தாம் வாழும் சமூகத்திலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட அல்லது மேம்படுத்திக் காட்ட, அச்சமூகத்திலிருந்து தம்மை சற்று வித்தியாசமாக அடையாளப்படுத்துவதும், பின் அந்த அடையாளம் சார்ந்த வேறு சிலரை தன்னோடு இணைத்து தம்மை ஒரு புதிய அடையாளத்துடன் வெளிப்படுத்துவதும் மனித இயல்புகளில் அல்லது பலவீனங்களில் ஒன்றாகும். இது மொழியால், கலாச்சாரத்தால், அல்லது பண்பாட்டால் ஒன்றிணைந்த மக்கட் கூட்டங்களை கூட வேறு பல காரணங்களால் பிளவு படும் சாத்தியப்பாட்டினை ஏற்படுத்திவிடுகிறது. இதில் பிரதேச வேறுபாடு முக்கிய கவனத்தினை பெறுகின்றது. தாம் வாழுகின்ற நாட்டில் வட்டாரமாக, வலயமாக, குறிச்சியாக பிரித்துப் பார்த்து தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வதும் மற்றவர்களை தாழ்வாகப் பார்ப்பதும் இந்த பிரதேச அடையாள வேறுபாட்டின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். இதற்கு முக்கிய உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இடம் பெயர்ந்தோரைக் குறிப்பிடலாம். வலிகாமம் வடக்கு பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தி ஸ்ரீலங்கா இராணுவம் அபகரித்துக் கொண்டதன் பின்னணியில் இடம்பெயர்ந்த வலி வடக்கு மக்கள், தமக்கு மிக அண்மையில் 3,4, மைல்கள் இடைவெளியில் மட்டுமே அமைந்த பிரதேசத்திற்கே இடம்பெயர்ந்து இருந்த போதிலும் மற்றைய இடம்பெயராத மக்களால் ஏளனமாக பார்க்கப்படும் நிகழ்வு கடந்த முப்பத்து வருடமாக இன்றளவும் தொடர்கின்றது. இதற்கு அந்த இடம்பெயராத மக்கள் அதற்கு முன்னரேயே அச்சிறிய நிலப்பரப்பிலும் அவர்களை விட தாங்கள் மேன்மையானவர்கள் என்ற மனப்பான்மையைக் கொண்டிருந்ததே காரணமாகும்.
இச் சிறிய வட்டார வலய வேறுபாடுகள் காரணமாக தமக்குள் உருவாக்கிக் கொண்ட உதைபந்தாட்ட அணிகள், கிரிக்கெட் அணிகள் மூலமாக அதன் ரசிகர்கள் மோதிகொள்வதும் நாம் அடிக்கடி அறிகின்ற தகவல்கள். இவை உலகெங்கும் நடைபெறுகின்ற சாதாரணமான நிகழ்வுகள். இங்கு லண்டனில் இன்னொமொரு விசித்திரமான வழக்கு இருக்கின்றது. அது Postcode War . இது இங்கு வாழும் சிறுபான்மை சமூகங்களில் அதுவும் கறுப்பின பதின்ம வயது இளைஞர்களிடம் தொற்றிக் கொண்டுள்ள ஒரு வியாதி. இவ் வழக்கத்திபடி என்றோ ஒரு காலத்தில் லண்டன் நகரசபை தனது பரிபாலன வசதிக்காக Postcode வாயிலாக பிரித்துக் கொண்ட பிரிவுகளில் ஒரு Postcode பகுதியில் வாழும் இளைஞர்கள் மற்றைய Postcode பகுதியில் வாழும் இளைஞர்களுடன் எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி மோதல்களில் ஈடுபடுவார்கள். இம்மோதல்கள் வருடாவருடம் பல கொலைகளில் முடிவடைவது வழக்கம். இதில் வருத்தப்பட வேண்டிய முக்கிய விடயம் இந்த மோதல்களில் இரத்த உறவுகளே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது. இதில் Postcode வேறுபாடு காரணமாக ஒரே தெருவில் எதிரும் புதிருமாக வசிக்கும் அயல் வீட்டு இளைஞர்களும் மோதிக்கொள்வது விசித்திரமானதும் வேதனை தருவதுமாகும்.
மேற்குறித்த சம்பவங்கள் யாவும், ஒரு செய்தியினைக் கேட்டதும் எம்முள் ஒரு கண நேர தரிசனமாக வந்து போயின. அச்செய்தியானது இங்கு லண்டனில் ஹரோ பகுதியில் ஒரு சில இலக்கிய ஆர்வலர்களால் ‘ஹரோ இலக்கிய சந்தி’ என்னும் இலக்கிய அமைப்பொன்று அண்மையில் ஆரம்ம்பித்து வைக்கப்பட்டது என்பதேயாகும். இது நாம் மேலே குறிப்பிட்ட தம்மை பிரதேச வேறுபாட்டுடன் அடையாளப் படுத்தும் அத்தகைய மனோநிலைக்கு சற்றும் வேறுபட்டதல்ல.
இங்கு லண்டனில் ஏற்கனவே ஈழத்தமிழர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய, அரசியல், சமூக அமைப்புகள் இயங்கிவருகின்றன. ஒரு குறிப்பிட மொழி பேசும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் இத்தனை அமைப்புகளாக பிளவுண்டு கிடப்பது நெருடலாக இருந்த போதிலும், இதற்குப் பின்புலமாக பல்வேறு தத்துவார்த்தப் பின்னணிகளும் செயல்முறை வேறுபாடுகளும் இருப்பதனால் நடைமுறையில் இப்பிளவுகளின் யதார்த்தத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடிகின்றது. ஆனால் முதன் முறையாக நாம் மேலே குறிப்பிட்டது போன்ற பிரதேச, வட்டார, வலய எல்லைகளின் வேறுபாடுகள் காரணாமாக ஒரு இலக்கிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. இலக்கியவாதிகளும் படைப்ப்பாளிகளும் சிந்தனையாளர்களும் கூட இத்தகைய மனோபாவத்திற்கு உட்பட்டு தம்முள் பிளவுகளையும் பிரிவினைகளையும் உருவாக்குவது வேதனையை ஊட்டுகின்றது.
நவீன தமிழ் இலக்கிய பரப்பில் இப்பிரதேச அடையாள வேறுபாடுகள் ஒன்றும் புதுமையான விடயமும் அல்ல. இதில் முக்கியமாக நவீன தமிழ் இலக்கிய மரபானது ஈழம், தமிழகம், புகலிடம் என்ற எல்லைகலால் பிளவுண்டு பல தசாப்த காலங்களாக ஏற்பட்ட மோதல்களும், சண்டைகளும் சச்சரவுகளும் எம் வராலாற்றில் விரிந்தே கிடக்கின்றது.
இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை குறிப்பிடலாம். இதில் முக்கியமாக தமிழக எழுத்தாளர்கள் தம்மை ஒரு இலக்கிய மேலாதிக்க சக்தியாக நினைத்து மற்றவர்களை, குறிப்பாக ஈழத்தமிழ் எழுத்தாளர்களை எள்ளி நகையாடிய சம்பவங்கள் மிக அதிகம். அறுபதுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் அவர்கள் “யாழ்ப்பாணத் தமிழைப் புரிந்து கொள்ளும் வகையில் ஈழத்து இலக்கியங்களுக்கு அடிக்குறிப்பு இட வேண்டும்” என எள்ளி நகையாடினார். அறுபதுகளின் இறுதியில் நாவற்குழியூர் நடராஜனின் கவிதைத் தொகுதியை வெளியிட சரஸ்வதி விஜயபாஸ்கரனுடனும் தீபம் நா.பார்த்தசாரதியுடனும் வருகை தந்த ‘கங்கை’ இதழின் ஆசிரியர் பகீரதன் “தமிழகத்துடன் ஒப்பிடும் போது இலங்கை எழுத்தாளர்கள் சிறுகதையில் பத்து வருடம் பின் தங்கிய நிலையில் உள்ளார்கள். இவர்கள் மேல் நாட்டு இலக்கியங்களை கற்று தேர்ந்து சிறுகதை எழுதப் பழகவேண்டும்” என்று உபதேசம் சொல்லிப் போனார். ஈழத்து எழுத்தாளர்களை கோபப்படவும் ஆவேசப்படவும் வைத்த இந்த கூற்றுக்களுக்கு எல்லாம் மகுடமாக தமிழக எழுத்தாளர் வி. ராஜநாராயணன் அவர்கள் “ தமிழ் மொழியில் எழுதப்படுவதற்காக ஈழத்து இலக்கியங்களைத் தமிழ் இலக்கியங்கள் என்று கூறமுடியாது. இவற்றினை வெறும் ஈழ இலக்கியங்கள் என்று கூறுவதே நமக்கு நன்மை பயக்கும்” என்றார். “ஈழத்து சிறுகதைகள் வெறும் வெம்பல்கள்” – இது மிக அண்மைக்காலத்தில் ஜெயமோகன் மொழிந்த ஒரு கூற்று. இவை யாவும் தமிழகம் என்னும் பெருநிலப்பரப்பில் இருந்து, தமக்கு அண்மையில் உள்ள ஒரு சின்னஞ்சிறு தீவில், அதிலும் சிறுபான்மையினராக உள்ள ஒரு சிறு சமூகத்தினர் மீது தமிழக எழுத்தாளர்கள் வைத்த இலக்கிய மேலாதிக்கம். இதே நக்கலும் நையாண்டியும் புரிந்த ஜாம்பவான்கள் ஒரு சில குறுகிய காலப்பகுதிக்குள் வெட்கித் தலை குனிந்து தமது சஞ்சிகைகளில் ‘ஈழத்து சிறப்பிதழ்கள் ’ வெளியிட வேண்டிய நிர்ப்பந்தந்திற்கு உள்ளாக்கப்பட்டது காலத்தின் கட்டாயம்.
இதில் இன்னுமொரு நேர் எதிர்மாறான விடயத்தைப் பார்க்கலாம். அது ஈழ எழுத்தாளர்கள் தமிழக மேலாண்மையை மறுதலித்து தாமே மேன்மையானவர்கள் என்று நிறுவ முயன்ற முயற்சி. அமரர் எஸ்.பொ. அவர்கள் ஒரு உரையில் “ஈழ-புகலிட தமிழர்கள் தான் இருபத்தியோராம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்திற்கு தலைமை தாங்குவார்கள்” என்று கூறினார். அவரது கூற்று பல தமிழக எழுத்தாளர்களை கொதிப்படைய செய்தது. புகலிட எழுத்தாளர்கள் மேல் அவர் வைத்த மிகை நம்பிக்கையே இவர் இப்படிக் கூறக் காரணம் என்று நாம் கருத இடமுண்டு. எழுத்தாளர் பிரபஞ்சனிலிருந்து லேனா தமிழ்வாணன் வரை இது குறித்து மிகக் காட்டமான மறுப்புரைகளை வழங்கினர். ஆனால் ஒரு குறுகிய கால பகுதியிலேயே லேனா தமிழ் வாணன் அவர்கள் புகலிட இலக்கியங்களை தேடித் தேடி மிகத்தரங் குறைந்த இலக்கியங்களைக் கூட மணிமேகலை பிரசுரமாக வெளியிட்டதும், ரவி தமிழ்வாணன் அவர்கள் இங்கு புகலிடத்திற்கு நாடு நாடாக திரிந்து புத்தக வியாபாரம் செய்ததும் முரண்நகையான விடயம்.
இதில் இன்னுமொரு அதி விசித்திரமான விடயம் ஈழ, புகலிட எழுத்தாளர்களுக்கிடையே உருவான விரிசல். தொண்ணூறுகளிலும் இந்நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளிலும் புகலிட இலக்கியங்களுக்கு உலக அரங்கில் முக்கியமாக தமிழகத்தில் கிடைத்த மதிப்பும் செல்வாக்கும் பல ஈழத்து எழுத்தாளர்களை பொறாமைப் பட வைத்தது. அன்றைய புலியாகிய வெளிச்சம் ஆசிரியர் எஸ்.கருணாகரன் காலச்சுவடு இதழிலில் இப்படி உறுமுகிறார்.
“தமிழகத்தில் இன்று கலாச்சார வாதிகளின் கவனத்திற்குப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உட்பட்ட அளவிற்கு இன்றைய ஈழத்து இலக்கியம் புலப்படாமால் போனது விசித்திரமே! புலப்பெயர்ந்தோர் யார்? என்ன அடிப்படையில் புலம்பெயர்ந்தனர்? அவர்களின் இலக்கியம் எது? என்ன அடிப்படையில் அது படைக்கப்படுகின்றது? சத்தியமும் உண்மையும் இருக்கின்றதா?” (காலச்சுவடு மார்ச் 1997) தன் மண்ணில் இருந்தே அகதியாக தப்பியோடிய தன சொந்த உறவுகளையே பார்த்து இப்படி ஒரு காழ்புணர்ச்சிடன் கூடிய கோபம் கொப்பளிகின்றது என்றால் நாம் மேற்குறிப்பிட்ட பிரதேச அடையாள வேறுபாடுகளின் வல்லமையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இவை எல்லாவற்றிலும் சிகரமாக இன்னுமொரு விடயத்தை குறிப்பிடலாம். இதை விசித்திரம் என்பதா அல்லது நகைச்சுவை என்பதா அல்லது வேறு எந்த வகைக்குள் வகைப்படுத்தலாம் என்று உண்மையில் புரியவில்லை. இது புகலிடத்தமிழர் தாம் பல் வேறு பட்ட நாடுகளில் நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் வேளை தாம் தஞ்சமடைந்த நாடே மற்றெல்லாவற்றையும் விட மேலானது என்று நினைக்கும் மடைமைத்தனம். கனடாவில் இருந்து ஒருவர் எழுதுகிறார்.
“புலப்பெயர்ந்த படைப்புக்கள் என அழைக்கப்படும் இன்றைய முயற்சிகள் இனிமேல் கனடா தமிழ் இலக்கியம் என அழைக்கப்படும் ஆரம்ப கால கட்டத்தில் நிற்கிறோம். அதன் வரவிற்கு ‘காலம்’ வழி சமைகிறது என்பதில் பெருமை அடைகிறது.”
புரிந்திருப்பீர்கள் யாரென்று. வேறு யாருமல்ல இது, நமது காலம் செல்வம் அவர்கள்தான். இது அவர் தனது காலம் இளவேனில் 1997 இதழில் தனது ஆசிரியர் உரையில் எழுதியது. இதற்குப் பின்பும் மற்றைய நாட்டு புலம்பெயர் வாசகர்கள் காலம் இதழை வாங்கிப் படிக்கின்றார்கள் என்றால் அது அவர்களின் பெருந்தன்மையே. எந்த அடிப்படையில் இதனை அவர் சொல்லியிருப்பார் என்றால் அது அவருக்கே தெரியாது என்பதே பதிலாக அமையும்.
இப்போது எம்மால் புரிந்து கொள்ள முடியும், இந்த பிரதேச அடையாள வேறுபாடுகள் எத்தகைய அறிவீனத்தின் அடிப்படையிலிருந்து உருவாகுகின்றன என்பதனை. இதனையே ஹரோ இலக்கிய சந்தி ஏற்பாட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எமது எண்ணம். ஏனென்றால் ஏற்கனேவே சித்தாந்த அடிப்படையிலும் நடைமுறை சார்ந்த செயற்பாட்டு அடிப்படையிலும் பிளவுபட்டு புற்றீசல்கள் போல் உருவாகியிருக்கும் அமைப்புகள் மத்தியில், மேலும் பிரதேச ரீதியிலான வேறுபாடுகளை உருவாக்கி மேலும் பல பிளவுகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளை நாம் உருவாக்க முயலக்கூடாது. இதுவே நாளை ரூட்டிங் அரசியல் திண்ணை, வோல்தம்ஸ்ரோ நாடக மடம், நோர்பிற்ரன் மரத்தடி குழுமம், என்று வேறு பல அமைப்புக்களை உருவாக்க வழி சமைத்துவிடும். ஒரு விடயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரதேச பிரிவுகள் யாவும் லண்டன் மாநகரசபை தமது பரிபாலன வசதிக்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே ஏற்படுத்திக் கொண்டவை. இதனை நாம் எமது பிளவுகளுக்கும் பிரிவுகளுக்குமான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. பதின்ம வயதினரும், படிப்பதற்கு வசதியற்றவர்க்களுமான அந்த சிறுபான்மை இளைஞர்கள் மேற்கொள்ளும் Postcode War இனை, இலக்கியவாதிகளும் படைப்பாளிக்களும் மாற்று சிந்தனையாலர்களுமான கல்விமான்கள் செய்ய முனையக்கூடாது. இதற்கு நாம் வழி சமைத்துக் கொடுக்கவும் கூடாது. காதுள்ளவன் கேட்கக் கடவன்.
svs_vasan@outlook.com