(மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)
கவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த கவிதைக்கு இட்டுச்செல்வதும் என முதல் நான்கு நாட்கள் ஓடியேவிட்டது. தமிழச்சி, தன் மனதிற்குள் பல நாட்களாய் பொத்திவைத்து அடைகாத்ததை கவிதை முத்துக்களாய் ஒரு சில வரிகளில் படைப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமற்று, எளிமையான வார்த்தைகளால் எல்லோரும் அனுகும்விதமாக , எல்லோருக்கும் புரியும் விதமாக இவரது கவிதைகள் உள்ளன. எப்படி எளிமையான சொற்களால் ஆனதோ, அதேமாதிரி எளிமையான மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், வாழ்க்கைப்பாடுகள், சின்னச்சின்ன இழப்புகள் என இவர் கவிதைகளாலும், நாம், நம் அன்றாட வாழ்க்கையுடனும் எண்ணங்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.
இவரது கவிதைகளை வாசிக்கும்பொழுது, தமிழச்சி மறைந்து, கிராமத்துப்பெண்ணான சுமதியே மனதில் வலம்வருகிறார். கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு இடம்பெயர்ந்தமையால் அவரது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை கவிதையாக பதிவுசெய்கின்றார்.
தீப்பெட்டி பொண்வண்டு என்ற கவிதையில்,
அதிகாலைத் தூக்கம்… அசங்கியிருக்கும்
வானம் பார்த்துக் கலைகின்ற வரம்
கிராமம்விட்டு நகரத்தில் குடிவந்த நாள் முதல்
பக்கத்துக் குடியிருப்பும் பார்க்காதிருக்க இறுகப்பூட்டப்படும்
சன்னல்களின் உயிரற்ற திரைச்சேலைகளில் நிலைக்கின்ற சாபமானது.
இக்கவிதையில் கவிஞர், பெருநகரத்து வாழ்வில் தான் இழந்ததை கூறுகிறார். ஆனால், இன்றைய சென்னை வாழ்க்கையும் அன்று நான் வாழ்ந்த சென்னை வாழ்க்கையும் வேறு வேறு! தமிழச்சி தனது கிராமத்து வாழ்க்கையை கூறும்போது, நான் வளர்ந்த சென்னை வாழ்க்கையைத்தான் நினைத்துக்கொள்கிறேன்.
கோடைகாலம் முழுவதும் மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி தரையை குளிர்வித்து, பக்கத்து மாடியில் உள்ளவர்களிடம் கதைபேசி, Transistor இல் பாட்டுக்கேட்டு, தூங்கிய நாட்கள். காலைக்கதிரவனின் வெளிச்சம் படரும்பொழுது, விழித்ததும் – விழித்தும் விழிக்காமலும் சுகமாய் படுத்திருக்கும் அந்த பத்து நிமிடம்….! பக்கத்துவீட்டு தொலைக்காட்சி செய்திவாசிப்பதும், எங்கிருந்தோ வரும் கோயில் மணியோசையும், உடன் ஒலிக்கும் மசூதியின் பாங்கு சத்தமும் என இவரது கிராமத்து வாசனை கவிதைகள் அனைத்தும் எனக்கு என் கிராமத்து சென்னையை நினைவுபடுத்தின.
அதே நகர வாழ்க்கையைப்பற்றி தமிழச்சியின் இன்னுமொரு கவிதை:
பகுத்தல்
குடியிருப்பில்
அவரவர் கதவு இலக்கம்
அவரவர் மின்கட்டணப்பெட்டி
அவரவர் பால், தபால் பைகள்.
எல்லாம் பிரித்தாயிற்று.
திடீரென அடைத்துக்கொள்ள –
எப்படி பிரிக்க அவரவர் சாக்கடையை…?
மேலோட்டமாகப்பார்த்தால், நகரத்து அடுக்குமாடி குடியிருப்பு குறித்த கவிதையாக தோன்றலாம். ஆனால், சாக்கடை என்று அவர் குறிப்பது நம் மனங்களையும்தான்.
பெரியவர்கள் – பெற்றோர்களின் மனங்களைக்குறித்த தமிழச்சியின் இன்னொரு கவிதை:
பூச்சாண்டி
குழந்தைகளுக்கான பலூனில் தங்கள்
மூச்சுக்காற்றை நிரப்பியும்
குழந்தைகளுக்கான நிர்வாணத்தில் தங்கள்
உடைகளை அணிவித்தும்,
குழந்தைகளுக்கான சிரிப்பில் தங்கள்
அர்த்தங்களைத் திணித்தும்,
குழந்தைகளுக்கான கனவில் தங்கள்
கட்டளைகளைப் புகுத்தியும்
” பூச்சாண்டி” எனத் தனியாக
ஒன்று இருப்பதாகவும்
பயப்படுத்துகிறார்கள் பெரியவர்கள்.
மனித மனங்களைப்பேசும் தமிழச்சி, அழகைப்பற்றியும் அழகாக கேள்வி எழுப்பி, வித்தியாசமான அழகை ” தனித்திருத்தல்” கவிதையில் பதிலாகவும் தருகிறார்.
“அவிழாப்பூ”
பட்டாம்பூச்சிகளின் இருப்பும் அழகும்/விழிவிரிய மகள் தொடர்ந்தாள்-
” அவைகளுக்கு என்ன பிடிக்கும்?” /”பூமிப்பந்தும் பூக்களின் தேனும்”
” பிடிக்காதது?”/” உன், என், பெருவிரலும் சுட்டுவிரலும்”
கொஞ்சம் யோசித்து, பின் கேட்டாள்-
” எல்லாம் சரி, அசிங்கமான கம்பளிப்பூச்சி அம்மாவிமிருந்து அழகான பட்டாம்பூச்சி எப்படி வந்தது?”
அழகு எனும் புதிரை எப்படி அவிழ்க்க?
இந்தக் கேள்விக்கு தனித்திருத்தல் எனும் கவிதையை பதிலாகத்தருகிறார்
இருண்டிருக்கும் அரங்கமொன்றில்
ஒத்திகை முடிந்து அமர்ந்திருக்கிறது/தனிமை –
ஒப்பனையின் பூச்சற்ற அதன் / அகோரம் அதி அழகு.
மழை என்றால் மனம் குதூகளிக்கும். பெண்ணாக இருப்பதால் சில அசௌகரியங்களைத்தவிர. மழையில் நனைவது எனக்கு ஆதிமுதல் அந்தம் வரை பரம சுகத்தை தரும் ஒரு நிகழ்வு. மழைக்காக நான் ஒதுங்கிய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு.
கக்கத்தில் இடுக்கினாலும் / மழையைப்பார்த்தவுடன்
மலர்ந்து தாவுகின்றது / குடைக்குழந்தை.
என மழையை ரசிக்கும் கவிஞர்,
” எதிர்மரத்துப்பறவையின் கூடு என்னவாயிற்றோ?-
தலை உலுக்கி கண்சாய்க்கும் /காக்கையாய் / அடுத்த நாள் மழை.
என சிற்றுயிர்களுக்காக விசனமடையும்போதில்,
மாற்று துணியற்ற / மாதாந்திர சுழற்சியுடன்
ஊர் ஊராய் இடம்பெயர்ந்த / தமிழச்சிகளின் கடுந்துயரைப்
புலம்பியபடி என் மேல் / அடித்துப்பெய்கிறது அசுரமழை
அந்த அவஸ்தையான நாளொன்றில் /அவசரமாய்ச் சாலை கடக்கையில்.
தன் அவஸ்தையான மழைநாளொன்றில் சக தமிழச்சிகளின் தனிமைத் துயரை வெளிப்படுத்துகிறார். ”தனிமைக்கு என்று ஓர் அழகுண்டு. அதை அழகாக எடுத்துரைதுள்ளார். நானும் தனிமையை இரசிப்பவள்.
” நிசாந்தினியின் நீண்ட காதணி” – ” வெந்து தணிந்தது காடு”
என்ற இரண்டு கவிதைகளிலும் ஈழத்தமிழர்களின் சொல்லொனாத்துயரையும், நம் இயலாமையையும் பதிவுசெய்கிறார்.
இச்சந்தர்ப்பத்தில் இந்த ஈழத்து கவிதையை வாசித்தபொழுது, நான் சமீபத்தில் படித்த சயந்தனின் ”ஆதிரை” நாவல் ஞாபகத்திற்கு வந்தது. கடைசிகாலகட்ட போரின் பின்புலத்தில் மலையக தமிழர்களை முன்னிருத்தி எழுதப்பட்ட நாவலின் காட்சிகளும், கதாபாத்திரங்களும் கண் முன் விரிந்தது.
இரண்டு பக்கத்தில் இடம்பெறும் கவிதை என்பதனால், அதிலிருந்து இரண்டு பத்திகளை வாசிக்கின்றேன்.
எங்கள் பாடத்திட்டங்கள் /கடந்த காலச் சரித்திரத்தையும்
அறிவியலின் அவசியத்தையும் / பொருளாதாரத்தின் அடிப்படைகளையும் / பூகோள வரைபடத்தையும் போதிப்பவை.
பதுங்கு குழிகளின் அவசியம் குறித்தும்,/ பயன் பற்றியும் பாடத்திட்டம்
எதுவும் இல்லை. எனினும்,/ செயல்முறை விளக்கம்
கண்டிப்பாய் உண்டு./ திட்டத்தில் இல்லாத
தேர்வு முறையும் அதற்குண்டு/ பிழைத்துவந்தால், ” முழு மதிப்பெண்” –
இறந்துபடின், தேர்விற்கு ஆஜராகவில்லை”
இன்னும் கவிதை நீள்கிறது கனத்த மனதுடன்.
தமிழச்சியின் கவிதைகளில் அடிநாதமாய் கிராமமும், அதன் ஆதரா சுருதியாய் மஞ்சணத்தி மரமும் இடம்பெறுகிறது. மஞ்சணத்தி மரத்தை தனது ஆதித்தாய் என்கிறார். அந்தக்கவிதையை இவ்வாறு நிறைவு செய்கிறார்.
என் ஆதித்தாயே, மஞ்சணத்தி.
முகவாயில் நரைமுளைத்து / பெருங்கிழவி ஆனபின்னும்
உன் அடிமடி தேடி நான் வருவேன்./ அப்போது,
என் தோல் நொய்ந்த பழம் பருவத்தை / உன் தொல் மரத்துச் சருகொன்றில் / பத்திரமாய்ப் பொதிந்து வை.
உள்ளிருக்கும் உயிர்ப் பூவை / என்றாவது
நின்று எடுத்துப்போவாள் /நிறைசூழ்கொண்ட இடைச்சி ஒருத்தி.
கவிஞருக்கு மஞ்சணத்தி போல் எனக்கு எங்கள் வீட்டுக்கிணறு. ஆனால், இன்று அந்தக்கிணறு இல்லை. கவிஞரின் விருப்பப்படியே ஆதித்தாயாய் அந்த மஞ்சணத்தி என்றுமிருக்கிறது. என் வாழ்த்துக்கள்.
மஞ்சணத்தி மரத்தைப்போலவே தமிழச்சிக்கு தாயுமாய் இருந்தவர் அவரது தந்தை. எப்பொழுதும் மகள்களுக்கு அப்பாக்கள் கதாநாயகர்கள்தான். கவிதையே தந்தையின் இழப்பை தமிழச்சிக்கு சிறிதளவு தேற்றுகிறது.
பிள்ளைக்கு தலைதுவட்டி / கதவடைத்து படுத்தபின்பு
கனவிலே வந்து போகும்/மழை நனைத்த என் முகம்
துடைத்த அப்பாவின் / “சார்லி சென்ட்” கைக்குட்டை.
ஒத்திகை, ஏக்கம், அழுகை ஆகிய கவிதைகளில் அந்த இழப்பின் வலி தெரிகிறது.
இரயிலடிக்கு வண்டியோடு /தன் மனதையும் அனுப்பிவைக்கும்
ஒரு மாலை நேரத்து/ மாரடைப்பில் பாராமல் எனைப்பிரிந்த
என் அப்பாவைத் தவிர.
“கிராமத்தில் எல்லாம் அப்படியே இருக்கிறது.” என்று அப்பா இல்லாத வெறுமையை, துக்கத்தை பகிர்ந்துகொள்கிறார்.
தமிழச்சியின் ” இடம்” என்னும் கவிதை பெண்ணின் மனதை, அது எதிர்பார்க்கும் தோழமையை அழகாக விளக்குகிறது.
இருக்கை முழுதும் / கால் பரப்பியபடி
சம்பந்தமில்லாதொரு / பாவனையுடன்
சொகுசாய்க் கணவன் புத்தகத்தில் / முகம் புதைத்திருக்க
புகைத்துக்கொண்டிருந்த / வெண்சுருட்டை விட்டெறிந்து
எதுக்களித்துத் தெறித்த / கைக்குழந்தையின்
பால் வாந்தியினை / முகஞ்சுளிக்காமல்
துடைத்துக்கொண்டு / இரு கம்பிகள் இணைத்துத்
தொட்டில் கட்ட /புடவை நுனி பிடித்தும்
தூங்கும் குழந்தையில் / இடிபடாமல்
தன் முழங்கால் குறுக்கியும் / இங்கு அமர்ந்தால்
இன்னும் நன்றாய் / பார்க்கலாம் நிலாவை என்று
இங்கிதமுடன் தன் இடமும் / விட்டுக்கொடுத்த
அவனை / வெறும் இரயில் சிநேகிதம்
என்றெப்படி மறக்க?
எல்லாப்பெண்களுமே கணவனாலும் முதலில் தோழமையையே எதிர்பார்க்கின்றனர்.
“சில பேரூந்தும் சில மைனாக்களும்” எனும் கவிதையில் பெண்களின் பேரூந்து பயணச் சிரமத்தை மைனாக்கள் மூலம் சிரமமே ஆயினும் கவிநயமாக சொல்லியுள்ளார் தமிழச்சி. பெரும் வலிகளையும் வேதனைகளையும் கூட நாம் எப்படி சாதாரணமாக கடந்து இயந்திரங்களைப்போல் அன்றாட வாழ்விற்கு திரும்பிவிடுகிறோம் என்பதை, ” கலவி” – ” அன்று மட்டும் ” கவிதைகளில் குற்றவுணர்ச்சியுடனும் வேதனையுடனும் பதிலிடுகிறார்.
ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை /எடுத்து உண்ட எத்தியோப்பியக்
குழந்தைகளின் பட்டினியைத் / தொலைக்காட்சியில் பார்த்த பின்பும்
கலவி இன்பம் துய்த்த /அந்த இரவிற்குப்பின்தான்
முற்றிலும் கடைந்தெடுத்த / நகரவாசியானேன் நான்.
இதில், ” நகரவாசி” என்பதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. நகரமோ, கிராமமோ தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பையே அது காட்டுகிறது. ஏனென்றால் எத்தனையோ நாட்கள், நான் பல விஷயங்களைப்பற்றி இப்படி யோசித்து தூக்கமிழந்ததுண்டு.
கடைசியாக ” மோதிரம் என்றொரு போதிமரம்” கவிதை, காளிதாசனின் சகுந்தலையை தழுவி இயற்றியுள்ளார். பழமையான காவியத்திற்குள் சமுதாய நீதிக்கான கேள்விகளை உள்வைக்கிறார்.
அடையாள மோதிரம் தொலைந்த / அவலத்தால் நிராகரிக்கப்பட்ட
அங்குதான் அவளுக்கு அறிவுறுத்தப்படுகிறது
அங்கீகாரமும் அடையாளமும் அவசியமென/எனும் வரிகளும்
இதயத்தைத் தொலைத்துவிட்டு /இன்னமும் அடையாளங்களைத்
தேடுகின்ற உன் அறியாமையினை / என்றாவது ஒரு நாள் எதிர்நின்று
நான் எள்ளி நகையாடவேண்டாமா?
எனும் கேள்விகள் மூலம் சகுந்தலையை சமூகநீதிக்காக போராடும் பெண்ணாக மாற்றுகிறார்.
அகிலத்திற்கே அன்னையாய்
ஆனந்தித்திருப்பதே
என் விருப்பு என
சகுந்தலையை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கிறார்.
இவை மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களை கவிதை மூலம் நம் பார்வைக்கு வைத்துள்ளார். எனக்கு தரப்பட்ட அவகாசம் கருதியும் மேலும் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்த கவிதைகளையுமே இங்கே உங்களின் கவனத்திற்கு எடுத்துரைத்தேன். தமிழச்சியின் கவிதைகளை படிக்கவேண்டும் என்ற ஆவலை எனது உரை தூண்டியிருக்கும் எனவும் நம்புகின்றேன்.
அனுப்பியவர்: Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>