மகாபாரத பாண்டவர் சபையில் அடித்துக்கொல்லப்பட்ட “துணிச்சலான ரிஷி” சார்வாகன் பெயரை புனைபெயராக்கிய இலக்கிய ஆளுமை மறைந்தார். தொழுநோயாளருக்கு சிகிச்சையளித்த மனிதநேய மருத்துவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

எழுத்தாளர் சார்வாகனன் மறைவு!சமகாலத்தில்  மறைந்தவர்களின்  அறையினுள்தான்  வாழ்கின்றேனா….?  இந்தக்கேள்வியை  எனக்கு  நானே   கடந்த  ஆண்டின்  தொடக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டே  இருக்கின்றேன்.  ஆனால்,  இந்தக்கேள்விக்கு  பதில் இல்லை.   இந்த  ஆண்டின்  இறுதியும்  மறைந்தவர்களின்  அறையினுள்தான் என்னை  முடக்கிப்போட்டிருக்கிறது.   எனது  அறையிலிருக்கும்  கணினியை திறக்கும்பொழுதே   பதட்டம்தான்  வருகிறது.

துயில்  மறைந்து  பல   மாதங்கள்.   துயரம்  கப்பிய  சிந்தனைகளும்  அப்படியே  பல  மாதங்களாக  ஓடுகிறது.   முற்றுப்புள்ளியில்லாத  நீண்ட வசனங்களையே  எனது  அறையிலிருந்து  எழுதுகின்றேன்.   பழகியவர்கள் தெரிந்தவர்கள்  இலக்கியப்பாதையில்  இணைந்து  வந்தவர்கள் ஒவ்வொருவராக  விடைகொடுக்கும்பொழுதும்  அவர்களின்  படங்கள் நிரம்பியிருக்கும்   எனது  கணினியை  தினமும்  பார்க்கும்பொழுதும் நீண்டபொழுதுகள்   தினமும்  செலவிடும்  இந்த  அறை   எனக்கு மறைந்தவர்களின்   அறையாகவும்,   அவர்கள்  என்னோடு  பேசிக்கொண்டிருக்கும்    அறையாகவும்  மாறிவிட்டது.

கடந்த  20  ஆம்   திகதி  ஞாயிற்றுக்கிழமை   அவுஸ்திரேலியா  மெல்பனில் எமது  அருமை   இலக்கியச்சகோதரி  அருண். விஜயராணியை  அவருடைய இறுதிப்பயணத்தில்  வழியனுப்பிவிட்டு  மறுநாள்  21  ஆம்  திகதி  வீடு  திரும்பி  அவருடைய   இறுதி    நிகழ்வுகளை  மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கையில்  அடுத்த  செய்தி  தமிழ்நாட்டிலிருந்து தளம்  ஆசிரியரும்  மூத்த  எழுத்தாளர்  அகிலனின்  மருமகனுமான  பா. ரவியிடமிருந்து  வருகிறது.

” முருகபூபதி,  எங்கள்  சார்வாகன்  மறைந்தார்.”

” ஆளுமைகளையெல்லாம்  உம்மிடம்  அழைத்துக்கொள்ளும் வேலையைத்தான்  தொடர்ந்து  பார்க்கிறீரா…? ”   என்று  அந்தக்கடவுளிடம் உரத்துக்கேட்கின்றேன்.  ஆனால்,  எனக்கிருக்கும்   அந்த  இறை நம்பிக்கைகூட   இல்லாத  ஒரு  மகத்தான  மனிதர்தான்  ஸ்ரீநிவாசன்  என்ற சார்வாகன். அவர்    பிராமணர்  சமூகத்தைச் சேர்ந்தவர்.  ஆனால்,  தனக்கு  மதம் மீதான   நம்பிக்கை ஏன்  இல்லாமல்  போனது…?  என்று  என்னிடம்  ஒரு உண்மைக்கதையையே   மெல்பனுக்கு  வந்திருந்த சமயத்தில் சொல்லியிருக்கிறார்.

யார்  இந்த  சார்வாகன்….?

ஒருகாலத்தில்  எழுத்து  இதழில்   அறிமுகமாகி  மிகவும்  குறைந்த எண்ணிக்கையில்  சிறுகதைகள்  படைத்துக்கொண்டு,  மருத்துவராக தேர்ச்சிபெற்று   தொழுநோயாளர்களுக்கு  சிகிச்சை  அளித்த  நிபுணர். இவருடைய   மனிதநேய  மருத்துவசேவையை   பாராட்டிய  இந்திய  மத்திய அரசு   ஜெயில்சிங்  ஜனாதிபதியாக  இருந்த  காலத்தில்  பத்மஸ்ரீ   விருது வழங்கி    கௌரவித்தது.   இவருடைய  மருத்துவ  ஆய்வுக்கு தமிழ்நாடு மருத்துவக்கல்லூரியில்   ஸ்ரீநிவாசன்  கருத்தியல் (Srinivasan Concept)  என்ற அங்கீகாரம்   கிடைத்ததுடன்,  மாணவர்களின்  பயன்பாட்டுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சில  வருடங்களுக்கு  முன்னர்  தென்  அவுஸ்திரேலியா  மாநிலத் தலைநகரம்  அடிலைற்றில்  நடந்த  தொழுநோய்  மருத்துவ  சிகிச்சை நிபுணர்களின்  மாநாட்டிலும்  கலந்துகொண்ட  சார்வாகன்,  அங்கும்  விருது வழங்கி   கௌரவிக்கப்பட்டார்.

1970 களில்   இவருடைய  அமரபண்டிதர்  என்ற  குறுநாவலை   தமிழ் நாடு வாசகர்  வட்டம்  வெளியிட்ட  அறுசுவை   தொகுதியில்  படித்தேன்.  இந்த அபூர்வமான  சிறந்த  தொகுப்பில்  இந்திராபார்த்தசாரதி (உச்சிவெய்யிலில்) , கி. ராஜநாராயணன் (கிடை) ஆகியோரும்  எழுதியிருக்கின்றனர். அக்காலப்பகுதியில்  இலக்கியச்சிந்தனைக்காக  இவருடைய  ‘கனவுக்கதை’ யைத்தான்  சுந்தரராமசாமி  சிறந்த  சிறுகதையாகத் தெரிவுசெய்தார்.  நகுலன்  தொகுத்த  குருஷேத்திரம்  தொகுப்பில்   சின்னூரில்  கொடியேற்றம்   என்ற    சிறுகதையை  சார்வாகன்  எழுதினார். பண்டிகைக் காலக்கதைகள்  என்ற  பலமொழிகளில்  வெளியான சிறுகதைகளில்   ஒன்றாக  அதனையும்  தெரிவுசெய்து  ஆங்கிலத்தில் வெளியிட்டபொழுது  அக்கதையை   மொழிபெயர்த்தவர்  மூத்த  இலக்கிய விமர்சகர்   வெங்கட் சாமிநாதன்.

ஜெயகாந்தன்   நடத்திய  ஞானரதம்  இதழில்   சார்வாகனின்  வளை   என்ற கதை   வெளியாகி  சர்ச்சையும்  நடந்தது. ஞானரதம்  இதழை   வெளியிடும்பொழுது , ”  உங்கள்  சிறுகதைகளை பிரசுரிக்க முடியாது  என்று  ஏதும்  இதழ்கள்  மறுத்து  திருப்பியனுப்பினால் ஞானரதத்திற்கு  அதனை   உடனே  அனுப்புங்கள்.   ஞானரதம்  ஏற்று பிரசுரிக்கும் ”   என்று  காலத்தின்  இடிமுழக்கமாக  வாழ்ந்த  ஜெயகாந்தன் அப்பொழுது   பிரகடனம்  செய்திருந்தார்  என்பதும்  மறக்கமுடியாத  செய்தி.

சார்வாகனின்  படைப்புகளைப் படித்தால்  காஃப்கா   நினைவுக்கு  வருவார் என்பது   விமர்சகர்களின்  கருத்து.    சார்வாகனின்  படைப்புகள் வித்தியாசமானவை.    மறைபொருளாக  அவற்றின்  உள்ளடக்கம் சித்திரிக்கப்படும். குறைந்த  எண்ணிக்கையில்  எழுதி  தனக்கென  தனித்துவமான வாசகர் வட்டத்தை   உருவாக்கிக்கொண்ட  சார்வாகனின்  நெருங்கிய  நண்பர்  தி. ஜானகிராமன்.   ஆனால்,  அவருடைய  மோகமுள்   நாவலை  படிக்கவில்லை    என்று  அவரிடமே  துணிந்து  சொன்னவர்.

” ஏன்  அவரிடம்  அப்படிச்சொன்னீர்கள்…? ”  என்று  1995  ஆம்  ஆண்டு சார்வாகனிடம்   நான்  கேட்டதற்கு ” அது  பெரிய  புத்தகம்.  அதிகம்   பக்கங்கள் ”    என்று    ஒரு  குழந்தையைப்போன்று  சொன்னபொழுது  அவருக்கு  66   வயது.  கடந்த  21  ஆம்  திகதி  திங்கட்கிழமை   மலை 6.15  மணிக்கு   சார்வாகன்  தமது  86  வயதில்  திருவான்மியூர்  வால்மீகி  நகரில் தமது  இல்லத்தில்  மறைந்தார்.

தமிழ்நாட்டில்  வெளியான  எந்தவொரு  வணிக  இதழ்களிலும்  எழுதாமல் சில   சிற்றிதழ்களில்  மாத்திரம்  எழுதி,  தன்னை தக்க வைத்துக்கொண்ட தனித்துவமான  ஆளுமை. எதுக்குச்சொல்றேன்னா  என்ற  சிறுதைத்தொகுதியை  க்ரியா  1993  இல் வெளியிட்டது.

” உண்டு ,  இல்லை  என்னும்  இரு சொற்கள்
என்னை –
தொல்லை  மிகைப்படுத்தி  தோற்சுருக்கம்  ஏற்றுவிக்கும்
சை –
எது  எதுவோ  இருந்தென்ன –  போயென்ன
எங்கே  பிறர்  துயர்  துடைக்கும்
என்கை “

இவ்வாறு  தனது  வாழ்வையும்  பணிகளையும்  இரத்தினச்சுருக்கமாக கவிதையில்  அவர்  சொன்னது  இன்னமும்  எனது  காதில்  ஒலிக்கிறது. அவரைச்சந்தித்ததும்  எதிர்பாராத  தருணம்தான்.

மெல்பன்  ஸ்ரீ சிவா விஷ்ணு   ஆலயத்திற்கு  சென்றிருந்தபொழுது,  அன்று நல்ல   மழை.  உள்ளே  என்னைச்சந்தித்த  பாலம்  லக்ஷ்மணன்  அம்மா,  ” பூபதி  எழுத்தாளர்  சார்வாகன்  வந்துள்ளார் ” – என்று  ஆச்சரியமான  தகவல்  சொன்னார்.

” எங்கே…?”

” என்னுடன்தான்  வந்திருக்கிறார்.  அவர்  எமது  உறவினர்.  கடவுள்  நம்பிக்கை   இல்லையென்றாலும்  அவுஸ்திரேலியாவில்  கோயிலும் பக்தர்களும்  எப்படி  இருக்கிறார்கள்  என்பதையாவது  வந்து  பாருங்கள் ” என்று   அழைத்துவந்திருக்கின்றேன்.”  என்று  சொன்ன  பாலம்  அம்மா, அவரைத்தேடினார்.

சார்வாகன்  ஆலயத்தின்  வாசலில்  நின்று  அந்த  மழையை ரசித்துக்கொண்டிருந்தார்.

எனக்கு   உடனே,  மழைக்கும்  பள்ளிக்கூடம்  பக்கம்  ஒதுங்காமல்  அப்படி ஒதுங்க   நேர்ந்தாலும்  பள்ளியை   ரசிக்காமல்  மழையை   ரசித்த  கி. ராஜநாராயணன்தான்  உடனே  நினைவுக்கு  வந்தார். அவரை  அன்று  மெல்பனில்  எதிர்பாராமல்  சந்தித்தது முதல்  எனது இலக்கிய   நண்பர்கள்  வட்டத்தில்  சார்வாகனும்  இணைந்தார். இறுதியாக   கடந்த  2013  ஆம்   ஆண்டு    கோடை காலத்தில்  சென்னையில்   நின்றபொழுது  நண்பர் ‘ தளம்’  ரவி   அவருக்கு  தகவல் சொல்லவும்   தொலைபேசியில்   தொடர்புகொண்டார்.  அப்பொழுது  நான் அவுஸ்திரேலியாவுக்கு  புறப்படும்  தருணத்திலிருந்தேன்.   அடுத்த  தடவை வரும்பொழுது  சந்திப்போம்  என்றேன். இராமச்சந்திரா   மருத்துவமனையில்  இருந்த  ராஜம் கிருஷ்ணனைப்பார்த்த   தகவல்  சொன்னேன்.   ” அருகே  இருந்தும்  அவரை  நாம்   இன்னும்  பார்க்கவில்லை.   தொலைவில்  இருந்து  வந்து  பார்த்துவிட்டுச்செல்கிறீர்கள்.   இங்கு  வந்தால்  உங்களால் எத்தனைபேரைத்தான்    பார்க்க முடியும்.   வெளியே   வெய்யில்  வேறு சுட்டுக்கொளுத்துகிறது.   அடுத்தமுறை வாருங்கள்.   ஆறுதலாகப் பேசுவோம் ” – என்ற   அந்த  அமைதியான  குரல்  ஆறுதலாகவே   அடங்கிவிட்டது. 

மூன்று  முடிச்சு,   வெள்ளை ரோஜா,  கவரிமான்  முதலான   படங்களில் தந்தை   வேடத்தில்  தோன்றிய  டில்லி  விசுவநாதன்,   இந்திய இராணுவத்தளபதி   ஹரிஹரன்  ஆகியோரின்   உடன்  பிறந்த சகோதரன்தான்    ஸ்ரீநிவாசன்  என்ற  சார்வாகன். பாலம் லக்ஷ்மணனுக்கு  சகோதர உறவு.   இருவருமே   ஒரே  வயதினர். மெல்பனில்   அவரை   வீட்டுக்கு  அழைத்து  உபசரித்தபொழுது  நீண்ட பொழுதுகள்    உரையாற்றுவதற்கு  சந்தர்ப்பம்  கிடைத்தது.   1951  ஆம்  ஆண்டு தான்  சென்னை   மருத்துவக்கல்லூரியில்  மாணவனாக  இருந்தபொழுது அங்கிருந்த  விளையாட்டுக்குழுவில்  இணைந்து,  இலங்கை  வந்து  எங்கள் நீர்கொழும்பு    மாரிஸ்டலா  கல்லூரியில்  விளையாடியதுடன்  அங்கு  சில நாட்கள்    நின்றதையும்  நினைவுகூர்ந்தார்.

அப்பொழுது   இந்த  உலகை   எட்டிப்பார்த்த  மூன்று  மாதக்குழந்தையாக இருந்திருக்கின்றேன்   என்று  அவரிடம்  சொன்னேன். ஸ்ரீனிவாசன்   எப்படி  சார்வாகனாக  மாறினார்…? ” மருத்துவராக   பணியாற்றிய காலத்தில்  ஆந்திராவில்  கொடிய  பஞ்சம் தலைவிரித்தாடியது.    மழை   இல்லாமல்  வரட்சியால்  நிலங்கள்  பசுமை இழந்து   பயிர்கள்  வாடியதனால்  வந்த  பஞ்சமா…? அல்லது,  அங்கு  மக்கள் வறுமைக்கோட்டிற்கும்  கீழே  நிற்கிறார்களா…? என்பதை அறிந்துகொள்வதற்காக  அங்கு  சென்றேன்.

மழைக்கும்   குறைவில்லை.   வயல்கள்  பச்சைக்கம்பளம் விரித்திருந்ததுபோல்    ரம்மியமாக  காட்சியளித்தது.   கடைகளில் தானியங்கள்   தாராளமாக  இருந்தன. ஆனால்,  ஏழைகள்  அடுத்த  வேளைக்கும்  உணவின்றி,   புல்பூண்டுகளையும் இறந்த   ஆடு மாடுகளையும்  சமைத்துச்சாப்பிட்டார்கள். அங்குதான்  அரச  இயந்திரம்  எவ்வாறு  தவறான  பாதையில்  இயங்குகிறது  என்பதைக் கண்டேன்.   எனது  சிந்தனையில்  சமூகம், சாதி அமைப்பு,    அரசியல்,  மக்கள்,   தொடர்பாக  மாற்றங்கள்  தோன்றுவதற்கு ஆந்திராவில்   அன்று  நான்  கண்ட  காட்சிகள்தான்  அடிப்படை “- என் றார் எனது  நூல்களைப் பார்க்கவேண்டும்  என்றார்.  அவை   இருக்கும்  எனது வீட்டின்   நூலகம்  அறையே  வீட்டின்  சுவாமி   அறையாகவும்  இருந்தது. அதற்குள்  அழைத்துச்சென்றேன்.

அங்கு   நூல்களையும்  சுவாமி  படங்களையும்  மாறி  மாறிப்பார்த்தார். அந்தப்பார்வையில்   நூலிழை   வித்தியாசங்கள்  தென்பட்டன. ஆனால்,  அவர்  மௌனமாக  நூல்களைப் பார்த்தார்.   எதுவும் சொல்லவில்லை. இராப்போசனம்  அருந்தியபின்னர்,  அந்த  இரவு  அவரை அழைத்துக்கொண்டு   அவர்  அன்று  தங்கியிருந்த  ஒரு  மருத்துவர் வீட்டிற்குச்சென்றேன். காரினுள்    நடந்த  உரையாடலில்  அவரிடமிருந்து  மேலும் கேட்டுத்தெரிந்துகொண்டவை: – பெரியாரின்   பகுத்தறிவுவாத  சிந்தனைகளினால்  நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா…? ” பெரியாரின்  அரசியல்  சமூக  சீர்திருத்தம்  தொடர்பான  கருத்துக்களில் உடன்பாடு   இருக்கிறது.  ஆனால்,   அவருடைய  மதம்  தொடர்பான விமர்சனங்களிலும்   செயல்பாடுகளிலும்  எனக்கு  உடன்பாடே  இல்லை. பிள்ளையார்   சிலையை   பிள்ளையார்  என  ஏற்றுக்கொண்டதனால்தானே அதனை    செருப்பால்  அடித்தார்கள்.   அது  வெறும்  கல்தான்   என்றால் விட்டுவிட்டுப்போகலாமே.    ஏன்   செருப்பைத்தூக்கினார்கள்….? “

சார்வாகன்   என்ற   புனைபெயர்  எப்படி  வந்தது…?

குருஷேத்திர களத்தில்  கௌரவர்களை  அழித்து  வெற்றிபெற்ற பாண்டவர்கள்,   அரசையும்  அதிகாரத்தையும்  பொறுப்பேற்று  தருமருக்கு மூடிசூட்டி  பட்டாபிஷேகம்  செய்தபொழுது,   அந்தச்சபையில்  இருந்த சார்வாகன்  என்ற  ரிஷி   எழுந்து, ”  தமது  பாட்டன்மார்,  மற்றும் உறவினர்களையெல்லாம்  கொன்றழித்துவிட்டுத்தான்  இந்த  தருமர் அரசபதவி    ஏற்கிறார்.   இது  தகாத  செயல்.   மற்றவர்களின்  அழிவில் உருவாகியுள்ள   இந்த   அரசை   ஏற்கமுடியாது ”  என்று   குரல்  எழுப்புகிறார்.

இப்படி  ஒரு  எதிர்ப்புக்குரலை  சற்றும்  எதிர்பார்க்காத அரச சபையிலிருந்தவர்கள்  – அந்த  ரிஷியை   அடித்தே  கொன்றுவிடுகிறார்கள். இவ்வாறு  தனக்கு  சரியெனப்பட்டதை  துணிந்து  அரச  சபையில் சொன்னவர்தான்   சார்வாகன்.    அவர்  என்னைப்பெரிதும்   கவர்ந்தார். அவருடைய   சார்வாக  மதத்தில்  பாஞ்சாலியும்  இணைந்திருந்தாள் என்றும்   உபகதையிருக்கிறது.

சார்வாக  மதமே  கடவுள்  இல்லையெனப்போதிப்பதுதான். சந்நியாசிகள்,   ரிஷிகளாக  மாறலாம்.  ரிஷிகள்  அனைவருமே  சந்நியாசிகள் அல்ல. ஒரு   நோக்கத்தை   குறிக்கோளாகக்கொண்டு  செயலில்  இறங்குவோர் படிப்படியாக  செயலையே  குறிக்கோளாக்கி,  அந்தச்  செயலில்  பலியாவதை  விமர்சிக்கும்  போக்கிலேயே  தனது  சில  சிறுகதைகள் படைக்கப்பட்டன. ” என்றார்   நான்  சந்தித்த  நவீன  உலகின்  சார்வாகன்.

மதம்  குறித்த  தனது  விமர்சனத்தை   அவர்  இவ்வாறும்  சொன்னார்: இறைவனை   வழிபடவேண்டும்  என்று  முன்வருவார்கள்  பக்தர்கள். அதற்கான  சடங்குகள்,   அலங்காரங்கள்,   படையல்கள்  என்றெல்லாம் ஏற்பாடு    செய்வார்கள்.   பின்னர்  வழிபாடு  இரண்டாம்  பட்சமாகிவிடும். மற்றவைதான்   பிரதானமாகி   முன்னிற்கும். சார்வாகனின்  வளை ,  வெறிநாய்  புகுந்த  பள்ளிக்கூடம்  ஆகிய  இரண்டு கதைகள்  கணையாழி  இதழில்  இரண்டு  அங்கங்களாக  வெளியாகின. இலக்கிய  உலகில்  பலரைச் சந்தித்திருந்தாலும்  தன்னால்  மறக்கமுடியாதவராக  இருக்கும்  வாசகர்  பற்றியும்  அன்றைய  சந்திப்பில் சொன்னார். மூத்த   படைப்பாளி  கு. அழகிரிசாமியின்  மூத்த  புதல்வி  ராதா   பல ஆண்டுகளுக்கு   முன்னர்  தீபம்  இதழில்   வெளியான  தன்னுடைய தர்ப்பணம்  என்ற    சிறுகதையைப் படித்துவிட்டு,  தனக்கு  வாசகர்  கடிதம் எழுதினார்.    அதுவே   எனது   படைப்புக்கு  கிடைத்த  முதல்  அங்கீகாரம். அவரையே    எனது  முதல்  வாசகியாக    கருதுகின்றேன்.   ராதா அமெரிக்காவில்    வசிக்கிறார். \

அன்றைய  சந்திப்பில்,  தற்பொழுது  என்ன  செய்துகொண்டிருக்கிறீர்கள் எனக்கேட்டதற்கு, ”  Indian Journal Of Leprosy  என்ற   இதழின்  கௌரவ ஆசிரியராக   இருந்துகொண்டே,  நேரம் கிடைக்கும்பொழுது  சிறுகதைகள் எழுதுகின்றேன் ”  எனச்சொன்னார். சில  வருடங்களுக்கு  முன்னர்  அவர்  அவுஸ்திரேலியாவுக்கு  வந்தபொழுது நண்பர்  நடேசனிடம்  அழைத்துச்சென்றேன்.   மூவரும்  ஒரு  நாள்  மதியம் உணவு விடுதியிலிருந்து   நீண்ட  நேரம்  இலக்கிய  விடயங்கள்  பேசினோம்.  முதல்தடவை   வந்தபொழுது  அவரைச்சந்தித்து  எழுதிய  நேர்காணல் இலங்கையில்    தினகரன்  வாரமஞ்சரியிலும்  அவுஸ்திரேலியா  உதயம் இதழிலும்    வெளியாகியது.

கவிஞர்  அம்பி,  எஸ்.பொன்னுத்துரை,   ஓவியர்  செல்வத்துரை,   எஸ். அகஸ்தியர்,   இந்திரா  பார்த்தசாரதி,   பரீக்ஷா   ஞாநி,  எஸ். வைதீஸ்வரன் , அண்ணாவியார்   இளையபத்மநாதன், மாவை  நித்தியானந்தன்,  ஆகிய ஆளுமைகளுடன்  நடத்திய  உரையாடல்  நேர்காணலைத்தொகுத்து  1998  இல்  வெளியிட்ட சந்திப்பு      நூலில்   சார்வாகனின்  நேர்காணலும் இடம்பெற்றது. கடந்த   சில  நாட்களுக்கு  முன்னர்  சென்னையை  மழையும்  வெள்ளமும் சேதப்படுத்தியபொழுது   தமிழ்நாட்டு  எழுத்தளார்கள்  சிலருடன் தொடர்புகொண்டபொழுது,   சார்வாகன்  தமது  வால்மீகி  நகரில்  இருப்பதாக தகவல்   கிடைத்தது.   தளம்  ரவியுடன்  தொலைபேசியில் உரையாடியபொழுதும்   சார்வாகன்  நலம்  பற்றி  விசாரித்து தெரிந்துகொண்டேன்.

இவ்வளவு   சீக்கிரத்தில்  விடைபெற்றுவிட்டார்.

இலக்கியம்   படைத்தவாறு,  தொழுநோயாளர்  துயர்  துடைத்த  அந்தக்கரம் ஓய்ந்துவிட்டது. (பிற்குறிப்பு:   இலங்கை  பேராசிரியர்  சி. மௌனகுருவின் மணிவிழாக்காலத்தில்  (2003)  வெளியான   மௌனம்  சிறப்பு  மலரில் மௌனகுரு   எழுதிய சார்வாகன்  என்ற   குறுநாவல்  இடம்பெற்றுள்ளது. சார்வாகன்   என்ற  ரிஷி  பற்றிய  ஆழமான  சிந்தனையை  பெறுவதற்கு வாசகர்கள்   அந்தக் குறுநாவலை  அவசியம்  படிக்கவேண்டும்.)

letchumananm@gmail.com