தமிழ்ச் சூழலில் கவனிக்கப்பட்ட படைப்பாளிகளைவிட கவனிக்காமல்விட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகமென்பது பலரும் அறிந்ததுதான். ஓர் எழுத்தாளரைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து, அவருடைய படைப்புகளை அங்கீகரிக்கும்போது அவரிடமிருந்து மேலும் சில சிரத்தையானப் படைப்புகளை எதிர்பார்க்க முடியும். அந்த அங்கீகாரம் மேலும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை அவருக்குக் கொடுக்கும். காலம் கடந்து ஒருவரின் சாதனைகளைப் பாராட்டுவதும், விழா எடுப்பதும் தமிழ்ச்சூழல் கண்டிராத ஒன்றல்ல. அந்த வகையில், நிகழ்காலம் மறந்த ஓர் எழுத்தாளர்தான் ப.சிங்காரம். தான் எழுதிய இரு நாவல்களுக்காக எந்தவித அங்கீகாரமும் கோராத மகத்தான மனிதர். இவர் எழுதியது “கடலுக்கு அப்பால்’, “புயலிலே ஒரு தோணி’ ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே!
÷சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புணரி என்னும் கிராமத்தில் 1920-ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் தேதி கு.பழநிவேல் நாடார் (மூக்க நாடார் என்ற பெயரும் இவருக்கு உண்டு) – உண்ணாமுலை அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
÷சிங்காரத்தின் தந்தை அப்போது சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பின்னர் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் படிப்பையும் முடித்தார்.
18-வது வயதில் அதாவது, 1938-ஆம் ஆண்டு சின்னமுத்துப்பிள்ளை என்கிற சிங்கம்புணரிக்காரர், இந்தோனேஷியாவில் “மைடான்’ என்ற இடத்தில் நடத்தி வந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காகச் சென்றார். 1940-ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பின்னர், அதே ஆண்டு மீண்டும் இந்தோனேஷியா சென்று, அங்கு மராமத்துத்துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். இக் காலகட்டத்தில்தான் தென்கிழக்காசிய யுத்தம் தொடங்கியது. யுத்தச்சூழல் மாறியதும் இந்தோனேஷிய ராணுவ அரசின் அனுமதி பெற்று, பினாங்குக்குக் கப்பலில் சரக்குகள் அனுப்பும் வர்த்தகத்தைத் தம் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து செய்தார் சிங்காரம்.
÷யுத்த காலத்தில் இந்தோனேஷியாவை ஜப்பான் துருப்புகள் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தபோது, அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டது; புத்தகங்களைத் தெருவில் எறிந்தனர். அந் நூலகத்தில் பணியாற்றிய நண்பர் மூலம் சிங்காரத்துக்குப் பல ஆங்கில நூல்கள் கிடைத்தன. இதனால், அவருக்கு ஆங்கில நாவல் வாசிப்பு ஏற்பட்டது. அவருக்குப் பிடித்த எழுத்தாளர் ஹெமிங்வே. தவிர, தமிழ் இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்த புத்தகமாக மணிமேகலையைக் குறிப்பிட்டுள்ளார். மணிமேகலைக்கும் தன்னுடைய நாவலுக்கும் உள்ளார்ந்த தொடர்பு இருக்கிறதென பின்னாள்களில் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் கூறியிருக்கிறார். சங்க இலக்கியம் மற்றும் சிலப்பதிகாரத்தின் மீதிருந்த தாக்கம் இவரின் நாவல்களை அழகாக்கி இருப்பதைப் பார்க்கமுடியும்.
இந்தோனேஷியாவில் இருக்கும்போதே சிங்காரம் திருமணம் செய்து கொண்டார். தலைப்பிரசவத்தின்போது அவருடைய மனைவியும், பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர். இந்நிகழ்விற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு அற்றவராகவே வாழ்ந்திருக்கிறார்.
÷1947-ஆம் ஆண்டு “தினத்தந்தி’ பத்திரிகையின் மதுரைச் செய்திப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். சொந்த ஊரையும் உறவினர்களையும் தவிர்த்த இவர், மதுரை ஒய்.எம்.சி.ஏ.வில் தனியாக ஐம்பது ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். 1987-ஆம் ஆண்டு தினத்தந்தியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தனது வாழ்நாள் சேமிப்பான ஏழு லட்சம் ரூபாயை, மதுரை நாடார் மகாஜன சங்கம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகைத் திட்டத்திற்காக வழங்கினார். தன் பெயரில் அறக்கட்டளை, புகைப்படம் திறப்பு போன்ற எதுவும் வேண்டாமெனக் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.
÷1950-ஆம் ஆண்டு “கடலுக்கு அப்பால்’ என்ற குறுநாவலை எழுதினார். புலம் பெயர்ந்து அந்நியச் சூழலில் வாழும் தமிழர்கள் வாழ்வைக் களனாகக்கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இதுதான். புலம்பெயர் இலக்கியமென்ற ஒன்று 1980- களுக்குப் பிறகு காத்திரமாக உருவாவதற்கு முன்பே தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தியவர் ப.சிங்காரம்.
÷நண்பர் ஒருவர்தான் சிங்காரத்தின் இந் நாவலை கலைமகள் பரிசுப் போட்டிக்கு அனுப்பினார். அந்நாவலுக்கு முதல் பரிசும் கிடைத்தது. 1959-இல் இந்நாவல் பிரசுரமானது.
÷1962-ஆம் ஆண்டு இரண்டாவது நாவலான “புயலிலே ஒரு தோணி’ எழுதினார். இந்நாவல் ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக பிரசுரிக்கப்படாமல் இருந்தது. இறுதியாக மலர்மன்னன் என்பவர் எடுத்துக்கொண்ட முயற்சியால் 1972-ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் இந்நாவல் பதிப்பிக்கப்பட்டது. ஆனால், பெரியதாக இருக்கிறதென பதிப்பாளரால் சில பகுதிகள் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
÷சிங்காரத்தின் மறைவுக்குப் பின்னர், 1999-ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகம் “புயலிலே ஒரு தோணி’, “கடலுக்கு அப்பால்’ ஆகிய இரண்டு நாவல்களையும், மூலப் பிரதியைத் தேடியெடுத்து, முழுவதுமாகப் பதிப்பித்து சிங்காரத்திற்குப் பெருமை சேர்த்தது.
÷”யுத்தகால வாழ்வைப் பற்றியும் நெருக்கடியான அந்த நாள்களில் ஏற்படும் மன உளைச்சல்கள் குறித்தும் ப.சிங்காரம்தான் முதன்முதலாக அடையாளம் காட்டினார். புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடியான சிங்காரத்தை அங்கீகரிக்காமல் போனது, தமிழ்ச்சூழலின் மோசமான வெளிப்பாடாகும்’ என்று “புதுயுகம் பிறக்கிறது’ என்ற இதழில் சி.மோகன், ப.சிங்காரத்தின் நாவல்கள் குறித்து எழுதியுள்ளார்.
1997-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ப.சிங்காரம் காலமானார்.
÷சிங்காரம் வாழ்ந்த காலத்தில் அவரது படைப்புகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைத்திருந்தால், அவர் மேலும் பல கதைகளை எழுதியிருக்கக்கூடும். மனதை எழுத்தின் பக்கம் செலுத்தவிடாமல் அரித்துக்கொண்டிருந்த கடந்தகாலத்தின் சோகங்களும், அந்த ஒற்றை அறையின் தனிமையும் ஒரு கரையானென அவரின் எழுத்தைத் தின்று செரித்தன.
நன்றி: http://dinamani.com/weekly_supplements/tamil_mani/article647386.ece