மானுடரின் வாழ்வின் வளர்ச்சிப் பருவங்களில் ஏற்படும் காதல் உணர்வுகள் தவிர்க்க முடியாதவை. இங்கு ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளைத் தன் எழுத்தால் சிறப்பாக வடித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். அதற்குக் குரலால் உயிரூட்டியுள்ளார் பாடகர் பி.சுசீலா. நடிப்பால் உயிரூட்டியிருப்பவர் நடிகையர் திலகம். பாடலுக்கு இசையால் உயிரூட்டியுள்ளவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர். பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் : ” காத்திருந்த கண்கள்”
காதல் எப்படி வரும் என்று யாராலும் கூற முடியாது. ஒரு கணப்பொழுதில் சந்திக்கும் ஒரு பார்வையில் அது இதயத்தைப் பிளந்து சென்று விடும் தன்மை மிக்கது. அவளும் அவனை ஒருநாள்தான் சந்தித்திருக்கின்றாள். பார்த்திருக்கின்றாள். அந்தப்பார்வையில் அவள் தன் உள்ளத்தையே பறிகொடுத்துக் காதல் உணர்வுகளால் தவிப்புக்குள்ளாகின்றாள். நினைவுகள் தரும் இன்பம், தூண்டப்படும் நாணம், தயக்கம் என்று பல்வகை உணர்வுகளும் அவளை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றையெல்லாம் மீறி அவன் மீதான காதல் உணர்வுகள் விளங்குகின்றன. அவளது காதல் உணர்வுகள் ஏற்படுத்தும் தவிப்பை எவ்வளவு இயற்கையாக, சிறப்பாகக் கவிஞர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
https://www.youtube.com/watch?v=OLV16AX3z2c
பாடல்: “வா என்றது உருவம். நீ போ என்றது நாணம்”
– கவிஞர் கண்ணதாசன் –
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்
மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்
மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது
ஏதோ ஒரு வகை எண்ணம்
அதில் ஏனோ ஒரு வகை இன்பம்
ஒரு நாள் ஒரு முறை கண்டேன்
அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்