படித்தோம் சொல்கின்றோம்: “சிப்பிக்குள் முத்து “! கி. லக்‌ஷ்மணன் அய்யாவின் நூற்றாண்டு வெளியீடு!

கி. லக்‌ஷ்மணன் அய்யாவின் நூற்றாண்டு வெளியீடு!” படைப்பாளிகளையும் பத்திரிகையாளர்களையும் கல்வித்துறை சார்ந்த  ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்  பதிப்புத்துறையில்  இருப்பவர்களையும் மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு  பிசாசு இருக்கிறது. கண்களுக்குத் தெரியும் பிசாசுதான்! ஆனால், எப்படியோ   கண்களுக்குத்தப்பிவிடும்! எங்கே எப்படி காலை வாரிவிடும்  என்பதைச் சொல்லமுடியாது.   மானநட்ட  வழக்கிற்கும் தள்ளிவிடும் கொடிய இயல்பு இந்தப்பிசாசுக்கு  இருக்கிறது. அதுதான் அச்சுப்பிசாசு. மொழிக்கு ஆபத்துவருவதும்  இந்தப்பிசாசினால்தான். 1990 ஆம் ஆண்டு மறைந்த எங்கள் கல்விமான்  இலக்ஷ்மணன் அய்யாவை நினைக்கும் தருணங்களில் அவர் ஓட ஓட விரட்டிய  இந்த அச்சுப்பிசாசுதான் எள்ளல்  சிரிப்போடு கண்முன்னே  தோன்றுகிறது.”

இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய தொடரில் பெரியார் இலக்‌ஷ்மணன் அவர்களைப்பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன். அண்மையில் எனக்கு கிடைத்துள்ள  அய்யா எழுதியிருக்கும் “சிப்பிக்குள் முத்து” நூலை படிக்கின்றபோது அவர் நேரில் தோன்றி உரையாற்றுவதுபோன்ற உணர்வுதான் வருகிறது. இந்த அரிய நூலை அய்யாவின் செல்வப்புதல்வி மங்களம் வாசன் தொகுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக மங்களம் மேற்கொண்ட அயராத முயற்சி திருவினையாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கி. இலக்‌ஷ்மணன்  அய்யாவின் நூற்றாண்டு காலம் தொடங்கியிருக்கும் இக்காலப்பகுதியில் ” சிப்பிக்குள் முத்து” வெளியாகியிருப்பது பெரும் சிறப்பு. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்குப் பொருத்தமான  ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்‌ஷ்மணன் அவர்கள் இலங்கை – தமிழக  தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பாக  சிப்பிக்குள் முத்து ஒளிர்கின்றது. இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும்  பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின்  தொகுப்பான இந்நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம  ஆசிரியர் ( அமரர் ) க. சிவப்பிரகாசம், வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்( முன்னாள்) அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் (அமரர்கள்) பேராசிரியர் க.கைலாசபதி,   சிரேஷ்ட  சட்டத்தரணி  நீலன் திருச்செல்வம்  ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற காலத்தில்,  இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. லக்‌ஷ்மணன் அய்யா அவர்கள்,  தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியை சரியாகவும் பிழையின்றியும் எழுத வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர். அவர்  1960 இல் எழுதிய இந்திய தத்துவ ஞானம் நூல் பல பதிப்புகளை கண்டுள்ளதுடன்,  இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றது. அய்யாவை சதா அவதானி என்றும் அழைக்கமுடியும். அவர் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், ஆவணங்களை மாத்திரம் படிப்பவர் அல்ல. ரயில், பஸ் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் வீதியோரங்களிலும் இருக்கும் பெயர்ப்பலகைகள், விளம்பரங்களிலும் எழுத்துப்பிழை – கருத்துப்பிழை கண்டு பிடித்து,  உரிய இடத்தில் முறையிட்டு உடனடியாக திருத்தியும்விடுவார். சிப்பிக்குள் முத்து நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் அவர் தனது வாழ்நாளில் மேற்கொண்ட தமிழ்சார்ந்த பணிகளில் சந்தித்த அனுபவங்களை மிகவும் எளிய முறையில் வெகு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதனால் வாசகர்களினால் இலகுவாக இந்த நூலுடன் நெருங்க முடிகிறது.

படித்தோம் சொல்கின்றோம்:   "சிப்பிக்குள் முத்து "! கி. லக்‌ஷ்மணன் அய்யாவின் நூற்றாண்டு வெளியீடு!அவர் மேடைகளில் பேசினாலும்  பத்திரிகைகளில் எழுதினாலும் அன்பர்களுடன் கலந்துரையாடினாலும் எடுத்துக்கொண்ட விடயத்தை சிக்கலின்றி தெளிவுபடுத்தும் இயல்புள்ளவர். 1970 – 1980 காலப்பகுதியில் அவரை கொழும்பிலும் எங்கள் ஊர் நீர்கொழும்பிலும் பல மேடைகளில் கண்டிருக்கின்றேன். அவர் அன்றைய காலப்பகுதியில் கொழும்பு மலே வீதியில் அமைந்திருந்த  கல்வி அமைச்சில் வித்தியாதிபதியாக  இருந்த காலப்பகுதியில்,  நான் பணியாற்றிய வீரகேசரியில் வரும் செய்திகளையும் அவற்றுக்கான தலைப்புகளையும் சீர்திருத்தியவர். அவரது ஆலோசனைகளினால் இலங்கை இதழியல், ஊடகத்துறையில் நிறைய மாற்றங்கள் நேர்ந்துள்ளன.  நாம்  அன்றாடம்  எழுதும் செய்திகளில்,   படைப்பு  இலக்கிய  ஆக்கங்களில்,  பேசும்  உரைகளில்        தவிர்க்கவேண்டிய  சொற்கள்  நீக்கவேண்டிய எழுத்துக்கள்  பற்றிக்குறிப்பிடுவார்.

“பத்திரிகைகளில்,  ” தலைமையின்  கீழ்  பேசினார்”   என்று  எழுதுகிறார்கள். அப்படியாயின்  தலைமை  தாங்கும்  மேசையின் கீழ்  என்பதா  அர்த்தம்.  ஏன்  கீழ் என்ற  இரண்டு  எழுத்துக்கள்  அநாவசியமாக  வருகின்றன? “தலைமையில்  நடந்தது. ” என்று எழுதினால் போதுமே. நடாத்தினார்கள்  என்று  எழுதுகிறார்கள். எதற்காக மேலதிகமாக அந்த “ா”என்ற எழுத்துவருகிறது!? ” நடத்தினார்கள்” என்று எழுதலாமே! ஒரு வாகன விபத்து நடந்தால்,  அதில் எவரும் இறந்தால், ‘ஸ்தலத்தில்’ பலியானார்  என  எழுதுகிறார்கள்.  அது என்ன  புனிதஸ்தலமா?  அவ்விடத்தில் பலியானார் என்று எழுதலாமே! இவ்வாறு ஊடகங்களுக்கு தொடர்ந்து சுட்டிக்காணபித்துக்கொண்டே இருந்தார். “அச்சுப்பிழை கருத்துப்பிழையாகிவிடும் அபாயம் இருக்கிறது.” என்று தொடர்ச்சியாகச் சொல்லிவந்தவர். 

இலக்‌ஷ்மணன் அய்யா அவர்கள்,   இலங்கையின்   வடபுலத்தே  பலாலியில் 1918  ஆம்  ஆண்டு  பிறந்தார். கொழும்பு  பல்கலைக்கழகம்  தமிழ்நாடு  அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,  காசி  பல்கலைக்கழகங்களில்   பட்டங்கள்  பெற்றார்.  கொழும்பு  ரோயல்  கல்லூரியில் தமிழ்  ஆசிரியராக  சுமார்  பத்தாண்டுகளுக்கு  மேல்  பணியாற்றிவிட்டு,   கல்வி  அமைச்சில்  வித்தியாதிபதியாக  சேவையாற்றினார்.  இலங்கையில் அரசகரும  மொழித்திணைக்களத்தில்  மேலாளராகவும்  பணியாற்றியவர். இலங்கையில்  வீரகேசரி,  தினகரன்,  தினபதி,  சிந்தாமணி பத்திரிகைகள் உட்பட  பல இலக்கிய  இதழ்களிலும்  பல கட்டுரைகளை  எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் கி. வா. ஜகந்நாதன் நடத்திய கலைமகள் இதழிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

இலங்கை  வானொலியில்  “தமிழைப்பிழையின்றி எழுதலும்  பேசலும்”   என்ற  தலைப்பில்  பல  தமிழ்  அறிஞர்களின்  தொடர்  உரைகள்  ஒலிபரப்பாவதற்கும்,   அதேபோன்றதொரு   தொடர்   சென்னை  தூர்தர்ஷனில்  ஒளிபரப்பாவதற்கும்  இலக்ஷ்மணன் அய்யா,  பின்னணியிலிருந்தார்  என்ற  தகவலையும் அறிந்திருக்கின்றேன். சிப்பிக்குள் முத்து நூலில், திருமண அழைப்பு  அச்சிடுவது  குறித்தும்  அவர்  அரியதொரு  கருத்தை  சொல்லியிருக்கிறார். ஆங்கிலத்தில்  Wedding invitation  என்றுதான்  குறிப்பிடுவார்கள்.  ஆனால்,   தமிழில்  திருமண அழைப்பு  என்று அச்சிடாமல் திருமண அழைப்பிதழ்  என்றே அச்சிடுகிறார்கள். ஆங்கிலத்தில்  Wedding invitation  card   என்றா அச்சிடுகிறார்கள்?  என்பதே  அவரது நியாயமான கேள்வி!

இந்த நூலில் இடம்பெறும் ” சிங்களத் தீவினுக்கு ஒரு பாலம்” என்ற கட்டுரை மகாகவி பாரதியை மேற்கோள் காண்பித்து தொடங்குகிறது. அந்தப்பாலம் எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்று அய்யா விளக்குகிறார். தமிழ் சார்ந்து இலங்கையில் நேர்ந்துள்ள மாற்றங்கள்,  முன்னேற்றங்கள் பற்றி தமிழகம் அறியாதிருக்கும் குறையையும் சுட்டிக்காண்பிக்கின்றார். இந்தக்கட்டுரையில் வரும் பின்வரும் வரிகள் மிகுந்த கவனத்திற்குரியது:

” தமிழ் மொழியின் வரலாற்றிலே அதனைப் பல்கலைக்கழக இறுதி வகுப்புவரை முதன் முதலில் போதனா மொழியாக்கிய பெருமையும் சிறப்பும் இலங்கைக்கே உரியது. பல்கலைக்கழகத்திலே தமிழ் கட்டாய போதனா மொழியாக்கப்பட்டு 1963 முதல் கலையியல் இறுதிப் பட்டப்பரீட்சை முழுவதும் தமிழிலேயே நடைபெற்று வருகின்றது. தமிழை முதன் முதலில் பி. ஏ. பட்டப்பரீட்சை வரை வளர்த்த இந்தப்பெருமை தமிழகத்துக்குக் கூட கிடைக்காத ஒன்று என்பதை எண்ணும்போது அதன் மதிப்பு மேலும் பன்மடங்கு உயருகின்றது.” இக்கட்டுரை தமிழ்நாடு கலைமகள் இதழின் தீபாவளி மலரில் வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

மொழிபெயர்ப்புக்கலை குறித்தும் அவர் எழுதுகிறார். ” தவறான தமிழாக்கம் விளைவிக்கும் விபரீதம் – இரவெல்லாம் பகலாகும் விந்தை ” என்ற கட்டுரை மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். இக்கட்டுரையை, தமிழ் நலம் பேணும் குழுக்கள் என்ற உபதலைப்புடன் இவ்வாறு முடித்திருக்கிறார்:

“தமிழிலே அவ்வப்போது ஏற்படும் ஐயங்களைத் தீர்ப்பதற்கும் தமிழை மேலும் மேலும் செம்மைப் படுத்திப்பேணுவதற்கும்  பொதுவிடங்களிலே காணப்படும் பிழைகளை நீடித்து நிலைக்கவிடாது உடனுக்குடன் திருத்துவதற்கும் ஆங்காங்கு சிறு சிறு தமிழ்நலம் பேணும் குழுக்கள் உருவாகித் திறமையுடனும் இணக்கத்துடனும் செயற்பட முடியுமாயின் தமிழின் எதிர்காலம் பலவிதத்திலும் சிறக்குமென்பது நிச்சயம். ” இந்த வரிகளில் அவர் மிகவும் துல்லியமாக இரண்டு சொற்களை புகுத்தியிருக்கிறார்.
“திறமையுடனும் – இணக்கத்துடனும்” எமது தமிழ் சமூகம் பற்றி நன்றாக அறிந்தவர் அல்லவா இலக்‌ஷ்மணன் அய்யா!?

மொழி, கலை, இலக்கியம், அறிவியல், மொழிபெயர்ப்பு – செம்மைப்படுத்தல், சமயம், சமூகம் , ஆன்மீகம், விஞ்ஞானம், மெஞ்ஞானம், பண்டிகைகள் முதலானவற்றை மாத்திரம் பேசும் புத்தகம் அல்ல சிப்பிக்குள் முத்து, இவற்றுக்கு அப்பாலும் சென்று, உளவியல் ரீதியாகவும் தெளிவான விளக்கங்களை தருகின்றார். சில கட்டுரைகள்,  எம்மை நாமே சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டுகின்றன.  இதனை தொகுத்திருக்கும் அய்யாவின் புதல்வி மங்களம் வாசன், மறக்காமல் அய்யாவின் சில ஆங்கிலக்கட்டுரைகளையும் தேடி எடுத்து பதிவுசெய்துள்ளார். அதனால் ஆங்கிலத்தில் படிக்கும் வாசகர்களுக்கும் சிப்பிக்குள் முத்து நன்கு பயன்படும் என நிச்சயமாக நம்பலாம்.

அய்யாவின் கட்டுரைகளை படிக்கும்போது,  அவர் எமக்கு தமிழ்ப்பெரும் கடலாகத்தான் தோற்றம் தருகின்றார்.  அந்தக்கடலில் நாம் கண்டெடுக்கும் சிப்பிக்குள்ளிருக்கும் முத்துக்கள் ஒளிவீசுகின்றன.இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும் மிகவும் பொருத்தமான ஓவியங்களை வரைந்துள்ள ஓவியர் பத்மவாசன்,  தமிழகத்திலும் தமிழர் வாழும் தேசங்களிலும் நன்கு அறியப்பட்ட பிரபல ஓவியர் சில்பி அவர்களின் மாணவர்.  இவரது குருநாதர் சில்பி பணியாற்றிய ஆனந்தவிகடன் இதழ் இவருக்கு தூரிகைச்சித்தர் என்ற பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. பத்மவாசனின் ஓவியங்களும் இந்த நூலுக்கு சிறப்பைத்தருகின்றன.

477 பக்கங்கள் கொண்டிருக்கும் சிப்பிக்குள் முத்து, கடலின் ஆழத்தில் தோன்றும் சிப்பிக்குள் உருவாகும்  முத்து எவ்வாறு படிப்படியாக உருமாற்றம் அடைந்து ஒளிவீசுகிறதோ, அதேபோன்று இந்த தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு ஆக்கமும் வாசகரின் சிந்தனைக்கு வெளிச்சம் பாய்ச்சுகின்றது. தமிழ் ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் மற்றும்  தமிழ் ஆசிரியர்கள், புகலிட நாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழ் கற்கும் மாணவர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல் சிப்பிக்குள் முத்து. புகலிட நாடுகளில் நடத்தப்படும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளில் வெற்றியீட்டும் மாணவர்களுக்கு பரிசாகவும் இந்த நூலை வழங்குவதற்கு பரிந்துரைக்கமுடியும்.

வட இலங்கையில் பலாலியில் மின்சார வசதிகளே இல்லாத ஒரு  குக்கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சாதாரண குடும்பத்தில்  பிறந்தவர் இலக்‌ஷ்மணன் அய்யா. அவர் பிறந்த சமூகம் அவரை கோயில்  பூசகராக்கியிருக்கலாம்! அல்லது புரோகிதராக வலம் வந்து ஆயிரக்கணக்கான கோயில் அய்யர்கள் போன்று  ஆலயங்களில்  கும்பாபிஷேகம்  செய்து  பெயர் தெரியாமல்  மறைந்திருக்கலாம்.  ஆனால், இந்து நாகரீக கல்வித்துறைக்கும்  கல்விப்பணிக்கும்  எழுத்துச் சீர்திருத்தத்திற்கும் தொடர்ந்தும் அயராது உழைத்து, தனது எழுத்துக்களை எமக்கு வழங்கிவிட்டு  மறைந்தார்.

இலங்கையில்  பதவியிலிருந்து  ஓய்வு பெற்றபின்பும்,  முன்னைய அரசுகளின்  செல்வாக்கு  மிக்க அமைச்சர்களினால் புதிய  பதவிகள் அவரைத்தேடி  வந்தபோதும்  அவற்றை  சாமர்த்தியமாக  ஒதுக்கிவிட்டு  நாட்டைவிட்டு  புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்து அமரரானார். அவரின் நூற்றாண்டு காலத்தில் “சிப்பிக்கு முத்து”  நூலை அன்னாரின் நினைவாக தமிழ் சமூகத்திற்கு பயன்படும் வகையில், தாயார் பாலம் லக்‌ஷ்மணன் மற்றும் சகோதரர்கள் சிவராமன், சசிதரன் சார்பில் செல்வப்புதல்வி மங்களம் வாசன் வெளியிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில், இவர்களையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.

letchumananm@gmail.com