அப்படி அவள் கூறியதற்கான காரணம் எனக்கும் விளங்கவில்லை.