அவன் மெளனமாக அமர்ந்திருந்திருந்தான்.சுற்றிலும் நண்பர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“அதற்கு சொந்தக்காரர் நீங்களா..? நம்ப முடியல்லையே…”
“வேறொருத்தர..சொல்றாங்களே..? அதுவும் இறந்து போன..புகழ்பெற்ற .. சினிமா மெட்டில்..அரசியல் கலந்து..தேர்தல் களங்களில்..அரசியல் மேடைகளில்.. பாடும் பாடகர் பெயரை குறிப்பிடுகிறார்களே..?”
“உண்மையா..இல்லை..புகழ்ச்சிக்காக நீங்கள் இட்டுக்கட்டியதா…?”
“இன்னைக்கி..இந்த மாதிரி ..சொல்லிக்கிட்டு..நிறையப் பேர்..கோர்ட்..வழக்குக்குன்னு…நாட்ல..நிறைய நிகழ்வுகள்..அன்றாடம் நடந்துக்கிட்டிருக்கு…”
இன்னும் சிலர் அவனை சொல் என்ற மொன்னையான கத்தியால் கீறி தங்களின் அடிமன இச்சைகளை தீர்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லாவற்றையும் சிறு புன்னகையில் சுவீகரித்துக் கொண்டிருந்த அவன் முப்பது வருடங்களுக்கு முன் தன் கல்லூரிக் காலத்திற்குள் பயணித்தான்.
கூழாங்காறு என்ற கூவலிங்க ஆற்றின் தென்கரையில்..புளியமரங்கள் சூழ்ந்து அந்த கல்லூரி இருந்தது. மேற்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும்,தெற்கில் தனித்து நின்ற குன்றின் மேல் சிவன் கோவிலும், மானாவாரி புழுதிக்காடுகளுமாக அதன் எல்லைகள் இருந்தன.
ஆறு மிகப் பெரிதானதாய் இல்லாமல் நீரோடை போல இருக்கும். அதன் இருகரைகளிலும் தென்னந்தோப்புகள்..பார்ப்பதற்கு..மிக அழகான சோலைவனம் போல் காட்சியளிக்கும்.
“நண்பா..நண்பா..என யாரோ தன்னைத் தொட்டு உலுக்கிய போது தான் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பினான் அவன்.
எதிரே கோபமும் சீற்றமும் நிரம்பித் ததும்பும் முகங்களோடிருக்கும் நண்பர்களைக் கண்டதும் அவனுக்குள் பதட்டம் பரவியது.
அவசரமாக பேசத் தொடங்கினான்,” மன்னியுங்கள் நண்பர்களே..உங்களின் கேள்விகள் என்னை..பழைய காலத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டது..அதான்..நான்..என்னை மறந்த நிலைக்குள் இருந்து விட்டேன்..மற்றபடி உங்களின் கேள்விகளை அலட்சியப் படுத்திட நான் முனையவில்லை..மன்னியுங்கள்..”