இயேசு கிறிஸ்து ஆறுமணி நேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல், ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடி கொண்டது. அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ! “ஏலி! ஏலி! லாமா சபக்தானி “ என்று உரத்துச் சத்தமிட்டுக் கூப்பிட்டார் ! அதற்கு “ என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்..? “ என்று அர்த்தம். – (மத்தேயு 27:45-46) இந்த வாசகங்களை ஏற்கனவே படித்திருப்பீர்கள். கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம். அதனால் அதனை பெரிய வெள்ளி என்று தமிழிலும் Good Friday என்று ஆங்கிலத்திலும் அழைப்பர்.
அத்தகைய ஒரு துக்க தினத்தில் தேவாலயங்கள் சென்று வழிபட்ட மக்கள், யேசுபிரான் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலையிலேயே அங்கு மீண்டும் வந்து பிரார்த்தித்துவிட்டு, சம்மனசுகள் புடைசூழ யேசுவின் திருச்சொரூபம் பவனிவரும் காட்சியை கண்டுகளிப்பார்கள். வழக்கமாக உலகெங்கும் நடக்கும் இந்த நிகழ்வு இந்த வருடம் வழக்கம்போன்று வெளியே பகிரங்கமாக நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை.
யேசுவை சிலுவையில் அறைவதற்கு அன்று கண்ணுக்குத்தெரிந்த எதிரிகள் இருந்தனர். இன்று உலகமக்களை கொன்றழிப்பதற்கு கண்ணுக்குத் தெரியாத எதிரி தோன்றியுள்ளான். யேசு இரண்டு நாட்களில் உயிர்ப்பித்தார். ஆனால், மக்கள்…?! சமகாலத்தில், கொரோனே எதிர்பாராமல் வந்து முழு உலகத்தையும் முடக்கியிருக்கிறது. அதனால் உயிர்தெழுந்த யேசுபிரானும் சம்மனசுகளுடன் வெளியே செல்லாமல் தேவலாயங்களில் தங்கிவிட்டார்.
இலங்கையில் கடந்த பெரிய வெள்ளியன்றும், இன்றைய உயிர்த்த ஞாயிறு தினத்திலும் பேராயர் இல்லத்தில் அதற்கான பிரார்த்தனை ஒரு சிலருடன் அமைதியாக நடந்துள்ளது. அவ்வாறு ஒவ்வொரு மறை மாவட்டங்களிலும் நடந்திருக்கலாம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த நுற்றுக்கணக்கானோர் உயிர் நீத்த நினைவுகளை எளிதாக கடந்து செல்லமுடியாது.
கடந்த ஆண்டு யேசுபிரான் சம்மனசுகளுடன் வெளிவீதி வருவதற்கான தருணம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மக்களில் பலர் பலிகொள்ளப்பட்டனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார், நீர்கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் , மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களில் மக்கள் பலியாகினர்.
தலைநகரில் நட்சத்திர விடுதிகளில் ஈஸ்டர் விடுமுறையில் வந்து தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் உட்பட உள்நாட்டினர் பலரும் கொல்லப்பட்டனர். யேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தில் முந்நூறுக்கும் அதிகமான மக்கள் உயிர் துறந்தனர்.
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மத்தியிலிருக்கும் சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் கடந்த சிலவருடங்களாக மக்கள், ஆதார மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்காக இரத்ததானம் வழங்கிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி.
கடந்த 2019 ஆம் ஆண்டிலும் இந்தத் தேவாலயத்தின் ஏற்பாட்டில் போதகர் றொசான் மகேசன் தலைமையில் இரத்த தான நிகழ்வொன்று நடைபெற்றது. மருத்துவர் விவேக் தலைமையில் தாதியர் குழுவொன்று அந்த நற்பணிகளை கவனித்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் அதே தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தவர்களுக்கு இரத்த வங்கிகள் உதவவேண்டியிருந்தது.
இந்த ஆண்டில், யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட துயரதினத்திலும் அவர் உயிர்த்த தினத்திலும் மக்கள் கொரோனோ வைரஸின் அச்சுறுத்தலுக்குப்பயந்து, தங்கள் உயிரைக்காக்கவும் வெளியே இருப்பவர்களின் உடல் நலத்திற்காகவும் வீடுகளுக்குள் முடங்கியிருந்தவாறு, ” என் தேவனே – என் தேவனே ஏன் எம்மை இப்படிக்கைவிடுகிறீர்? ” என்றுதான் கேட்கத்தோன்றுகிறது!
இலங்கையில் கடந்த ஆண்டு 21 ஆம் திகதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் எங்கள் நீர்கொழும்பூரும் பாதிக்கப்பட்டதையடுத்து, உலகின் பல பாகங்களிலுமிருந்து நண்பர்கள், தெரிந்தவர்கள் பலர் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்து, எமது உறவினர்களுக்கும் ஏதும் நடந்துவிட்டதா? எனக்கேட்டு விசாரித்தனர்.
“ஆம், அங்கு கொல்லப்பட்டவர் அனைவரும் எமது உறவுகள்தான்” என்றேன்! ” யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்ற மரபில் வளர்ந்திருப்பவர்களுக்கு, – ” ஓரிறை கொள்கையை போதித்த முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் ஓர் நிறை என்பதையும் எடுத்தியம்பினார்கள்.” என்ற வாசகங்களை கேட்டு வளர்ந்தவர்களுக்கு, அந்தக்கொடூர சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும், பாதிக்கப்பட்டவர்களும் உறவினர்கள்தான்!
அவ்வாறு இந்த ஆண்டும் இத்தருணத்தில் உலகெங்கும் வாழும் உறவினர்கள் நண்பர்கள், இரவு பகல் நேரம் காலம் பாராமல் பல வழிகளிலும் தொடர்புகொண்டு நலம்விசாரிக்கின்றனர். வானொலி ஊடகங்கள் நேர்காணல்களுக்கு அழைக்கின்றன.
அதற்கு கண்ணுக்குத் தெரியாத எதிரிதான் காரணம்!
நாம் பள்ளியில் படிக்கின்ற காலத்திலும் அதற்குப்பின்னரும் கேள்வியுற்றிராத மதம் , இனம், மொழி சார்ந்த பல பயங்கரவாத – தீவிரவாத இயக்கங்கள் பற்றி தற்காலத்தில் அறிகின்றோம். இவற்றுக்குப்பின்னால் சர்வதேச வலைப்பின்னல் படர்ந்திருப்பது நன்கு தெரிகிறது.
அதுபோன்று முன்னர் கேள்விப்பட்டிராத வைரஸ் தொற்றுக்கள் பற்றி தற்போது அறிகின்றோம். இதற்கும் சர்வதேச வலைப்பின்னல் இருக்குமோ..? என்று பலரும் மண்டையை குடைந்துகொண்டிருக்கின்றனர்!
இந்தப்பின்னணியில், வளர்முகநாடாக விளங்கும் எங்கள் இலங்கை மணித்திருநாட்டின் ஆட்சியாளர்களும் பாதுகாப்பு விடயத்தில் மக்களும் எவ்வாறு இந்த சவால்களை எதிர்கொள்ளப்போகிறார்கள்? பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும் போதைவஸ்தை முற்றாக தடுப்பதற்கும் புதிய புதிய சட்டங்களை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்த எதிரணி அரசியல் தலைவர்கள், சமீப காலமாக கொரோனோ அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு மக்களின் நலன்களுக்காகவும் தேவைகளுக்காகவும், கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி வருகிறார்கள். நாட்டின் அதிபரோ, பிரதமரான அவரது அண்ணனோ, அந்தக்கோரிக்கையை அலட்சியம் செய்கின்றனர்.
நல்லாட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்ட முன்னைய ஆட்சிக்காலத்தில் அப்போதிருந்த அதிபரும் பிரதமரும் நடத்திய சடுகுடு விளையாட்டு உலகப்பிரசித்தம்! அந்த நல்லாட்சி கேலிக்கூத்தாக முடிவுக்கு வந்து, புதிய அதிபர் வந்துவிட்டார். அவர் பதவி ஏற்று சில மாதங்களில் கண்ணுக்குத் தெரிந்த எதிரி வந்து பல்கிப்பெருகிவிட்டான்.
கடந்த ஆண்டு உயித்த ஞாயிறு தினத்தில் தோன்றிய கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை பிடிக்கமுடியாமல் கோட்டை விட்டவர்தான் பாதுகாப்பு கவுன்ஸிலுக்கு பொறுப்பாக இருந்த நாட்டின் அதிபர், (முன்னைய அதிபர் ) , பிரதமருடன் (முன்னையவருடன் ) ஆலோசிக்கத்தவறிவிட்டார் என்றும் – பொறுப்பான அமைச்சர் ஒருவர் அளித்த தகவலை பாதுகாப்புத்துறையினரும் பொலிஸாரும் பொருட்படுத்தவில்லை என்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.
கடந்த ஆண்டு நடந்துள்ள சம்பவங்களை விசாரிக்க மூன்று முன்னாள் நீதியரசர்கள் தலைமையில் ஆணைக்குழுவை முன்னாள் அதிபர் நியமித்தார். .சம்பவத்தின் சூத்திரதாரிகள் என சந்தேகத்தின் பேரில் பலர் கைதாகிகினர். இந்த கைது ஓராண்டுக்குப்பின்னரும் தொடருகிறது. ஆனால், அன்றைய நாடாளுமன்ற தெரிவுக்குழு நடத்திய விசாரணை அறிக்கை தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
அதனைப்பற்றி எவரும் தற்போது பேசமுடியாமல், கொரோனோ பேசுபெருளாகிவிட்டது!
கொரோனா வைரஸினால் உயிர்நீத்த இஸ்லாமியர்களை அவர்களின் மார்க்கத்தின் நடைமுறைப்படிதான நல்லடக்கம் செய்யவேண்டும், தகனம் செய்துவிடக்கூடாது, என்று இலங்கை இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் அதிபரிடமும் பிரதமருடனும் சுகாதார அமைச்சரிடமும் வலியுறுத்துவதுதான் பேசுபொருளாகியிருக்கிறது.!
2009 ஆம் ஆண்டிற்குப்பின்னர் இலங்கை கடந்த 2019 ஆம் ஆண்டில், உலகின் கவனத்திற்குள்ளாகியிருந்தபோது, வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டது,
அவர்களின் வருகையை மீண்டும் ஊக்குவிப்பதற்காக, இலங்கை அரசு பல நாடுகளுக்கு விசா அனுமதியை கட்டணம் இன்றி வழங்கியது. ஓராண்டுக்குள் வெளிநாட்டினரே வரமுடியாதளவுக்கு விமான நிலையங்கள் இலங்கை உட்பட எங்கும் தற்போது மூடப்பட்டுக்கிடக்கின்றன.
“ அரசியல் கட்சிகள், வரவிருக்கும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு, பிரசார உத்தியாக மக்கள் மத்தியில் உலர் உணவு விநியோகத்தில் ஈடுபட முடியாது “ என்று தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார்! தேர்தல் நடக்குமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முனையாமல், தேசத்தின் எதிர்காலத்தின் நலன்கருதி பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயற்படவேண்டிய காலம் வரவேண்டும் என்று ஶ்ரீமான் பொதுஜனன் அன்று 2019 இல் கேட்டுக்கொண்டதுபோல், இன்று 2020 இலும் எங்கள் தேசம் சமகாலத்தில் முகம்கொடுத்துவரும் பாரிய அச்சுறுத்தலிலும் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என்று தற்போது வலியுறுத்துகிறார்.
வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர் தாயகம் திரும்பி, மூலதனமிட்டு தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கலாம். வாருங்கள். வந்து எங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள் என்று இலங்கை முன்னாள் அரச அதிபர் மைத்திரி உட்பட சில மாகாண ஆளுநர்களும் கடந்த காலங்களில் தெரிவித்துவந்தார்கள்.
தேயிலை, ரப்பர், கொக்கோ, தெங்கு முதலான ஏற்றுமதி வர்த்தகத்தில் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருக்கும் எங்கள் தேசம், உல்லாசப்பயணிகளை கவருவதற்காகவும் சில திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு எண்ணியிருந்த காலப்பகுதியில்தான் அன்றைய உயிர்த்த ஞாயிறு உயிர் குடித்த ஞாயிறாக மாறியிருந்தது!
ஆனால், இன்றோ, “ எவரும் வரவேண்டாம் “ என்று சொல்லவேண்டிய தேவை வந்துள்ளது! ” என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் ” என்று முறையிட்டு சிலுவையில் அறையப்பட்டு, அன்றையதினம் உயிர்தெழுந்த யேசுபிரானை வணங்கச்சென்ற அந்த மக்களின் மரண ஓலமும் அதே தொனியில் ” என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று உள்ளுணர்வில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இன்று மீண்டும் அதே தேவனிடத்தில், உலக மக்கள் அனைவரும் உயிரைக் கையில் பிடித்தவாறு வீடுகளுக்குள் முடங்கியிருந்து “ ஏன் எம்மை கைவிட்டீர் “ எனக்கேட்கின்றனர். எங்கள் தேசம் மட்டுமல்ல முழுஉலகமும் சிலுவையில்தான் அறையப்பட்டுள்ளது! எப்போது உயிர்த்தெழும்?முழுஉலகமும் கடக்கவேண்டிய நெருக்கடியான தூரம் இன்னும் அதிகம்தான்!