இலண்டன் மாநகரில் பேராசிரியர் ”சாகித்திய ரத்னா” சபா ஜெயராசாவுக்குப் பாராட்டு..! ”இணுவில் ஒலி” சஞ்சிகை அறிமுகம்..!

இலண்டன் மாநகரில் பேராசிரியர் ''சாகித்திய ரத்னா" சபா ஜெயராசாவுக்குப் பாராட்டு..! ''இணுவில் ஒலி" சஞ்சிகை அறிமுகம்..!பேராசிரியர் – ”சாகித்திய ரத்னா” சபா ஜெயராசா இலண்டன் மாநகரில் கடந்த சனிக்கிழமை மாலை (28 – 09 – 2013) பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ”இணுவில் ஒலி” சஞ்சிகை அறிமுகமும் இடம்பெற்றது. இலண்டன் தமிழ் இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் ஏற்பாட்டில் 28 -ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பிரபல எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணன் தலைமை வகித்தார். திருமதி வேலையா தமிழ்மொழி வாழ்த்தினையும் பக்திப் பாடல்களையும் பாடினார். திருமதி நிர்மலா விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மூத்த பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் பேராசிரியரது பணிகளைக் குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சபா ஜெயராசா தம்பதிகளுக்குப் பொன்னாடை போர்த்து – மாலை அணிவித்து – நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.  இரா. உதயணன் பேராசிரியரின் பல்துறை ஆளுமைகள் குறித்து விரிவாகத் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

பேராசிரியர் தமது ஏற்புரையில் உதயணனின் எழுத்துக்களின் யதார்த்தப் போக்கினைச் சுட்டிக்காட்டி – வன்னி மண்ணின் நிகழ்வுகளை அவர் எழுத்துக்களில் கையாண்ட சிறப்பினைக் குறிப்பிட்டதுடன் ”இணுவில் ஒலி” சஞ்சிகை இலண்டனில் சிறப்பு மலர் வெளியிட்டு அறிமுகமாவதையிட்டுப் பாராட்டும் தெரிவித்தார். பின்னர் – ”பின்நவீனத்துவச் சிந்தனைகள்” என்ற பொருளில் பேராசிரியர் சிறப்புரையாற்றினார். ”இன்று உலகமெங்கும் முன்னிலைப்படுத்தப்பட்டு பலராலும் பேசப்படும் சிந்தனைக் கோட்பாடாக பின்நவீனத்துவம் விளங்குகிறது. எல்லாத்துறைகளிலும் அது தனது செல்வாக்கைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. முன்பு முன்னிலைப்படுத்தப்பட்ட கோட்பாடுகள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பின்நவீனத்துவச் சிந்தனைகள் வற்புறுத்துகின்றன. இலக்கியத்திலும் பின்நவீனத்துச் சிந்தனைகள் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் எம்மால் நம்பப்பட்ட சில செயற்பாடுகளுக்கு நேர் எதிரான கருத்துக்களைப் பின்நவீனத்தும் சுட்டிக்காட்டி நிற்கிறது” என்று பல விளக்கங்களைக் கூறிய பேராசிரியர் – கனவுகளைப் பற்றியும் மனங்களைப் பற்றியும் விளக்கிப் பின்நவீனத்துவச் சிந்தனைகள் சாதகமான விளைவுகளையும் அதேவேளை பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றன என்ற தமது கருத்துக்களை முன்வைத்தார்.

இலண்டன் மாநகரில் பேராசிரியர் ''சாகித்திய ரத்னா" சபா ஜெயராசாவுக்குப் பாராட்டு..! ''இணுவில் ஒலி" சஞ்சிகை அறிமுகம்..!

எழுத்தாளர் நவயோதி யோகரட்ணம்”இணுவில் ஒலி” சஞ்சிகை குறித்த ஆய்வுரையை நிகழ்த்தினார். இணுவில் கிராமம் குறித்தும் அங்கு வாழ்ந்த கலைஞர்களைப் பற்றியும் திரு. சிறிரங்கன் எடுத்துரைத்தார். சஞ்சிகை ஆசிரியர் தம்பு சிவா ஏற்புரையாற்றினார். மூத்த பத்திரிகையாளர் – ”புதினம்” பத்திரிகை ஆசிரியர் ஈ. கே. இராஜகோபால் – ”இணுவில் ஒலி” சஞ்சிகை ஆசிரியர் தம்பு சிவா ஆகியோரும் இலண்டன் தமிழ் இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் தமிழினி குலேந்திரன் – என். இராசையா – சந்திரமோகன் – தி. உதயகுமார் – ரென்ஸி இரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இரவு உணவு விருந்துபசாரத்துடன் விழா இனிதே நிறைவெய்தியது.

இலண்டன் மாநகரில் பேராசிரியர் ''சாகித்திய ரத்னா" சபா ஜெயராசாவுக்குப் பாராட்டு..! ''இணுவில் ஒலி" சஞ்சிகை அறிமுகம்..!

vtelangovan@yahoo.fr