இரண்டு பேராசிரியர்கள் இணைந்து எழுதிய “பாரதி மறைவு முதல் மகா கவி வரை”! மகாகவி பாரதிக்கு 136 வயது!

மகாகவி பாரதியார்– விரைவில் வெளிவரவிருக்கும் முருகபூபதியின் இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலின் இறுதி அங்கத்தில் இடம்பெறும் ஆக்கம் –

தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பிறந்திருக்கும் சுப்பிரமணியன் சுப்பையாவாகி, தனது 11 வயதில் பாரதியாகி, 1921 செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி சென்னையில் திருவல்லிக்கேணியில் மறைந்தார். அவருக்கு டிசம்பர் 11 ஆம் திகதி 136 வயது! பாரதியை இன்றும் சிலர் கவிஞராக மாத்திரமே பாரக்கின்றபோதிலும் அவர் ஒரு மகாகவி என்பதை நிரூபிப்பதற்காக பலர் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். யார் கவிஞன் என்று பாரதியே ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லியுள்ளார்: 

“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், எவனொருவன் வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி “. அத்துடன், ” நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் ”  எனவும் சொன்னவர் அவர். பாரதி தன்னை கவிஞனாகவே பிரகடனம் செய்துகொண்டிருந்தாலும், அவர் மகாகவியா..? அதற்கான தகுதி அவருக்குண்டா என்னும் வாதங்கள் நீண்ட காலம் தொடர்ந்தன. அத்துடன் அதற்கு எதிர்வினைகளும் பெருகின.  பாரதி மகாகவிதான் என்பதை வலியுறுத்தும் வகையில் இலங்கைப்பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ( 1932-2011) அவர்களும் தமிழகப்பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களும் இணைந்து நீண்ட நாட்கள் ஆய்வுமேற்கொண்டு எழுதிய நூல்தான் பாரதி மறைவு முதல் மகா கவி வரை.  வட இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் 1932 இல் பிறந்திருக்கும் இவர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கொழும்பு சாகிறா கல்லூரி ஆகியனவற்றின் பழைய மாணவர். தொடக்கத்தில் சாகிறாவில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கும் சிவத்தம்பி அவர்கள், இலங்கை நாடாளுமன்றில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். சிறந்த இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். அத்துடன் சமூகச்சிந்தனையாளர்.  பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று இளமாணி, முதுமாணி பட்டங்களையும் பெற்று லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதியானவர்.  இலங்கையில் கொழும்பு , யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களிலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியவர். பல நாடுகளில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றிய இவரது மாணாக்கர் பலரும் படைப்பிலக்கியவாதிகளாகவும் கலைஞர்களாகவும் இலக்கிய விமர்சகர்களாகவும் திகழுகின்றனர். நாடகத்துறையிலும் பங்களித்திருக்கும் பேராசிரியர் சிவத்தம்பி எழுதியிருக்கும் பல திறனாய்வு நூல்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உசாத்துணையாக விளங்குபவை. பல விருதுகளையும் பெற்றுள்ள பேராசிரியர் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாகப்போற்றப்படுபவர். இவர் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கொழும்பில் 2011 ஆம் ஆண்டு மறைந்தார்.

பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களும் தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட விமர்சகர். சமூகச்செயற்பாட்டாளர். இவரது தந்தையார் அந்தோணி சாமி அவர்கள் ராமதாஸ் என்ற புனைபெயரில் மலேசியாவில் இடதுசாரி இயக்கத்தை உருவாக்கியதனால் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டார்.  தனது சிறுவயது முதலே இடதுசாரி அரசியல் சிந்தனையாளராக விளங்கியிருக்கும் அ. மார்க்ஸ், தொடர்ச்சியாக சமூக விழிப்புணர்வு சார்ந்த போராளியாகவும் இயங்கிவருபவர். “பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்” எனச்சொல்லிவரும் இவரும் இலங்கை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள், விமர்சகர்களுடன் நெருக்கமான உறவை பேணிவருபவர். இலங்கை, இந்திய அரசியல் உட்பட அனைத்துலக அரசியல் மாற்றங்கள், போக்குகள் குறித்தும் எழுதியும் பேசியும் வரும் அ. மார்க்ஸ் அவர்கள், இலங்கைப்பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுடன் இணைந்து எழுதிய பாரதி மறைவு முதல் மகா கவி வரை நூலை தமிழ்நாடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்வெளியிட்டுள்ளது. இதுவரையில் இரண்டு பதிப்புகளை கண்டுள்ள இந் நூலில் நாம் பாரதி குறித்த தெளிவுகளையும் பெறமுடிகிறது. 

யார் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன பாரதி ஒரு மகாகவிதான் என்று தொடர்ச்சியாக வாதிட்டவர்கள் தொ.மு. சி. ரகுநாதனும் ஜீவானந்தமும். அவர்களின் கூற்றை உலகம் ஏற்கும் அளவுக்கு பாரதியின் சிந்தனைகளை அவரது படைப்புகளின் ஊடாகவே அவர்கள் இருவரும் வெளிச்சமாக்கினார்கள் என்பதை வரலாற்றுபூர்வமாக நிறுவும் முயற்சியாக இந்நூல் கருதப்படுகிறது. 

பெரியார் ஈ.வே. ரா அவர்களினால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கத்திலிருந்தவர்களும் அதிலிருந்து பிரிந்த தி. மு.க.வினரும் பாரதி பார்ப்பனர் குலத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்திற்காகவும் தெய்வங்கள் குறித்து அவர் பாடல்கள் புனைந்தமையினாலும் பாரதியை முதலில் ஏற்க மறுத்தனர். காலப்போக்கில் தி.மு.க. வின் உருவாக்கத்திற்கு காரணமாகவிருந்த சி. என். அண்ணாதுரை பாரதியை மறு மதிப்பீடு செய்தார். அதானலும் பாரதி குறித்து திராவிட இயக்கத்தினரின் அணுகு முறை மாறியதையும் இந்த நூல் தெளிவுபடுத்தியுள்ளது. அக்காலத்தில் வாழ்ந்த பண்டிதர் பரம்பரையில் வந்துள்ள பலர் பாரதியின் நவீனத்துவ சிந்தனைகள ஏற்க மறுத்தனர்.

இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதன் இந்நூலின் தேவை, முக்கியத்துவம் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” பாரதியைத்திரித்துக் கூறுபவர்களுக்கு எதிராக ஜீவா தொடங்கிய இயக்கம், உண்மையில் 1947 – க்குப்பின்னர்தான், அதாவது இந்தியா சுதந்திரமடைந்த பின்னர்தான் சூடு பிடித்தது. காரணம் இந்திய அரசியல் சுதந்திரம் பெற்றவுடனேயே, பாரதியின் பொருளாதார, சமுதாய லட்சியங்களை மறைக்கவும் மறுக்கவும் விரும்பியவர்கள் பாரதியைத் திரித்துக்கூறும் முயற்சிகளும் அதிகரித்தன. எனவே, ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், அத்தகையோருக்கும் எதிராக இத்தகையதோர் இயக்கத்தை நடத்துவது ஒரு சரித்திரத் தேவையாகவே மாறிவிட்டது.  இந்த இயக்கத்துக்கு முன்னோடியாகவும் முதல்வராகவும் இருந்த தோழர் ஜீவா மறைந்த பின்னர், அவர் தோற்றுவித்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இந்த இயக்கத்தை மேலும் முன்கொண்டு சென்றது. இறுதியில் ஜீவா தொடக்கிவைத்த இயக்கமும், சமூகத்தேவைகளின் காரணமாக வளர்ந்தோங்கி வந்த பாரதியின் தாக்கமும் சேர்ந்து பாரதியைப் பலவாறும் திரித்துக்கூற முயன்றவர்களின் வாயை அடைக்கச்செய்துவிட்டன. இதுதான் பாரதி மகாகவியாக அங்கீகரிக்கப்பட்டு நிலைபெற்றுவிட்ட வரலாறாகும். இந்த வரலாற்றை இந்நூலாசிரியர்கள் தர்க்கவியல் முறையில் தடம் கண்டறிந்து தக்க ஆதாரங்களோடும் மேற்கோள்களோடும் நமக்கு இனம் காட்டியுள்ளனர். இந்நூலின் மூலம் பாரதி சகாப்தம் பற்றிய வரலாற்றில் நமக்கு அத்தியாவசியமான ஒரு சரித்திரத்தேவை பூர்த்தியாகிறது என்றே சொல்லலாம். என்றாலும், சரித்திரம் என்பது, எந்தவொரு கட்டத்திலும் முற்றுப்புள்ளி வைத்து முடிவுறுவதல்ல. ஒரு கட்டத்தின் முடிவு அடுத்த கட்டத்தின் தொடக்கமேயாகும். பாரதி மகாகவிதான் என்பது உலகுணர நிலைநாட்டப்பெற்றுவிட்ட இந்நாளையிலும்கூட, பாரதியை திரித்துக்கூற முயலும் சில கீச்சுக்குரல்கள் அவ்வப்போது ஒலிக்கத்தான் செய்கின்றன. எனவே பாரதியின் உண்மையான பெருமையை உலகம் மேலும் நன்குணரச்செய்யும் பணியில் ஈடுபாடுள்ளவர்கள், இன்றும் புதிய புதிய தகவல்களை கண்டறிந்து இந்த வரலாற்றை மேலும் செழுமையாக்கி வளர்ப்பதற்கும் இந்த நூல் ஒரு தூண்டுகோளாகவும் அடிப்படையாகவும் துணையாகவும் நின்று நிலவும் என்பதே எனது நம்பிக்கை.”

ரகுநாதன் இந்த அணிந்துரையை பாரதி நூற்றாண்டின் பின்னர் 1984 ஆம் ஆண்டு பதிவுசெய்துள்ளார்.

” பாரதி – மகாகவி விவாதத்தின் பல்வேறு கோணங்களையும் பக்கச்சார்புகளையும் அறிந்துகொள்வதே எமது முயற்சி. அதனை இயன்றளவு இதில் விவரித்துள்ளோம். இந்நூல் வரலாற்றுப்பொருள் முதல்வாத அணுகுமுறையினடியாக வருவது. வரலாற்றுப்பொருள் முதல்வாதம் நம்மைப்பொறுத்த மட்டில் வெறும் அணுகுறை வாய்ப்பாடல்ல, எண்ணித்துணிந்த ஒரு கருத்தியல் நிலைப்பாடு” எனச்சொல்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. இந்த ஆய்வும் இதன் அவசியமும் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பது: ” பாரதியின் பெருமை ஒன்றுதான். அவனுக்குப்பின் வந்த எந்த உண்மையான, நேர்மையான கவிஞனாலும் அவனை மறுதலிக்கும் ஆக்கத்தைப் படைக்க முடியவில்லை. இந்த ஒரு பண்புதான் மகாகவி என்பானது இலச்சினை. அவனுக்குப்பின்னர் அந்த இலக்கியப்பாரம்பரியம் அவனுக்கு முன் இருந்ததுபோல் இருந்திருப்பதில்லை. அதை அவன் திசை திருப்பிவிடுகிறான்.”

அ. மார்க்ஸ், இந்நூலை சிவத்தம்பி அவர்களுடன் இணைந்து எழுதவந்ததன் நோக்கத்தையும் விபரித்துள்ளார். 

” இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழிலக்கிய வரலாற்றில் பாரதியின் இடம் பற்றிய சிந்தனை, இலக்கியத்திலும், சமூகவியலிலும் , கலை இலக்கியங்களின் சமூகப்பயன்பாடுகளிலும் ஆர்வம்தோன்றிய காலம் முதற்கொண்டே எனக்கிருந்ததுண்டு. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தமிழிலக்கியத்தின் போக்கையே திசை திருப்பிவிட்டவன் பாரதி என்கிற கருத்து, என்னைக்கவர்ந்த தமிழறிஞர்களின் கருத்துக்களால் உறுதிப்பட்டது. அதிகம் உணர்ச்சிகளுக்கிடங்கொடாமல், முற்றிலும் அறிவுபூர்வமாகச் சிந்தித்து, ஆணித்தரமாகத் தம் கருத்துகளைக் கூறுபவர்களும், தமிழாராய்ச்சிப்பாதையில் முக்கிய மைல் கல்களெனப்போற்றப்பெருபவர்களுமாகிய பேராசிரியர்கள் வையாபுரிப்பிள்ளை, சிவத்தம்பி, கைலாசபதி ஆகிய மூவருமே பாரதியிடம் நெருங்கியதுமே நிலை தடுமாறிச் சொக்கிப்போய் நிற்கிற வேடிக்கையை நான் பலமுறை ரசித்ததுண்டு. ” என பதிவுசெய்துள்ள மார்க்ஸ், ” பேராசிரியருடன் ( சிவத்தம்பி) இணைந்து பணியாற்றுவதென்பது பெருமைக்குரிய ஒரு பணிமட்டுமல்ல, அது ஒரு மகிழ்ச்சிகரமான பணியுங்கூட என்பதை அவருடன் பணியாற்றும் பேறு பெற்றோரே உணர்வர். பேராசிரியரை ஆசான் எனப்போற்றுவது எனக்கு பெருமை சேர்க்கிற விடயம். அது அவருக்கும் பெருமையளிக்கத்தக்கதாக இருக்குமாறு என் எதிர்காலப்பணிகள் அமைய வேண்டும் என்பது என் விழைவு” எனவும் சொல்கிறார்.

நூற்றுக்கணக்கான சான்றாதரங்களுடனும் பாரதி காலத்திலும் பாரதியின் மறைவையடுத்து உடனடியாகவே ஊடகங்களில் வெளியான செய்திகளின் பின்னணியிலும் ஆய்வுசெய்யப்பட்டுள்ள இந்நூலில், பாரதியின் மறைவு முதல் 1935 இல் நிகழ்ந்த முதல் சர்ச்சை தொடக்கம், பின்னாளில் வெகுசனத் தொடர்பு சாதனங்கள் பாரதியை பயன்படுத்திய முறைமை, பொது மக்களும் திராவிட முன்னேற்றக்கழகமும் பாரதியை மகாகவியாக ஏற்றுக்கொண்டமை, பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பாரதியை கம்பனுக்குப்பின்னர் தோன்றிய பெருங்கவியாக எடுத்துக்கூறிய செய்திகளையும் விபரிக்கிறது.

ஒரு கவிஞன் எவ்வாறு ஒரு பெருங்கவிக்குரிய அடையாளத்தை பெறுகிறார் என்பதற்கு ஆதாரமாக The Unknown Citizen என்ற கவிதையை எழுதிய புகழ்பெற்ற மேலைத்தேய கவிஞர் டபிள்யூ . எச் ஆடன் (W. H. Auden, (1907 – 1973) அவர்களின் சொல்லும் இலக்கணங்களையும் பேராசிரியர் அ. மார்க்ஸ் நமக்குத் தெரிவிக்கின்றார்.

அவை:

1. அவர் ஏராளமாக எழுதியிருக்கவேண்டும்.
2. அவரது கவிதைகள் பாடுபொருளிலும் அவற்றைக்கையாண்ட விதத்திலும் மிக அகன்ற பரிமாணங்களைத் தொட்டிருக்கவேண்டும். 
3. தொலைநோக்கு , கவித்துவம் இரண்டிலும் அப்பழுக்கற்ற தனித்துவத்தை ( Unmistakable Originality of Vision and Style) வெளிப்படுத்தியிருக்கவேண்டும்.
4. கவி நுட்பத்தில் ( Verse Technique ) கைதேர்ந்திருக்கவேண்டும்.
5. எல்லாக்கவிஞர்களையும் நாம் அவர்களின் படைப்புகளைப்பொறுத்து இளம் பருவத்தில் எழுதப்பட்டவை, முதிர்ச்சிக்குப்பின் புனையப்பட்டவை என வகைபிரிக்கலாம். பெருங்கவிஞர்களைப்பொறுத்தமட்டில் அவர்கள் இறக்கும்வரை முதிர்ச்சியுறுதல் முற்றுப்பெறுவதில்லை. 

(டபிள்யூ . எச் ஆடன் தொடர்பாக ஜெயமோகனின் வலைப்பூவிலும் ஒரு பதிவு இருக்கிறது என்பதையும் இங்கு பதிவுசெய்யவிரும்புகின்றோம்) 

அவர்களின் அக்கறை யாவும் தமிழ்மொழியிடத்தும் தமிழச்சாதியிடத்திலும் நீடித்திருந்தாலும், இந்த நூற்றாண்டில், அதாவது பாரதி நூற்றாண்டு முடிந்து அதற்குபின்னர் வரும் நூற்றாண்டில் தமிழ்மொழி , தமிழ் இனம் பற்றி வேறுவகையான ஆராய்ச்சிகளும் தரவுகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதற்கு முன்னர் ஒரு சிறிய கதையை சொல்வோம்.

சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் மரியா ஸ்மித் ஜோன்ஸ் என்ற பெண்மணி இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது 89. பழங்குடி இனத்தைச்சேர்ந்த அவர் அம்மக்களின் மொழிகளில் ஒன்றான ” ஏயக்” என்ற மொழியை பேசியவர். அவர்தான் அந்த மொழியை இறுதியாகப்பேசியவர். அவருக்குப்பின்னர் அந்த மொழியை எவரும் பேசமாட்டார்கள் என்பது தெரிந்தே, ஏயக் மொழிக்கான அகராதியையும் தயாரித்தார். இனிமேல் யாராவது அந்த அகராதியின் துணையோடு படித்தால்தான் அம்மொழி வாழும்.  இரண்டு வாரத்திற்கு ஒரு மொழிவீதம் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அல்லது காணமல்போகிறது. அழிந்துபோவதும் காணாமலாவதும் ஒன்றுதான்.

மறைந்த மரியா ஸ்மித் ஜோன்ஸ் வாழ்ந்த அலாஸ்காவில் எஞ்சியிருக்கின்ற மேலும் சில மொழிகளும் அழிந்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு அழியும் மொழிகளுடன் அவற்றின் வரலாறும் அழிந்துவிடலாம். ஒரு மொழி தொடர்ந்து வாழவேண்டுமாயின் குறைந்தது ஒரு இலட்சம்பேராவது அந்த மொழியை பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ்மொழி அழிந்துவிடாது என்று இந்த நூற்றாண்டில் நாம் ஆறுதல்கொண்டாலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும், இலங்கை, தமிழ்நாடு, மற்றும் மலேசியா, சிங்கப்பூரிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் தமிழ் சினிமாக்களிலும் தமிழின் தேவை குறைந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. வெளிநாடுகளில் தமிழர்களின் அரங்கேற்றங்கள் பதச்சோறு.  தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இலங்கையில் பெருகிவரும் சர்வதேசக்கல்லூரிகள் ( International Colleges) மற்றும் ஒரு உதாரணம். அமெரிக்காவில் வாழும் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி மீராவுக்கு தமிழ்பேசமுடியவில்லை என்றால், அதற்காக பாரதி மீண்டும் உயிர்பெற்றுவந்து அவரை கோபித்துக்கொள்ளத்தான் முடியுமா…? 

யாழ்ப்பாணத்திற்கு சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் வருகைதந்திருந்த இஸ்ரேல் விஞ்ஞானிகள் ” இந்த மண்ணின் தண்ணீர் உவர் நீராக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்று எச்சரித்துவிட்டுச்சென்றார்களாம். ஆனால், அதனை அரசியல் தலைவர்களோ மக்களோ கவனத்தில் கொள்ளவில்லை. 60 ஆண்டுகள் கடப்பதற்கு முன்பே யாழ்குடாநாட்டின் தண்ணீரின் சுவை எவ்வாறு மாறியிருக்கிறது…..? ஒவ்வொருவரும் இந்த மாற்றத்தை எமது தாய்மொழிக்கு எதிர்காலத்தில் நேர்ந்துவிடவிருக்கும் மாற்றத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தல் வேண்டும் என்பதும் இந்த ஆய்வின் முக்கிய செய்தியாகும்.  எந்தவொரு மொழியும் வழக்கிலிருக்கும்வரையில் வாழும் என்ற ஆறுதலுடன், தேமதுரத்தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம் என்ற பாரதியின் கனவுடன் நாம் எமது பணிகளைத்தொடருவோம். 

கனவு மெய்ப்படல் வேண்டும்.

letchumananm@gmail.com