“எந்தெந்த நாடும் நமது.
சொந்தம் என்றாகும் பொழுது.
அன்பினில் ஆடும் மனது.
அத்தனை பேர்க்கும்
இனிது!
அமுது!
புதிது!” – கவிஞர் வாலி
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத சிறப்பான கானங்கள். பாடல்கள் அனைத்தும் பயண ஆவணங்களாகவும் விளங்கும் வகையில் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. இப்பாடற் காட்சிகளைப்பாருங்கள். அக்கூற்று எவ்வளவு உண்மையென்பதைப்புரிந்துகொள்வீர்கள்.
இப்பாடலில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் சந்திரகலாவுடன் நடித்த ஒரேயொரு திரைப்படம் இதுதான். ‘அலைகள்’ மூலம் தன் சிறப்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த நடிகை சந்திரகலா. அவர் நடித்து நினைவில் நிற்கும் இன்னுமொரு திரைப்படம் ‘புகுந்த வீடு’. தனது இள வயதிலேயே மறைந்தது பேரிழப்பு. சிறந்த நடிகையான அவர் திரையுலகில் இருந்திருந்தால் இன்னும் பல சாதித்திருப்பார்.
எம்ஜிஆருக்காக எழுதும் காதற்பாடல்களில்கூடக் கருத்தாழம் மிக்க, சமுதாயப்பிரக்ஞை மிக்க வரிகளைப் புகுத்தி எழுதுவதில் வல்லவர் கவிஞர் வாலி. இப் ‘பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள்’ காதலர்கள் இருவர் இணைந்து பாடும் காதற்பாடல். இடையில் வரும் கீழ்வரும் வரிகளைக் கவனியுங்கள்.
“எந்தெந்த நாடும் நமது
சொந்தம் என்றாகும் பொழுது
அன்பினில் ஆடும் மனது
அத்தனை பேர்க்கும்
இனிது! அமுது! புதிது!”
சிறப்பான வரிகள். ‘யாரும் ஊரே! யாவரும் கேளிர்’ என்னும் கருத்தையொட்டிப் புனையப்பட்டுள்ள சிறப்பான வரிகள். பொதுவாக இதுபோன்ற அமைதியான தொனியில் பயணிக்கும் பாடல்களைப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது குறைவு. இப்பாடலில் அவரது குரலினிமை நெஞ்சில் நிலைத்து நிற்பது. அவர் பாடிய சிறந்த பாடல்களில் இப்பாடலும் ஒன்று. மெல்லிசை மன்னரின் இசை பற்றி மேலதிகமாகக்கூறத்தேவையில்லை. ஏனெனில் அவர் ‘மெல்லிசை மன்னர்’.
யாழ் மனோஹரா, யாழ் ஶ்ரீதர் திரையரங்குகளில் ஒரே சமயத்தில் திரையிட்ட திரைப்படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ . இப்பாடல் அக்காலகட்டத்துக்கே என்னைத்தூக்கிச் சென்று விடுகின்றது. தமிழக அரசியலில் அப்பொழுதுதான் புதுக்கட்சியினை ஆரம்பத்திருந்த எம்ஜிஆர் இப்படத்தை வெளியிடுவதில் கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசிடமிருந்து பல தடைகளை எதிர்நோக்கினார். அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து சாதித்த திரைப்படம் எம்ஜிஆர் அரசியல் பயணத்துக்கும் மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கியது. அவ்வகையிலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமும் கூட.
படம்: உலகம் சுற்றும் வாலிபன்
பாடல்: கவிஞர் வாலி
பாடகர்கள்: டி.எம்.எஸ் & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.வி
https://www.youtube.com/watch?v=yBkFcrrd8gY
பாடல் முழுமையாக:
பன்ஸாயி – கவிஞர் வாலி.
காதல் பறவைகள்!
பாடும் கவிதைகள்!
தீராததோ? ஆறாததோ?
வளரும் இந்த சுகம்!
உறவில் வந்த சுகம்!
காதல் பறவைகள்!
பாடும் கவிதைகள்!
தீராததோ? ஆறாததோ?
வளரும் இந்த சுகம்!
உறவில் வந்த சுகம்!
தொட்டிலைப் போல நானும்
பிள்ளையைப் போல நீயும்
கட்டிக் கொண்டாடும் நேரம்
கற்பனை வேகம்
மீறும்! ஊறும்! சேரும்!
செந்தமிழ் நாட்டின் இளமை!
பொங்கிய காதல் பதுமை!
சந்தித்துப் பாடும் இனிமை!
சொல்லவொண்ணாத
புதுமை! அருமை! பெருமை!
எந்தெந்த நாடும் நமது
சொந்தம் என்றாகும் பொழுது
அன்பினில் ஆடும் மனது
அத்தனை பேர்க்கும்
இனிது! அமுது! புதிது!
இத்தருணத்தில் நடிகை சந்திரகலா பற்றியும் சிறிது நினைவு கூர்வோம். அவரைப்பற்றி ‘அன்று கண்ட முகம்’ வலைப்பதிவிலிருந்து கீழுள்ள பகுதிகளை நன்றியுடன் இங்கு பிரசுரிக்கின்றேன்:
“12 வயதில் நாயகியாக நடித்தவர் சந்திரகலா
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம். ஜி. ஆருடன் இணைந்து நடித்த சந்திரகலா, பல்வேறு மொழிகளிலும் 125 படங்களில் நடித்தவர். சந்திரகலாவின் சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம். தந்தை இயக்குனர் எம். எஸ். நாயக். சந்திரகலா பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவரது குடும்பம் சென்னைக்கு வந்தது. சென்னை மாம்பலம் வித்யோதயா பள்ளியில் பள்ளிப் படிப்பை சந்திரகலா தொடங்கினார்.
சந்திரகலாவுக்கு 7வது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தந்தை எம். எஸ். நாயக் சொந்தமாக தயாரித்த ‘ராம் ஆஞ்சனேயர் யுத்தம்’ என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 12வது வயதில் ‘சதிசுகன்யா’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதே படம் இந்தியில் ‘ஷோலே அவுர் ஷப்னம்’ என்ற பெயரில் வெளிவந்தது. அந்தப் படத்தில் தர்மேந்திராவுடன் சந்திரகலா நடித்தார். இந்தப் படத்தை தயாரித்தவர் சந்திரகலாவின் தந்தை எம். எஸ். நாயக்தான்.
தமிழில் வெற்றிபெற்ற ஏ. வி. எம். மின் ‘குலதெய்வம்’ படம், கன்னடத்தில் ‘ஜேனுகூடு’ என்ற பெயரில் ஓய். ஆர். சாமி இயக்கத்தில் வெளிவந்தது. அதில் சந்திரகலா நடித்தார். இந்தியில் வெளியான ‘பாபி’ படத்தை கன்னடத்தில் தயாரித்தனர். அந்தப் படத்தில் துணை நடிகையாக சந்திரகலா நடித்தார். அப்பொழுது அவர் எஸ். எஸ். எல். சி. படித்து வந்தார்.
தமிழில் எம். ஜி. ஆர். – ஈ. வி. சரோஜா நடித்த ‘என் தங்கை’ படத்தை சந்திரகலாவின் தந்தை கன்னடத்தில் தயாரித்தார். தமிழில் ஈ. வி. சரோஜா நடித்த வேடத்தில் சந்திரகலா நடித்தார். கன்னடத்தில் என்தங்கை வெற்றிவாகை சூடியது. அதனால் தெலுங்கில் அந்தப் படத்தை எடுத்தனர். அதிலும், அதே வேடத்தில் சந்திரகலா நடித்தார். இதன் மூலம் கன்னடம், தெலுங்கு படங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது
இந்தியில் வெற்றிபெற்ற ‘ஆஞ்சல்’ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தனர். அதில் சந்திரகலா நடித்தார். படத்தை நடிகை சாவித்திரி டைரக்ட் செய்தார். சந்திரகலாவின் நடிப்பால் கவரப்பட்ட சாவித்திரி, தனது சொந்த தயாரிப்பான ‘பிராப்தம்’ படத்தில் அவரை நடிக்க வைத்தார்.
‘பிராப்தம்’ படத்தைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க சந்திரகலாவுக்கு வாய்ப்புகள் வந்தன. எம். ஜி. ஆரின் சொந்த தயாரிப்பான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
தமிழில் ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த ”புகுந்தவீடு” [1971] படத்தில் சந்திரகலா அவரது தங்கையாக நடித்திருந்தார்.சந்திரகலாவின் கணவராக ஏவி.எம்.ராஜன் நடித்தார்.இப்படம் தெலுங்கில் புட்டினில்லு மெட்டினில்லு என்ற பெயரில் 1973-ஆம் ஆண்டு வெளி வந்தது. ரவிச்சந்திரன் தமிழில் நடித்த வேடத்தில் தெலுங்கில் சோபன்பாபு நடித்திருந்தார். சந்திரகலாவின் தாயாக தமிழில் நடித்த சாவித்திரியே தெலுங்கிலும் நடித்திருந்தார். அலைகள் படத்தில் சந்திரகலா தனித்தும் விஷ்ணுவர்த்தனுடனும் நடித்துள்ளார்.
பாடல் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் எம். ஜி. ஆருடன் நடித்து பாராட்டுப் பெற்றார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சந்திரகலா.
சந்திரகலா 1999-இல் காலமானார்.”
நன்றி: https://antrukandamugam.wordpress.com/2013/10/06/chandrakala/