இலங்கை தினகரனுக்கு 88 வயது! இலங்கையில் தினகரனும் பாரதியும்!

கலாநிதி கைலாசபதிஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23-05-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு  அறிமுகப்படுத்தியது. ஆங்கில, சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுவரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House  என்ற  பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி  தினகரன். அது வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு இந்திய ஊடகம் என்ற மாயைதான்  இலங்கை வாசகர்களிடம் உருவாகியிருந்தது.   தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப்பத்திரிகையாக்கிய  பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் இவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி,  வெளியிட்ட  சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத்தினசரியின்  ஆசிரியரானார். பாரதி ஆய்வாளராகவும் அறியப்படும் பேராசிரியர் க. கைலாசபதியின்  தினகரன் ஆசிரியப்பணி குறித்தும் இருவேறு கருத்தியல்கள்  இலக்கிய உலகில் நிலவியதை அறிவோம்.

” பல்கலைக்கழகத்திலிருந்து  தமிழ்ச்சிறப்பு  பட்டதாரியாக  அவர் முதல் வகுப்பில்  சித்தியெய்திய பின்னர், அன்று உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப்பதவியொன்றினைத் தேடியிருக்கவோ  அல்லது  உயர் கல்வி  ஆராய்ச்சித்துறையில் இந்நாட்டிலோ   வெளிநாடு சென்றோ, மேலுக்கு வந்திருக்கவோ கூடும்.  ஆனால், கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுட் புகுந்தார். அதனை வருவாய்க்கு வழியாக அன்றி, அதன் வாய்ப்புகளை  உகந்தவாறு  பயன்படுத்துவதில்  கைலாஸ் குறியாயிருந்தமை  தெளிவாகும்.

Continue Reading →

பாடும் மீன் புத்தகத் திருவிழா மனப் பதிவுகள்!

பாடும் மீன் புத்தகக் கண்காட்சி காண சனிக் கிழமை( 08. 03. ,2020) இரவு தேவநாயகம் மண்டபம் சென்றிருந்தேன். சித்திரலேகாவும் தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாது என்னுடன் வந்திருந்தார். புதிய புத்தகங்கள் காண அவரும் அவாவினார், அவரும் ஓர் புத்தக ஆர்வலர். நாம் அங்கு போகும் போது மேடையில் நின்று ஜிப்றி ஹசன் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நூல் பற்றிய அறிமுகம் அது.

ஹசன் காத்திரமான மனிதர் ஏலவே எனக்கு அறிமுகமானவர் அவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வாசித்தமையினால் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அவர் உரையைச் செவி மடுத்தவண்ணம் தேவநாயகம் மண்டபத்தினுள் நுழைந்தோம், அவரைப்பற்றி சித்திராவிடமும் கூறினேன்.

தேவநாயகம் அரங்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேடையும் அதனை ஒட்டிய பகுதியும்முதலாவது பகுதி அதற்கு இப்பால் இரண்டாவது பகுதி கண்காட்சிப்பகுதி. மேடையில் யில் நின்று ஹசன் உரையாற்றினார் அதனோடு ஒட்டியிருந்த கதிரைகளில் ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் இருந்து அவர் உரையைச் செவி மடுத்துகொண்டிருந்தனர். மிக அதிகமானோர் அது பற்றி எதுவித கவலை யுமின்றி அதே ஹாலில் பரப்பி வைக்கப்பட்டி ருந்த நூல்களை பார்வையிட்டுக்கொண்டிருந்தனர்.

Continue Reading →

உள்ளங் கவர்ந்த கானங்கள்: “வாழ்க்கை ஒரு ஒட்டகம்; நொண்டி ஒட்டகம்”

உள்ளங் கவர்ந்த கானங்கள்: "வாழ்க்கை ஒரு ஒட்டகம்; நொண்டி ஒட்டகம்"

“வாழ்க்கை ஒரு ஒட்டகம்   நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்”
கவிஞர் விவேக் வேல்முருகன் –

வாழ்க்கையை நொண்டி ஒட்டகத்துக்கு உருவகிக்கும் கவிஞரின் கவித்துவம் இப்பாடலின் முதல் வரியிலேயே என்னைக் கவர்து விட்டது. பாடகர் பென்னி தயாலின் குரலை ஏற்கனவே விஜயின் ‘அழகிய தமிழ் மக’னில் கேட்டு இரசித்தவன். இப்பொழுதெல்லாம் புற்றீசல்கள்போல் தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருவதால் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. அன்று வருடத்துக்கு வெளியாகும் தமிழ்த்திரைப்படங்கள் எல்லாமே நினைவில் நிற்கும். அவற்றின் நடிகர்களும் , பாடகர்களும் நினைவில் நிற்பார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. யார் பாடினார்? எந்தப் படத்தில் பாடல் இடம் பெற்றது? யார் நடித்தது? ஒன்றுமே தெரிவதில்லை. இதற்குத் தலைமுறை இடைவெளி முக்கிய காரணமென்று நினைக்கின்றேன். இதனால் எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கையில் அவை இடம் பெற்றுள்ள திரைப்படங்களின் கதைக்களனை அவற்றின் விக்கிபீடியாவிலுள்ள ஆங்கிலப்பக்கங்கள் மூலம் அறிந்துகொள்வேன். தமிழ் விக்கிபீடியாப் பக்கங்களில் அவை பற்றிய விரிவான பக்கங்களைக் காண முடியாது. ‘ஆண்டவன் கட்டளை’ (2016) திரைப்படக் கதையினையும் அவ்வாறே அறிந்துகொண்டேன்.

Continue Reading →

காற்றினிலே வரும் கீதம்: “எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று”

“எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று     
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு     
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு  “
கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல்.  ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிபதிவு & நடிப்பு எல்லாமேதாம்.

இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக்கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.  

இப்பாடல் பலவகைகளிலும் சிறந்து விளங்குகின்றது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாடல் காட்சிகளை உருவாக்கியிருக்கும் உயிர்த்துடிப்புள்ள, இயற்கை வளம் கொழிக்கும் ஒளிப்பதிவு, விஜய் சேதுபதி & தமன்னாவின் நடிப்பு எல்லாமே நெஞ்ச வசியபடுத்திக் கட்டிப்போட்டு விடுவன. மன அழுத்தங்களிலிருந்து விடுபட வைக்கும் தன்மை மிக்கவை.

Continue Reading →

நடிகர் ரஜனிகாந்தின் உரை பற்றிய கருத்துகள் சில..

ரஜனிரஜனிகாந்தின் முதல்வர் பதவி தனக்கு வேண்டாம் என்ற பேச்சினைக் கேட்டேன். முதலில் கேட்கையில் அவர் கூறுவது நல்லது என்பதுபோல் தோன்றினாலும், சிறிது சிந்திக்கையில் அரசியலில் இறங்கும் துணிவு அவரிடமில்லை என்ற முடிவே ஏற்படுகின்றது. இளைஞர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறுகின்றார். இருக்கும் பலமான கட்சிகளை எதிர்த்துப் போராடுவது அவ்வளவு எளிமையானது அல்ல என்று அஞ்சுகின்றார். தேர்தலில் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்றால்தான் அவர் வருவார் என்று கூறுகின்றார். அண்ணா சிறந்த தலைவர் என்று கூறுகின்றார். அண்ணா பல தலைவர்களை உருவாக்கினார் என்று கூறுகின்றார்.

அறிஞர் அண்ணா அரசியலில் நுழைந்தபோது அவர் தன் இருபதுகளில் இருந்தார். அவர் பெரியாருடன் முரண்பட்டு பிரிந்து திமுகவை உருவாக்கியபோது அவரது வயது 41. சுமார் நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்தான் அவர் ஆட்சியையே பிடிக்கின்றார். எம்ஜிஆர் அரசியலில் தன் வயது முப்பதுகளில் இருந்தபோது ஈடுபட்டார். தான் நம்பிய அரசியல் கருத்துகளைத் தன் திரைப்படங்களில் , உரைகளில் வெளிப்படுத்தினார். பின்னர் திமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர் திமுகவின் பலத்தை எண்ணி அஞ்சவில்லை. துணிந்து கட்சியைத் தொடங்கினார்.தன் இரசிகர்களை, தொண்டர்களை மட்டுமே நம்பினார். அவர் ஆட்சியைப்பிடித்தபோது அவருக்கு வயது அறுபது. ஜெயலலிதா அரசியலில் தீவிரமாக நுழைந்தபோது அவரது வயது முப்பதுகளில் இருந்தது. தொடர்ந்து வாழ்க்கையை நாட்டு அரசியலுக்கே அர்ப்பணித்தார். கலைஞர் தன் இளமைப்பருவத்தில் அரசியலில் ஈடுபட்டார். பல்லாண்டுகள் அரசியலில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர் அவர்.  தன் எழுத்தால், தன் பேச்சால் தான் நம்பிய கொள்கைகளுக்காகச் செயலாற்றினார்.

Continue Reading →

முனைவர் ஆர்.தாரணியின் கட்டுரையொன்று பற்றி…

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'முனைவர் ஆர்.தாரணிஎனது நாவலான தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான  ‘குடிவரவாளன்’ நாவல் பற்றி பற்றி முனைவர் ஆர்.தாரணி ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan’ (‘சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை’) என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே எனது படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் என் படைப்புகளை அறிந்துகொண்டது இணையத்தின் மூலமாகவே என்பது இணையத்தின் ஆக்கபூர்வமான நன்மையொன்றினை வெளிப்படுத்துகின்றது. அக் கட்டுரையின் முக்கியமான என்னால் தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். நாவலினை நன்கு உள் வாங்கித் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.

இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘An Immigrant’ (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) நாவலைத் தனது புகலிட இலக்கியங்கள் பற்றிய பிரிவுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருந்த விடயத்தினை இணையம் வாயிலாக அறிந்துள்ளேன். குடிவரவாளன் நாவல் ஆங்கிலத்தில் ‘An Immigrant’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan’ (‘சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை’) – முனைவர் ஆர்.தாரணி ; தமிழில்: வ.ந.கிரிதரன்-

‘குடிவரவாளன்’ கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.

Continue Reading →

யாத்திரை போகலாம்

- தம்பா (நோர்வே) -இடி,மின்னல், நெருப்பு
தமக்குள் எதிரியை தேடும்
மைதானத்தில் ஊடுபயிராக
மனிதம் துளிர் விடுகிறது.

உயிர் வலித்து
குருதி பருகும் உடல்
ஆத்மா எனும் அந்நியனுக்கு
அரிதாரம் பூசுகிறது.

ஒளி மறந்த தீயின் குளிர்
வேள்வியின் திசையெங்கும்
ஏடுதுவங்கும் உதிர்வின் பேச்சு.

பறக்கின்ற காற்றில்
உனது மூச்சுக்காற்று எது?
ஓடுகின்ற ஆற்றில்
நீ விட்ட கண்ணீர் எது?

Continue Reading →

‘இனமானப் பேராசிரியர்’ அமரர் க. அன்பழகன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்’

பேராசிரியர் க.அன்பழகன் கெளரவ. தலைவர் மு. க. ஸ்டாலின் MLA
திராவிட முன்னேற்றக் கழகம்
அண்ணா அறிவாலயம்’
சென்னை, தமிழ்நாடு

திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவரும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக விளங்கியவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவைக் கேட்டு ஆறாத்துயர் அடைந்தோம்.

தமிழினம், திராவிடம், கழகம் என அனைத்துத் தளங்களிலும் தனது அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் காரணமாக செல்வாக்குச் செலுத்தி பெற்றவரும், சிறந்த சொல்லாண்மையும், எழுத்தாண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவருமான பேராசிரியர் அவர்களின் மறைவு தாங்கள் தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தை நேசிக்கும் ஈழத் தமிழர்களுக்கும்கூட இழப்பாகும். தங்கள் தந்தை தலைவர் கலைஞருடன் எழுபத்தைந்து ஆண்டு காலம் தோழமையுடன் செயற்பட்டு,  தமிழ் வரலாறு கூறும் தலைவர் கலைஞரின் அனைத்துச் செயற்பாடுகளிலும் உறுதுணையாய் விளங்கியதோடு ஈழத்தமிழர் விடயத்திலும் தலைவர் கலைஞர் அவர்கள் முன்னெடுத்த சாத்தியமான அனைத்து விடயங்களிலும் துணை நின்று செயற்பட்டதை ஈழத் தமிழர்களாகிய நாம் என்றும் மறந்து விட முடியாது.

Continue Reading →