எழுத்தாளர் எஸ்.குணேஸ்வரன் ஜனவரி 24,25 & 26 தினங்களில் யாழ் முற்றவெளியில் நடைபெறவுள்ள ‘எங்கட புத்தகம் – கண்காட்சியும், விற்பனையும்’ நிகழ்வு பற்றிய தகவலை அனுப்பியிருந்தார். அதனை நானிங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். முக்கியமான நிகழ்வு. வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு. புத்தகப்பிரியர்கள் அனைவரும் திரண்டு சென்று வாங்கி ஆதரியுங்கள்.
எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசையுள்ளது. அது: தமிழ் எழுத்தாளர்கள் தம் எழுத்துகள் மூலம் வாழும் நிலை தோன்றவேண்டும். உலகமெங்கும் கோடிக்கணக்கில் தமிழர்கள் வாழும் நிலையில் இன்னும் இது சாத்தியமாகவில்லையே என்னும் கவலை எனக்கு எப்போதுமுண்டு. அந்நிலை மாறவேண்டும். இலங்கைத்தமிழர்கள் அவர்கள் இலங்கையில் இருந்தாலும், புலம் பெயர்ந்து ஏனைய நாடுகளில் வாழ்ந்தாலும் பல விடயங்களில் முன்மாதிரியாக விளங்குகின்றார்கள். சின்னஞ்சிறு தீவில் வாழும் தமிழர்களால் எவ்விதம் இவ்விதம் பல சாதனைகளைச் சாதிக்க முடிகின்றது என்று சில வேளைகளில் நான் நினைப்பதுண்டு. இவ்விடயத்திலும் இலங்கைத்தமிழர்கள் அதனைச் சாதிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு உங்களைப்பற்றிய நம்பிக்கையான , ஆரோக்கியமான சிந்தனை அவசியம். நாம் எம்மவர்கள்தம் கலை, இலக்கியப்படைப்புகள் எவையாவினும் அவற்றை ஆதரிப்போம். அவை வளர்ச்சியுற முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று உறுதி எடுங்கள். இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகையில் செல்லுங்கள். இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கிய புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லுங்கள். அதிக அளவில் வாங்குங்கள். வாசியுங்கள். எனக்கு நிச்சயம் நம்பிக்கையுண்டு. இலங்கைத்தமிழர்கள் நிச்சயமாக தமிழ் எழுத்தாளர்கள் தம் எழுத்துகள் மூலம் வாழும் நிலையினை உருவாக்குவார்கள். அதனை உலகத்தமிழர்கள் பெருமையுடன் பார்க்கத்தான் போகின்றார்கள்.