முருகபூபதியின் “சொல்லத்தவறிய கதைகள்” – புதிய நூல் பாரிஸில் அறிமுகம்

முருகபூபதியின் "சொல்லத்தவறிய கதைகள்" - புதிய நூல்  பாரிஸில் அறிமுகம்

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான முருகபூபதியின் புதிய வரவு, சொல்லத்தவறிய கதைகள் நூலின் அறிமுக அரங்கும், முருகபூபதியுடனான இலக்கியச்சந்திப்பும் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி (03-02-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாரிஸில் எழுத்தாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெறும். நிகழ்ச்சி நடைபெறும் முகவரி:  TIASCI  — 13, RUE DE L’AQUEDUC  —- 75010 PARIS . பாரிஸிலிருந்து வெளியாகும் ” நடு” இணைய இதழின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியை “நடு” ஆசிரியர் எழுத்தாளர் கோமகன் ஒழுங்குசெய்துள்ளார். 

சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், கடித இலக்கியம், நேர்காணல், ஆய்வு, பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் எழுதிவரும் முருகபூபதி, சொல்லமறந்த கதைகள் ( தமிழ்நாடு மலைகள் பதிப்பகம்) – சொல்லவேண்டிய கதைகள் (இலங்கை ஜீவநதி வெளியீடு) ஆகிய நூல்களை ஏற்கனவே வரவாக்கியவர். அதன் தொடர்ச்சியாக வெளியாகும் புதியநூல்: சொல்லத்தவறிய கதைகள்.

இதனை இலங்கையில் மகிழ் பதிப்பகத்தின் சார்பாக எழுத்தாளர் கருணாகரன் வெளியிட்டுள்ளார். இந்நூலின் முகப்பினை சிட்னியில் வதியும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஒளிப்படக்கலைஞியுமான கீதா மதிவாணன் வடிவமைத்துள்ளார். 

” சொல்லத்தவறிய கதைகள் ஒருவகையில் வரலாற்றின் சாயல்கொண்டவை. இன்னொருவகையில் சமூகவியலின்பாற்பட்டவை. இன்னொரு கோணத்தில் எம்முள்ளும் எம்மைச்சுற்றியும் நிகழ்ந்தவற்றின் கதைகள். எல்லாவற்றுக்கும் அப்பால் நாம் கவனித்தேயாகவேண்டிய கதைகள். முருகபூபதி இலக்கியவாதியாகவும் ஊடகச்செயற்பாட்டாளராகவும் இருப்பதனால் இந்தப்பதிவுகள், வாசிப்பு சுவாரசியத்தை அளிக்கின்றன. கூடவே ஆழ்தரிசனத்தையும் கொண்டிருக்கின்றன. இங்கே ஆழ்தரிசனமாக வெளிப்பாடடைவது, இவற்றில் உள்ள உண்மையும் சமூக அக்கறையுமாகும்.

சொல்லத்தவறிய கதைகள் எப்படிசொல்லப்படுவதற்கான அவசியத்தைக்கொண்டிருக்கின்றனவோ அதைப்போல அவற்றை நாமும் வாசித்தே ஆகவேண்டும் என்பது அவசியமாகிறது. இன்றைய இந்தப்பதிவுகளும் வெளிப்பாடுகளும் நாளைய வரலாற்றுக்கு மிகப்பெரிய ஒளியூட்டியாக இருக்கும்” – ( மகிழ்) 

இந்த நூலில் இடம்பெறும் பதிவுகளில் சில யாழ்ப்பாணம் காலைக்கதிர், கொழும்பு தினக்குரல், மட்டக்களப்பு அரங்கம் பத்திரிகைகளிலும் மல்லிகை மற்றும் ஜெர்மனி தேனீ, அவுஸ்திரேலியா தமிழ் முரசு – அக்கினிக்குஞ்சு, கனடா பதிவுகள் , லண்டன் எதுவரை முதலான இணைய இதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. அத்துடன் அவுஸ்திரேலியாவில் நடேசனின் வலைப்பூவிலும் கலை இலக்கிய ஆர்வலர்களின் முகநூல்களிலும் இடம்பெற்றுள்ளன.

letchumananm@gmail.com