“மலைகளைப் பேசவிடுங்கள்” வெளியீடும் – மூன்று நூல்களின் அறிமுகமும்! எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர் எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்” நூல் வெளியீடும்!
‘வண்ணச் சிறகு’ அரு.சிவானந்தனின் , “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” கவிதை நூல், தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘இலங்கையின் சிறுகதை மூலவர்களில் ஒருவரான இலங்கையர் கோன்’ – அறிமுகம் ( குமரன் வெளியீடு) கனடாவில் இருந்து வெளிவரும் “காலம்” கலை இலக்கிய சிற்றிதழின் “தெளிவத்தை ஜோசப்” சிறப்பிதழ் ஆகியவற்றின் அறிமுகமும் இம்மாதம் 9 ஆம் திகதி பௌர்ணமி திங்களன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சாஹித்யரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையிலும் பிரபல தொழில் முனைவரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரா ஷாப்டர் முன்னிலையிலும் இடம்பெறவுள்ளது.
முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா, குமரன் பதிப்பக உரிமையாளர் க. குமரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர். நிகழ்வில், கல்வியாளரும் விமர்சகருமான எம். வாமதேவன் அறிமுகவுரையையும் , விமர்சன உரையை திருமதி வசந்தி தயாபரன், சிராஜ் மஷ்ஷூர் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர். நூலாசிரியர் மல்லியப்புசந்தி திலகர் ஏற்புரை நிகழ்த்துவார்.
பாக்யா பதிப்பகத்தின் ஏற்பாட்டில், இடம்பெறவுள்ள இந்நிகழ்வை பிரதாஸ் எஸ். ஆக்ஞயா தொகுத்து வழங்குவார்.