“படைப்பு இலக்கியமா -? , அரசியலா – ? இதில் எனது இறுதித்தெரிவு எது ? எனக்கேட்டால், படைப்பு இலக்கியம்தான் எனச்சொல்வேன். எனது படைப்புக்கூடாக சமூகத்தை பார்க்கும்போது தோன்றும் நெருக்கடிகளிலிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ள அரசியல் ஒரு கவசமாகியது. எனினும், எனது சமூகம்சார்ந்த பணியில் படைப்பு இலக்கியமே இறுதித்தேர்வாக அமையும் ” என்று தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான சல்மா, கடந்த ஞாயிறன்று மெல்பனில் Mulgrave Neighborhood House மண்டபத்தில் நடைபெற்ற இலக்கியச்சந்திப்பு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் நடைபெற்ற Byron bay எழுத்தாளர் விழாவில் பங்குபற்ற வருதைந்திருந்த சல்மா, சிட்னியில் இரண்டு தமிழ் அமைப்புகள் ஒழுங்குசெய்த சந்திப்பு கலந்துரையாடலில் பங்கேற்றபின்னர் மெல்பனில் நடந்த நிகழ்ச்சியிலும் உரையாற்றினார்..
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் துணைத்தலைவர் லெ.முருகபூபதி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் மெல்பனைச்சேர்ந்த பல எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சல்மாவின் வேண்டுகோளின் பிரகாரம் தம்மை முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து சல்மா பற்றிய சிறிய அறிமுகத்தை முருகபூபதி வழங்கினார். சல்மா இலக்கியப் பிரதியாளராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் ஒரே சமயத்தில் இயங்கிவருபவர். நாவல், சிறுகதை, கவிதை, பயண இலக்கியம் முதலான துறைகளில் எழுதியிருக்கும் சல்மா தமிழ்நாடு திருச்சியில் பொன்னாம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவியாகவும் சமூக நலத்துறை வாரியத் தலைவியாகவும் இயங்கியிருப்பவர். ஒரு தடவை சட்டமன்றத்தேர்தலிலும் போட்டியிட்டவர். செனல் 4 தயாரிப்பில் சல்மாவின் வாழ்வும் பணியும் ஆவணப்படமாகியுள்ளது. பல உலகப்பட விழாக்களில் விருதுகளையும் வென்றுள்ளது. சல்மாவின் படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. ” உலகில் பல நாடுகளுக்கு பயணித்திருந்தபோதிலும் அவுஸ்திரேலியாவுக்கான இந்தப்பயணம் முதலாவதாக அமைந்தது. இங்குள்ள குவின்ஸ்லாந்து மாநிலத்தில் இம்மாதம் நடைபெற்ற Byron bay எழுத்தாளர் விழாவில் இந்தியப்பெண்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூலை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இருந்தமையால் இங்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நூலின் பெயர்: WALKING TOWARDS OUR SELVES. (Indian women tell their stories). அத்துடன் இவ்விழா தொடர்பான மூன்று அமர்வுகளிலும் உரையாற்றச்சந்தர்ப்பம் கிடைத்தது. ” என்று தமது அவுஸ்திரேலியா வருகையின் நோக்கத்தை தெரிவித்த சல்மா, சமூகநெருக்கடிகளுக்கூடாகவே இலக்கியப்பயணத்தை தாம் தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
பல சந்தர்ப்பங்களில் தனக்கு தக்க ஆலோசனைகளை வழங்கி வழிநடத்திய சுந்தரராமசாமி அவர்கள் மரியாதைக்குரியவர். அவர் தமக்கு மட்டுமல்ல பலருக்கும் நெருக்கடியான காலகட்டங்களில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். முதலில் தமது ஊரில் சுயேச்சையாகவே தேர்தலில் தெரிவாகி அரசியல் பணிகளை தொடர்ந்ததாகவும், அதன் பின்னரே தி.மு.க.வில் இணைந்தாகவும் சல்மா தெரிவித்தார்.
ஒரு இஸ்லாமிய பெண்ணாக சமூகத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கு மேற்கொண்ட போராட்டங்கள் பற்றி கூறினார். ஒன்பதாம் வகுப்புவரை படித்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்து என்று தெரியாமல், தனது போராட்டங்களை வெளிப்படுத்துவதற்கு இலக்கியத்தை தனது மீட்சிக்கான கருவியாக உபயோகித்த உபாயத்தையும் கடைசியில் அதுவே தனது வாழ்வாகிப்போய்விட்ட சம்பவங்கள் பற்றியும் விவரித்தார். தனது விடாப்பிடியான பெண்ணிய கருத்துக்கள் தனது திருமணத்தையே எவ்வாறு பந்தாடி சென்றது என்பதையும் இறுதியில் அந்த நிகழ்வு நடந்தாலும் அதன் பின்னர் தான் சந்தித்த பிரச்சினைகளையும் எடுத்துக்கூறினார். தனது கணவன் ஊடாக தற்செயலாக வசமாகிப்போன அரசியல் மார்க்கம் தன்னை பிற்காலத்தில் எவ்வாறானதொரு பாதையில் அழைத்து சென்றது என்பதையும் அந்த பாதையை தனக்கேற்றவாறு எவ்வாறு பயன்படுத்த முடிந்தது என்பது குறித்தும் விரிவாக கூறினார். தி.மு.க. என்பது ஏன் தனக்கான தெரிவானது என்பதையும் கட்சி அரசியல் ஒரு இலக்கியவாதியின் பாதையில் எவ்வாறான இடறல்களை ஏற்படுத்தியது என்பதையும் விளக்கி சொன்னார்.
அவரது இலக்கிய பணிகளை விட, அவர் மீது படிந்துள்ள தி.மு.க. என்ற விம்பத்தின் மீதான பல விசாரணைகள்தான் இச்சந்திப்பின்போது பலரது கேள்விகளாக அமைந்தது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ள ஒரு கட்சியின் ஊடாக சென்றால் மாத்திரமே தான் அனுபவித்த பெண்ணிய காயங்களுக்கு சிறிதளவு மருந்தாவது தடவ முடியும் என்ற காரணத்தாலும் தனது கணவனின் முன்முடிபான தி.மு.க. கட்சியும்தான் தன்னை கலைஞரை நோக்கி அழைத்து சென்றது என்று கூறினார்.
சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையின் நீட்சியாக பிறகு பெண்ணிய விடுதலை நோக்கிய அவரது அடுத்த போராட்டம் இப்போது எந்த திசை நோக்கி நகர்ந்திருக்கிறது ? அரசியலா – இலக்கியமா என்று வருகின்றபோது அவரது தற்போதைய தெரிவு எதனை அண்டியதாக இருக்கும் போன்ற கேள்விகளும் சந்திப்பில் முன்வைக்கப்பட்டன.
அவரது பதில்கள் கூடியளவு யதார்த்தத்தை அண்டியதாக காணப்பட்டன. சல்மாவின் இயல்பான பேச்சும் அவர் மீதான இலக்கிய – அரசியல் சர்ச்சைகளுக்கு வெளிப்படையாக உண்மைகளை கூறும் தேர்ச்சியும் அவரை ஒரு நடைமுறைக்கு சாத்தியமான படைப்பாளியாக இனங்காட்டியது. எழுத்தாளர்கள் நடேசன், ஜே.கே, தெய்வீகன், அறவேந்தன், பாடும்மீன் சிறிகந்தராசா, திருச்செந்தூரன்; மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் செல்வபாண்டியன், ஹ_சேய்ன் முராத் ஆகியோரும் சல்மாவிடம் சில இலக்கியம், அரசியல், சமூகம் சார்ந்த கேள்விகளைத்தொடுத்தனர். இரண்டு மணிநேர சந்திப்பு காத்திரமாக நடத்து முடிந்தது.
letchumananm@gmail.com