இலங்கையின் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருக்கும் இக்காலப்பகுதியில் நீர்வை பொன்னையன் அவர்களின் மறைவும் எதிர்பாராமல் நிகழ்ந்துள்ளது. நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக அறியப்படுகிறது.
இம்மாதம் 24 ஆம் திகதிதான் நீர்வைபொன்னையன் தமது 90 வயதையும் பூர்த்திசெய்திருந்தார். இறுதியாக அவர் எழுதி முடித்திருந்த நூலொன்றும் அச்சாகி வெளிவரவிருந்தது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் பதட்டமான சூழ்நிலையினால் தமது புதிய நூலையும் பார்க்கமுடியாமல் நிரந்தரமாக கண்களை மூடிக்கொண்டார். இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது நீர்வை பற்றிய நினைவுகள் மாத்திரமே. அவர் பற்றி முன்னர் நான் பதிவுகளில் எழுதிய குறிப்புகளை கீழே பார்க்கவும்.
திரும்பிப்பார்க்கின்றேன். அறுபது ஆண்டுகாலமாக அயர்ச்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன்.
இலங்கையில் தமிழ் கலை, இலக்கிய பரப்பில் மாவை, வல்வை, கரவை, சில்லையூர், காவலூர், திக்குவல்லை, நீர்கொழும்பூர், நூரளை, நாவல் நகர், உடப்பூர், மாத்தளை முதலான பல ஊர்கள் பிரசித்தமாவதற்கு அங்கு பிறந்த பல கலைஞர்களும் படைப்பாளிகளும் காரணமாக இருந்துள்ளனர். ஊரின் பெயரையே தம்முடன் இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில் தொடரும் பலருள் நீர்வை பொன்னையனும் ஒருவர். இலங்கையில் மூத்த இலக்கியப்படைப்பாளியான அவர் சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்து சிட்னியில் தமது புதல்வியின் குடும்பத்தினர்களுடன் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அவருடன் தொடர்புகொண்டேன். வடபுலத்தில் நீர்வேலியில் 1930 ஆம் ஆண்டு பிறந்த நீர்வை பொன்னையன், தமது ஆரம்பக்கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் ஆரம்பித்து பின்னர் மட்டக்களப்பு – கல்லடி சிவானந்தா கல்லூரியிலும் தொடர்ந்து பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக கிழக்கிலங்கையில் சம்மாந்துறை முஸ்லிம் பாடசாலையில் பணியாற்றிவிட்டு இந்தியாவில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரியாக தாயகம் திரும்பினார்.