எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி பற்றிய ஆவணப்படம் – “ரசஞானி” கிளிநொச்சியில் திரையிடப்படவுள்ளது. கிளிநொச்சி, பழைய ஆஸ்பத்திரி மருந்தகத்துக்கு அருகில் உள்ள மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தப் படத்தை இயக்கிய ‘மறுவளம்’ எஸ். கிருஸ்ணமூர்த்தியும் கலந்து கொள்கிறார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் முருகபூபதி நீண்டகாலமாக வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரையில் 25 புத்தகங்களுக்கு மேல் பிரசுரமாகியுள்ளன. பல நூற்றுக்கணக்கான பதிவுகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கும் முருகபூபதி, சமூகச் செயற்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார். இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி, அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.
பயணம், எழுத்து, சமூகச் செயற்பாடுகள் என்று ஓய்வேயில்லாமல் இயங்கும் மனிதர் முருகபூபதி. தினம் ஒரு பதிவோ கட்டுரையோ இலக்கியமோ எழுதுவது என்பது அவருடைய வழக்கம். எந்த நாளும் பூபதியின் எழுத்துகளை எங்காவது ஒரு இணையத் தளத்தில் அல்லது பத்திரிகையில் நாம் படிக்கலாம். இவ்வளவுக்கும் பூபதிக்கு வயது….! அதை இந்த ஆவணப்படும் சொல்லாமற் சொல்கிறது. ஆவணப்படக் காட்சிக்கு மகிழ் பதிப்பகம் அனைவரையும் அழைக்கிறது.