“அன்பு நண்பர்களே, உங்களிடம் மன்னிப்பைக் கோருகின்றோம்””

எழுத்தாளரும், ‘லக்பிமா’ பத்திரிகையில் இலக்கியப்பகுதிக்கான ஆசிரியராகவுமிருக்கும் காத்யானா அமரசிங்க ( .Kathyana Amarasinghe )1983 இனக்கலவரத்தையொட்டி அவரது நண்பர்கள் சிலருடன் இணைந்து உருவாக்கிய இப்போஸ்டரை அனுப்பியிருந்தார். இதிலுள்ள வாசகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவ்வாசகங்கள் இவைதாம்: “கருப்பு ஜூலை – 35 ஆண்டுகள். அன்பு நண்பர்களே, உங்களிடம் மன்னிப்பைக் கோருகின்றோம்”

முதல் தடவையாகச் சிங்கள மக்களிடமிருந்து இவ்வாசகங்களைக் கேட்கின்றேன். இவை முக்கியமான வாசகங்கள். 1983 இனக்கலவரத்துக்காக, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அழிவுகளுக்காகச் சிங்கள மக்கள் சார்பில் இவர்கள் மன்னிப்புக் கேட்கின்றார்கள். உண்மையில் இலங்கையின் அதிபர் ஓருவர் என்று இவ்விதம் சிங்கள மக்கள் சார்பில் தமிழ் மக்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற அநீதிகளுக்காக மன்னிப்புக் கோருகின்றாரே அதுவே இந்நாட்டு மக்களுக்கிடையிலான உண்மையான நல்லெண்ணத்துக்கும், புரிந்துணர்வுகளுக்கும் வழி வகுக்கும். அதற்கு முதற்படியாகவே இப்போஸ்டரையும் , வாசகங்களையும் பார்க்கின்றேன். அத்துடன் அடையாளம் காணப்பட்ட , இக்கலவரங்களில் குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். சட்டமானது அனைவருக்கும் பொது என்னும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

சிங்கள மக்களைப்பொறுத்தவரையில் படித்த நகரப்புறத்து மக்கள் பலர் தற்போது உண்மை நிலையினை உணர்ந்து மனம் வருந்தத்தொடங்கியிருக்கின்றார்கள். ஆனால் இன்னும் பெரும்பான்மையானக் கிராமப்புறத்துச் சிங்கள மக்களுக்கு உண்மை நிலை தெரியவில்லையென்றுதான் கூற வேண்டும். அவர்களைக் குறி வைத்துத்தான் இனத்துவேசம் மிக்க அரசியல்வாதிகள் பலர் தமிழ் மக்களுக்கெதிரான துவேச உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் அடைய முனைகின்றார்கள். அம்மக்களுக்கு உண்மை நிலையினை எடுத்துரைக்கும் வகையில் அங்குள்ள முற்போக்குச் சக்திகள் முனைய வேண்டும்.

ngiri2704@rogers.com