படச்சுருள் மாத இதழ் நடத்தும் “அரசியல் சினிமா” தொடர் திரையிடல் நிகழ்வு…

படச்சுருள் மாத இதழ் நடத்தும் "அரசியல் சினிமா" தொடர் திரையிடல் நிகழ்வு...02-07-2015, வியாழன், இரவு 7.00 மணிக்கு, | ஸ்பேசஸ் அரங்கு, பெசன்ட் நகர், தலபாக்கட்டி உணவகம் அருகில்.

திரையிடப்படும் படம்: Father Son & Holy War (Directed by: Anand Patwardhan)

நண்பர்களே, மும்பை பிரித்வி அரங்கில் ஆனந்த் பட்வர்தன் தொடர்ச்சியாக அரசியல் பேசும் ஆவணப்படங்களை திரையிட்டு வருகிறார். நாம் தலைகீழாக புரண்டாலும் அத்தகைய படங்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. தவிர அரசியல் படங்களை திரையிட்டு விவாதிப்பது என்பது ஒரு கலாச்சாரத் தேவை. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான படங்களை தொடர்ந்து திரையிட தமிழ் ஸ்டுடியோ சார்பாக முன்னமே முயற்சித்து இடம் கிடைக்காமல் தவித்து வந்தேன். ஆர்.கே.வி ஸ்டுடியோ மட்டுமே கிடைக்கும். ஆனால் அவர்கள் கேட்கும் வாடகை 3௦ ஆயிரம். மாத திரையிடலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. சென்ற வாரம் ஆனந்த் பட்வர்தன் சென்னை வந்திருந்தபோது, இது பற்றி விவாதித்தேன். அருகில் இருந்த சதானந்த மேனனிடம் ஸ்பேசஸ் இடத்தை அத்தகைய அரசியல் திரைப்படங்களை திரையிட கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் வார இறுதி நாட்களில் அதாவது விடுமுறை நாட்களில் கொடுக்க இயலாது, வியாழன் மட்டுமே அரங்கு கிடைக்கும் என்றார். அருகில் இருந்த ஆனந்த் பட்வர்தன் அரங்கு கிடைக்க வேண்டும் அதுதான் முக்கியம். முதலில் ஒப்புக்கொள்ளுங்கள், ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமல் போகலாம். போக போக வந்துவிடுவார்கள் என்றார். சரி என்றேன்.

அதன் படி இனி ஒவ்வொரு மாதமும் முதல் வியாழன் பெசன்ட் நகரில் உள்ள ஸ்பேசஸ் அரங்கில் அரசியல் படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம். முதல் படமாக ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஃபாதர் சண் & ஹோலி வார் ஆவணப்படத்தை திரையிடவிருக்கிறோம். மதவாத சக்திகள் நாடு முழுக்க தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும்போது, இப்படியான அரசியல் படங்களை திரையிடுவது மிக முக்கியமான கள செயல்பாடு. எனவே இந்த சமூக பணியில் நண்பர்கள் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். வேலை நாள் என்பதால்தான் இரவு 7.3௦ மணிக்கு திரையிடலை ஏற்பாடு செய்திருக்கிறோம். சிரமம் பாராமல் நண்பர்கள் இத்தகைய திரையிடலில் பங்கேற்று திரையிடலை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் படங்களின் மிக முக்கிய தேவை, திரையிடலை தொடர்ந்த விவாதம். எனவே இந்த தொடர் திரையிடல் நிகழ்வில், விவாதக் குழு என்கிற புது முறையையும் அறிமுகம் செய்யவிருக்கிறோம். இந்த விவாதக் குழுவினர் விவாதத்தை முன்னெடுப்பார்கள். அதனை தொடர்ந்து பார்வையாளர்களும் விவாதத்தில் தங்களை இணைத்துக்கொண்டு ஒரு கலந்துரையாடலை உருவாக்கலாம்.

இந்த மாத விவாதக்குழு:

அ.குமரேசன்,
கவின் மலர்,
பிரளயன்.

தொடர்புக்கு: 9840698236

thamizhstudio@gmail.com