இலண்டன் மாநகரில் நடைபெற்ற ‘இலக்கிய மாலை” வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகம்!

இலண்டன் மாநகரில் நடைபெற்ற 'இலக்கிய மாலை" வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின!இலண்டன் மாநகரில் நடைபெற்ற நான்காவது ‘இலக்கிய மாலை” நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின. கடந்த சனிக்கிழமை (10 – 08 – 2013) மாலை இலண்டன் ‘மனோர் பார்க்” (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில், சமூகத் தொண்டரும் இலக்கிய அபிமானியுமான திரு செல்லையா வாமானந்தன் தலைமையில் ‘இலக்கிய மாலை” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் நூல்களான ‘இப்படியுமா..?” – சிறுகதைத் தொகுதி, ‘அழியாத தடங்கள்” – கட்டுரைத் தொகுதி, ‘தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?”, ‘மண் மறவா மனிதர்கள்”, ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்” – (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த ‘இலக்கிய வித்தகர்” த. துரைசிங்கத்தின் ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகின. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், எழுத்தாளர் துரை. சிவபாலன் நூல் அறிமுகவுரையாற்றினார். கணினி அறிஞரும் இலக்கிய அபிமானியுமான திரு சிவா பிள்ளை நூல் வெளியீட்டுரை நிகழ்த்தி நூல்களை வழங்கினார். விருதுகள் பெற்ற நாவாலாசிரியர் வவுனியூர் இரா. உதயணன் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.

‘புதினம்” பத்திரிகை ஆசிரியர் ஈ. கே. இராஜகோபால், இலண்டன் – புங்குடுதீவு நலன்புரிச் சங்கத் தலைவர் திரு எஸ். சிறிதரன், ‘இரங்கும் இல்லம்” அமைப்பாளர் சிவனடியான் சிறிபதி, எழுத்தாளர்கள் வவுனியூர் இரா. உதயணன், ‘இணுவில் ஒலி” ஆசிரியர் தம்பு சிவா, தமிழினி குலேந்திரன், இலண்டன் – வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு நடா சிவராசா, திரு கே. தங்கவடிவேல் மாஸ்ரர், திரு வேந்தனார் இளஞ்சேய் ஆகியோர் இளங்கோவனின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர். சமூகத் தொண்டர் வி. ஆர். இராமநாதன், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் சார்பில் இளங்கோவனுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

ஊடகவியலாளரும் எழுத்தாளருமான எம். என். எம். அனஸ், பல்கலைக் கழக விரிவுரையாளர் க. சிவானந்தன், சமூகத் தொண்டர் வி. ஆர். இராமநாதன், ஆய்வாளர் தமிழரசி சிவா, ஊடகவியலாளர் நவஜோதி யோகரட்ணம், நடிகர் கண்ணப்பு நடராசா ஆகியோர் நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்கினர். இலண்டனிலுள்ள கலை இலக்கிய அபிமானிகள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தமிழகத்திலிருந்து கவிப்பேரரசு வைரமுத்து இந்த ‘இலக்கிய மாலை” நிகழ்வுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,  மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்களின் அறிமுக நிகழ்வு இலண்டன் மாநகரில் நடைபெறுவதை அறிந்து மகிழ்ச்சியடைவதாகவும், இளங்கோவனின் தமிழ்ப் பணிகள் தொய்வில்லாது தொடரவும், அவர் பல்லாண்டு வாழவும் வாழ்த்துவதாகக்  குறிப்பிட்டிருந்தார்.

இளங்கோவன் நூல்களின் அறிமுக நிகழ்வுகள் ‘இலக்கிய மாலை” என்ற பெயரில் எம்மக்கள் அதிகம் வாழும் நாடுகள் பலவற்றிலும் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற ‘இலக்கிய மாலை” நிகழ்விலும், யூன் மாதம்  பாரிஸ் மாநகரில் நடைபெற்ற ‘இலக்கிய மாலை” நிகழ்விலும் இளங்கோவனின் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து தற்போது இலண்டன் மாநகரில் ‘இலக்கிய மாலை” நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடந்த வருடங்களில் கனடா, ஜேர்மனி, சுவிற்சலாந்து, டென்மார்க், இந்தியா ஆகிய நாடுகளிலும் இவரது நூல்களின் அறிமுக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்;க் கதைகள்” – (இளங்கோவன் கதைகள் – இந்தி மொழிபெயர்ப்பு) நூல் கடந்த செப்டம்பர் மாதம் 27 -ம் திகதி புதுடில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில்  வெளியிடப்பட்டுப் பாராட்டுப் பெற்றமை குறிபிடத்தக்கது.

அனுப்பியவர்: vtelangovan@yahoo.fr