மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள்” எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் கௌரவிப்பு.!

‘ஈழத்தில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற சிறந்த ஆளுமைகள் பலர் குறித்த தகவல்களை இளங்கோவன் திரட்டித் தந்திருக்கிறார். ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள்” நூலை வாசிக்கும்போது வியப்பாகவிருந்தது. சீனப் பெருந்தலைவர் மாஓவினால் பாராட்டப்பட்ட தோழர் சண்முகதாசன், மக்கள் இலக்கியக் கர்த்தா கே. டானியல், புதுநெறி காட்டிய பேராசான் கைலாசபதி, தமிழறிஞர் சிவத்தம்பி, அன்று தென்தமிழகத்தைக் கவர்ந்திருந்த இலங்கை வானொலியில் தன்குரல்வளத்தால் எம்மைச் சொக்கவைத்த பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன், சீனாவில் பல ஆண்டுகள் தமிழ்ப்பணியாற்றிய வீ. சின்னத்தம்பி, ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ்பெற்ற அழகுசுப்பிரமணியம் மற்றும் பல சிறந்த ஆளுமைகளைப்பற்றி, அவர்களுடன் பழகிய அனுபவங்களைச் சிறப்பாக நூலில் தந்துள்ளார் வி. ரி. இளங்கோவன். புலம்பெயர்ந்த ஈழத்து இளந்தலைமுறையினர்  மாத்திரமல்ல நாமும் இந்நூலை அவசியம் படிக்கவேண்டும். சிறந்த ஆவணமாகவுள்ள இந்நூலை அளித்த இளங்கோவன் எமது பாராட்டுக்குரியவர். நூலை அச்சிட்டு வெளியிட்ட மதுரை தழல் பதிப்பகம் இத்தகைய நல்ல நூல்களைத் தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும் ” இவ்வாறு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த மாதம் 23 -ம் திகதி (23 – 12 – 2019) நடைபெற்ற ‘நூல் அரங்கேற்றம்” நிகழ்வில் உரையாற்றிய கவிஞர் மூரா குறிப்பிட்டார்.

பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள்” நூல் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘நூல் அரங்கேற்றம்” நிகழ்வில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர் ப. அன்புச்செழியன் தொடக்கவுரையாற்றி ஆரம்பித்துவைத்தார். இலக்கிய மன்றங்கள் சார்பில் இளங்கோவன் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சி ஒழுங்குகளை முனைவர் க. சோமசுந்தரி, ஆய்வு வளமையர் ஜ. ஜான்சிராணி ஆகியோர் மேற்கொண்டனர். நூலாசிரியர் வி. ரி. இளங்கோவன் ஏற்புரையாற்றினார். இதனையடுத்து மீண்டும் உலகத் தமிழ்ச் சங்கத்தில் சிறப்புரையாற்றவேண்டுமென இளங்கோவனுக்கு அழைப்புக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் சிறப்புரை..! மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த மாதம் ‘நூல் அரங்கேற்றம்” நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள்” இடம்பெற்றமையையடுத்து கடந்த 2 -ம் திகதி (02 – 01 – 2020) மீண்டும் ‘தமிழ்க் கூடல்” நிகழ்வில் சிறப்புரையாற்ற இளங்கோவன் அழைக்கப்பட்டார். ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி” என்ற பொருளில் நீண்ட உரையை அவர் நிகழ்த்தினார். ஈழத்துப் பூதந்தேவனார் முதல் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்வரை எடுத்துக்கூறினார்.

நல்லூர்த் தமிழ்ச்சங்கம், ஈழகேசரிக் காலம், மறுமலர்ச்சிக் காலம், முற்போக்கு எழுச்சிக் காலம், தமிழ்த் தேசியவுணர்வுக் காலம், போர்க்காலம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என வகுத்து விளக்கிப் பேசினார். விமர்சனத்துறையில் புதுநெறி காட்டிய பேராசான் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரத்தினா, கனகசெந்திநாதன் ஆகியோரின் பணி குறித்தும் கவிதையில் சிறந்தோங்கிய மகாகவி, சில்லையூர் செல்வராசன், முருகையன், நீலாவணன், சுபத்திரன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் குறித்தும் நாவலில் சாதனை படைத்த கே. டானியல் படைப்புகள் குறித்தும் பல தகவல்களுடன் சுவைபடக் கூறினார். புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து அ. முத்துலிங்கம், முருகபூபதி, சோபாசக்தி, கருணாகரமூர்த்தி, சயந்தன், குணா கவியழகன் உட்பட பலரின் எழுத்துக்கள் குறித்தும் பட்டியலிட்டார். ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, சுவாமி விபுலானந்தர், தனிநாயகம் அடிகள் ஆகியோரின் தமிழ்ப்பணி குறித்தும் தமிழகத்தில் சிலரின் பாராமுகம் குறித்து குறிப்பிடத்தவறவில்லை. மதுரை உலகத் தமிழ்சங்கம்; உலகெங்குமுள்ள தமிழ் இலக்கிய அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி செயற்படுவதுடன் உலகெங்கும் வெளியாகும் இலக்கிய நூல்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் நற்பணிக்கும் பாராட்டுத் தெரிவித்ததுடன் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் இயக்குனரையும் பணியாளர்களையும் பாராட்டினார்.

இந்நிகழ்வில் வரவேற்புரையை முனைவர் க. சோமசுந்தரியும், நன்றியுரையை ஆய்வு வளமையர் ஜ. ஜான்சிராணியும் வழங்கினர்.

vtelangovan@yahoo.fr