சிறுகதை: “யாழ்ப்பாண நினைவுகளில்….”

– இடங்கள்,காலங்கள்,அடிப்படைச் சம்பவங்கள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு ஆக்கப்பட்ட, கற்பனைப் படைப்பு. –

ஶ்ரீராம் விக்னேஷ்1.

1973ம், 1974ம்  வருட, 9ம்,10ம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் –

நான் தங்கியிருந்த “யாழ்.மத்திய கல்லூரி”யின் விடுதியும், அதாவது “ஹாஸ்ட” லும் ஊரோடொத்து உறங்கிக்கொண்டிருந்தது. மாடியிலுள்ள மண்டபத்தில்தான் எனது பெட்டி படுக்கைகளும், கட்டிலும் இருந்தன. நல்ல சொகுசான கட்டிலாக இருந்தும், இன்னும் தூக்கமே வரவில்லை.

எங்கள் விடுதிக்குத் தெற்கேயிருந்த, முதலாம் குறுக்குத்தெருப் பக்கமாக எங்கோ ஒரு மூலையில் நாய்கள் குரைத்துச் சத்தமிட்டுக்கொண்டிருந்தன. 

தலையணைக்கு கீழே வைத்திருந்த ஒளிப்பேழையை, அதாவது “ டார்ச்லைட்”டை எடுத்து, பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த சகமாணவன் மூர்த்தியைக் கவனித்தேன். வாயைப் பிளந்தபடி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். 

சுவர்க் கடிகாரத்தை நோக்கினேன். அது ஏற்கனவே நேற்று மாலை ஐந்து மணிக்கே உறங்கிவிட்டது.

என்னிடமும் கைக்கடிகாரம் கிடையாது. அதிகாலை ஐந்து மணிக்கு விடுதிக் காவலர், அதாவது, ஹாஸ்டல் வாச்மேன் மணி அடிக்கும்வரை விடுதிக்குள் மின்விளக்கு, அதாவது லைட்டு போடக்கூடாது என்பது விடுதி நிர்வாகத்தின் கண்டிப்பான உத்தரவு. எனினும், மணியோ நான்கை அண்மித்துவிட்டால் குளியலறை, அதாவது, பாத்ரூம் சென்று நிம்மதியாகக் குளிக்கலாம். மற்றவர்களும் எழுந்துவிட்டால், போட்டி போட்டுத்தான் குளிக்கும் நிலை வரும். 

எங்கள் விடுதிக்கு – வடக்கே, சமீபமாகத்தான் மணிக்கூண்டுக் கோபுரம் எழுந்தருளியுள்ளது. நேரத்தைக் கவனித்தேன். எதிர்பார்த்தபடி நிலைமை சாதகமாகவே இருந்தது. ஆமாம்: மணி நான்கு.

“தமிழன் என்று சொல்லடா…. தலை நிமிர்ந்து நில்லடா….” என்று சொன்னவர், தலை நிமிர்ந்தாரோ இல்லையோ…. ஆனால், அந்த மணிக்கூண்டுக் கோபுரம் மட்டும் தலை நிமிர்ந்து நின்றது.

என் பார்வையின் கோணத்தை சற்று இடதுபுறம் திருப்பினேன். இந்தியாவிற்கு ஒரு தாஜ்மகால் கிடைத்தது போன்று, இலங்கையின் – முக்கியமாக யாழ்ப்பாணத்தின் தாஜ்மஹாலாக, சரஸ்வதியின் ஆலயமான யாழ். நூலகம்…. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகமாக பிரகாசித்துக்கொண்டிருந்தது.

விடிந்தால் வெள்ளிக்கிழமை. இன்னும் ஒரு மணி நேரத்தில், காவலாளி மணியடித்துவிடுவார். காலையில், சக இந்து மாணவர்களோடு நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு போகவேண்டும். அதுவும், நடந்தே சென்றுவருவோம். எட்டுமணிக்கெல்லாம் விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்புவோம்.

நேரத்தோடு குளித்துவிட்டால் கோவிலுக்கு புறப்படும்போது பரபரப்பு இருக்காது. 

குளியலறையை நோக்கி நடந்தேன். 

அதிகாலை, நல்லூர் கந்தசுவாமி கோவிலை நோக்கி போகும்போது, அருகேயுள்ள “வேம்படி” மகளிர் கல்லூரி விடுதியை நோக்கி, “டா” அடிப்பதிலே கிடைத்த சுகமே தனி. தொடர்ந்து நடக்கும்போது, கடந்து செல்கின்ற புகையிரத நிலையமும், ஆரியகுளமும், ” நாகவிகாரை” எனப்படும் பெளத்த தலமும், மற்றும் “வீரமாகாளி அம்மன் கோவிலு”ம் காலம்பல கடந்தாலும் நெஞ்சைவிட்டு நீங்கா நினைவுச் சின்னங்கள். யாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ்மன்னன், “சங்கிலியன்” வணங்கிய கோவில்….அவனது வீரவாள் வைக்கப்பட்டிருக்கும் இடம் என்பதாலும், அந்த வீரமாகாளிகோவிலை நோக்கும் உணர்வு மிக்க தமிழர் எவருக்குமே ஒருகணம் மெய் சிலிர்க்கத் தவறாது. 

நல்லூர் கந்தசுவாமி கோவிலை நெருங்கும்போது, தூரத்தில் வைத்தே துரைச்சாமிவாத்தியார் என்னைக் கண்டுகொண்டார். சமீபிக்கும்போது அவரது முகத்திலே தெரிந்த மகிழ்ச்சியும் வழிமேல் விழிவைத்து என்னை எதிர்பார்க்கின்ற தவிப்பும் என் கண்களைக் குளமாக்கின.

துரைச்சாமி வாத்தியார், இப்போது எந்தப் பள்ளிக்கூடத்திலுமோ அல்லது பிரத்தியோக வகுப்பிலோ பாடம் சொல்லிக்கொடுப்பவர் அல்ல. அன்று சொல்லிக்கொடுத்தவர். அதாவது – நான் பிறப்பதற்கு ஒருசில ஆண்டுகளின் முன்பு. ஆனால் இன்று….. சொல்லவே சங்கடமாக இருக்கிறது.

ஆமாம்: யாழ்ப்பாண வாசியான துரைச்சாமி ஒரு தமிழாசிரியர். கொழும்பிலே தனது சொந்தச் செலவில், சிறியதொரு தமிழ்ப் பாடசாலையை நிறுவி, சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்தவர். திருக்குறளின் பெருமையை அவர்களது நெஞ்சிலே பதியவைத்தவர். முக்கியமாக – அன்றய சரித்திரத்தில், தமிழ் நாட்டு மன்னருக்கும், சிங்கள மன்னருக்கும் இடையேயிருந்த உறவுகளைத் தெளிவுபடுத்தி, மாணவர்கள் மத்தியிலே இன ஒற்றுமையை ஏற்படுத்தப் பாடுபட்டவர்.

“தனிச் சிங்கள சட்டம்”என்ற போர்வையில் வெடித்த சிங்கள-தமிழ் இனக்கலவரம், துரைச்சாமி வாத்தியாரையும் விட்டுவைக்கவில்லை. காலத்தை வெல்லும் தமிழைக் கற்பித்தவரின் கால்கள் துண்டிக்கப்பட்டன. தமிழைக் கற்ற மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர். குடும்பத்துணைவியார் கொல்லப்பட்டார். குற்றுயிராக்க் கிடந்த மகள்மட்டும் விதிவசத்தால் வெல்லப்பட்டாள்.

வவுனியா, வேப்பங்குளத்தில் எங்களின் வீட்டுக்குப் பின்னால் இரண்டு ஏக்கர் வயல் துரைச்சாமி வாத்தியாருக்கு இருந்தது. அதைக் கவனித்துக்கொண்டிருந்த அவரது ஒரே தம்பி, எனது தந்தையாருடன் வவுனியா தபால் கந்தோரில் (போஸ்ட் ஆபீஸ்) பணி புரிந்தவர். இடையிலே அவர் காலமானதும், அந்த வயலைக் கவனிக்கும் பொறுப்பை என் தந்தையாரிடம் ஏற்கனவே ஒப்படைத்திருந்தார் துரைச்சாமி வாத்தியார். 

நிலைமைகள் மாறிவிட்டன. வாத்தியாரது கதியும் நிர்க்கதியாக, இனியும் தாமதிக்க்க் கூடாதென எண்ணி, மகளுக்குத் திருமணத்தைப் பேசினார். கடைசிச் சொத்தாக இருந்த வவுனியா வயலை விற்றுத் திருமணத்தை நடத்திவைத்தார். அப்போது ஐந்து வயதினனாயிருந்த நான், எனது பெற்றோருடன் அத் திருமணத்துக்குச் சென்று வந்தது இன்னும் நினைவில் நிற்கின்றது.

கண்ணுக்கினிய பேரனையும் கண்டார் வாத்தியார். “தமிழ்ச் செல்வம்” எனப் பெயரிட்டார். “செல்வம்” என எல்லோரும் அழைத்தனர். 

காலத்தின் கோலமும், விதியின் கோரமும் விரைந்தன. கண்ணான மகளும் மருமகனும், ஒரு பயணத்தின்போது…. விபத்திலே பலியானார்கள். “வந்திக்கும்” எனக் கருதிய உறவுகள் அவரை நிந்தித்தன. 

நிலம் இல்லை… வீடு இல்லை…. பலமாய் நின்று ஆதரிக்க பக்கத்துணை யாருமில்லை.

“வாழவேண்டும்…. பேரனை வளர்க்கவேண்டும்……அவனையும் தமிழ்ப்பற்றாளனாக ஆக்கவேண்டும்…..” என்னும் தமிழ்வெறி, சுயகெளரவத்தைக்கூடச் சுருக்குப்பையிலே கட்டவைத்தது. 

“பிச்சை புகினும் – கற்கை நன்றே” என்று, பல மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர், இன்று பேரனின் கல்விக்காகப் பிச்சை எடுக்கின்றார். அவனும் இப்போது, ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கின்றான்.

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில், அதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தது. 

அன்று – தமிழைக் காப்பதற்காகப் பிறந்து, வாழ்ந்து…. பின்பு, கையிலே நூலை ஏந்திப் படித்தவண்ணம் சிலையாக இருக்கும் ஆறுமுகநாவலரின் மண்டபத்து வாசலில் தமிழாசிரியர் ஒருவர், பேரனின் படிப்புக்காக, கையிலே திருவோடு ஏந்தியவண்ணம் இருக்கின்ற கன்றாவி ஆரம்பமானது.

நல்லூர் கோவில் தரிசனத்துக்கு வந்துபோவோர், அப்படியே வந்து ஆறுமுகநாவலர் சிலைக்கும் வணக்கம் செலுத்திவிட்டு, அங்கு கண்ணாடிப் பேழைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரது சொந்தக் கையெழுத்துப் படைப்புக்களான ஏட்டுச் சுவடிகளைப் பெருமையோடு பார்த்துவிட்டு வெளியே வரும்போது, இவரிடம் கொடுக்கின்ற பணத்தையும், தின்பண்டத்தையும் விட, நான் கொடுக்கின்ற உணவுப் பொட்டலத்திலே அவர் தனிமகிழ்ச்சியைக் காண்கின்றார். 

பொட்டலத்தைக் கையில் கொடுத்துவிட்டு, சிறிதுநேரம் அவர் அருகே உட்காருவேன். மகிழ்ச்சியோடு என் பெற்றோரின் நலத்தை விசாரிப்பார். பின் விரக்தியாகப் பேசுவார்.

“உண்ணாணை (உன்மேல் ஆணையாக) சொல்லிப்போட்டன் தம்பி….எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவு இருக்கு…. ஆனால், எங்கடை தமிழ் இனத்துக்கு மட்டும் முடிவும் இல்லை…. விடிவும் இல்லை…. சிங்கள நாட்டில வைச்சு தமிழரை அடிச்சது பெரிசில்லை …. நாளைக்கு இந்த யாழ்ப்பாணத்துக்கை இறங்கியே வந்து அடிப்பாங்கள்…. இண்டைக்கு நாங்கள் கற்பூரம் கொழுத்தி கையெடுத்துக் கும்பிடக்கூடிய இடங்களையெல்லாம், தமிழனுக்குப் பெருமை தாற இடங்களையெல்லாம் நாளைக்கு நெருப்புவைச்சுக் கொழுத்துறாங்களோ, இல்லையோ பார்…. ” அவரது உடலே பதறியது.

நான் அமைதியாக மறுத்துப் பேசினேன்.

“அப்பிடியெல்லாம் சொல்லாதையுங்கோ வாத்தியார்…. ஒரு சாத்திரி (ஜோதிடர்)கூட இப்பிடிச் சொல்லமாட்டான்….” 

“இல்லை தம்பி…. நான் ஒண்டும் சாத்திரி இல்லை…. இப்பிடி இப்பிடித்தான் நடக்குமெண்டு என்ரை மனதிலை பட்டா அதை நான் வெளிப்படையாச் சொல்லிப்போடுவன்….. சொன்னமாதிரி அதுவும் நடந்திடும்…. தெரு ஓரத்திலையிருந்து பிச்சையெடுக்கிறவன்தானே…. இவன் என்னத்தைச் சொல்லுறது எண்டு எல்லாரும் என்னை வேடிக்கையாப் பாக்கினம்…. நாளைக்கு ஒரு கார்க்காறனோ, இல்லை லொறி (லாரி)க் காறனோ தடுமாறி வந்து என்னை நெரிச்சுப்போட்டுப் போனாலும் தூக்கிப் போடக்கூட ஒரு நாதி இருக்காது…..”

இறுதியாக அவர் சொன்னது என் நெஞ்சிலே நறுக்கென்றிருந்தது. அவர் சொன்னதுபோல எந்தவொரு கார்க்காரனோ, லொறிக்காறனோ அவரது பக்கம் திரும்பிக்கூட பார்க்கக் கூடாது என நல்லூர்க் கந்தனிடம் மனதார வேண்டிக்கொண்டேன்.

ஆரியகுளத்துக்குச் சமீபமாக இருந்த சைவஉணவகம் “சுந்தரம் பவான்”னில் காலை ஆறுமணிக்கெல்லாம், சாதம் உட்பட உணவுகள் தயாராகிவிடும். வெளியூர்களிலிருந்து மாற்றலாகி, யாழ்ப்பாணத்தில் வந்து வேலைபார்க்கின்ற அரசு உத்தியோகத்தவர் பலர், மதிய உணவுக்காக சுந்தரம் பவான் உணவகத்தில் சோற்றுப் பார்சல் வாங்கிச்செல்வதால், மதியத்தில் தயாராகவேண்டிய உணவு, காலையிலேயே தயாராகிவிடும்.

தமிழ்நாடு, திருநெல்வேலிக்காரரான சுந்தரம்பிள்ளை அண்ணாச்சி, வெகு காலத்துக்கு முன்பாகவே இலங்கைக்கு வந்தவர். கொழும்பிலே செட்டி நாட்டுக்காரர்களோடு கூட இருந்து சமையல்வேலை பார்த்தவர். ஐம்பத்தி எட்டாம் வருடம் நடைபெற்ற இனக்கலவரத்தில் இவரும் பாதிக்கப்பட்டவர். பின்பு யாழ்ப்பாணம் வந்து, சிறிதாக தேநீர்க்கடை ஆரம்பித்து தற்போது பெரிய உணவகமாக விருத்தி கண்டவர். 

வெள்ளிக்கிழமைகளில் நான் சுந்தரம்பிள்ளை அண்ணாச்சி கடை வாசலை நெருங்கும்போதே அவர் சாதத்தைப் பொட்டலம் கட்டிவிடுவார். அதேவேளை, என்னிடம் பணப்பற்றாக்குறை உள்ள வேளைகளிலும் கூட, சிரித்த முகத்தை மாற்றவே மாட்டார்.

“பரவாயில்லை தம்பி….. அப்புறமா வாங்கிக்கலாம்………” புன்சிரிப்பு தவழும். எனக்கோ கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.

“அண்ணை…. அடுத்த கிழமை நான் மறந்திட்டாலும், நீங்க மறக்காமல் கேளுங்கோ….. நான் ஒண்டும் குறையா நினைக்க மாட்டன்…….” எனது பேச்சிலே சிறிது தயக்கத்தின் சாயல்.

“அப்பிடித்தான் ஒருவேளை நானும் மறந்தாத்தான் என்ன….. நீ பண்ற புண்ணியத்திலை எனக்கும் பாதிப்பங்கு கிடைச்சிரிச்சிண்ணு நெனைச்சு சந்தோசமா இருந்துக்குவேன்….” நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தார்.

நான் சோற்றுப் பொட்டலம் வாங்கிச்செல்வது யாருக்காக என்பது அவருக்கு நன்கு தெரியும்.

“அந்த மனிசனையும் பொடியனையும் வைச்சு, மூண்டு வேளைக்கும் சாப்பாடு போடவேணுமெண்டுதான் எனக்கும் ஆசை….. ஆனால் என்ன செய்ய…. வீட்டில தாய்தேப்பனிட்டையிருந்து வாற காசில, போடிங்கில  தங்கிப் படிக்கிறவன் நான்…. அதாலை கிழமையில ஒரு நாளைக்கு ஒருவேளையெண்டாலும், என்ரை கையாலை சாப்பாடு சாப்பிடட்டும் எண்டு நினைச்சுச் செய்யிறேன்…. உள்ளதைச் சொல்லுறதெண்டா இப்பவெல்லாம் நான் கோயிலுக்குப் போறதே முக்கியமா உதுக்குத்தான்……”

“அப்ப கோயில்லை சாமி கும்பிடப்போறதில்லையா…..?” ஆச்சரியமாகக் கேட்டார் அண்ணாச்சி.

“அந்த மனிசன்ரை சந்தோசத்தைவிட, அதுக்கும் மேலை ஒரு கடவுள் இருக்கா அண்ணை…. இருந்தாலும், கோயிலுக்கை போன உடனை மற்றப் பொடியளையெல்லாம் விட்டுட்டு, விறுவிறு எண்டு சுத்திக் கும்பிட்டிட்டு கெதியா வெளியிலை வந்திடுவேன்…. ஆருக்கும் தெரியாமை வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, “சங்கிலித் தோப்பு”க்கு போய்ற்று வந்திடுவேன்…..”

“சங்கிலித் தோப்பிலை யாரு இருக்கா….?”

“அங்கை ஆரையும் பாக்கப் போகையில்லை….. எங்கடை கடைசி மன்னன், “சங்கிலியன்” இருந்த அரண்மனை முகப்பு மட்டும் இருக்கிறது தெரியுமெல்லே…..”

“அது யாருக்குத்தான் தெரியாது…. நம்ம கடைக்கு அரிசி குடுக்கிற யாவாரி வீடுகூட அதுக்கு அங்கிட்டுத்தான் இருக்கு…. அப்பப்ப அவரைப்பாக்க அதைக் கடந்துதான் போவேன்….. ஆமா… அது ரொம்ப பழைய பில்டிங் ஆச்சே…. அதில என்ன இருக்கு…..?”

ஒருகணம் என்னால் எதுவும் பேசமுடியவில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணம் இருப்பதுபோல, உணர்வுகளிலும் பேதங்கள் இருப்பது இயற்கையே. இதில் யாரையும்…. யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால், இப்போது அண்ணாச்சி கேள்விக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

“அண்ணாச்சி…. நீங்கள் பிறந்த தமிழ்நாட்டிலை, அந்தக்காலத்து ராசாமார் இருந்த, ஆண்ட இடமெல்லாம் இப்பவும் கம்பீரமாய் நிண்டு, மக்களுக்கு தமிழுணர்வைத் தந்துகொண்டிருக்கு எண்டு கேள்விப்பட்டிருக்கிறேன்……. புத்தகங்களிலை படிச்சிருக்கிறேன்….. மருதுபாண்டியருக்கு சிவகங்கை அரண்மனை, மதுரை மீனாச்சி கோபுரம், ராசராசனுக்கு தஞ்சைப் பெரியகோயில், மாமல்லனுக்கு சிற்பக்கோயில், தேசிங்கு ராசனுக்கு செஞ்சி மலைக்கோட்டை, ஊமைத்துரைக்கு திருமயம் மலைக்கோட்டை , கட்டபொம்மனுக்கு பாஞ்சாலங்குறிச்சி நினைவுச் சின்னம் எண்டு நிறைய இருக்கு…. ஆனால், எங்கடை தமிழ் ராசாக்கள் எண்டுசொல்ல சங்கிலியனும், நினைவுச் சின்னமெண்டு சொல்ல இந்த அரண்மனை முகப்பும், வீரமாகாளி அம்மன் கோயிலுந்தானே இருக்கு…. அதுகளைப் பாக்கப்பாக்க, கார் பற்றறிக்கு சாச்சு ஏத்தினமாதிரி தமிழன் எண்ட உணர்ச்சி எனக்குள்ளை ஏறுறதை என்னாலை நல்லா உணர முடியிது அண்ணாச்சி….”

பேசும்போது, என் உடலில் ஏற்படும் புல்லரிப்பையும், கண்ணிலே தெரியும் கலக்கத்தையும் அண்ணாச்சி கவனிக்கத் தவறவில்லை.

“சரி…. சரி…… நேரமாகுதப்பா…..சீக்கிரமா போ….. துரைச்சாமி வாத்தியாரு காத்துக்கிட்டிருப்பாரு…. அவர்கூட அந்தச் சின்னப்பயல் வேற…..”

சோற்றுப் பொட்டலங்களை கையில் திணித்துவிட்டு, சமையல்கட்டுப் பக்கமாக நடந்தார் அண்ணாச்சி. நல்லூர் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன் நான்.


2.

 

வவுனியாவிற்கு அவசரமாக வரும்படி , என் பெற்றோரிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கல்லூரியில் அதிபரிடம் சொல்லிவிட்டு, வவுனியா கிளம்பிய நான், அங்கிருந்து யாழ்ப்பாணம் திரும்புவதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.

யாழ்ப்பாணத்துக்கு அருகே சாவகச்சேரியில், எனது சித்தப்பா வீடும், கட்டுவனில் பெரியம்மா வீடும் உள்ளன. அங்கு சென்றாலும் சரி, வவுனியா சென்றாலும் சரி, விடுதியை விட்டு வெளியே வரும்போதும், மீண்டும் விடுதிக்குத் திரும்பும்போதும் எனது பொன்னான நேரத்தின் சில மணித் துளிகளை, சினிமா திரையரங்கினுள் அர்ப்பணிக்கத் தவறுவதில்லை. இந்த விசயத்தில் நான் மட்டுமல்ல…. விடுதி மாணவர்கள் அனைவரும், பின்பற்றும் வழக்கம் இதுதான்.

கல்லூரியில் படிக்கும் காலத்தை, “வசந்த காலம்” என்பார்கள். மற்றவர்களுக்கு எப்படியோ….. ஆனால், என்னுடைய வகுப்பையும், அதன் பிரிவுகளையும் சேர்ந்த சக மாணவர்களைப் பொறுத்தவரையில், அது “வசந்த மாளிகை” காலமும் கூட. காரணம் : அந்தக் காலகட்டத்தில்தான் “வசந்த மாளிகை” படம் இலங்கையில் வெளியானது. யாழ்ப்பாணம் ”வெலிங்டன் திரையர”ங்கில், இரு நூற்றைம்பது நாட்களுக்குமேல் ஓடியது. ஐந்து தடவைகள் அதை நான் பார்த்துவிட்டேன். ஒழுங்காகப் போய் பார்த்தது, இரண்டு தடவை. விடுதிக் காவலாளிக்குத் தெரியாமல், மதில் ஏறிக்குதித்து இரவு இரண்டாம்காட்சியாகப் பார்த்தது மூன்று தடவை.

அன்றயதினம் ஊரிலிருந்து வந்து, பகல் இரண்டு முப்பது மணிக்காட்சியை ஆறாவதுதடவையாகப் பார்த்த மகிழ்ச்சியுடன், யாழ்.பேரூந்து நிலையத்தின் எதிரேயிருந்த, “சுபாஷ் கபே”யில், ஐஸ் கிறீம் சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு வந்து சேரும்போது, இரவு ஏழுமணி ஆகிவிட்டது.

எல்லா மாணவர்களும், “ படிப்பு மண்டபம்” (study hall) சென்றிருப்பார்கள். அவசர அவசரமாக முகத்தைக் கழுவிவிட்டு, தேவையான புத்தகங்கள், நோட்டுக்கொப்பிகள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு சென்று, எனக்குரிய இடத்தில் அமர்ந்துகொண்டேன்.

மத்திய கல்லூரிக்கு சற்று மேற்கேயுள்ள “சுப்பிரமணியம் பூங்கா”வில், இரவு ஏழுமணிக்கெல்லாம் வானொலியை வைத்து, பெரிய ஒலிபெருக்கியில் தொடர்பு கொடுத்து, சென்னை வானொலி நிலைய “தேன் கிண்ணம்” நிகழ்ச்சியை அவ்விடம் முழுவதும் பரவவிட்டுக்கொண்டிருப்பார்கள். சரியாக எட்டுமணிக்கெல்லாம் அது நிறுத்தப்பட்டு, ஒலிப்பதிவு நாடா மூலம், “வசந்த மாளிகை” படத்தின் கதை-வசனத்தைப் போடுவார்கள். பிறகென்ன. எங்கள் கண்கள் மட்டும் புத்தகத்தில்…. கவனமெல்லாம் பூங்காவுக்குள்….

சில நிமிடங்கள் கழித்து, என் அருகில் படித்துக்கொண்டிருந்த மூர்த்தி என்னை நெருங்கிவந்து, காதுக்குள் பேசினான்.

“மச்சான்…. உனக்கு ஒரு துக்கமான செய்தி…. நல்லூரிலை இருந்த உன்ரை பிறெண்ட் துரைச்சாமி வாத்தியார் செத்து மூண்டு நாளாகுது…. பாழ்படுவான் ஒரு பஸ்காறன் குடிச்சுப்போட்டு வெறியிலை பஸ்சைக் கொண்டுபோய் அந்தமனிசனுக்கு மேலை ஏத்திப்போட்டான்…. பள்ளிக்கூடத்திலையிருந்த பேரப் பொடியனை ஆள்விட்டுக்கூப்பிடுவிச்சவையாம்…. தூக்கிக்கொண்டு போறத்துக்குக்கூட ஒருத்தரும் இல்லாமல், கடைசியிலை மாநகரசபைக் குப்பை வண்டியிலைதான், அள்ளிப் போட்டுக்கொண்டு போனவங்களாம்…. பாவம், அந்தச் சின்னப் பொடியனை நினைச்சாத்தான் பெரிய கன்றாவியாய் இருக்கு…..”

தலையிலே இடி விழுந்தது போல இருந்தது. என் நினைவுகள் சற்று பின்நோக்கின.

“ கோதாரியில போன மனிசன், வாய்ப்பேச்சாய் சொன்னதை நிரூபிச்சுப்போட்டுதே…. அடக் கடவுளே…. இதே சரியெண்டால், யாழ்ப்பாணத்தின்ரை எதிர்காலம் பற்றிக் கதைச்சதெல்லாம்…. ஐயோ…..” தலை சுற்றியது.

சற்று நிதானித்து, என்னைச் சுதாகரித்துக்கொண்டேன்.

“அண்டைக்கு இந்த மனிசன் கதைக்கையிக்கைகூட, கார்க்காரனோ இல்லாட்டி லொறிக்காறனோ எண்டுதானே சொல்லிச்சு…. ஏதோ ஒரு வாகனம் எண்டதை நானும் சரியா விளங்காமல், கார்க்காரனும் லொறிக்காறனும் இவர்பக்கமே பாக்கக்கூடாதெண்டு நல்லூர் கந்தனிட்டை வேண்ட, கந்தனும் அதை நிறைவேற்றி வச்சான்…. பஸ் காரனோ, வான் காரனோ இவர்பக்கம் பாக்கக்கூடாதெண்டு நானும் கேக்கையில்லை…. கந்தனும் காப்பாற்றையில்லை…. எட்டயபுரத்துக் கவிஞனுக்குக்கூட, கடைசிப் பயணத்துக்கு எட்டுப்பேர் இருந்தினமாம்…. இன்று யாழ்ப்பாணத்தானுக்கு உதவ யாருமே இல்லையே…. தமிழைப் பல்லக்கிலை ஏத்தவேணுமெண்டு நினைச்ச  மனிசனுக்கு கடைசியில பாடைகூட கிடைக்கையில்லையே….” நெஞ்சம்  குமுறிக்கொண்டிருந்தது.

இரவு உணவைத் தொடக்கூட  மனம்வரவில்லை. விடிந்ததும் நல்லூருக்குப் போயே ஆகவேண்டும்.

தற்போதுதான் ஊருக்குப்போய் வந்து இருவாரம் லீவு எடுத்துக்கொண்டதால், வெளியே பக்கத்துத் தெருவுக்குப் போய்வரக்கூட அனுமதி தரமாட்டார்கள். இதற்கு ஒரேவழி, வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுவிட வேண்டும். யாருக்கும் தெரியாமல் பழைய ஸ்டோர் ரூம் நோக்கிச் சென்று, அதற்குள் எனது புத்தகப் பையை வைத்துவிட்டு உடனேயே நல்லூருக்கு போய்விடவேண்டும். எங்கள் வகுப்பு மாணவர்களில், கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பவன் நான் ஒருவன் மட்டுமே. மூர்த்திகூட என்வகுப்பானாலும் வேறு பிரிவில் உள்ளதால், அவனுக்கும் என்னைப்பற்றி கவனிக்க வாய்ப்பு இல்லை. மதியம் பன்னிரண்டரை உணவுவேளையில்கூட, விடுதியில் யாரும் கவனிக்கமாட்டார்கள்.

ஆனால், மாலை கல்லூரி விட்டதும் நாலரைமணிக்கு “தேநீர் வேளை”யில், மூர்த்தி நிச்சயம் தேடுவான். அதற்குள் நல்லபிள்ளையாக வந்துவிட வேண்டும். திட்டமிட்டுச் செயல்ப்பட்டேன்.

நாவலர் மண்டபத்தை நான் நெருங்கும்போது, எங்கோ தூரத்தில் நின்றுகொண்டிருந்த செல்வம், என்னைக் கண்டதும் பாய்ந்தோடிவந்து, என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு விம்மினானே பார்க்கலாம். என் கண்களிலும் கண்ணீர்.

வந்தவரெல்லாம், வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தனர். யாரையும் மனிதராக நினைக்கவோ, மதிக்கவோ நான் தயாராக இல்லை.

செல்வத்தின் எதிர்காலம்பற்றிய ஒரு தெளிவான முடிவு எனக்குள் தெரியவே, அவனை அழைத்துக்கொண்டு ஆரியகுளம்,. சுந்தரம்பிள்ளை அண்ணாச்சி கடையை நோக்கி நடந்தேன். கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது கடையில், அவனை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். செல்வத்தின் முகத்திலும் மலர்ச்சி தெரிந்தது. வாஞ்சையுடன் அவனின் தலையை வருடிவிட்டேன்.

“செல்வம்…. நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை…. நல்லவடிவாய் வேலையளைப் பழகி, நல்ல பொடியனெண்டு பேர் எடுக்கவேணும்…. விளங்கிச்சோ…. அதோடை…….” பேசி முடிக்கவில்லை. மனத்திலே சிறு தயக்கம் தெரிய அண்ணாச்சியை நோக்கினேன். முகத்திலே தெரியும் மாறாத சிரிப்புடன்,

“தம்பி…. சாப்பாட்டைத்தான் மென்னு முழுங்கணும்…. வார்த்தையை முழுங்கக்கூடாது…. கக்கிப்புடு…. உன் நல்லமனசுக்கு நீ எதுசொன்னாலும் சரியாத்தான் இருக்கும்…. யோசனை பண்ணிக்கிட்டிருக்காம சொல்லு….” பச்சைக்கொடி காட்டினார்.

இப்போது, என் தயக்கம் தீர்ந்தது. 

“வேறை ஒண்டும் இல்லை அண்ணை…. இந்தப் பொடியன் உங்களிட்டை வேலை செஞ்சாலும், எனக்காக இவனை தினசரி ரண்டு மணித்தியாலத்துக்கு ஒரு நல்ல தமிழ்வாத்தியாரிட்டை அனுப்பி, அவனைப் படிப்பியுங்கோ…. இனி அவன் பள்ளிக்கூடம் போய் படிக்கிறதெண்டது ஏலாத காரியம்…. அதேநேரம் படிப்புவாசனை கொஞ்சமெண்டாலும் அவனுக்கு கிடைச்சுக்கொண்டிருந்தாலே போதும்…. மிச்சத்துக்கு பரம்பரை ஊறலும் கொஞ்சம் கைகுடுக்கும்…. இதெல்லாம், அவன் உங்கடை பிடியிக்கை இருந்தாத்தான், நடக்குமெண்டது என்ரை நம்பிக்கை….”

அருகே வந்த அண்ணாச்சி எனது தோளிலே செல்லமாகத் தட்டினார்.

“தமிழ் நாட்டில சொல்லுவாங்க…. திருப்பதியில லட்டுக்கும், திருநெல்வேலியிலை அலுவாவுக்கும் தேடி அலையணுமாண்ணு…. அதுமாதிரி, யாழ்ப்பாணத்தில தமிழ் வாத்தியாரைத் தேடித்தான் பிடிக்கணுமா….. சரிசரி…. நீ ஒண்ணும் குழம்பிக்காதப்பா…. நீ சொன்னமாதிரியே செஞ்சு அவனுக்கு முழுக்கார்டியனாக இருந்து என்கூடவே வெச்சுக்கிறேன்….அதே டயிம்ல….”பேசி முடிக்காமல் இழுத்தார்.

“என்னண்ணை…. வார்த்தையை விழுங்கப்பிடாது எண்டு என்னட்டைச் சொல்லிப்போட்டு இப்ப நீங்கள் மட்டும் விழுங்கிறியள்…..” கேட்டேன் நான். அதற்கு பதிலளித்த அவர்,

“வேற ஒண்ணுமில்லைப்பா…. வழக்கம்போலை வெள்ளிக்கு வெள்ளி காலையில வந்து, உனக்குள்ள கோட்டா ரண்டுபொட்டலம் சாப்பாட்டையும் வாங்கிடு…. அம்புட்டையும் நீயே திண்ணுதீர்த்துப்புடு…..”

சொல்லிவிட்டு “கட கட”வெனச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் நான் மட்டுமல்ல. செல்வமும் சேர்ந்துகொண்டான்.

நேரம் காலை பத்துமணியை நெருங்கிக்கொண்டிருந்தது. சுந்தரம்பிள்ளை அண்ணாச்சி எவ்வளவோ கேட்டும் என்னால் எதுவும் சாப்பிட முடியவில்லை. இருண்டு போகவிருந்த ஒரு ஜீவனின் வாழ்விலே புதியதோர் வசந்தத்தை வீசத்தொடக்கிவிட்ட மகிழ்ச்சி, உள்ளத்தை நிரப்ப, அதைக் கொண்டாடும் முகமாக, ஏழாவது முறையாக, காலை-பத்து முப்பது காட்சி, “வசந்த மாளிகை” படம் பார்ப்பதற்காக, வெலிங்டன் திரையங்கை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன்.

bairaabaarath@gmail.com