தேடி எடுத்த கவிதை: அ.ந.கந்தசாமியின் ‘மோட்டார் சாரதிகளுக்கு”

அறிஞர் அ.ந.கந்தசாமி

“காரில் செல்லும் பேர்களைப்போல் காலிற் செல்லும் பேர்களுக்கும்
ஊரில் தெருவில் உரிமைசில உண்டிங் கென்பதை மறவாதீர்.” 🙂

கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி) எழுதிய கவிதைகள் பல்பொருள் கூறுவன. காதலைப்பற்றி, மக்கள் புரட்சியைப்பற்றி, மழையைப்பற்றி, எதிர்கால மனிதனைப்பற்றி.. என்று அவரது கவிதைகள் பல் வகையின. அ.ந.க மோட்டார் சாரதிகளுக்காகவும் ஒரு கவிதையொன்றினை எழுதியிருக்கின்றார். ஶ்ரீலங்கா சஞ்சிகையில் வெளியான அக்கவிதையினை இங்கு தருகின்றோம். அதிலவர் வாகனச்சாரதிகளுக்கு

“காரில் செல்லும் பேர்களைப்போல் காலிற் செல்லும் பேர்களுக்கும்
ஊரில் தெருவில் உரிமைசில உண்டிங் கென்பதை மறவாதீர்.” என்று அறிவுரை கூறுகின்றார்.

“காரை ஓட்டக் கைபிடிக்கும் கால மெல்லாம் கடவுளரின்
பேரை நினைத்து :என்காரில் வருவோர் நலன்கள் பேணிடுவேன்.
காரைக் கவனக் குறைவால்நான் ஓட்டேன்’ என்று சொல்லிக்
காரை ஓட்டின் விபத்தொழிந்து நாடு முழுதும் களித்திடுமே.” என்றும் மேலும் அக்கவிதையில் கூறுவார் அவர்.

முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியின் மோட்டார் சாரதிகளுக்கான அறிவுரைக்கவிதை இது. ஒருவிதத்தில் மக்களைப்பற்றிய, மக்களுக்கான, மக்களின் நலன்களுக்கான கவிதை. வாகனச்சாரதிகள் நிச்சயம் கேட்க வேண்டிய பல அறிவுரைகள் உள்ள கவிதை அது. சுவைத்து மகிழுங்கள். அதே சமயம் கவிதை கூறும் பொருளின் தேவையினை உணர்ந்து செயற்படுங்கள். உங்கள் வாகனங்களை ஓட்டுங்கள். 2. மோட்டார் சாரதிகளுக்கு

காரை ஓட்டும் பேர்களெல்லாம் கைகால் தனித்து கட்டிலிலே
பீறும் இரத்த வெள்ளத்தான் பெருகா திருக்கத் துணிசுற்றிக்
கூரை பார்த்து ஓர்தடவை  குழறி வலியிற் கிடப்பாரேல்
யாரு மவர்க்கு வீதிமுறை சொல்லித் தருதல் வேண்டாவே

நேசமான ஒருநண்பன் நேர்ந்த விபத்தால் படுத்திருக்க
மோசம் இவன் இனிப்பிழையானே முற்றும் முடிந்த தெனடாக்டர்
பேசப் பக்கத் ததைக்கேட்கும் பேற்ய்யார்க்கும் கிடைத்திடிலே
தேசத்தவர்க்கு வீதிமுறை தேடிச் சொல்லல் வேண்டாவே.

தந்தை பிரியத் தாய்கலங்கத் தனயர்சுற்றி விம்மிநிற்கும்
அந்த வீட்டின் உள்ளே நீர் அடிவைத் ததனைப் பார்ப்பீரேல்
எந்த நாளும் கார்விசையை ஏற்றி முடுக்க மாட்டீரே
சொந்த நாட்டின் வீதிமுறை சொல்லித் தருதல் வேண்டாவோ,

காரில் செல்லும் பேர்களைப்போல் காலிற் செல்லும் பேர்களுக்கும்
ஊரில் தெருவில் உரிமைசில உண்டிங் கென்பதை மறவாதீர்.
பாரும் பக்கத் தேசிறுவர் பாய்ந்து வருவார் வழிபார்த்து
காரை ஓட்டின் தெருமரணக் கணக்குப் பெரிதும் குறைவுறுமே.

ஓட்டும் காரின் யந்திரத்தை ஒடிந்த பிரேக்கைச் சக்கரத்தை
நாட்டத் தோடு கவனித்து நல்ல முறையில் சரிபார்த்து
ரோட்டில் சென்றால் விளக்குகளை இரவில் நன்கு துலங்கவைத்தால்
நாட்டில் வீதிவிபத்தெல்லாம் நாளும் குறைந்து வந்திடுமே.

வீதி நெடுக்க கோடுகளாம் வீதி யருகில் விளம்பரமாம்
சேத முயிர்க்கு நேராமல் செய்து வைத்த  முறைமைகளால்
நீதி யன்றோ அவற்றை எலாம் நினைவில் கொண்டு காரோட்டின்
யாதும் விபத்து நேராது யாரும் மகிழ்ந்து வாழ்வாரே.

காரை ஓட்டக் கைபிடிக்கும் கால மெல்லாம் கடவுளரின்
பேரை நினைத்து :என்காரில் வருவோர் நலன்கள் பேணிடுவேன்.
காரைக் கவனக் குறைவால்நான் ஓட்டேன்’ என்று சொல்லிக்
காரை ஓட்டின் விபத்தொழிந்து நாடு முழுதும் களித்திடுமே.

– ஶ்ரீலங்கா மார்ச் 1956, பக்கம் 5 –