கொடுத்து வரும் தண்டனையே கொரோ நோவாய் வந்திருக்கு !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இயற்கை யெனும் பெருமரணை
நொருக்கி நிற்கும் வகையினிலே
எடுத்து வரும் பொருத்தமிலா
முயற்சி யெலாம் பெருகுவதால்
இயற்கை அது சீற்றமுற்று
எல்லை இலா வகையினிலே
கொடுத்து வரும் தண்டனையே
கொரோ நோவாய் வந்திருக்கு   !

Continue Reading →

இழந்த தருணங்கள்….

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

பகலவன் மறைந்து
சில மணி கடந்தும்
அலுவலக வேலையில்
நாளைக்குள் பணியை
நிறைவு செய்யும்
முனைப்பில்
கோப்புகளுக்கிடையே
புதைந்தபடி….
செல்லிடப்பேசி
அழைப்பு மணியில்
அரை மணிக்கு ஒரு முறை
அப்பா எப்ப வருவீங்க?
எனும் பிஞ்சு மொழிக்கும்
விரைவாக வந்து விடுகிறேன்
எனும் பொய்யான பதில்
கூறியவாறே
தொடர்கிறேன் பணியை …..

Continue Reading →

சிறுகதை: தலைமுறை தாண்டிய தரிசனங்கள்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்– குவீன்ஸ்லாந்து தமிழ்மன்றம் நடத்திய `அவுஸ்திரேலியா – பலகதைகள்’ சிறுகதைப்போட்டியில் முதல் இடம் பெற்றது (2019) –


பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின். கரோலின் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளை இனத்துப் பெண். மருத்துவம் பயில்வதில் மூன்றாம் ஆண்டில் இருந்தாள்.

அடோனி அவளைக் கடந்து போகும் தருணங்களில் தன் வசம் இழந்து விடுவாள். புத்தகத்தைச் சற்றுக் கீழ் இறக்கி, மாரளவில் பிடித்துக்கொண்டு, கடைக்கண்ணால் ஒருதடவை அவனைப் பார்ப்பாள். ‘ஏதாவது கதையேன்’ என்பது போன்று அந்தப் பார்வை இருக்கும். அடோனி ஒரு அபொறியினல், திருடப்பட்ட தலைமுறையைச் சார்ந்தவன். மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து படிப்பதற்காக மெல்பேர்ண் வந்திருந்தான்.

இப்படித்தான், அன்று அடோனி அவளைக் கடந்து செல்கையில், திடீரென கரோலின் தன் இருப்பை விட்டு எழுந்து நின்று புன்னகைத்தாள். எத்தனை நாள் தான் கடைக்கண்ணால் வெட்டுவது? அடோனி பயந்தே போய்விட்டான். பளிங்குக்கண்கள், மெல்லிய கீற்றுப் போன்ற புருவங்கள், கூரிய நாசி, காற்றிலாடும் பறவையின் மெல்லிய பொன்நிற இறகுகளாகக் கூந்தல், பரிதிவட்டம் போன்றதொரு ஓலைத்தொப்பி. ஏதோ ஒரு பெயர் தெரியாத சென்றின் நறுமணம் ஒன்று அவளிடமிருந்து பிரிந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டது. இவை எல்லாமுமாகச் சேர்ந்து அவனைப் பொறி போல அப்பிக் கொண்டது. அதுவே அவர்களின்  மூச்சு முட்டும் தூரத்திற்குள்ளான முதல் அறிமுகம்.

“ஹலோ” பட்டெனப் பேசும் ஆசாமி கரோலின். அப்பாவி என எழுதி ஒட்டியிருக்கும் தன் அகன்ற விழிகளால் அடோனி அவளை முழுசிப் பார்த்தான். போய்விட்டான்.

பூர்வீகக்குடிகளும், அவர்களுக்குப் பிறந்த கலப்பினத்தவரும் படிப்பதற்கு வருவதே குறைவு. அடோனி மருத்துவம் படிக்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. அவுஸ்திரேலியாவில் பூர்வீகக்குடிகளின் உடல் ஆரோக்கியம் ஏனையவர்களைக் காட்டிலும் குறைவாக இருந்ததும், அவர்கள் இள வயதிலேயே மரணமடைந்து வருவதையும் பள்ளியில் படிக்கும்போது அடோனி அறிந்திருந்தான். அதுவே அவனை மருத்துவம் படிக்கத் தூண்டியிருக்கலாம்.

Continue Reading →

ஆய்வு: பசிப்பிணித்தீர்த்தலில் மணிமேகலையின் பங்களிப்பு

         - முனைவர் சா.சதீஸ் குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 641 105, -இந்தியச் சமயங்கள் யாவும் மானுடம் தலைக்கவே தோற்றுவிக்கப்பட்டன. இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ நெறிகளை வழிகாட்டுகின்றன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கல்ல… ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற உயரிய சிந்தனையை வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறத்தை தான் மணிமேகலை காப்பியம் முழுவதும் வலியுறுத்துகிறது. இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம், பத்தினியின் சிறப்பைக்கூறும் காப்பியம், சீர்திருத்தக் கொள்கை உடையக் காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், கற்பனை வளம் மிகுந்த காப்பியம் எனும் பெருமைகளெல்லாம் மணிமேகலைக்கு உண்டு. இக்காப்பியத்தில் உயிரினங்களுக்கு ஏற்படும் பசிக்கொடுமையை எங்ஙனம் நீக்குகிறது என்பதையும் நாமும் அதனை நம்முடைய வாழ்வில் எவ்வாறெல்லாம் கடைப்பிடிக்க இயலும் என்பதைப்பற்றி ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மணிமேகலையின் சிறப்பு :
மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்ப எழுந்த காப்பியம் தான் ஆயினும் சமயக்கோட்பாடுகள் மனித சமுதாயத்திற்குப் பொதுவானவை என்பதை மறுக்க இயலாது. உண்மையில் அனைத்து சமயக்கோட்பாடுகளும் இவற்றையே வலியுறுத்துகிறது. பசியின் கொடுமையை விளக்கும் பசிப்பிணித் தீர்ப்பதே விழுத்துணையான அறம் என்று அழுத்தமாக பேசுவது இக்காப்பியத்தின் அறக்கோட்பாடாகும். இதைப்போல் வேறெந்த இலக்கியமும் இப்படிப்பேசவில்லை. எல்லாச்சமயங்களும் அன்னதானத்தைப் போற்றுகின்றன. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை வலியுறுத்துகின்றன. ஏனென்றால் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்கள் மக்களாக இருக்கமாட்டார்கள் இருக்கவும் முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்கள் அன்னதானத்தை முதன்மைப்படுத்தினர். பாரதியார் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதை

“ வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம்….
(பாரதியார் கவிதைகள் -முரசு- 23)

என்று பசியைப் போக்குவதற்கு முதலிடம் தருகின்றார். பசித்திருப்பவனுக்கு உணவுதான் கடவுள். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவார்’ உயிர் வளர்க்க ஊன் வளர வேண்டும், இல்லையேல் பசிக்கொடுமைகள் இவ்வுலகில் தலைவிரித்தாடும் மனித இனத்திற்கு மட்டுமின்றி மற்ற அனைத்து உயிரினங்களும் உணவே முதல் தேவையாக அமைகிறது. பசிப்பிணி உலகில் இல்லாமல் இருந்தால் தான் மனிதன் சிந்தித்து அதன்படி செயலாற்ற முடியும் இல்லையேல் மனிதன் மிருகமாக மாறிவிடும் சூழல் ஏற்படக்கூடும்.

Continue Reading →

கணையாழி: ‘விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை’

கணையாழியில் என் கட்டுரை: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை'2020 மார்ச் மாதக் கணையாழி இதழில் எனது கட்டுரையான ‘விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை’ நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது . கூடவே நண்பர் கே.எஸ்.சுதாகரின் ‘தலைமுறை தாண்டிய தரிசனங்கள்’ சிறுகதையும் வெளியாகியுள்ளது. எனது கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

இதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:

1. கணையாழி பெப்ருவரி 1997 – அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் – வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 – சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் – வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 – பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் – வ.ந.கிரிதரன்
4. ‘சொந்தக்காரன்’ (சிறுகதை) – வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் – வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் – வ.ந.கிரிதரன் –
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை – ‘கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு …. வ.ந.கிரிதரன் –
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். – வ.ந.கிரிதரன் –

Continue Reading →

காலத்தால் அழியாத கானங்கள்: “”பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர”

கவிஞர் மேத்தா“பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்….
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே” –
கவிஞர் மேத்தா

அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத்தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் ‘வேலைக்காரன்’ திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘உதயகீதம்’ திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.

கவிஞர் மேத்தா என்றதும் ‘வானம்பாடிக் கவிதைக்குழு’ ஞாபகம் எழும். அவரது புதுக் கவிதைகளின் ஞாபகம் எழும். எனக்கு இவர் முதன் முதலில் அறிமுகமானது ஒரு சிறுகதையின் மூலம்தான். என் பால்ய பருவத்தில் நான் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தினமணிக்கதிர், ராணி, ராணிமுத்து, அம்புலிமாமா, கண்ணன், கலைமகள் என்று விழுந்து விழுந்து வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானவரே எழுத்தாளர் மேத்தா. அப்பொழுதெல்லாம் ஆனந்தவிகடன் நிறுவனத்தினர் மாதந்தோறும் மாவட்டமலர்ச்சிறப்பிதழ்களை வெளியிட்டு வந்தார்கள். மதுரை மாவட்டம், தஞ்சை மாவட்டம், சேலம் மாவட்டம் என்று மாதாமாதம் மாவட்டமொன்றைப்பற்றிய தகவல்கள், கட்டுரைகள்,கவிதைகளுடன் அம்மாவட்ட மலர் வெளிவரும். அம்மாவட்ட மலர்களில் அம்மாவட்ட மண்மணம் கமழும் மாவட்டமலர்ச் சிறுகதையொன்றும் வெளியாகும், அதற்கு பரிசும் வழங்கப்படும். அவ்விதமாக விகடனின் தஞ்சை மாவட்ட மலரில், பரிசு பெற்ற சிறுகதையாக வெளியானதுதான் மேத்தாவின் சிறுகதையும். அதுவே மேத்தாவின் முதற் சிறுகதையாகக்கூட இருக்கலாம். பின்னர் அதே விகடன் தனது பொன்விழாவையொட்டி நடாத்திய சரித்திர நாவல் போட்டியில் முதற் பரிசினைப்பெற்றதும் மேத்தாவின் ‘சோழ நிலா’வே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

காலத்தால் அழியாத கானங்கள்: “மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே -“

காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே -"இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.

அக்காட்டுப்பகுதியில் அக்காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் தற்காலிக முகாம்களை அமைத்துத் தங்கியிருந்தனர். சில சமயங்களில் நீண்ட தடிகளைக் கால்களில் கட்டி ஒரு சிலர் நடந்து சென்று மாணவர்களான எங்களுக்கு விளையாட்டுக் காட்டுவார்கள். நாமும் செல்லும் வழியில் அவர்கள் இவ்விதம் நடப்பதை வியப்புடன் பார்த்துச் செல்லுவோம்.

அவ்விதமானதொரு நாளில்தான் இப்பாடலும் வவுனியா நகரசபைப்பக்கமிருந்து ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. நகரசபை மண்டப அரங்கில் சில வேளைகளில் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அவ்விதமான சமயங்களில் இவ்விதம் ஒலிபெருக்கிகள் மூலம் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்போடுவார்கள். அம்மண்டப அரங்கில்தான் ஒரு முறை நாடகமொன்றும் அப்பாவுடன் சென்று பார்த்திருக்கின்றேன். அதன் பெயர் “உடையார் சம்பந்தம்”. இந்நகர சபை மைதானத்தில்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடைபெறுவதும் வழக்கம். ஜேவிபியினரின் முதலாவது புரட்சியின் போது இலங்கை வான் படையினரின் ஹெலிகொப்டர்கள் அடிக்கடி இம்மைதானத்தில்தான் வந்திறங்கிச் செல்வது வழக்கம்.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியங்களில் உயிரி நேயம்

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை படிப்போமா?                        - முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752, திருப்பத்தூர் மாவட்டம் -இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவுகளைக் கொண்டது சங்க இலக்கியம். காதலில் தொடங்கிக் கடிமணத்தில் தொடரும் குடும்ப வாழ்க்கையைப் படம்பிடிக்கும் அகப்பாடல்கள், வீரம், கல்வி, கொடை, புகழ், அரசியல் போன்ற பல வாழ்வியல் கூறுகளைக் கொண்ட புறப்பாடல்களை உள்ளடக்கியது சங்க இலக்கியம்.

சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் பண்பியல் கூறுகளைப் படம்பிடித்த ஓவியங்கள் ஆகும். காதலும் வீரமும் இரண்டு கண்களாக எண்ணப்பட்ட காலம் அது. சங்கப் புலவர்கள் நாத்தழும்பேற அவற்றைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடல்களில் மிகுந்து காணப்படும் உயிரி நேயச் சிந்தனைகளை ஆய்வோம்.

சங்ககாலப் பெண்டிர்
மனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.

வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.

Continue Reading →

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஐந்து!

1. பழுதடையும் எழுதுகோல்கள்‘

லதா ராமகிருஷ்ணன்

[ “படித்தவன் சூதும் வாதும் செய்தால்… போவான் போவான் அய்யோன்னு போவான்” -பாரதியார்]

மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மாட்சிமை பொருந்தியவை என்று
24X7 முழங்கிக்கொண்டிருப்போர் சிலரின் மனங் களில்
மலிந்திருக்கும் மூர்க்கமான அதிகாரவெறி
ஆயிரம் வாள்களைக் காட்டிலும் அதிகூர்மையாய்
அங்கங்கே தலைகளைக் கொய்தபடியே……

அவரவருக்குத் தேவைப்படும்போது மட்டும்
அகிம்சை underline செய்யப்படும்.

‘பிரபலங்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கும் கருவி யென

’புர்கா’வுக்குப் பதவுரை வழங்கியும்,
’ஜெய் ஸ்ரீராம்’ இந்த நூற்றாண்டின் குரூர வாசகம்’ என்று
மதிப்புரை யெழுதியும்

நிதமொருவிதமாய் வெறுப்பை வளர்த்து
எழுத்தில் மனிதநேயத்தையும் பெண்ணியத்தையும்

முன்னிறுத்திக்கொண்டிருக்கும்

படைப்பாளிகளும் உளர்.

அன்பையே வளர்ப்பதாகச் சொன்னவண்ணமிருக்கும்
என்புதோல் போர்த்திய உடலங்களாய்
முழுப்பிரக்ஞையிலான Selective amnesia வில்
மும்முரமாய் சில காட்சிகளை மட்டுமே
மீண்டும் மீண்டும் அதிகவனமாகப் பதிவேற்றுவதில்
முந்துவது யார்? _

மூத்த படைப்பாளியா?
முளைவிட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளியா?

Continue Reading →