நூல் அறிமுகம்: பேராதனை ஷர்புன்னிஸாவின் “கிராமிய மணம்” நூலை முன்னிறுத்திய ஒரு கண்ணோட்டம்!

நூல் அறிமுகம்: பேராதனை ஷர்புன்னிஸாவின் "கிராமிய மணம்" நூலை முன்னிறுத்திய ஒரு கண்ணோட்டம்!சித்தி ஸர்தாபி” என்ற இயற்பெயரை உடைய ஷர்புன்னிஸா 1933ஆம் ஆண்டில் ஹட்டனில் பிறந்தவர். திருகோணமலையைச் சேர்ந்த இவரது தந்தையார் மொஹிதீன் பாவா. இவரது தாயார் சுலைஹா உம்மா அநுராதபுரத்தைச் சேர்ந்தவர். இலங்கைப் பொலிஸ் சேவையில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றிய இவரது  தந்தையாரின் இடமாற்றம் காரணமாகவே ஷர்புன்னிஸா பல்வேறு பிரதேசப் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். காலப்போக்கில் கன்ஸுல் உலூம் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களை தனது துணைவராக ஏற்றுக்கொண்டார். இலக்கியத்திலான ஈடுபாடே இவர்கள் இருவரையும் இணைத்து வைத்துள்ளது. இந்த இணைப்பே இவர்களை மென்மேலும் எழுத்துத் துறையில் ஈடுபட வைத்தது.

1948களில் எழுத்துலகில் பிரகாசித்தவரே ஷர்புன்னிஸா. முஸ்லிம் பெண்களின் கல்வி பற்றி நினைத்தும் பார்க்காத அந்தக் காலத்தில் எழுத்துலகில் ஈடுபாடுகாட்டி வந்தார். ஈழத்துப் பெண் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாய் அமைந்த பெண்மணியான இவர், காலத்தின் தேவை கருதி கவிதை, சிறுகதை, சிறுவர் கதை, கட்டுரை ஆகிய பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் இவரது எழுத்து முயற்சியை செவ்வனே செய்து வந்தார். மட்டுமல்லாமல் 1948 – 1952 காலப் பகுதிகளில் இவரது தந்தையாரின் பிறப்பிடமான திருகோணமலையில் வாழ்ந்த காலத்தில் இத்தகைய கிராமியப் பாடல்களைச் சேகரிப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபட்ட இவர் அவற்றை தனது கதைகளில் சேர்த்தும் கட்டுரைகளில் நயந்தும் நிறையவே எழுதியுள்ளார். ஆரம்ப காலத்தில் பேராதனை ஷர்புன்னிஸா என்ற யெரிலேயே தனது படைப்புக்களைக் களப்படுத்தி வந்துள்ளார். “பேசாமடந்தை” என்ற புனைப் பெயலிலும் சிலவற்றை எழுதியுள்ளார். தற்போது கண்டி மாவட்டத்திலுள்ள ஹீரஸ்ஸகல என்ற இடத்தில் வசித்து வருகின்றார்.

இவர் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, லங்கா முரசு, மலை முரசு, மலைநாடு இஸ்லாமிய தாரகை, புதுமைக்குரல் ஆகிய ஈழத்துப் ஊடகங்களிலும் மணிவிளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் ஆகிய இந்திய இதழ்களிலும் நிறையவே எழுதிவந்துள்ளார். “முஸ்லிம் பெண்களின் கல்வி”, “முஸ்லிம் பெண்களும் சமூக சேவையும்”, “முஸ்லிம் பெண்களும் அரசியலும்” போன்ற தலைப்புக்களில் தொடர் கட்டுரைகளை இவர் வீரகேசரிப் பத்திரிகையின் வனிதா மண்டலத்தில் எழுதி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு விமர்சனங்களையும் இவர் எதிர்கொண்டார். இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் மூத்த ஆளுமையான இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் உடுநுவர தொகுதியின் செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட “மின்னும் தாரகைகள்” என்ற இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலில் இரண்டாவது ஆளுமையாக இவர் பற்றிய தகவல்களே காணப்படுகின்றன.

வாய்மொழியாக இருந்து வந்த இவர் நாட்டார் பாடல்களை நூலாக்கும் விருப்பத்துடன் 1996 இல் “கிராமிய மணம்” என்ற நூலை வெளியிட்டுள்ளார். கிராமிய மணங்கமழும் சிறந்த நாட்டார் பாடல்களை இந்த நூலில் வாசகர்கள் இரசிக்கலாம். தான் எழுதிய பல்வேறு சிறுகதைகளிலேயே இந்த நாட்டார் பாடல்களை மிகப் பொருத்தமான முறையில் உட்புகுத்தி இலக்கியத்திற்கு ஒரு புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார். ஒரு கிராமத்தின் வெள்ளை இதயத்தை இவரது “கிராமிய மணம்” படம் பிடித்துக் காட்டுகிறது.

“எழுதப் படிக்கத் தெரியாத காலத்தில் வாய்மொழி வாயிலாக எழுந்த இப்பாடல்களில் காணப்படும் இயற்கைச் சூழல், அதனோடு ஒட்டிய மண்வாசனை, இன்ப துன்ப உணர்வுகள், உறவுகள், உவமை உருவக அணிகள் என்பன கல்வி உலகையே கலக்கி நிற்கின்றதெனலாம். இதனால் ஈர்க்கப்பட்டு ஈடுபாடு கொண்டதன் விளைவே கிராமிய மணம்|| என்னும் இந்நூல்” என்று ஷர்புன்னிஸா தனது நூலின் என்னுரையில் குறிப்பிடுவதிலிருந்து அவரது நாட்டார் பாடல்கள் மீதான அதீத ஈடுபாட்டைக் கண்டுகொள்ள முடியும். 1950 – 1960 களில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், சிந்தாமணி; ஆகிய இலங்கைப் பத்திரிகைகளிலும் தமிழ்நாட்டின் மணிவிளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் சஞ்சிகைகளிலும் எழுதி வந்த கிராமியக் கவிதைகளை அடக்கிய கதை, கட்டுரை வடிவங்கள் சிலவே இந்தக் “கிராமிய மணம்” நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

வாதம், புதிது, உறவு, உருக்கம், நினைவு, தவிப்பு, பிரிவு, இணைப்பு, ஒளி, ஒழுங்கு, மசக்கை, அமுது ஆகிய 12 தலைப்புக்களில் கிராமியப் பாடல்கள் கலந்த சிறுகதைகளை நூலில் காணலாம். இக்கதைகளுக்கெல்லாம் பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வைரமுத்து, மருதகாசி, வாலி போன்ற பிரபல்யமான இந்தியக் கவிஞர்களது கவிதைத் துணுக்குகளைத் தலைப்பிட்டுள்ளதுடன் இலங்கைக் கவிஞர்களான பரீத் ஏ. ஜவ்ஸகி, அக்கரையூர் அப்துல் குத்தூஸ், அக்கரைப்பாக்கியன், கவிஞர் ஏ. இக்பால் ஆகியோரது இசைக் கவிதைகளையும் தலைப்பாக இட்டுள்ளார்.

இரசனைக்காக “புதிது” என்ற தலைப்பில் அமைந்த கதையைத் தருகின்றேன்.

“ஒரு மடமாது உருகுகின்றாளே
உனக்கேன் புரியவில்லை – இது
சோதனையா நெஞ்சில் வேதனையா – உன்
துணையேன் கிடைக்கவில்லை”

என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளோடு தொடங்குகிறது இந்தக் கதை.

சித்தி ஸர்தாபி" என்ற இயற்பெயரை உடைய ஷர்புன்னிஸாஉதுமா நாச்சி புதுமணப் பெண். அவளது கணவன் ஸாலிஹ். கரத்தையைக் கட்டிக்கொண்டு சுபஹுக்கு முன்பு போன கணவனை இரண்டு நாட்களாகியும் காணவில்லை. எங்கு போனார்? என்ன ஆனார்? ஒன்றுமே தெரியாது தவித்தாள் புதுமணப் பெண் உதுமா நாச்சி. மிகுந்த வேதனையால் அவள் துடிதுடித்தாள். இன்று வருவார், இப்போ வருவார் என்று தினமும் அரிசியைக் கொட்டி ருசியாக சமைத்து வைப்பாள். ஈற்றில் ஏமாந்த உள்ளம் உண்ண மனமில்லாமல் வெப்புசாரம் நெஞ்சடைத்துப் போவாள். ஆக்கிய சோற்றையும் கறியையும் கொட்டி அடுத்த வீட்டு பாத்தும்மாவுக்கு கொடுத்தே விடுவாள்.

அடுத்த நாளும் இன்றாவது கணவன் வருவார் என்ற ஏக்கத்துடன் நாவுக்கு ருசியாய் மீண்டும் ஆக்கி வைப்பாள். பாவம் பதுமைப் பெண், மீண்டும் ஏமாற்றமடைவாள். கணவனின் நினைவுகளாளே நாள் முழுவதும் உந்தப்பட்டிருந்த உதுமா நாச்சிக்கு அவ்வப்போது கணவன் வரும் கரத்தையின் ஓசை கேட்பது போலவும் நினைவு வரும். காதைக் கூர்மையாக்கி கதவின் ஓட்டை வழியே பார்த்து நிற்பாள். அவளுக்கு ஒன்றுமே சாப்பிடப் பிடிக்கவில்லை. கோபமும் கவலையும் அவளை ஆட்கொண்டன. மனது வெடித்தே போய்விடும் போலிருந்தது அவளுக்கு. இருளின் போர்வை எங்குமே இழுத்து மூடப்பட்டதான உணர்வு. எமது மனதை உருக்குகிறதல்லவா? பாவம் பேதை என்ன செய்வாள்?

கரத்தையைக் கட்டிக் கொண்டு ஸாலிஹ் தொழிலுக்கு சென்றாள் என்றால் மீண்டும் அவன் திரும்பி வர இரண்டு மூன்று நான்கு நாட்கள் என்று அவனது வேலைக்கேற்ப நாட்கள் கழியும். இந்தப் பிரிவே புதுமணப் பெண் உதுமா நாச்சியை மிகவும் வருத்திவிடும். இரவோடு இரவாக ஸாலிஹ் வந்தால் விடியும் முன்பே போய்விடுவான்.

இஷாவையும் தாண்டிய பொழுதொன்றில் வீட்டு வாசற் கதவு தட்டப்படும் ஓசை. உதுமா நாச்சி ஆசையோடு கதவருகே ஓடோடி வந்து அப்படியே கதவோரம் நின்றுவிட்டாள்.

“.. பொடு பொடுத்து மழை பொழிந்து
பூமி எங்கும் தண்ணி ஓடக்
குடை பிடித்து வந்து சேர்ந்தும்
குணமணியே தூங்கிறியோ ..?”

கணவனது கவிக் குரல் அவளை எதிர்பார்த்திருந்தது. அவளோ ரோசக்காரி. கதவருகே நின்றபடி தன்னையே மறக்கிறாள்.

“.. நித்திரைதான் கொண்டியளோ – என்
நினைவை மறந்தியளோ
கதவு திறக்காத
கருத்து என்ன என் கிளியே ..?”

மீண்டும் அவனின் கவிக் குரல். உதுமா நாச்சி ஆவலுடன் கதைவைத் திறக்கிறாள். ஏக்கமாய் கணவனைப் பார்த்த அவளது மனது கவியாகப் பறக்கிறது.

“.. ஆக்கின சோத்தி லொரு
கல்லிருந்து மின்னுதல் போல்
போக்கணங் கெட்ட ராசாக்கு – ஒரு
பொண்ணிருந்து மின்னுதுகா ..”

தன்னை மறந்து தொழிலே கதியென்று தன்னைப் பிரிந்து சென்ற நாட்களுக்காக கணவனைக் கடிந்து கொண்டாள் அவள். அவனும் என்ன செய்வான் அவளுக்காகத் தானே ஓடியோடி உழைக்கிறான்.

“.. கண்டுக் கிளியே
கதை பழகும் நங்கணமே
இன்பக்கடலே என்னை
என்ன செய்யக் காத்திருந்தாய் ..?”

கணவனது இந்தக் கவிக் கணையால் உதுமா நாச்சி கன்னங்கள் சிவந்து நாணங்கொண்டாள். அவனது கரங்களில் புதைந்து கொண்டாள் அவள். இப்படி ஒரு யுகத்தின் சோகத்தையே இந்தக் கதை அப்பி நிற்கின்றது. இப்படி 12 கதைகள் நாட்டார் பாடல்கள் கலந்ததாய் வாசகர்கள் இரசித்து வாசிக்கலாம்.

பல்வேறு வகையான மன அழுத்தங்களால் மிகவும் இறுகிவிட்ட மனித மனங்களை இவ்வாறான சுவை ததும்பிய இலக்கியங்கள் இலேசாக்கிவிடும் என்பதில் ஐயமேயில்லை. இவ்வகையான இலக்கியங்கள் காலத்தின் தேவையாகும்.

கலாசார அமைச்சின் இந்து கலாசாரப் பகுதி ‘தமிழ் ஒளி’ எனும் பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இவர் இத்துறையில் பல பாராட்டுக்களையும் பரிசுகளையும் அதிகமாகப் பெற்றுள்ளார் என்பது போற்றத்தக்கது. மலையக கலாசார பேரவை ‘இரத்தின தீபம்’ விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கை அரசும் இவரது இலக்கிய சேவையை கௌரவித்து ‘கலாபூஷணம்’ விருதையும் வழங்கியுள்ளது.

ஷர்புன்னிஸா அவர்களின் இலக்கியப் பணி மகத்தானது. அந்தக் காலத்தில் நிகழ்த்திய இவரது மேடை உரைகள் கூட மிகவும் காத்திரமானதாகும். இஸ்லாமிய மகளிரின் கல்விக்காக குரல்கொடுத்த ஒரு மூத்த ஆளுமை இவர். 86 வயதுகளையும் தாண்டிய இவரது இலக்கியத் தொண்டுகள் தொடரவும் இவர் நீடூழி வாழவும் என்றென்றும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்!!!

நூல் – கிராமிய மணம்
நூல் வகை – நாட்டார் கவிகளுடன் கூடிய சிறுகதை
நூலாசிரியர் – பேராதனை ஷர்புன்னிஸா
வெளியீடு – பேசும் பேனா வெளியீட்டகம்

rimza.mohamed100@gmail.com